இந்த உலகில் உள்ள உயிரினங்களுக்கு இல்லாத தனிச்சிறப்பு மனித இனத்திற்கு மட்டுமே உள்ளது. அதுதான் சிந்திக்கும் திறன். ஆறாம் அறிவு விலங்குகளை அடித்தால், வலியால் அழும். ஆனால் ஒரு மனிதனை இன்னொரு மனிதன் தாக்கினால் உடனே வரும் கோபத்தின் பெயர்தான் சுயமரியாதை. நம் நாட்டில் அந்த சுயமரியாதை சாமானிய மக்களுக்கு கிடைக்காமல் வைத்திருந்தது ஆதிக்கம் உள்ள ஆரிய சனாதனக் கூட்டம்.

அக்கூட்டம் சிந்திக்கும் திறனை அடக்கி வைத்திருந்தது. எதையும் கேள்வி கேட்கக் கூடாது. இதுதான் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு. இதை எல்லாம் மகான் சொன்னார், ரிஷி சொன்னார், கடவுள் சொன்னார் என்று பல ஆண்டுகளாக மக்களை அடிமையாகவே வைத்திருந்தது ஆரியக் கூட்டம். நம் மக்கள் மீது திணிக்கப்பட்ட அடிமை விலங்கை உடைக்க வீழ்ச்சியுற்ற இனத்தை எழுச்சி பெறச் செய்தவர் தந்தை பெரியார்.kudiarasu 481தமிழர்கள் மீது பார்ப்பனியம் தொடுத்தப் பண்பாட்டுப் போரைத் தடுத்து நிறுத்தி அதில் வெற்றி கண்ட ஒரே தலைவர் பெரியார். தனக்குக் கிடைத்த உரிமைகள் அனைத்தும் மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தொடங்கப்பட்ட இயக்கத்தின் பெயர்தான் சுயமரியாதை இயக்கம். அந்த சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவும், சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளை விளக்குவதற்காக உருவாக்கப்பட்ட "குடிஅரசு" இதழின் நூற்றாண்டு தொடக்க விழாவும் மிகச் சிறப்பாக நாடு முழுவதும் கொண்டாடப்பட வேண்டும்.

பொதுவாக பத்திரிகைச் செய்தி என்பது இன்றைய செய்தி, நாளைய வரலாறு என்பார்கள். ஆனால் குடிஅரசு நாளைய வரலாற்றை இன்றைக்கே எழுதியது என்பதுதான் சிறப்பு. இன்றைக்கு நம் தமிழ்நாட்டில் இருக்கும் தனித்துவம் வாய்ந்த முன்மாதிரியான சட்டங்களும், திட்டங்களும் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் மூலமாக வந்தவையே.

சுயமரியாதை இயக்கம் தோன்றுவதற்கு முன், 500 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் கல்வியின் நிலை எப்படி இருந்தது என்பதை பொலிடிக்கல் கேரியர் ஆஃப் பெரியார் ஈ. வி. ராமசாமி என்ற நூலில் “மதுரையில் 10 ஆயிரம் மாணவர்கள் படித்தனர். ஒவ்வொரு வகுப்பிலும் 200 முதல் 300 மாணவர்கள் இருந்தனர். அவர்கள் எல்லோரும் பார்ப்பனர்களே” என்ற தகவலை ராபர்ட் என்ற பாதிரியார் தந்துள்ளார். இத்தகைய அநீதிக்கு முடிவு கட்டியவர் தந்தை பெரியாரும் சுயமரியாதை இயக்கமும்.

பிள்ளைகள் கொடுத்தது பகவான். அதனால் பிள்ளைகளைப் பெற்று வளமோடு நலமோடு கவனிக்க வேண்டிய கடமை பெண்களுக்கு மட்டுமே உண்டு என்று பெண்களை அடிமையாக வைத்த காலத்தில் சுயமரியாதை இயக்கம் அதை எதிர்த்துக் கடுமையாக போராடியது. கோவில் திருமணம் போன்ற நிகழ்வுகளில் கூட பெண்கள் நாற்காலியில் அமரக்கூடாது. ஆண்கள் மட்டுமே நாற்காலியில் அமர வேண்டும் பெண்கள் தரையில்தான் உட்கார வேண்டும். இப்படி ஏற்றத் தாழ்வுகளோடு இருந்த சமூகத்தை மாற்றி அமைக்க பாடுபட்ட இயக்கம் தான் சுயமரியாதை இயக்கம்

எந்த காங்கிரஸிலிருந்து இட ஒதுக்கீடு கேட்டு வெளியேறினாரோ அதே காங்கிரஸ் இன்றைக்கு நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடு அனைவருக்கும் வழங்குவோம், 50% என்கின்ற உச்சவரம்பை நீக்குவோம் என்று வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் அறிக்கையைக் கொடுத்திருக்கிறது. எந்தப் பெண்களுக்காகக் கல்வி, வேலை வாய்ப்பு வேண்டும் என்று சுயமரியாதை இயக்கம் கேட்டதோ அந்தக் கொள்கையைத் தேர்தல் அறிக்கையில் சொல்லி உள்ளது காங்கிரஸ். தந்தை பெரியாரின் கொள்கை என்றைக்கும் தோல்வி அடையாது. வெற்றி பெற்றே தீரும்!

வழக்கறிஞர் பா.மணியம்மை, திராவிடர் கழகம்

Pin It