makayika 550

ஐ‌ஐ‌டி-யில் செயல்பட்டு வந்த “அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டம்” மீது இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆட்சியாளர்கள் தடை விதித்தற்கான காரணங்களைத் தெளிவாக சொல்கிறார்கள். “இவர்கள் அம்பேத்கர், பெரியார் கொள்கைகளைப் பேசவில்லை. நாட்டின் பொருளாதார கொள்கையையும், அதை முன்னெடுக்கிற பிரதமரையும் விமர்சிக்கிறார்கள். இது ஆபத்தான போக்கு. ஆகவே தடை செய்திருக்கிறோம்” என்கிறார்கள்.

என்ன ஆபத்தானப் போக்கு? அதை அவர்களதுப் பிரச்சாரகர்கள் வெளிப்படையாக்குகிறார்கள். “அ.பெ.வா.வ சாதிய ஒடுக்குமுறை, இட ஒதுக்கீடு என அம்பேத்கரியம் பேசலாம். இவைகளோடு சேர்த்து பகுத்தறிவு என பெரியாரியம் பேசலாம். ஆனால் நிலம் கையகப்படுத்தல் போன்ற பொருளாதாரக் கொள்கைகளைப் பேசினால் அது நக்ஸலிசம்” என்பதைத்தான் அர்ஜூன் சம்பத், இராகவன் போன்றோர் எல்லா இடங்களிலும் போட்டுடைக்கிறார்கள்.

ஆக, அ.பெ.வா.வ தடை செய்யப்பட்டதற்கு அடிப்படைக் காரணம் பெயர் சிக்கலல்ல. இது இந்துத்துவப் பண்பாட்டு தாக்குதலல்ல. பிரச்சினை தெளிவானது. நிலம் கையகப்படுத்தல் குறித்துப் பேசுவது கூட முதன்மையானதல்ல. அதைப் பேசுகிறவர்கள் யார் என்பதுதான் அவர்களுக்கு முக்கியம். நிலம் கையகப்படுத்தல் உள்ளிட்ட அரசின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பேசுகின்றன. அவைகளின் மாணவர் அமைப்புகள் உட்பட அனைத்து உறுப்பு அமைப்புகளும் பேசுகின்றன; போராட்டங்கள் நடத்துகின்றன. அது ஆட்சியாளர்களுக்குப் பிரச்சினையில்லை. எதிர்க் கட்சிகளின் நடவடிக்கையால் மிஞ்சிப்போனால் என்ன நடக்கும்? ஆட்சியில் வேறொரு கட்சி அமரும். அதனால் யாருக்கு என்ன நட்டம்? ஆனால் அதே விசயத்தை நக்சல்கள் பேசினால் ஆபத்து. முதலாளிகளுக்கு எதிரான சிவப்பு ஆபத்து. அதை அனுமதிக்க முடியாது; முளையிலேயே கிள்ளுவோம் என்பதுதான் இந்தத் தடை.

அவர்கள் ஒரு வாசகர் வட்டத்தை தடை செய்யவில்லை. மக்களுக்கான மாற்று அரசியல் கட்சி உருவாதை தொடக்கத்திலேயே தடை செய்கிறார்கள். அ.பெ.வா.வ ஒரு மாற்று மக்கள் கட்சியை இலக்காகக் கொண்டிருக்கிறதா? இல்லையா? என்பது வேறு விவகாரம். ஆனால் ஆட்சியாளர்கள் அப்படித்தான் அஞ்சுகிறார்கள்.

ஆனால் நமது நடுத்தர வர்க்க மேதாவிகள் நிலைமையை தங்களுக்கு சாதகமாக திருப்புகிறார்கள். “அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டங்களை நாடு முழுவதும் திறவுக” என்று அறைகூவல் விடுக்கிறார்கள்.

