modi and economyநிர்மலா சீதாராமனும் சக்திகாந்த தாஸும் இப்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உடனடியாக தீராது, ஜிடிபி வீழ்ச்சியில் போகும் என வேறு வார்த்தைகளில் வேறுவழியில்லாமல் சுட்டிக் காட்டி விட்டனர். 
 
மத்திய அரசு, தொழிற்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்து - கொஞ்சம் வட்டியைக் குறைத்து - சில விதிமுறைகள் தளர்த்தியதால் வங்கிகள் கடன் கொடுப்பதற்குத் தயாராகி விட்டன. ஆனால், புதிதாக எவரும் கடன் வாங்க முன்வரவில்லை. ஏற்கனவே இயங்கும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களும் கடன் வாங்க முன்வரவில்லை. பல பெரு நிறுவனங்களும் கடன் வாங்கத் தயங்குகின்றன.
 
சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் கொரோனா ஊரடங்கிற்குப் பின் திறக்கப்பட்டு உற்பத்தியைத் தொடங்க தயாராகி விட்டார்கள். ஆனால் பழையபடி சந்தையில் தேவை (Demand) இல்லை. உற்பத்திக் குறைவும் வேலையிழப்பும் தவிர்க்க முடியாததாகி விட்டது.
 
ஏற்கனவே கைவசம் உள்ள கேட்புக்கு (Order) ஏற்ப அல்லது இருக்கும் உள்ளூர் சந்தை தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்ய நிறுவனங்கள் தயாராகி விட்டன.  ஆனால் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்குச் சென்று விட்டதால் தொழிலாளர்கள் இல்லை. பயிற்சி இல்லா உள்ளூர் தொழிலாளர்களை உடனே வேலைக்கமர்த்த முடியாது; அப்படியே அமர்த்தினாலும் கூலி அதிகம் கொடுத்தாக வேண்டும்.
 
அதாவது நிதி மூலதனம் தயாராக இருந்தும் தொழிற்துறை அதை பயன்படுத்த முடியாத நிலை. உற்பத்தி செய்ய சூழல் இருந்தும் சந்தையில் தேவை இல்லை. இருக்கும் சந்தை தேவைக்கேற்ப உற்பத்தி செய்ய முயன்றாலும் தொழிலாளர்கள் இல்லை. ஆக இடியாப்பச் சிக்கலாக மூலதனத்திற்கும் கூலியுழைப்பிற்கும் இடையிலான முரண்பாடு முற்றி விட்டது.
 
ஒரு பக்கம் நிதி மூலதனம் குவிந்து கிடப்பதும் மறுபுறம் வேலையிழப்பு, வேலையின்மை, அத்தியாவசியப் பொருள் பஞ்சம் உருவாகிக் கொண்டிருப்பதும் கண்ணுக்குத் தெரிந்து விட்டது.
 
இந்த நெருக்கடியிலிருந்து மீள வேண்டுமானால் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்க வேண்டும் என ஒத்துக் கொண்டு கார்ப்பரேட் பெருமுதலாளிகள் அவர்களது அரசு அதற்குரிய நிவாரணங்களை செய்து பிரச்சினையை தள்ளிப் போடும். ஆனால், பாஜக அரசோ இலவச நிவாரணங்கள் அல்லது நேரடியாக மக்கள் கையில் கணிசமான தொகையை அளிக்க மறுப்பதால் தற்காலிகமாகக் கூட நெருக்கடி தீராது எனத் தெரிகிறது. மாநில அரசுகள் அப்படி அறிவிக்க நினைத்தாலும் அவர்களிடம் பணம் இல்லை; மத்திய அரசிடம் கையேந்தும் நிலை.
 
பிறகு எப்படி நெருக்கடி தீரும்? ஒரே தீர்வு, மக்களிடம் வாங்கும் சக்தி பெருமளவில் அதிகரிக்க... கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து, பெரும் பண முதலைகளிடமிருந்து பிடுங்க வேண்டும். ஆனால் இதற்கு இன்று வாய்ப்பே இல்லை. இன்றைய ஆட்சியாளர்கள் இதற்கு எதிராகவே செய்கிறார்கள் என்பது கண்கூடு. பணக்காரர்களுக்கு கூடுதல் வரி போடப் பரிந்துரைத்த வருவாய் அதிகாரிகள் மீது மோடி அரசு பாய்ந்தது. இன்னொரு புறம் கார்ப்பரேட்  முதலாளிகளுக்கு ஆதரவாக அனைத்தையும் தனியாருக்குத் தாரை வார்க்கிறது.
 
