தேர்தல் ஆணையமும் கார்ப்ரேட் ஊடகங்களும்

    பதினாறாவது இந்திய பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் முற்போக்கு அரசியல் சக்திகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கின்றது. தமிழக அளவில் பாசிச ஜெயாவும் இந்திய அளவில் நரவேட்டை மோடியும் முன்நிலை பெற்றிருப்பதானது இந்திய மக்களின் மனநிலை பாசிசத்துக்கு பழக்கப்படுத்தப்பட்டுவிட்டதோ என்று அச்சப்பட வைக்கின்றது.

vaiko vijayakanth anbumani 630

    மிகப்பெரிய ஊழல்களாலும், பொருளாதார நெருக்கடிகாளாலும் பெரும் அதிருப்தியடைந்திருக்கும் இந்திய மக்களைக் காப்பாற்ற வந்த இரண்டு தேவதூதன்களாக இந்த முறை கார்ப்ரேட்டுகளால் கட்டியமைக்கப்பட்டவை ஒன்று மோடி; மற்றொன்று தேர்தல் ஆணையம்.

    ஒருபுறம் மோடி வளச்சியின் நாயகனாகவும், சாமானிய மக்களை மீட்க வந்த மீட்பாளராகவும், வலிமையான அரசாட்சியின் குறியீடகாவும், மறுபுறம் தேர்தல் ஆணையம் இந்திய ஜனநயகத்தையும் அதன் மீ பெரும் விழுமியங்களையும் காப்பாற்ற வந்த கடவுளாகவும் இந்திய மக்கள் மத்தியில் கார்ப்ரேட் முதலாளிகளாலும் அதன் ஊடகங்களாலும் தொடர் பிரச்சாரம் செய்யப்பட்டனர்.

    ஒருபுறம் பா.ஜ.காவின் பல முன்னனித் தலைவர்கள் வன்மம் நிறைந்த மதவெறிப் பேச்சுக்களை பேசி இந்து ஓட்டு வங்கியை நிலைப்படுத்திக் கொண்டிருக்க, மறுபுறம் தேர்தல் ஆணையம் சாமானிய மக்களையும் வியாபாரிகளையும் அச்சுறுத்தி அவர்களின் பொருளாதார செயல்பாடுகளை ஒட்டுமொத்தமாக முடக்கி ஜனநாயகத்தைக் காப்பாற்றிக் கொண்டிருந்தது.

   இதுவரை இல்லாத அளவிற்கு ஊடகங்கள் அரசியல் கட்சிகளால் விலைபேசப்பட்டன. Paid news என்று அழைக்கப்படும் பணம் வாங்கிக்கொண்டு செய்திகளை வெளியிடும் கீழ்த்தரமான புரோக்கர் வேலையை ஊடகங்கள் மிகச்சிறப்பாக செய்தன. எந்தவித தார்மீக அறநெறியும் அற்ற, மக்களின் வாழ்வாதரங்கள் அழிக்கப்படுவதைப் பற்றியோ, பன்னாட்டு தொழிற் கழகங்களால் இந்தியாவின் இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதையோ பஞ்சபூதங்களும் எதிர்கால தலைமுறையிடம் இருந்து பறிக்கப்படுவதையோ பற்றி கவலையில்லாத இந்த கார்ப்ரேட் ஊடகங்கள் தங்களை இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று வெட்கம் கெட்டுப்போய் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

    தேர்தல் பாதையின் மீது நம்பிக்கையற்று விரக்தியில் இருக்கும் பெரும்பான்மை மக்களை நம்பவைக்க சில சாகசங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக தேர்தல் ஆணையம் செய்தது. இந்தியா முழுவதும் நடந்த சோதனையில் ரூ.331 கோடி பணமும், 225 லிட்டர் மதுவும், 1.84லட்சம் கிலோ போதைப் பொருட்களும் பறிமுதல் செய்திருக்கின்றது (நன்றி: தினமணி).

