மக்களின் இறுதிப் புகலிடத்தையும் விட்டுவைக்கப் போவதில்லை உலகமயமாக்கலும், அதன் ஏவல் அடிமையெனத் துள்ளும் பாசிச மோடி அரசும்.

இது தமிழகத்தின் ஏழை பால் உற்பத்தியாளர்களின் துயரக்கதை. வேளாண்மை பொய்த்துப் போனபோது எல்லோரும் பால் தொழிலில் இறங்கினர். தவிடு, பூசா உள்ளிட்ட கால்நடைத் தீவனங்களின் விலை வானத்தில் பறந்தாலும், ஒரு லாரி வைக்கோல் ரூ.20,000த்துக்கு விலைக்கு வாங்கினாலும் பால்தொழில் இன்றும் பலரின் பசியை போக்கத்தான் செய்கிறது.

ஆனால் சமீபத்தில் நடக்கும் பால் கொள்முதல் குறித்த கதைகளைக் கேட்கும்போது நெஞ்சமே வெடித்துவிடும் போல இருக்கிறது.

இப்போது பால்கொள்முதலில் நடக்கும் நாடகம் விசித்திரமானது மட்டுமல்ல சிக்கலானதும், அபாயகரமானதுமாகும். தமிழகத்தில் நாளொன்றுக்கு சுமார் 1.5 கோடி லிட்டர் பால் உற்பத்தியாகிறது. அதில் கடந்த மாதத்தின் முதல்வாரம் வரை சராசரியாக சுமார் 30 லட்சம் லிட்டர் வரை கொள்முதல் செய்து வந்த ஆவின் நிறுவனம் திடீரென 22 லட்சம் லிட்டர் பாலை மட்டும் கொள்முதல் செய்ய விளைந்தது. மேலும் சுழற்சி முறையில் வாரம் ஒருநாள் விடுமுறை அளிக்கப் போவதாகவும் தகவல்கள் வருகின்றன. உற்பத்தியாளர்கள் கொண்டுவரும் பாலில் 15% அளவுக்கு திருப்பி அனுப்பும் விசித்திரமும் நடக்கிறது.

தன்னிடம் நாளொன்றுக்கு 25 லட்சம் லிட்டர் வரை மட்டுமே பதப்படுத்த வசதியிருப்பதாகவும், தனது நட்டத்தை குறைக்கவே கொள்முதல் குறைப்பு என்றும் ஆவின் அறிவிக்கிறது. எப்போதும் விளம்பரத்தையே பிரதானமாகக் கொள்ளும் ஜெயா ஆட்சி, பால் கொள்முதலுக்கான விலையை ஒருபுறம் உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், சுமார் 1 கோடி லிட்டர் அளவுக்கு பால் பதனிடும் வசதியை ஆவினுக்கு அளிப்பதாகவும் உறுதியளித்தது. ஆனால் ஆது வழக்கம் போலவே வெறும் வாய்ச்சவடால் என்பதை நடைமுறை உறுதிப்படுத்துகிறது.

கொள்முதல் விலை ஆவினில் அதிகம் என்பதால் இதர தனியார் பால் நிறுவனங்கள் விவசாயிகளிடம் பாலை குறைந்த விலைக்கு வாங்கி ஆவினிடம் கூடுல் விலைக்கு விற்பதாகவும், இதற்காக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு லிட்டருக்கு தலா ரூ.2 அளவுக்கு கமிஷன் வழங்கப்படுவதாவும் தகவல். அன்மைக்காலம் வரை பசும்பாலை நாளொன்றுக்கு ரூ.27 க்கு வாங்கிக் கொண்டிருந்த தனியார் பால் நிறுவனங்கள் உள்ளூர் பால் வியாபாரிகள் ஒழிந்துபோய்விட்ட பின்னால் இப்போது ரூ.17 லிருந்து 20 வரை மட்டுமே விலையை நிர்ணயித்திருக்கின்றன. விலைகுறைப்பு குறித்து கேள்வி கேட்கப்பட்டால "வேறு கம்பெனிகளுக்கு பால் ஊற்றிக் கொள்ளுங்கள்" என திமிராக பதில் வருகிறது.