மோடி கும்பல் அந்நிய முதலீட்டிற்காக மேலும் அகலக் கதவு திறந்து விட்டிருக்கிறது. இதைச் சுட்டிக்காட்டி ஆளும் வர்க்க பொருளியல் 'வல்லுநர்கள்' கோவிட்19 பிரச்சினைக்குப் பின் உலகம் மறு ஒழுங்கமைக்கப்படும் என்றும், அதில் இந்தியாவில்தான் அந்நிய முதலீடுகள் வந்து குவியப் போகிறது என்றும், அதனால் இந்தியப் பொருளாதாரம் இன்னும் சில ஆண்டுகளில் உலகிலேயே 3வது நிலைக்கு உயரும் என்றும்  கனவு காணச் சொல்கிறார்கள். 
 
1990களில் ஏற்பட்ட இந்திய நெருக்கடியைத் தீர்க்க LPG (Liberalization, Privatization, Globalization) என்கிற புதிய பொருளாதாரக் கொள்கை மூலம் 1991ல் அன்றைய காங்கிரசு என்ன நடவடிக்கை எடுத்ததோ அதையேதான் இன்றைய பாஜக கும்பல் நாலுகால் பாய்ச்சலில் செய்ய விழைகிறது.
 
1990-91ல் இந்தியாவின் GDP வளர்ச்சி விகிதம் 1.1% என்பதில் இருந்தது. அது 2015-16ல் 7.5% ஆக மாறும் என IMF கூறிய அந்த LPG-மும்மயக் கொள்கையை 1991ல் கொண்டு வந்தனர். ஆனால் lMF எதிர்பார்த்ததைவிட 2015-16ல் 8.2% ஆக வளர்ச்சி விகிதம் இருந்தது. இந்த GDP கணக்கீடு முறை தவறு என்பது ஒருபுறம் இருக்க, வந்தடைந்த வளர்ச்சி என்பதும் ஊதிப் பெருக்கப்பட்ட வீக்கம் ஆகும். 
 
1991ல் விவசாயத்தில் 62.56% இருந்த வேலைவாய்ப்பு 2019ல் 42.38% ஆக சுருங்கியுள்ளது. 20% பேரை விவசாயத்திலிருந்து நகரத்திற்கு தொழிற்துறைகளுக்கும் சேவை துறைகளுக்கும் துரத்தியுள்ளது.
 
1991 - 2019ல் இந்திய GDPயில் விவசாயம் மற்றும் உப தொழில் பங்களிப்பு குறைந்தது. உற்பத்தியை உள்ளடக்கிய தொழிற்துறையின் பங்களிப்பும் படிப்படியாகக் குறைந்தது. தகவல் தொடர்பு, ரியல் எஸ்டேட்டுகளை உள்ளடக்கிய சேவைத் துறையின் பங்களிப்பு மட்டுமே வளர்ந்தது. அதாவது தேவையில்லாத துறை ஏகாதிபத்தியங்களின் தேவைக்காக வளர்க்கப்பட்டது. அத்தியாவசியத் தேவைகளான விவசாயம், தொழிற்துறை உற்பத்திகள் கைவிடப்பட்டன. அதுவும் உள்நாட்டுத் தேவைக்கேற்ப இல்லாமல் ஏற்றுமதி அடிப்படையிலேயே ஊட்டி வளர்க்கப்பட்டன. ஆக தேவையில்லாத சதைக் கட்டியே வளர்ந்து இந்தியப் பொருளாதாரத்தை நசுக்கியது. ஆனால் அதை ஆட்சியாளர்கள் வளர்ச்சி என சித்தரித்தனர்.
 