    இந்தியா முழுமைக்கும் சேர்த்தே இவ்வளவு தொகைதான் கைப்பற்றியிருப்பதாக தேர்தல் ஆணையம் சொல்வதில் இருந்ததே அதன் யோக்கியதையை நாம் புரிந்துகொள்ளாம். பராளுமன்றத் தேர்தலையொட்டி மட்டும் இந்தியாவுக்குள் ஏறக்குறைய 23 லட்சம் கோடி ரூபாய் கறுப்பு பணம் வந்ததாக இந்தியா டுடே தெரிவிக்கின்றது (நன்றி வினவு). இவை அனைத்தும் தேர்தல் செலவுகளுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கும் என்பதை நாம் சொல்லாமலேயே விளங்கிக் கொள்ளலாம்

    தமிழ்நாட்டில் அதிமுக தன்னுடைய வேட்பாளர்களுக்கு தலா ரூ.200 பணப்பட்டுவாடா செய்ததாக அனைத்துக் கட்சிகளும் குற்றம் சாட்டின, தேர்தல் ஆணையம் என்ன செய்து கிழித்துவிட்டது? மேலும் இங்கே 144 தடை உத்தரவு போட்டு பணப்பட்டுவாட சிறப்பாக நடக்க வாய்தாராணி ஜெயாவுக்குப் பேருதவி புரிந்த பிரவீன் குமார் வாரணாசி தொகுதில் தேர்தல் பார்வையாளராக வேறு நியமிக்கப்பட்டார். மோடி வாரணாசி தொகுதில் வெற்றியும் பெற்றுவிட்டார். தேர்தல் ஆணையம் என்பது ஆர்.எஸ்.எஸ்.இன் கிளைப்பிரிவாகவே இந்தத் தேர்தலில் செயல்பட்டது.

சுயமரியாதை கற்பித்த மண்ணில் மானமற்ற அயோக்கியர்கள்

  ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு வரலாறு கொண்டது தமிழ் நாட்டின் சுயமரியாதைப் பாரம்பரியம். அப்படிப்பட்ட தமிழ் நாட்டில் அந்த மாமனிதன் பெரியாரின் பெயரைச் சொல்லி கட்சி ஆரம்பித்த அயோக்கியர்கள் அவரது சிந்தனையையும், ஏன் அவரையே கூட குப்பைத்தொட்டியில் வீசிவிட்டனர்.

  தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்களும் அதன் அரசியல் பிரிவான பாஜகவும் மிகப்பெரிய அளவில் காலுன்ற முடியாமல் இத்தனை நாள் இருந்ததற்குக் காரணம் பெரியாரின் சிந்தனைத் தாக்கமே.

  2004 மற்றும் 2009 பாராளுமன்றத் தேர்தல்களில் தமிழ்நாட்டில் அரசியல் அநாதையாக்கப்பட்ட பாஜகவுடன் வன்னிய சாதி வெறிக்கட்சியான பாமக, கவுண்டர் சாதிவெறிக் கட்சியான கொ.தே.மு.க, ஈழத்தமிழர் நலன் பேசும் ம.தி.மு.க, தமிழ் நாட்டின் மிகப்பெரிய கல்வி வியாபாரியும், உடையார் சாதியை முன்நிலைப்படுத்துபவருமான SRM குழுமத்தின் தலைவர் பச்சைமுத்து என்கிற பாரிவேந்தன். தேசியம் என்றால் என்ன, முற்போக்கு என்றால் என்ன என்று எந்த கருமாந்தரமும் தெரியாத சினிமா கழிசடை விஜயகாந்தின் தே.மு.தி.க போன்றவை கூட்டணி வைத்து கூடி குலாவினர்.

  இப்படியாக தமிழ்நாட்டு மக்களால் ஒரங்கட்டப்பட்ட எல்லா அநாதைகளும் சேர்ந்து மோடி என்ற இந்துமத வெறி பாசிஸ்டின் காலை நக்கியாவது நாலு சீட் பார்த்து விட துடித்துக் கொண்டிருந்தன.

