திருநெல்வேலி  மாவட்டத்தில் மாநகராட்சி, மின்துறை சுரங்கத் துறை, உள்ளூர் திட்டக் குழு உறுப்பினர்களின் ஊழல்களை ஆர்.டி.ஐ சட்டத்தை பயன்படுத்தி உண்மையைக் வெளி கொண்டு வந்து சட்ட நடவடிக்கை எடுத்ததால் மனித உரிமை காப்பாளர் ஃபெர்டின் ராயன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தக் கொலை வெறி தாக்குதலை மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.

ஃபெர்டின் ராயன் மனித உரிமைக் காப்பாளர்

ஃபெர்டின் ராயன் என்பவர், ஆர்.டி.ஐ (RTI) ஆர்வலர் மற்றும் மனித உரிமைக் காப்பாளர். தூத்துக்குடி மாவட்டம் கடல்புரம் இவரது சொந்த ஊராகும். மீன்பிடி தொழில் செய்யும் பரதவர் அமைப்பில் மாநில நிர்வாகியாக உள்ளார். பட்டதாரியான இவர் பெங்களூர் சட்டக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வரும் இவர் திருநெல்வேலியில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இந்தப் பணிகளை கடந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிமைகளை பெற்றுத் தரவும், அரசு அமைப்புகளில் நிலவும் ஊழல்களை கண்டறிந்து தடுப்பதற்காக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி (RTI) சட்டத் தலையீடு செய்வது, தொடர்ந்து மேல் முறையீடுகள் மூலம் தனது கடுமையான போராட்டத்தின் வழியாக பல தகவல்களைக் வெளிக்கொண்டு வந்துள்ளார். எனவே, ஃபெர்டின் ராயன் தனது செயல்பாட்டின் மூலம்  மனித உரிமைக் காப்பாளர் (HRD) ஆவார். இதனை ஐ.நாவின் மனித உரிமைக் காப்பாளர் பிரகடனம் -1998 உறுதிப்படுத்துகிறது.

தலையீடு செய்து தீர்வு கண்ட மிக முக்கியமான சம்பவங்கள்

மனித உரிமைக் காப்பாளர் ஃபெர்டின் ராயன், வாகைக்குளம் சுங்கச்சாவடி எல்லைக்கு உட்பட்ட திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியை இணைக்கும் நான்கு வழி பாதை உரிய பராமரிப்பின்றி சாலையில் சேதங்கள் ஏற்பட்டதால் பயனாளிகள் விபத்துக்குள்ளாகும் நிகழ்வு அடிக்கடி ஏற்பட்டுள்ளது. இது குறித்த தகவலை திரட்டி உயர்நீதிமன்றத்தில் தலையீடு செய்ததால் சுங்கச்சாவடி கட்டணத்தை வசூல் செய்வதை நிறுத்துவதற்கான இடைக்கால உத்தரவை பெற்றார்.

திருநெல்வேலி மாநகராட்சி அதிகார வரம்பில்  சட்டவிரோத மற்றும் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை அகற்றுவது தொடர்பாக பல்வேறு ரிட் மனுக்களை அவர் தாக்கல் செய்துள்ளார். குறிப்பாக சாராள் தக்கர் கல்லூரி அருகே நான்குமாடி கட்டிடத்தில் செயல்பட்டு வந்த ஒரு தனியார் மருத்துவமனையில் ஒரு மருத்துவபிரிவு செயல்படும் கட்டிடப் பகுதியில் எந்த கட்டமைப்பும் முறையான அனுமதி பெறவில்லை என்பதனை ஆதாரங்கள் மூலமாக கண்டறிந்து உயர் நீதிமன்ற தலையீட்டின் மூலம் சட்டவிரோதமாக செயல்பட்ட மருத்துவமனையின் செயல்பாட்டைத் தடுத்து நிறுத்தினார்.

திருநெல்வேலியில் செயல்பட்டு வந்த 14 மருத்துவமனைக் கட்டிடங்களின் அத்துமீறலை ஆர்டிஐ (RTI) சட்டத்தின் மூலம் தகவல் பெற்று அம்பலப்படுத்தியதோடு, பொதுக் கட்டிடங்களின் தீ மற்றும் பாதுகாப்புத் தேவைகள் குறித்தும் பிரச்சாரம் செய்து அதற்கான தீர்வுகளைப் பெற்றுத் தந்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் கருப்பு பணத்தை பயன்படுத்தி பழைய கட்டிடங்களை வாங்கி அதனை இடித்து அரசிடம் எவ்வித முறையான அனுமதியும் பெறாமல் பெரிய, பெரிய வணிக வளாகங்களை கட்டி அதில் அதிக லாபத்துடன் விற்று வந்த ஒரு கும்பல் குறித்து தகவல் சேகரித்து மாநகராட்சியில் புகார் தெரிவித்தார். மனித உரிமைக் காப்பாளர் ஃபெர்டின் ராயன் புகாரைக் கண்ட மாநகராட்சி நிர்வாகம், அதிர்ச்சி அடைந்து நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

