“நரிக்கு நாட்டாம குடுத்தா கெடைக்கி எட்டாடு கேக்குமாம்”என்பது கிராமத்து சொலவடை.  இது இன்றைய மத்திய அரசுக்கு அப்படியே பொருந்தும். மொழி உரிமை, நில உரிமை, உணவைத் தேர்ந்தெடுக்கும் உரிமை என ஒவ்வொன்றாகக் கைவைத்த பாரதிய ஜனதா கட்சியின் அரசு, இப்போது கல்வியில் கைவைத்திருக்கிறது.

periyar 329குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டத்தில் புதிய திருத்தங்கள் என்னும் பெயரில், மீண்டும் ‘குலக்கல்வி’த் திட்டத்திற்கு அச்சாரம் போட்டிருக்கிறது மோடி அரசு. அதற்கு மத்திய அமைச் சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை, அவரவர் குடும்பத் தொழில்களில் பணிக்கு அமர்த்திக் கொள்ளலாம் என்கிறது அந்தத் திருத்தம். அதாவது குழந்தைத் தொழிலாளர் முறையை அரசே சட்டப்பூர்வமாக்கியிருக்கிறது. ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்ற  சட்டத்தைவிட, குழந்தைகளைப் பணிக்கு வைக்கும் நிறுவனங்கள், அனுப்பும் பெற்றோர்களுக்கு வழங்கப்படும் தண்டனை அதிகரிக்கப்பட்டிருக்கிறது என்பதெல்லாம் மேற்பூச்சானது.

இன்றைய கல்வி முறையில், விளையாடுவதற்கே நேரமில்லாமல், தங்களின் குழந்தைப் பருவத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றனர். பள்ளிப்பருவத்தில் படிப்பும், விளையாட்டும் குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதை இதுவரை நம் அரசுகள் உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில், பள்ளி செல்லா நேரங்களில் குழந்தைகளைக் குடும்பத் தொழிலில் ஈடுபடுத்தலாம் என்று சட்டம் இயற்றுகின்ற அயோக்கியத்தனத்தை என்ன சொல்வது?

இந்தியாவின் பிற மாநிலங்களில் இந்தச் சட்டத்திருத்தம் குறித்து எந்தவொரு சலனமும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவில்லை. ஏற்கனவே குலக்கல்வித் திட்டத்தையும், அதைக் கொண்டுவந்த ‘ஆச்சாரியாரை’யும் அடித்து விரட்டிய, சமூகநீதி பூமியான தமிழ்நாடுதான் மோடி அரசின் வஞ்சகத்தை அடையாளம் கண்டுள்ளது. இன்றைக்கு கல்வியில் பார்ப்பனர் அல்லாத பிள்ளைகள் வெகு வேகமாக முன்னேறிக் கொண்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக, பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் கிராமப்புற மாணவர்கள் முதலிடங்களைப் பெற்று வருகின்றனர். இதுவரை போட்டுவந்த, ‘தகுதி, திறமை’என்னும் கூச்சல்கள் அர்த்தமற்றுப் போவதை சகித்துக் கொள்ள முடியாத ஆத்திரத்தின் வெளிப்பாடே, இதுபோன்ற மனுதர்மச் சட்டங்கள்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் 1156 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பத்தாம் வகுப்பில் அவர் பெற்ற மதிப்பெண் 475. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கார்த்திக்கின் கனவு மருத்துவராவது. அதற்கான தகுதி மதிப்பெண்களும் அவரிடம் இருக்கின்றன. இவர் 2007இல் குழந்தைத் தொழிலாளியாக மீட்கப்பட்டுப் பள்ளியில் சேர்க்கப்பட்டவர்.

2009ஆம் ஆண்டு வீட்டு வேலையில் இருந்து மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளி மகாலட்சுமி. பத்தாம் வகுப்பில் 472, 12ஆம் வகுப்பில் 1142 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவரும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மகாலட்சுமியும் தகுதி மதிப்பெண்களோடு மருத்துவப் படிப்பில் சேருவதற்குக் காத்திருக்கிறார்.

தீப்பெட்டித் தொழிற்சாலையில் இருந்து 2005இல் மீட்கப்பட்ட விருதுநகர் முத்துச் செல்வி 1135 மதிப்பெண்கள், விசைத்தறித் தொழிலில் இருந்து மீட்கப்பட்ட நாமக்கல் பிரபு 1058 மதிப்பெண்கள், வீட்டுவேலையில் இருந்து மீட்கப்பட்ட திருச்சி விஜய் 1012 மதிப்பெண்கள் - இவர்கள் அனைவரும் மருத்துவராக, பொறியாளராக ஆகும் கனவுகளோடு இருக்கின்றனர். இவர்களின் கனவுகளைத்தான் கானல்நீராக்கத் துடிக்கிறது பா.ஜ.க. அரசு.

ஏற்கனவே இருக்கின்ற சட்டத்தின் துணையோடு இத்தனை சாதனையாளர்களை உருவாக்க முடிந்திருக்கிறது எனும்போது, புதிய சட்டங்கள் எதற்காக?

பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற பாரதிராஜாவின் நோக்கம், அரசுப்பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்துவதாக இருக்கிறது. இப்படி இனநலனை முன்னிறுத்திச் சிந்திக்கும் தலைமுறைகள் உருவாகாமல் தடுப்பதற்கு சட்டப்படி முயல்கிறது மத்திய அரசு.