   ஆனால் நிலைமை இவ்வளவு மோசமாக போகுமென்று பாஜகாவும், அதன் அல்லக்கை முண்டங்களும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். மோடி அலையை லேடி அலை வீழ்த்திவிட்டது. ஆனால் லேடியின் பிரதமர் கனவில் மோடி சாணி அடித்து விட்டார்.

  காவிக்கட்சியுடன் கூட்டணி வைத்து காணாமல் போன நம் தமிழக கட்சிகளை கொஞ்சம் பாராட்டிவிட்டு வருவோம்.

   1992-ல் ஆரம்பிக்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி அதன் கொள்கை திட்டத்தில் “பார்ப்பனிய ஆதிக்க ஒழிப்பை மையமாகக் கொண்ட பெரியாரியலும், இந்துமத ஒழிப்பை மையாமாகக் கொண்ட அம்பேத்கரியலும், வர்க்க ஒழிப்பை மையமாகக் கொண்ட மார்க்சிய இயலும் ஒன்றின் தேவையை ஒன்று நிறைவு செய்வதாகப் பா.ம.க கருதுகிறது. ஆகவே இம் மூன்றில் ஒன்றோடு ஒன்று மோதவிட்டுப் பார்ப்பது பார்ப்பனிய ஆதிக்கச் சக்திகளின் நிகழ்காலச் சூழ்ச்சியாகவே பா.ம.க பார்க்கிறது. மேலும்

   “தேசிய இனங்களின் இயல்பான வரலாற்று வளர்ச்சிக்கு இந்து, இந்திய தேசியம் பெருந்தடையாயிருக்கிறது. இங்கே எல்லாத் தேசிய இனங்களின் உரிமைகளும் மத்தியப் பேரரசால் சிறைபிடிக்கப் பட்டுள்ளன. பன்னாட்டு முதலாளிகளோடு தங்களைப் பின்னிப் பிணைத்துக் கொண்டிருக்கும், இந்தியப் பெருந்தொழில் நிறுவனங்களும் இவற்றின் அரசியல் தத்துவப் பாதுகாப்பு அரணாகச் செயல்படும் இந்து(பார்ப்பனியத்) தலைமையும் தேசிய இனங்களின் விடுதலையை அவசியமாக்குகின்றன”

   இதைப் படித்துவிட்டு தர்மபுரி கலவரத்துக்கும் மரக்காணம் கலவரத்துக்கும் காரணமான ராமதாசா இப்படியொரு அறிக்கையை எழுதினார் என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆனால் உண்மை என்னவென்றால் நீங்கள் அச்சரியப்படத் தேவையில்லை. இதை எழுதிக் கொடுத்தது முன்னாள் கம்யூனிச துரோகிகளின் கூட்டம். அதிலே பலர் இன்னும் செத்துப்போகாமல் திடகாத்திரமாக உயிரோடுதான் உள்ளனர்.

   இந்த அறிக்கையை வைத்துக்கொண்டுதான் சின்ன அய்யாவும் பெரிய அய்யாவும் எங்கள் கட்சி கொள்கை அறிக்கையைப் போல் வேறு கட்சியில் உள்ளதா எனக்காட்டுங்கள் என்று ஊர் ஊருக்கு ஊடகத்துக்கு ஊடகம் பிதற்றிக்கொண்டு திரிகிறார்கள்.

   1993-ல் பாமகவினரும் ராமதாசும் சென்ற தேர்தலின் போது எங்களது கொள்கை, லட்சியம், சொன்ன வாக்குறிதிகளை நாங்கள் தவற விட்டால் எங்களை முச்சந்தியில் நிறுத்தி, மக்கள் சவுக்கால் அடிக்கட்டும் என்று சொன்னார். இதே போன்ற வாக்குறுதியை 2014 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பும் ராமதாசு சொன்னதை நாம் நினைவுபடுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் தாங்கள் வாக்குறுதிகளைத் தவறும் போதும் மக்களே சவுக்கால் அடியுங்கள் செருப்பால் அடியுங்கள் என்று சொல்வதும் பிறகு வழக்கம் போல துரோகம் இழைப்பதும் பெரிய இனமான துரோகி ராமதாசுக்கும் சின்ன இனமான துரோகி அன்புமணிக்கும் வாடிக்கையாகிவிட்டது.