1991-2019 வரை நடந்த மேற்கண்ட தேவையில்லா வீக்கத்தால் இங்கு உருவானது முறைசாரா பொருளாதார (informal economy) வளர்ச்சி ஆகும். உற்பத்தி, வணிகம் இரண்டிலும் முறைசாரா துறைகளே வளர்ந்தன. குறிப்பாக தொழில், சேவைத் துறையில் நிரந்தரத் தொழிலாளர்களைக் குறைத்து, தற்காலிக - ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பெருக்கினர். அதுவும் மாறிமாறி நகரும் (floating) தன்மையிலான தொழிலாளர்களை வைத்து தொழில் மற்றும் சேவைத் துறையை கட்டியமைத்தார்கள். இதனாலேயே இந்தியாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகரித்தனர். அவர்களும் பல தொழில்களுக்கும் பல மாநிலங்களுக்கும் அலைந்து திரிந்தார்கள்.
 
இன்றைக்கு உள்நாட்டிற்குள் புலம் பெயர்ந்த முறைசாரா தொழிலாளர்கள் பற்றிய புள்ளி விவரமே மத்திய - மாநில அரசுகளின் கைகளில் இல்லை. மொத்த தொழிலாளர்களில் 81% அளவிற்கு புலம் பெயர் தொழிலாளர்கள் + ஒப்பந்தத் (தற்காலிக) தொழிலாளர்கள் + முறைசாராத் தொழிலாளர்கள் மட்டுமே உள்ளதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது.
 
ஆக 1991ல் கொண்டுவந்த அதே மாடல் பொருளாதார சீர்திருத்தங்களையே மோடி கும்பல் கூடுதல் அளவில் நடைமுறைத்தப்பட இருப்பதால்... உள்நாட்டுத் தேவை அடிப்படையிலான உற்பத்திக்குப் பதிலாக தேவையற்ற உற்பத்தியும் வணிகமும்தான் வளர்ச்சியாக மேலும் வீங்கப் போகிறது. வெளிநாட்டு ஏகாதிபத்திய தேவைக்கான முறைசாரா பொருளாதாரமே மேலும் ஊக்குவிக்கப் போகிறார்கள். இருக்கும் ஒட்டுமொத்த நெருக்கடியும் மேலும் அதிகரிக்கவே போகிறது. சமூக சமன் நிலையே குலையப் போகிறது. நிர்க்கதியாக உழைக்கும் மக்கள் நிற்கப் போகிறார்கள். நாம் என்ன செய்யப் போகிறோம்?
 
தேர்தலில் பங்கெடுக்கும் கம்யூனிஸ்டு கட்சிகள், பங்கெடுக்காத மா- லெ குழுக்கள், உலகமயம் - தாராளமயம் - தனியார்மயம் 1991ல் வந்தபோது எதிர்த்தன. அதன் பின்விளைவுகளை உணர்ந்து பாதிப்புகளைச் சுட்டின. நிரந்தரத் தொழிலாளர்களைக் குறைத்து, ஒப்பந்த தொழிலாளர்களைக் கொண்டு வந்த இடங்களில் எல்லாம் கம்யூனிஸ்டுகள் எதிர்த்தனர். எல்லாம் சரி. ஆனால் LPG எனும் மூன்று மயக் கொள்கையால் புலம்பெயர் முறைசாரா தொழிலாளர்கள், அதிலும் உதிரிப் பாட்டாளிகள் இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் உருவாவார்கள் என எந்தக் கட்சியாவது குழுவாவது கணித்ததா? கணித்திருந்தால் அவர்களை அமைப்பாக்குவதற்கான திட்டம் நடைமுறைகள் இருந்தனவா? இருந்திருந்தால் அதில் ஏன் தோல்வி நிகழ்ந்தது?
 
இப்பொழுது... ஒப்பந்தத் தொழிலாளர்களை, முறைசாராத் தொழிலாளர்களை, முறைசாராத் தொழில்களின் உதிரிப் பாட்டளிகளை அதிலும் நகரும் தன்மையிலான பாட்டாளிகளை அமைப்பாக்க என்ன முறை அல்லது திட்டம் கம்யூனிஸ்டுகளிடம் உள்ளது?  இவற்றையெல்லாம் கம்யூனிஸ்டுகள் ஆய்வு செய்து உடனடியாக அவசரமாக செயல்பட வேண்டிய நேரமிது.
 
- ஞாலன்
Pin It