இந்தக் கேடுகெட்டத் திட்டத்திற்கு தினமணி எத்தனை ஆர்வத்தோடு ஒத்து ஊதுகிறது தெரியுமா? “பள்ளி செல்லாத நேரங்களில்தானே குடும்பத் தொழிலில் ஈடுபடுத்தச் சொல்கிறது சட்டம்; குடும்பத் தொழில் குறித்த அனுபவம், புரிதல் இருக்கும். அப்படியிருக்கும் போது அதற்குக் கடிவாளம் போடுவானேன்?” (14.05.2015 தலையங்கம்) என்று ‘அக்கறை’ப்படுகிறது முப்புரிமணி. செருப்புத் தைத்த சின்னப்பெத்தனின் பேத்தி இலக்கியா இன்று ஒரு மருத்துவர். நாளை பாரதிராஜாவும், மகாலட்சுமியும் கூட மருத்துவர்கள் ஆவார்கள். பிறகு என்ன எழவுக்குக் குடும்பத் தொழிலில் அனுபவமும், புரிதலும் தேவை என்பதை வைத்தியநாதர்கள் சொல்வார்களா?

பாட்டன் தொழிலை பரம்பரையாகச் செய்துவர வேண்டும் என்னும் வர்ணாசிரமத்தை மீண்டும் கொண்டுவரப் பார்க்கும் பார்ப்பனிய மூளைகளுக்கு...இனிமேல் பார்ப்பனப் பிள்ளைகள், வேதம் அவர்களுக்கு விதித்துள்ள, மணியாட்டி மந்திரம் சொல்வதைத் தவிர வேறு எந்தத் தொழிலுக்கும் போக மாட்டார்கள் என்று அறிவிக்கத் தயாரா? இருக்கின்ற அரசுத்துறை, தனியார் துறை அனைத்தையும் அக்கிரகாரங்கள் ஆக்கிரமித்துக் கொள்ளுமாம், நம்முடைய பிள்ளைகள் குடும்பத் தொழிலைக் கற்றுக் கொள்ள வேண்டுமாம்.

சனாதன சட்டங்களைத் திராவிட இயக்கம் உள்ளிட்ட சமூகசீர்திருத்த இயக்கங்கள் தவிடி பொடியாக்கிய வரலாற்றை அறிந்திருந்தும், மீண்டும் அவற்றுக்கு உயிர் கொடுக்கும் துணிச்சல் இந்தக் காவிக் கூட்டத்திற்கு எப்படி வந்தது? அதிகாரம் கையில் இருக்கின்ற மமதையில் அல்லவா பேயாட்டம் போடுகிறார்கள். தமிழ்நாட்டிலும் பார்ப்பனத் தலைமை ஆட்சிதானே என்ற எண்ணம் போலும்.

1953இல் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்த திரு சி.ராசகோபாலின் (ராஜாஜி) நிலை என்ன ஆனது என்பதை, அவரின் வாரிசுகள் மறந்திருக்க வாய்ப்பில்லை. திராவிடர் கழகத்தோடு இணைந்து, பார்ப்பனரல்லாத பொதுமக்கள் அனைவரும் எழுச்சியுடன் போராடினர். அன்று தந்தை பெரியார் சொன்னதை இங்கே மீண்டும் நினைவூட்ட வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

“இப்படி அக்கிரமம் செய்துகொண்டு, மேலும் செய்கிற மாதிரி - திராவிட மக்கள் படிக்கக்கூடாது என்பதாகக் கல்வித்திட்டம் கொண்டுவருவது என்றால், நமக்கு ஆத்திரம் வராதா? எந்தப் பார்ப்பனர் மீதும் கோபமோ, குரோதமோ இல்லை. ஆனால், அவர்களுடைய நடத்தையும்,  போக்கும் நம்மைப் பார்ப்பனர்கள் மீது கோபம் கொள்ளுகிற மாதிரி - அதைவிட ‘இந்தப் பார்ப்பனர்களை இங்கே வைத்திருக்கிற வரையில் நம்முடைய இன மக்கள் தலையெடுக்க முடியாது; ஆதலால் இந்தப் பார்ப்பனர்களைக் கண்டிப்பாக இந்த நாட்டை விட்டுத் துரத்தித்தான் ஆகவேண்டும்’என்று சொல்லத்தக்க மாதிரியான அந்த அளவுக்கு அல்லவா எண்ணம் போகிறது!

................ ‘பார்ப்பானே வெளியேறு!’ என்ற முடிவுக்கு வரவேண்டியதாய்ப் போய்விட்டது........... குத்துவெட்டு வேண்டாம்; கலவரம் வேண்டியதில்லை. அந்த நிலை ஏற்படுவதற்கு முன் ‘பார்ப்பனர்களே பேசாமல் வெளியேறிவிடுங்கள்!’ என்கிறோம். ‘போகவும் முடியாது; இங்கேதான் இருப்போம், இப்படித்தான் செய்வோம், அதை நீங்கள் சகித்துக் கொண்டுதான் இருக்க வேண்டும்’என்றால், பலாத்காரமாய்த் துரத்துவதைத் தவிர வேறு வழிதான் என்ன என்று பார்ப்பனர்களே சொல்லட்டுமே!” (பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள், பகுதி.3, பக்:1830)

இன்றைக்குப் பெரியார் இல்லாமல் இருக்கலாம், ஆனால் பெரியாரின் பெரும்படை இருக்கிறது.

Pin It