விவசாயிகள் வீதியில் பாலைக்கொட்டி போராடும் இந்த அவல நிலை எப்படி வந்தது?

இதற்குப் பின்னால் மாபெரும் துரோகக் கதையிருக்கிறது. கடந்த பிஜேபி ஆட்சியில் அத்தியாவசியப் பொருட்களின் மீதான உச்சவரம்பை தளர்த்தியதிலிருந்து இந்தக் கதை தொடங்குகிறது. பால் பொருட்களுக்கு மட்டும் 15 மடங்கு உச்சவரம்பு தளர்த்தப் பட்டிருக்கிறது.

பால்பவுடர், நெய், விதம் விதமான பாலாடைக் கட்டிகள் என வெளிநாட்டுப்பொருட்கள் வெள்ளமெனப் பாய்ந்து இந்தியச் சந்தைகளை நிரப்ப விஷத்தைக் கூட வெளிநாட்டிலிருந்து கொண்டுவந்தால் விருந்தென அருந்தும் நமது நடுத்தர வர்க்கம் அதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டது. (இப்போது புழு பூச்சி இருக்கிறது என வழக்குக்குப் போவது வேறு விஷயம்)

பெரும் மானியமும், நவீன இயந்திரங்களும் வெளிநாட்டு பால் பொருட்களின் அபரிமிதமான உற்பத்திக்கு பக்கபலமாக, மலிவான விலையில் சந்தைக்கு வரும் பன்னாட்டு பால் பொருட்களோடு போட்டியிட முடியாத நிலையில்தான் நமது நிறுவனங்கள் விழிபிதுங்கி நிற்கின்றன. பால் பொருட்களின் இறக்குமதியில் முன்னிலை வகிக்கும் நியூசிலாந்து நாட்டின் நெய் கிலோ ரூ. 64.54 க்கும் பால் பவுடர் ரூ.30 லிருந்து 50 வரைக்கும் விலை கொண்டதாக இருக்கிறது. இந்த ஆண்டு மட்டும் பால்பொருட்களின் மீதான விலையில் 40% அளவுக்கு நியூசிலாந்து விலை குறைத்துள்ளதாக புள்ளி விவரமொன்று எச்சரிக்கின்றது. இதில் இன்டர் கார்பரேசன் மற்றும் ஜே.கே (ரேமண்ட்)குழுமம் போன்ற பகாசுர நிறுவனங்கள் கால்நடைப் பராமரிப்பு என இறங்கி கொள்ளை அடிப்பது தனிக்கதை.

வெண்ணை திருடியவனின் அவதாரப் பேர் சொல்லி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த கனவான்களின் லட்சணம் இது. ஒருவேளை கண்ணனுக்கு கோகுலத்து வெண்ணை சலித்துப் போயிருக்கும் போல..

# பால் பொருட்களுக்கான இறக்குமதியை முற்றாக தடைசெய்வது.

# உள்நாட்டு பால் கொள்முதலில் அரசே நேரடியாக தலையிட்டு விலையைத் தீர்மானிப்பது.

# பால் பதப்படுத்த கூடுதலான நவீன குளிர்ப்பதன வசதியை உருவாக்குவது.

# சர்வதேச வளர்ந்த நாடுகளின் பால் நுகர்வு விகிதாச்சாரத்துக்கு ஒப்ப தனிமனித பால் நுகர்வை அதிகரிப்பது

போன்ற செயல்களில் அரசு உடனடியாக ஈடுபடாமல் மெத்தனம் காட்டுமேயானால் தமிழகத்தில் இன்னொரு விதர்ப்பாவும், கொடுமைகளுக்கு எதிராக பெரும் போராட்டமும் ஏற்படுவது சத்தியம்.

- இன்பன்

Pin It