ஒரு தனியார் நிறுவனம் திருநெல்வேலி மாநகராட்சியில் ரோடு போடுவதற்கு காண்ட்ராக்ட் எடுத்தது. காண்ட்ராக்ட் எடுப்பவர்கள் தங்களது நிறுவனத்தின் பெயரில் லாரிகள் உபகரணங்கள் கனரக இயந்திரங்கள் சொந்தமாக வைத்திருக்க வேண்டும் என்பது ஒப்பந்த விதியாகும். ஆனால், எதுவுமே சொந்தமாக இல்லாத தனியார் நிறுவனம் தங்களிடம் அனைத்தும் இருப்பதாக போலியான ஒரு பட்டியலை தயாரித்து மாநகராட்சியிடம் கொடுத்துள்ளது. இம்முறைகேடு குறித்து புகார் தெரிவிக்கப்பட்டதால் இந்த நிறுவனத்திற்கான டெண்டரை மாநகராட்சி ரத்து செய்துள்ளது. மேலும் மாநகராட்சியை ஏமாற்றிய தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருநெல்வேலி மாநகராட்சியில் ஆணையர் திரு.தாக்கரே உத்தரவிட்டுள்ளார். அதன்படி அதிகாரிகள் புகார் அளித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணையில் சாட்சி சொல்வதற்காக இருந்த நாளில்        04.05.2024 அன்று அதிகாலையில் மனித உரிமைக் காப்பாளர் ஃபெர்டின் ராயன் கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார்

கனிம வளங்கள் பாதுகாப்பு

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட எல்லைகளில் அங்கீகரிக்கப்படாத குவாரிகள் மற்றும் சுரங்கங்கள் செயல்படுவது குறித்தும் கனிம வளங்களை பாதுகாப்பு குறித்தும் அரசிற்கு பல்வேறு புகார்களை அனுப்பி உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு அடைமிதிப்பான்குளம் கிராமத்தில் இருந்த கல்குவாரியில் வெடி விபத்து ஏற்பட்டது. வெடிவிபத்தில் சிக்கி தொழிலாளர்கள் பலியானார்கள். இதன்பின்பு மாநில அளவிலான சுரங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் திரு.விஷ்ணு அவர்கள்  30 கல்குவாரிகளுக்கு அனுமதியை ரத்து செய்தார். ஆனாலும் அனுமதியின்றி தற்போது கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றது. கல்குவாரிகளில் சிறுவர்களை பணி அமர்த்தக் கூடாது என்று அரசின் விதிகள் இருந்த நிலையிலும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மானூர் கல்குவாரியில் வடமாநில சிறுவன் ஒருவன் இயந்திரத்தில் சிக்கி இறந்துள்ளார். எனினும் அரசு யார் மீதும் எந்த நடவடிக்கையும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் ஆவணங்களைத் திரட்டி மனித உரிமைக் காப்பாளர் ஃபெர்டின் ராயன் சுரங்கத்துறைக்கு புகார் அனுப்பி உள்ளார். சில தியேட்டர்களிலும் வணிக நிறுவனங்களிலும் மின்வாரிய அதிகாரிகள் நேரடியாக விசாரணை செய்யாமலேயே மின் இணைப்பு கொடுத்துள்ளனர். இதுகுறித்து மின்வாரிய விஜிலென்சில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் மீதான விசாரணையில் சாட்சி சொல்வதற்காக இருந்த நாளில் 04.05.2024 அன்று மனித உரிமைக் காப்பாளர் ஃபெர்லின் ராயன் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார்.

நீர்நிலை பாதுகாப்பு

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தாலுகா, மேலப்பாளையம் கிராமத்தில் உள்ள நீர்நிலை வண்டிப்பாதையில் உள்ள பொது நீர்நிலையான செட்டிக்குளம் மற்றும் ஊட்டி வாய்க்கால்களில் (குளம்) உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஆக்கிரமிப்பு இன்றி பழைய நிலைக்குத் தருமாறு கேட்டுக் கொண்டார்.

மனித உரிமைக் காப்பாளர் ஃபெர்டின் ராயன் திருநெல்வேலி மாநகராட்சியில் மழைக்காலங்களில் திடீர் வெள்ளம் ஏற்படுவதை தடுப்பதற்காக நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்பை தடுத்து பாதுகாப்பான வழிகளை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தாலுகா, பார்பகுளம் கிராமத்தில், சர்வே எண்.229/1ல் உள்ள, சர்வே எண்.244ல் உள்ள, 55 ஹெக்டேர் 76 ஏக்கர் குளம் மற்றும் 19 ஹெக்டேர் 11 ஏரிகள் கொண்ட மற்றொரு குளம், சட்டவிரோதமான முறையில், தனியாருக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதும் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

மனித உரிமை காப்பாளர் ஃபெர்டின் ராயன் தனது வாழ்நாள் முழுவதும் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக நின்று சட்டப்படி செயல்பட்டு வந்துள்ளார். பாளையங்கோட்டை தாலுகாவில் உள்ள ராஜேந்திரநகர் சர்வே எண்.753/1, 754 பகுதியில் உள்ள பிளாட் எண். 35,36,37இன் அசல் உரிமையாளரை மறைத்து திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் துணைப் பதிவாளர் திரு. ரவிகுமார் சட்டவிரோதமாக பதிவு செய்துள்ளார் என்பதனை ஆவணத்துடன் அம்பலப்படுத்தினார். 

மீனவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர்

மீனவர்கள் சர்வதேச எல்லையை கடக்கும்போது கொடூரமாக தாக்கப்படுவதும், எல்லை தாண்டி சென்றவர்களை கைது செய்வது அல்லது மீன்பிடி வலைகள் மற்றும் படகுகளை சேதப்படுத்துவது போன்ற அட்டூழியங்களுக்கு எதிராக மனித உரிமைக் காப்பாளர் ஃபெர்டின் ராயன் தொடர்ந்து போராடி வந்துள்ளார்.

தூத்துக்குடி அனல் மின் நிலையங்கள் வெளியிடும் உமிழ்வையும், சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்பட்ட பல டன் எடையுள்ள சாம்பலையும், நீர்வாழ் சுற்றுச்சூழல் எதிர்கொள்ளும் இழப்பையும் அம்பலப்படுத்தியுள்ளார்.

கோவிட் தொற்று பரவலின்போது அதிகமான ஏழை மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தொடர்ந்து உணவு மற்றும் உடைகளை விநியோகிப்பதன் மூலம் பல மனிதாபிமானத் தேவைகளைச் செய்துள்ளார். தொடர்ந்து இந்த பணியை செய்ததால் அவர் பின்னர் கோவிட் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திட்டமிட்ட கொலைவெறித் தாக்குதல்

பல்வேறு தளங்களில் பாதிக்கப்படும் மக்களுக்காக அவர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து செயலாற்றி வந்தவர் மனித உரிமைக் காப்பாளர் ஃபெர்டின் ராயன். தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று தெரிந்த நிலையிலும் அதைப் பற்றி கவலை கொள்ளாமல் தொடர்ந்து மனித உரிமைப் பணியை முன்னெடுத்து வந்துள்ளார். இந்நிலையில்தான் பல புகார்களுக்கு சாட்சியம் அளிக்கக்கூடிய நாளான 04.05.2024, அன்று வழக்கம்போல் காலையில் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பின்புறம் அமைந்துள்ள சாலையில் உள்ள கிளப்பில் பேட்மிட்டன் விளையாடுவதற்காக அதிகாலையில் தனது காரில் சென்றுள்ளார். பைக்கில் பின் தொடர்ந்து வந்த நபர்கள் அரங்க வாயிலில் காரை மறித்து அரிவாளால் மனித உரிமைக் காப்பாளர் ஃபெர்டின் ராயனை சரமாரியாக  வெட்டியுள்ளனர். தலை, முதுகு, இரண்டு கைகளிலும் இரத்தம் சொட்டச் சொட்ட, காரை ஓட்டி கிளப்பிற்குள் சென்றுள்ளார். இதன்பின்பு பலத்த காயத்துடன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். தற்போது பாதுகாப்பு கருதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கோரிக்கைகள்

மனித உரிமை காப்பாளர் ஃபெர்டின் ராயன் மீது திட்டமிட்டு கொலை வெறி தாக்குதல்  நடத்தியவர்களையும் அதற்கு பின்னணியில் இருந்து சதித்திட்டம் தீட்டியவர்களையும் உடனடியாக அடையாளம் கண்டு கைது செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்டவிரோதமாக செயல்பட்டு ஊழல் மூலம் பணம் சம்பாதித்து வந்த அரசு அதிகாரிகளுக்கு எதிராக தொடர்ந்து சட்டப்படி செயல்பட்டு வந்ததால் மனித உரிமைக் காப்பாளர் ஃபெர்டின் ராயன் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். மேலும் அரசியல் அதிகாரம் படைத்தவர்கள் இதற்கு பின்னணியில் உள்ளார்கள். எனவே இந்த வழக்கினை சிபிசிஐடி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கோருகின்றோம்.

கொலைவெறித் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மனித உரிமைக் காப்பாளர் ஃபெர்டின் ராயனுக்கு பாதுகாப்பான, தரமான, உயர் சிகிச்சை அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோருகின்றோம்.

மனித உரிமைக் காப்பாளர் ஃபெர்டின் ராயன் மீது நடந்த கொலைவெறித் தாக்குதல் வழக்கை மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பாதுகாப்பும், நீதியும் நிவாரணமும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோருகின்றோம்.

தமிழ்நாட்டில் தொடர்ந்து மனித உரிமைக் காப்பாளர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே மனித உரிமைக் காப்பாளர்களை பாதுகாப்பதற்காக ஒன்றிய அரசு புதிய சட்டத்தை உருவாக்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமைக் காப்பாளர் கூட்டமைப்பு தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கின்றது.

- ஹென்றி திபேன், தேசியச் செயலாளர், மனித உரிமைக் காப்பாளர் கூட்டமைப்பு-இந்தியா (HRDA)

Pin It