  பாஜகாவை மதவாதக் கட்சியென்று சொன்னார்கள், திராவிட கட்சிகளுடன் இனி கூட்டணி கிடையாது என்று சொன்னார்கள். விஜயகாந்த்தை ஒரு அரசியல் கட்சித் தலைவராகவே ஏற்கமாட்டோம் அவர் ஒரு குடிகாரர் என்று அன்புமணி ஒரு ஊடகப் பேட்டியின் போது சொன்னார். இதில் எதையாவது கடைபிடித்திருக்கிறார்களா?.

  15/11/1991 அன்று நிறப்பிரிகை என்ற பத்திரிக்கைக்கு ராமதாசு கொடுத்த பேட்டியில் “தாழ்த்தப்பட்ட பையன்கள் வன்னியப் பெண்களைக் காதலிப்பது போன்ற விசயங்கள் இப்போது அதிகம் பெரிதுபடுத்தப்படுவதில்லை.; பெரும் தண்டனைகள் கொடுக்கப்படுவதில்லை” என்று சொன்னார். ஆனால் நடந்தது என்ன? ஊரைக் கொளுத்தியதோடு நிற்காமல் அனைத்து சாதிச்சங்களையும் சேர்த்துவைத்துக் கொண்டு ஊர் ஊருக்குச் சென்று தலித்துகளுக்கெதிராக விசம் கக்கினார்.

   அப்படியிருந்தும் வன்னிய சாதி வெறியர்கள் அதிகம் உள்ள தர்மபுரியில் தான் அன்புமணியால் வெற்றி பெற முடிந்தது. மற்ற இடங்களில் பாமக மண்ணைக் கவ்வி இருக்கின்றது.

  பாமகவின் சாதி வெறியும் பிழைப்புவாதமும், பாஜகவின் இந்து மதவெறி பாசிசமும் தற்போது ஒரே புள்ளியில் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. அடுத்தது பாஜவுடன் கூட்டணி வைத்த கொஞ்சம் பெரிய கட்சியான மதிமுகவைப் பற்றிப் பார்ப்போம்.

   1995-ல் ஆரம்பிக்கப்பட்டது மதிமுக. அன்றில் இருந்து இன்று வரை ராமதாசுக்கு எந்தவகையிலும் குறைவில்லாமல் பிழைப்பு வாதத்திலும் கொள்கையிலே குட்டிக்கரணம் போடுவதிலும் சளைத்தவரல்ல வைகோ. 1993 டிசம்பர் 26-ல் திருச்சியில் நடைபெற்ற அவரது பொதுக்குழு வெளியிட்டுள்ள கொள்கை அறிக்கையில் (அப்போது திமுக என்ற பெயரிலேயே செயல்பட்டு வந்தார்) அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, இலட்சியத்தில் உறுதி என்று பிரகடனம் செய்தார். ஆனால் இதில் எந்த எருமையையும் அவர் கடைப்பிடித்தாக தெரியவில்லை.

    பாசிச ஜெயாவை சகோதரி என்றார். அவரோ போடா என்று பொடாவில் தூக்கிப்போட்டார். திரும்பவும் தன்முகத்தில் வழிந்த எச்சிலை துடைத்துக்கொண்டு நீங்கள் வருத்தப்படாதீர்கள் என்று சகோதரியை சமாதானம் செய்தார். தேர்தல் நேரத்தில் கழற்றிவிடப்பட்டு கடையாணி கழன்ற சக்கரமாக நடுத்தெருவிலே வந்து விழுந்தார்.