திறந்தால் என்னவாகும்? நாடெங்கும் பெயர்ப் பலகைகள் இருப்பதைக் கண்டு ஆட்சியாளர்கள் அடங்கி விடுவார்களா? அப்படியானால் அம்பேத்கரின் பெயரை உயர்த்திப்பிடித்து விடுதலைச் சிறுத்தைகள், பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட கட்சிகளே இருக்கின்றன. பெரியாரின் அடையாளத்தை உயர்த்திப் பிடித்து திராவிடர் விடுதலை கழகம், தந்தைப் பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் கழகம் என அமைப்புகள் உள்ளன. இவற்றுக்கெல்லாம் மாணவர் அமைப்புகள் உள்ளன. மட்டுமல்லாது அம்பேத்கர், பெரியார் பெயரில் ஆயிரக்கணக்கான சிறிய அமைப்புகள் உள்ளன. அவையனைத்தும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. இவைகளுக்கு நாடெங்கும் பெயர்ப் பலகைகள் உள்ளனவே!

மதிப்பிற்குரிய நடுத்தர வர்க்கப் போராளிகள் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்தை பலமானதாக மாற்றவாவது முயற்சிக்கிறார்களா? அப்படியான எண்ணமிருந்தால் இருக்கிற அமைப்புகளையெல்லாம் இணைக்க வேண்டும். அம்பேத்கர், பெரியார் கொள்கைகளுக்கிடையில் உள்ள ஒத்த நோக்கத்தை உயர்த்திப் பிடித்து ஒற்றுமையை உருவாக்க வேண்டும். அப்படி உருவாக்குகிற ஓர் அமைப்பை மேலும் பலப்படுத்த எல்லோரையும் அதில் இணையும்படி அறைகூவல் விட வேண்டும்.

அதைவிடுத்து எந்த தலைமையும் இல்லாமல் வெறும் கிளைகளாக உதிரித்தனமான அமைப்புகளை உருவாக்குவதன் நோக்கமென்ன?

makayika 551

அரசியல் மாற்றத்தை, சமூக மாற்றத்தை வாசகர் வட்டங்களோ, மன்றங்களோ செய்துவிட முடியாது; அது நாட்டின் பெரும்பான்மை மக்களை ஒருங்கிணைக்கிற புரட்சிகர கட்சியால் மட்டுமே சாத்தியம் என்பதை அரசும், ஆட்சியாளர்களும் உணர்ந்து செயல்படுகிறார்கள். அவர்கள் ஒரு கட்சிக்குத் தேவையான சிறுகுழுவும் உருவாகிவிடக் கூடாதென துடிக்கிறார்கள். நாட்டு மக்களுக்கு முன்னாலிருக்கும் சவாலும்கூட ஒரு புரட்சிகர கட்சியைக் கட்டுவது எவ்வாறு? என்பதுதான்.

ஆனால் நடுத்தர வர்க்கத்திற்கு இப்போது புரட்சிகர கட்சி தேவையில்லை. புரட்சிகர கட்சி அர்ப்பணிப்பையும், தியாகத்தையும் கோருகிறது. 1990-க்குப் பிறகு வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கம் அர்ப்பணிப்பிற்கும், தியாகத்திற்கும் தயாராக உள்ளதா? உலகமயமாக்கலில் வெறிநாயைப்போல ஓடி நான்கு இலக்க சம்பளத்தை கவ்விக்கொண்டு வரும் நடுத்தர வர்க்கத்திற்கும்கூட பிரச்சினையிருக்கிறது. ஆனாலும் கிடைத்திருக்கிற அற்ப சந்தோச வாழ்க்கையின் மீது அவ்வளவுப் பற்றுமிருக்கிறது. பெரும்பான்மை மக்களின் வாழ்க்கையை சுரண்டித்தான் தங்களுக்கு இந்த அற்ப வாழ்க்கையை வழங்குகிறார்கள் என்பதை உணர்ந்து கொண்ட இவர்களுக்குப் பிரச்சினை, இவர்களின் மனசாட்சியின் உறுத்தலுக்கு பரிகாரம் வேண்டும். எந்த இழப்புமில்லாமல் ஆத்ம சாந்தியடைய நினைக்கிற இவர்களுக்கு அமைப்பு வேண்டும். அது வாசகர் வட்டங்களாகவும், மன்றங்களாகவும் இருந்தால் போதும். அதை வைத்துக்கொண்டு பொது இடத்தில் கூடுகை, மெழுகுவர்த்தி அஞ்சலி, ஆவணப்படம் காட்டல் ஆகிய நடவடிக்கைகள் மூலம் மன அமைதியடைவார்கள்.

அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டத்திற்கு வந்த தடை ஒரு புரட்சிகர கட்சிக்கு வந்திருந்தால் அதை நாடு முழுவதும் உருவாக்க முனைந்திருப்பார்களா?

வாய்ப்பேயில்லை. தமிழ்நாட்டில் சமூக மாற்றத்திற்கான அனைத்து அமைப்புகளுக்கும், கட்சிகளுக்கும் செயல்படும் உரிமை மறுக்கவேப்பட்டுள்ளது. அவர்களுக்கு துண்டறிக்கைகள், சுவரொட்டிகள், பதாகைகள் (பேனர்கள்), வெளியீடுகள் அச்சிட்டு கொடுக்கக்கூடாதென காவல்துறை உத்தரவிட்டுள்ளது. முற்போக்கு இயக்கங்கள் செயல்படுகிற ஒவ்வொரு மாவட்டங்களிலும் சுவரொட்டி ஒட்டியதற்கான வழக்குகள் 25-க்கும் குறைவில்லாமல் இருக்கிறது. சென்னையில் மட்டும் கிட்டதட்ட 300 வழக்குகள் உள்ளன. பொதுக் கூட்டங்கள், வாயில் கூட்டங்கள், மாநாடுகள், ஊர்வலம் மற்றும் அரங்கக் கூட்டங்கள் நடத்த அனுமதியேக் கிடையாது. சொல்லப்போனால் சமூக மாற்றத்திற்கான இயக்கங்கள் முடக்கப்பட்டு எதுவும் செய்ய முடியாத நிலையில் அரசால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் இந்த கருத்து சுதந்திரப் போராளிகள் செய்தது என்ன?

தோழர்களே! ஆளும் வர்க்கமும், ஆட்சியாளர்களும் அஞ்சி நடுங்குவது அம்பேத்கர், பெரியார் அடையாளங்களைக் கண்டல்ல. சொல்லப்போனால் நக்சல்பாரி என்று அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் சில குழுக்களை கூட அரசு சட்டை செய்வதில்லை. தமிழ்நாட்டைப் பொருத்தவரை தமக்கெதிராக ஒரு மக்கள் கட்சி இருக்கிறதென்று அரசு அஞ்சவில்லை. அப்படியொரு கட்சி உருவாகி விடக்கூடாது என்றுதான் அஞ்சுகிறது.

இப்போது வரைக்கும் எந்த கட்சியும் தாங்கள்தான் மக்களுக்கானவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இடத்தை அடையவில்லை. அந்த இடத்தை அடைய வைக்க வேண்டியதுதான் நமது வேலை. மக்களுக்கான கட்சியென்றால் அது கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர வேறில்லை. மாணவர்களும், இளைஞர்களும் தாங்கள் நம்புகிற கம்யூனிஸ்ட் கட்சிகளில் கொத்துக்கொத்தாக இணைய வேண்டும். கட்சியை சீரழித்துக் கொண்டிருக்கிற போக்குகளை அழிக்க வேண்டும். கம்யூனிசத்தைப் பற்றிப் பிடித்துக் கொண்டு தீராத வாசிப்பும், தீவிர செயற்பாடும், சிதறி கிடக்கும் இயக்கங்கள் ஒன்றுபட தோழமையான விவாதங்களையும் மேற்கொள்ள வேண்டும். அதுதான் மக்களைக் காப்பாற்றுகிற நடவடிக்கை.

ஏற்கனவே மக்களுக்கான கட்சி உருத் திரண்டு வந்தபோது இதே நடுத்தர வர்க்கத்திலிருந்து வந்த துரோகிகள்தான் அதைப் போட்டுடைத்தார்கள். 'ஒருங்கிணைந்த அமைப்பு கூடாது, அது அதிகாரத்துவம்' என்று அமைப்பை சிதறடித்தார்கள். இப்போதும் அதே போக்குகள்தான் தலைத்தூக்குகிறது. தோழர்கள் கட்சிக்கு உட்படாத வாசகர் வட்டம், மன்றங்களைப் புறக்கணிக்க வேண்டும். கட்சிகளைப் புறக்கணித்து மனமகிழ் மன்றங்களுக்காக ஏங்கும் நடுத்தர வர்க்கம் அழிந்து போகட்டும். அது நாட்டுக்கு நல்லது.

- திருப்பூர் குணா

Pin It