sadiq 400சாதிக் சேக், கடந்த ஜூன் 4 அன்று தனது வழக்கமான தொழுகையை முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வேலையில் ஒரு கும்பல் அவரை மடக்கி நிறுத்துகிறது. தலையில் குல்லா, முகத்தில் தாடியுடன் இருந்த சாதிக்கைக் கண்ட மறுநிமிடம் கிரிக்கெட் மட்டை மற்றும் இரும்புத்தடிகளைக் கொண்டு அக்கும்பல் அவரைத் தாக்குகிறது.ஏன் தாக்கப்படுகிறோம், எதற்காக தாக்கப்படுகிறோம் என்று தெரியாமலேயே துடி துடிக்க சாதிக் உயிர்விடுகிறார்.

பேஸ்புக்கில் தாக்ரேவையும் சிவாஜியையும் விமர்சித்து வெளியான பதிவை எதிர்க்கும் விதமாக இந்துத்துவ அடிப்படைவாத அமைப்பு/கட்சிகளான இந்து ராஷ்டிர சேனா, சிவசேனா, பாஜ‌க மற்றும் பிற தீவிர இந்துத்துவ அடிப்படைவாத அமைப்புகளைச் சேர்த்தவர்கள் புனேவின் ஹடப்சர் பகுதியில் பந்த்தை அறிவித்து வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டிருந்த வேளையில், இதுகுறித்து எதுவுமே அறியாத சாதிக், இக்கும்பலிடம் சிக்கிப் பலியாகிறார்.

இன்னும் சில மாதங்களில் வரவிருக்கிற மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலை தனது வழக்கமான வகுப்புவாத அரசியலை முன்வைத்து எதிர்கொள்ள இவ்வமைப்புகள் இக்காட்டுமிராண்டிச் செயல்களை கட்டவிழ்த்து விடுகின்றன.

மேலும் தனது இந்துத்துவ அடிப்படைவாத மேலாதிக்கத்தை நிலைநிறுத்த இவ்வகையான கொலைக் குற்றங்களில் ஈடுபடுவதென்பது இவ்வமைப்புகளுக்கும்/கட்சிகளுக்கும் புதிதல்ல.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், புனேவில் கொலை செய்யப்பட்ட மூடநம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவு செயற்பாட்டாளரான நரேந்திர தபோல்கரின் படுகொலைக்கு இத்தீவிர வலதுசாரி இந்துத்துவ அமைப்புகளே மூளையாக இருந்தது நினைவிருக்கலாம். முன்பாக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்கள் கொல்லப்பட்ட குஜராத் வகுப்புவாத கலவரங்களை முன்னின்று நடத்திய கட்சியான பாஜக‌, அதை இயக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் இந்தியாவின் ஆட்சிபீடத்தில் அமர்ந்த

அடுத்த சில மாதங்களில் இக்கொடூரம் நடந்திருப்பதை நாம் கவனித்துப் பார்த்தாக வேண்டும். மேலும் இவ்வகையான வகுப்புவாத பின்னணி அரசியலைக் கொண்டு வடமாநிலங்களில் வலுப் பெற்ற இவ்வமைப்புகளும் கட்சிகளும் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த சில காலங்களிலேயே தனது அடிப்படைவாத கொள்கையை அனைத்து மாநிலங்களிலும் வெறித்தனமாக விரிவுபடுத்தும் போக்கையும் நாம் பார்க்க முடிகிறது.

இதன் எதிரொலியாக இந்துத்துவ அடிப்படைவாத அமைப்புகளின் உள்ளீடு நமது தமிழக கிராமங்களில் வேகமாக அதிகரித்து வருகிறது. அடிப்படைவாத கட்சிகளின்/அமைப்புகளின் கொடிக்கம்பங்கள் நமது உள்கிராமங்கள் வரை வேகமாக முளைத்து வருவதையும் அக்கட்சி கொடியுடன் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவரும் போக்கைப் பார்க்கையில் அவர்களின் வேகம் அசாதாரண ஒன்றாகவே தெரிகிறது.

கொள்கை விலக்கிய தி.மு.க, பாஜ‌கவின் பதிலி அ.தி.மு.க போன்ற கட்சிகள் என்றைக்கும் இந்துத்துவ பயங்கரவாத அரசியலுக்கு மாற்றாக இல்லாத வேளையில் திணை வகுத்து வாழ்ந்த தமிழன் மத நிறுவனங்களிடமும் இந்துத்துவ அடிப்படைவாத கட்சிகளிடமும் தனது பண்பாட்டு அசைவுகளை வேகமாக இழந்துவருவது வேதனை தரும் எதார்த்த உண்மை நிலையாக உள்ளது.

இந்துத்துவ இனவாத அரசியல் செய்யும் நவீன நாசிச அமைப்புகளான பாஜக‌, சிவசேனா, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள்/கட்சிகளின் வகுப்புவாத அரசியல் வெறியாட்டத்திற்கு சாதிக் பலியாகியுள்ளது வேதனை! மொஹ்சின் சாதிக் ஷேக்கை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் நமது ஆழ்ந்த இரங்கல்கள்.

 

Pin It