   ஈழப்பிரச்சினையை கையிலே எடுக்கலாம் என்றால் விக்னேஷ்வரன் வாயை மூடிக்கொண்டு சும்மா இருங்கள் என்று வேறு சொல்லிவிட்டார். கையை பிசைந்துகொண்டிருந்த வைகோவுக்கு வெளிக்கியிருக்கப் போனவனக்கு விளாம்பழம் கிடைத்த கதையாக மது ஒழிப்புப் பிரச்சாரம் கிடைத்தது. பல நூறு கிலோ மீட்டர் தூரம் நடந்தார். நடந்துகொண்டே மூச்சுவாங்க ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்தார். ஆனால் எவ்வளவுதான் மூச்சைப்போட்டு முக்கிப்பார்த்தும் தமிழக மக்களிடம் பப்பு வேகவில்லை. 

   10% சதவீதத்துக்கு கீழே ஓட்டு வாங்கினால் தேர்தல் ஆணையம் பம்பரத்தை பிடுங்கிக்கொண்டு திருஓட்டை கொடுத்து விடப் போகிறது. என்ன செய்வது என்ற வாழ்வா சாவா பிரச்சனையில் வைகோ தற்போது உள்ளார்.

   தேமுதிகவைப் பற்றி என்ன சொல்வது? சொந்தமாக பல கல்லூரிகள் வைத்திருக்கும் நம்ம கேப்டனுக்கு சொந்தமாக கட்சி கொள்கை அறிக்கைகூட கிடையாது. அரசியல் களத்தில் இருந்தே அவர் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டார். (இந்நேரம் கேப்டன் மப்பில் அழுது கொண்டிருப்பார் என்று நாம் உறுதியாக நம்புகிறோம்.) இருந்தும் நம்மால் சொல்லாமல் இருக்கமுடியவில்லை. இனி பேசாமல் கடையை மூடிவிட்டு கோடம்பாக்கத்துக்குப் போய் தயவு செய்து கதாநாயகனாக வேண்டாம் ஒரு அப்பா வேடத்திலோ தாத்தா வேடத்திலோ நடித்து கலைத்துறைக்கு சேவை செய்யுங்கள்.

   மற்ற கட்சிகளைப் பற்றி (குறிப்பாக IJK, கொ.தே.மு.க) எழுத ஒரு கருமாந்திரமும் இல்லை என்பதால் நாம் பிரச்சனையின் சாராம்சத்திற்கு வருவோம்.

  மோடி வந்தால் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டு விடுவார் என்று நம்பி ஓட்டுப்போட்ட கோடான கோடி இந்திய மக்களுக்கு மோடி எதை பரிசாகத் தரப் போகிறார். மதக்கலவரங்கள், சாதிக் கலவரங்கள், பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாக சாமானிய மக்கள் மீது கொடுமையான அடக்குமுறை, சிறுபான்மை மக்களுக்கான இட ஒதுக்கீட்டை குறைத்தல், அல்லது முற்றிலும் நீக்குதல், அவர்களின் வாழ்வாதரங்களைப் பறித்தல், இந்து சட்டத் தொகுப்பை பொது சிவில் சட்டம் என்ற பெயரில் கொண்டுவருதல், பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயிலைக் கட்டுவது, காஷ்மீருக்கு கொடுக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்வது, மன்மோகன் சிங்கைவிட பலமடங்கு தீவிரமாக பொருளாதார சீர்திருத்தங்களை அமுல்படுத்துதல் போன்றவற்றையே தரப்போகிறார்.

   முசோலினிக்குப் பதில் ஹிட்லரை தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள். நாசிசத்தை அதன் முழுமையான வடிவில் நீங்கள் கூடிய சீக்கிரம் தரிசிக்கப் போகிறீர்கள். அப்போதும் உங்களைக் காப்பாற்ற கம்யூனிஸ்டுகள் மட்டும் தான் வருவார்கள்.

- செ.கார்கி (karthi15585@gmail.com)

Pin It