ஒருவன் ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரையிலும், கல்வியைத் தாய் மொழியில் கற்றால் தான் முழுமையான புரிதல் இருக்கும் என்று உலகில் உள்ள கல்வியியல் அறிஞர்கள் அனைவரும் விதிவிலக்கு இல்லாமல் கூறி வருகிறார்கள். மாற்று மொழி மக்களுடன் தாங்கள் கற்றதைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களுக்கு இடையிலான இணைப்பு மொழியைக் கற்று, பரிமாறிக் கொள்ள முடியும். ஆனால் எந்தக் காரணத்தைக் கொண்டும் தாய் மொழிக் கல்வியை உதாசீனப்படுத்தல் ஆகாது. ஆனால் உயர்சாதிக் கும்பலினரிடம் மாட்டிக் கொண்டு இருக்கும் கல்வி படும் பாடு சொல்ல முடியாததாக இருக்கிறது.

அன்று, மனு(அ)நீதி கோலோச்சிக் கொண்டு இருந்த காலத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் ஆட்சி அதிகாரக் கல்வி பெறுவதில் இருந்து அதிகாரப் பூர்வமாகவே தடுக்கப்பட்டு இருந்தனர். உற்பத்தி, விநியோகம் சார்ந்த கல்வியை அவர்களுக்கு உள்ளேயே பெறுவதும் வளர்ப்பதும், அவர்களுடைய உரிமையாக அல்ல; கடமையாக இருந்தது. ஆட்சி அதிகாரக் கல்வி பார்ப்பனர்களின் ஏகபோக உரிமையாக இருந்தது. ஆங்கிலேயர்கள் ஆண்டபோது சாதி வேறுபாடு பார்க்காமல் அனைத்து மக்களுக்கும் கல்வி அளித்தனர்.

இதைப் பார்ப்பனர்கள் கடுமையாக எதிர்த்த போதும் ஆங்கிலேயர்கள் அதைக் கண்டு கொள்ளவில்லை. உடனே ஆங்கிலக் கல்வி கூடாது என்றும், சுதேசிக் கல்வி வேண்டும் என்றும் போராட்டம் செய்தனர். ஆனால் உயர்சாதிக் கும்பலினர் ஆங்கிலக் கல்வியைப் பெறுவதை மட்டும் கண்டு கொள்ளாமல் இருந்தனர். சுதேசிக் கல்வியும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முறையாக அளிக்கப்படவில்லை. வ.வே.சு.ஐயர் போன்றோர் நான்கு வருணப் பிரிவுகள் இந்திய சமூகத்தைத் தாங்கும் நான்கு தூண்கள் என்று கூறி பழைய மனு(அ)நீதியை மீட்டுக் கொண்டு வரவே முயன்றனர்.

இந்தியாவை விட்டு ஆங்கிலேயர்கள் வெளியேறிய பின் பார்ப்பனர்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கல்வியை மறுக்கும் முயற்சியை முடுக்கி விட்டனர். காமராசர் அனைவருக்கும் கல்வி அளிக்கும் திட்டத்தைக் கொண்டு வந்த போது அதைச் செயலாக்க விடாமல் தடுக்க முயனறார்கள். ஆனால் காமராசரின் ஆளுமைக்கு முன் தோற்றுப் போனவர்கள், அதற்குப் பின் கல்வி வெகுமக்களுக்குப் போய்ச் சேர்ந்து விடக் கூடாது என்பதற்காக ஆங்கில மயமாக்கினார்கள். காலம் செல்லச் செல்ல இந்த ஆங்கில மயமாக்கல் அதிகமாகிக் கொண்டே சென்றது. மனித வள ஆற்றல் வீணாகக் கூடாது என்ற மனித நேயம் கொண்டவர்கள் இதை எதிர்த்துப் போராடி, கல்வி முழுவதையும் தாய்மொழி வழியில் அளிக்க அழுத்தம் கொடுத்து வந்தனர். அது முழு வெற்றியை அடைய முடியாமல் போகவே, குறைந்த பட்சம் ஆரம்பக் கல்வியையாவது தாய்மொழியில் அளிக்க வேண்டும் என்று போராடினர். இதைச் சில மாநில அரசுகள் ஏற்று, தாய்மொழி வழியில் கல்வி அளிக்கும் பள்ளிகளுக்கு மட்டும் தான் அரசு அங்கீகாரம் அளிக்கும் என்று ஆணையிட்டன. அவற்றில் கர்நாடக மாநிலமும் ஒன்று.

இவ் ஆணைக்கு எதிராக வழக்கு தொடுத்த பள்ளிக்கூடங்கள் உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவைப் பெற்றன. உயர்நீதி மன்றத்தின் உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசும் மனித வளம் முடங்கக் கூடாது என்று விரும்பும் சில தன்னார்வ அமைப்பகளும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன. இவ்வழக்கில் உச்ச நீதிமன்றத்தின், தலைமை நீதிபதி உட்பட ஐந்து பேர் அடங்கிய அரசியல் சட்ட அமர்வுக் குழு (Constitution bench) 6.5.2014 அன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.

