தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் எழுதிய “ஏழு தமிழர் விடுதலை - உச்ச நீதிமன்ற மறுப்பு - தமிழ்நாடு அரசு அதிகாரம்” - நூலின் வெளியீட்டு விழா மற்றும் கருத்தரங்கம், 28.02.2016 மாலை, சென்னையில் எழுச்சியுடன் நடைபெற்றது.
சென்னை எம்.ஜி.ஆர். நகர் மகா மகால் அரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி தலைமை தாங்கிப் பேசினார். தமிழறிஞர் அண்ணா தங்கோ அவர்களின் பெயரன் திரு. செ. அருட்செல்வன் அண்ணல் தங்கோ, தமிழ்த் தேசியப் பேரியக்கச் சென்னை நடுவண் செயலாளர் தோழர் வி. கோவேந்தன், வடசென்னை செயலாளர் தோழர் பா.க. செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாவலர்கள் முழுநிலவன், பிரகாசு பாரதி ஆகியோர், “தூக்கைத் தூக்கிலிடுவோம்” என்ற தலைப்பில் பாவீச்சு நிகழ்த்தினர்.
முன்னதாக நிகழ்வின் தொடக்கத்தில், மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம் வெளியிட்ட ‘உயிர்வலி’ ஆவணப்படம் திரையிடப்பட்டது. உணர்ச்சி பொங்க அதனைப் பார்வையாளர்கள் கண்ணுற்றனர்.
பின்னர் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கப் பொதுச் செயலாளர் இயக்குநர் திரு. ஆர்.கே. செல்வமணி, நூலை வெளியிட இயக்குநர் வெற்றிமாறன் முதற்படி பெற்றுக் கொண்டார்.
இயக்குநர் வெற்றிவெல் சந்திரசேகர், தொழில் முனைவோர் திரு. தாரை. மு. திருஞானசம்பந்தம், தமிழின உணர்வாளர் புலவர் இரத்தினவேலவர், தொழிலாளர் சனநாயகப் பேரியக்கச் செயலாளர் திரு. நெடுமாறன், ஊடகவியலாளர் திரு. கார்ட்டூனிஸ்ட் பாலா, ஓவியர் கு. புகழேந்தி, தமிழர் ஆன்மிகச் செயற்பாட்டாளர் திருவாட்டி. கலையரசி, ‘லாக்கப்’ நாவலாசிரியர் திரு. சந்திரக்குமார் ஆகியோர் சிறப்புப்படி பெற்றனர்.
சிறப்பு விருந்தினர்களுக்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்பு செய்தார்.
நூலைத் திறனாய்வு செய்து, சென்னை உயர் நீதிமன்ற வழங்கறிஞர் திரு. அஜய் கோஷ் பேசினார். “தமிழினத்தைத் தவிர மற்ற எல்லா இனங்களிலும் இன ஒற்றுமை இருக்கிறது. ஆனால், தமிழினத்தில்தான் அது இல்லை” என இயக்குநர் ஆர்.கே. செல்வமணி ஆதங்கத்தோடு பேசினார். ஏழு தமிழர்களின் விடுதலைக்கு தடையாக உள்ள சிக்கல்கள் குறித்து, தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு. களஞ்சியம் கருத்துரை வழங்கினார்.
நிறைவில், நூல் ஆசிரியரும் தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளருமான தோழர் கி. வெங்கட்ராமன் ஏற்புரை நிகழ்த்தினார். “தமிழ்நாடு அரசு, உடனடியாக பேரறிவாளனுக்கும் மற்றவர்களுக்கும் முதற்கட்டமாக விடுப்பு (பரோல்) வழங்க வேண்டும். அதன்பின், மாநில அமைச்சரவையைக் கூட்டி, இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன்கீழ் ஏழு தமிழர்களை விடுதலை செய்யத் தீர்மானம் இயற்றி, அதை தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பி, அவர்களை விடுதலை செய்ய வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.
நிகழ்வை தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடுவண் குழு உறுப்பினர் பாவலர் கவிபாஸ்கர், நெறிப்படுத்தினார். பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரா. இளங்குமரன் நன்றி கூறினார்.
நிகழ்வில், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ. ஆனந்தன், பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் பழ.நல். ஆறுமுகம், தோழர் வெற்றித்தமிழன், தோழர் குடந்தை தீந்தமிழன், தென்சென்னை பேரியக்கச் செயலாளர் தோழர் கவியரசன் உள்ளிட்ட திரளான பேரியக்கத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
இருக்கைகள் போதாமல் பலரும் நின்றுகொண்டு கேட்ட, அரங்கம் நிறைந்த கூட்டமாக அமையும் அளவுக்கு, திரளான தமிழின உணர்வாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.