சென்னை ஐ.ஐ.டி-ல் இயங்கிவந்த அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்துக்கு(ஏ.பி.எஸ்.சி) மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் உத்திரவின் பேரில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள், பெரும்பான்மையான அரசுப் பதவிகளை பார்ப்பனர்களே ஆக்கிரமித்துக் கொள்ளும் அக்கிரமத்துக்கு எதிராகவும், (வெறும் 3.5 சதவீதமே உள்ள பார்ப்பனர்கள் அரசின் முக்கிய பதவிகளில் 70 சதவீதத்துக்கும் மேல் உள்ளனர்), மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராகவும், மோடி அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு எதிராகவும், இன்னும் பல்வேறு பார்ப்பன பயங்கரவாத செயல்களுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடி உள்ளனர். துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து மாணவர்கள் மத்தியில் விநியோகம் செய்துள்ளனர். மேலும் பல முற்போக்கான அறிவு ஜீவிகளை அழைத்துவந்து கல்லூரியில் பேசவைத்துள்ளனர். ஏற்கெனவே பார்ப்பன அக்கிரகாரமாக விளங்கும் ஐ.ஐ.டி-ல் அவாளின் கருத்துக்களுக்கே ஆப்பு வைத்தால் சும்மா இருப்பாளா! அதனால் தான் இந்தத் தடை. 

IIT 600யாரோ மொட்டைக் கடுதாசி போட்டார்களாம், அதன் அடிப்படையில் கடந்த 15ம் தேதி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணைச்செயலர் மேத்யூசென்னை ஐ.ஐ.டி தலைமைக்கு விளக்கம் கோரி கடிதம் அனுப்பியுள்ளார். உடனே ஐ.ஐ.டி நிர்வாகம் இதுதான் சாக்கு என்று தடை விதித்திருக்கின்றது. ஏற்கனவே ஐ.ஐ.டி-ல் விவேகானந்தர் வாசகர் வட்டம், வந்தே மாதிரம் வாசகர் வட்டம், வசிஸ்டர் வாசகர் வட்டம் என்று பார்ப்பனியத்தின் துர்நாற்றம் பிடித்த புகழைப் பரப்பும் வட்டங்கள் எல்லாம் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அப்படி இருக்கும் போது அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்திற்கு மட்டும் தடை விதித்திருப்பது என்பது பார்ப்பனியத்தின் உயிர்நாடியை கண்டுபிடித்து அதை அறுப்பதற்கு வழி சொன்ன அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் சிந்தனைகளை ஒழித்துக்கட்டுவற்கும், மோடியின் பாசிச திட்டங்களுக்கு எதிராக மாணவர்கள் சிந்திப்பதே பெருங்குற்றம் என எச்சரிப்பதற்கும் ஆகும்.

 ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் காங்கிரசு கட்சி இதைக் கண்டித்திருப்பது குறிப்பாக ராகுல் காந்தி கண்டித்திருப்பது. டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ’மக்கள் மீதான தாக்குதலுக்கு எதிரான ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக அமைப்பு’(எப்.ஏ.டபிள்யூ.பு) என்ற மாணவர் அமைப்பு மாவோயிஸ்ட்டுகளுக்கு ஆதரவாக கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. இதை எதிர்த்து காங்கிரசின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கம்(என்.எஸ்.யு.ஐ) மற்றும் பாரதிய ஜனதாவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்தியார்த்தி பரிசத் (ஏ.பி.வி.பி) ஆகியவை மாவோயிஸ்ட்டுகளுக்கு ஆதரவாக கலை நிகழ்ச்சி நடத்திய மாணவர் அமைப்பின் மீது தாக்குதல் தொடுத்தன.

 இந்திய நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில் கோடிக்கணக்கான தலித் மக்களின் நிலங்களைப் பிடுங்கி அவர்களது வாழ்வாதாரத்தை அழித்து பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு நிலத்தை தாரை வார்ப்பதை எதிர்த்துப் போராடும் மாணவர்களை அன்று காங்கிரசு கட்சி தனது மாணவர் அமைப்பை வைத்து தாக்கியது; இன்று ஆட்சியை இழந்ததும் மாணவர்களின் நலனுக்காக முதலைக்கண்ணீர் வடிக்கின்றது.