இத்தீர்ப்பில் தாய்மொழியில் ஆரம்பக் கல்வியைக் கற்றால் தான் ஒரு மனிதனின் அறிவு வளர்ச்சி நிறைவாக இருக்கும் என்று கல்வியியல் அறிஞர்கள் கூறினாலும், அவ்வாறு செய்யும்படி வற்புறுத்த அரசுக்கு உரிமையும் அதிகாரமும் இல்லை என்றும், தான் தாய்மொழி வழியில் கற்பதா அல்லது வேற்று மொழி வழியில் கற்பதா என்பதை அந்தக் குழந்தைக்குத் தான் உரிமை இருப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது.

உச்ச நீதிமன்றம் ஏன் இப்படித் தீர்ப்பு அளித்து உள்ளது? ஒரு குழந்தையால் எப்படி சரியான முடிவை எடுக்க முடியும்? குழந்தையின் சார்பாகப் பெற்றோர்கள் முடிவு எடுப்பார்கள் என்றால், பெற்றோர்கள் தங்கள் குழந்தை நிறைவான அறிவு வளர்ச்சி பெறக் கூடாது என்று முடிவு எடுப்பதை அனுமதிக்கலாமா? அப்படி முடிவு எடுக்கிறார்கள் என்றால் காரணம் இல்லாமல் இருக்குமா?

ஆங்கிலேயர்கள் சாதி வேறுபாடு பாராமல் கல்வி அளித்ததால் பார்ப்பனர்களுக்குப் போட்டியாக ஒடுக்கப்பட்ட மக்கள் வந்ததைக் கண்ட இராஜாஜி, அதைத் தவிர்ப்பதற்காகக் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார். இவ்வாறு செய்வதால் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் குலத் தொழிலிலும் பயிற்சி பெறும் பொழுது ஆட்சி அதிகார வேலைக்கு முயலும் பொறுமை மறைந்து போய் குலத்தொழிலிலேயே நிலைக்க வேண்டிய நிலைமை ஏற்படும்; அப்பொழுது அவர்கள் பார்ப்பனர்களுக்குப் போட்டியாக வராமல் போய் விடுகிறார்கள். இதனால் திறமைக் குறைவான பார்ப்பனர்களும் ஆட்சி அதிகாரப் பணியில் அமர முடியும்.

அது போன்ற உத்தி தான் இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலும் உள்ளடங்கி உள்ளது. தாய்மொழிக் கல்வி என்றால் அனைவருடைய அறிவும் அவரவர் திறமைக்கு ஏற்ப விரிவடையும். அப்பொழுது பார்ப்பனர்களிலும், ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களிலும் உள்ள திறமைசாலிகள் மட்டும் தான் முன்னிலைக்கு வர முடியும். பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்கள் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களில் உள்ள திறமைசாலிகளை மீறி உயரே செல்ல முடியாமல் போய் விடும்.

ஆங்கில வழிக் கல்வி என்றால், காலங்காலமாக கல்வி மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் வழி காட்டுதல் இல்லாமல், தங்கள் திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் போய்விடும். 'தட்டிக் கேட்க ஆளில்லை என்றால் தம்பி சண்டப்பிரசண்டன்' என்பது போல திறமைக் குறைவான பார்ப்பனர்கள் தங்களைத் திறமைசாலிகள் என வெளிச்சம் போடலாம். ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் படிக்க முடியக் கூடிய தாய்மொழி வழிக் கல்விக் கூடங்களை நடத்த முடியாமல் செய்யலாம். மொத்தத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி அறிவு பெறாமல் பார்த்துக் கொள்ளலாம்.

ஆகவே தங்கள் அறிவு முழுமையாக மலராவிட்டாலும் பரவாயில்லை; ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் கல்வி அறிவின் வாசற்படியைக் கூடத் தொட்டு விடக் கூடாது என்று நினைக்கும் உச்ச நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு கூறி உள்ளது.

அன்று இராஜாஜி குலக் கல்வித் திட்டததைக் கொண்டு வந்த போது அதை எதிர்த்துப் பெரியாரும் காமராசரும் கடுமையாகப் போராடி வெற்றி பெற்றனர். இன்று உச்ச நீதிமன்றம் அறிவியலுக்கு முற்றிலும் எதிரான இத்தீர்ப்பு அளித்துள்ள போது, இதை யாரும் கண்டு கொள்ளக் கூட இல்லை என்பது பெரிதும் கவலையாக உள்ளது. ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்காக உழைப்பதாகச் சொல்லிக் கொள்ளும் அரசியல் கட்சிகள் இது போன்ற நேரங்களில் இது போன்ற அநீதிகளுக்கு எதிராக ஏன் செயல்படவில்லை?

(இக்கட்டுரை மக்கள் நெஞ்சம் (மாதமிரு முறை ஏடு) 14.6.2014 இதழில் வெளி வந்துள்ளது)

 

Pin It