 மோடியை விமர்சனம் செய்ததற்காக மாணவர்கள் அச்சுறுத்தப்படுவது இது முதல்முறை அல்ல… கேரள மாநிலம் திருச்சூர் அருகே குன்னம் குளாவில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் வெளியிட்ட ஆண்டு மலரில் பிரதமர் மோடியின் படம் சர்வாதிகாரிகளான ஹிட்லர், ஜார்ஜ்புஷ், ஒசாமா பின்லேடன், அஜ்மல் கசாப், சந்தனக்கடத்தல் வீரப்பன் போன்றோரின் புகைப்படத்துடன் சேர்த்து வெளியிட்டதால் அந்தக் கல்லூரி முதல்வர் மற்றும் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

 மேலும் திருச்சூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா கல்லூரியில் மாணவர்களால் நடத்தப்படும் இதழில் மோடியை விமர்சனம் செய்ததற்காக அந்த இதழின் ஆசிரியர், துணை ஆசிரியர் உட்பட ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர்.

 மோடியை விமர்சனம் செய்வது என்பது பார்ப்பனியத்தை விமர்சனம் செய்வது என்பதாகப் பொருள், மோடியை விமர்சனம் செய்வது என்பது முதலாளித்துவத்தை விமர்சனம் செய்வது என்பதாகப் பொருள் அதை விமர்சனம் செய்யாமல் இருப்பது என்பது பார்ப்பனியத்திற்கும், முதலாளித்துவத்திற்கும் ஆதரவாக இருப்பது என்பதாக பொருள். எப்படி மோடியை விமர்சனம் செய்வது? அதற்கான கருத்தியல் போர்வாள் தான் அம்பேத்கரியமும், பெரியாரியமும், மார்க்சியமும் ஆகும். இதைக்கொண்டு தான் மோடியென்ற பார்ப்பனிய, முதலாளித்துவ பிம்பத்தை அடித்து சில்லு சில்லாக உடைக்க முடியும்.

 மார்க்சுக்குப் பின் அவரது சிந்தனைகளை லெனின் வளர்த்தெடுத்தார். அதனால் ரஷ்யாவிலும், சீனாவிலும் புரட்சி சாத்தியமானது. ஆனால் அம்பேத்கருக்கும், பெரியாருக்கும் பின் அவர்களது சிந்தனை வளர்த்தெடுக்கப்படவில்லை. மாறாக அவர்களது வழித்தோன்றல்கள் அவர்களது சிந்தனைகளைத் தங்களது பிழைப்புவாதத்திற்கு ஏற்றார் போல திரித்துப் புரட்டும் வேலையையே செய்தனர். கி.வீரமணி போன்றவர்கள் பெரியாரின் எழுத்துக்களுக்கு அறிவு சார் சொத்துடமை கேட்டு நீதிமன்றங்களுக்கே சென்றனர். இன்று எந்த முகத்தை வைத்துக்கொண்டு மாணவர்களுக்கு ஆதரவாகப் பேசுகிறார் என்று நாம் கேட்கப்போவது இல்லை. அதை பெரியாரின் மொழியில் சொல்வதென்றால் மான, அவமான உணர்வுள்ள மனிதர்களின் முடிவுக்கே விட்டுவிடலாம்.

 இன்று கடைகோடி மனிதன் வரை இந்துத்துவா கருத்துக்கள் மதவாத சக்திகளால் கொண்டுபோய் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் அம்பேத்கரிய, பெரியாரிய, மார்க்சிய கருத்துக்கள் அவ்வாறு கொண்டுபோய் சேர்க்கப்படவில்லை. இதுவே பெரும்பாலான இளைஞர்களை சாதிய, மதவாத பிற்போக்குச் சக்திகளின் பின்னால் அணிதிரளுவதற்கு வழிவகுக்கின்றது. அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக ஆட்சிப் பொறுப்பில் உள்ள அ.தி.மு.க தவிர மற்ற பெரும்பாலான அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.ஆனால் நாளை இதே அரசியல் கட்சிகள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின் எப்படி நடந்துகொள்வர்கள் என்பது நமக்குத் தெரியும். அதனால் அம்பேத்கரிய பெரியாரிய, மார்க்சிய சிந்தனையாளர்கள் இந்த இரட்டை நாக்குப் பேர்வழிகளான அரசியல் கட்சித் தலைவர்களை நம்பி மோசம் போகாமல் இருக்கவேண்டும்.

 உண்மையிலேயே அம்பேத்கரிய பெரியாரிய, மார்க்சிய சிந்தனைகளை வளர்த்தெடுக்க வேண்டும் என்று நாம் விரும்பினால் முதலில் தேர்தலில் பங்கெடுக்கும் அரசியல் கட்சிகளின் ஆதிக்கத்தில் இருந்து விடுபடவேண்டும். அதைச் செய்தாலே நாம் பாதி வெற்றிபெற்றதாக அர்த்தம். மீதி நம்முடைய ஒருங்கிணைந்த செயல்பாடுகளில் இருக்கின்றது.

- செ.கார்கி    

Pin It