ஹைதராபாத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று முஸ்லிம்கள் பலி என்ற செய்திகள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தும் அளவுக்கு, அப்படி என்ன பெரிய கலவரங்கள் என்று நம்மை கேள்விகள் எழுப்பத் தோன்றுகின்றது. அதுமட்டுமின்றி, கலவரம் நடைபெற்று துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் யார் என்று நாளிதழ்கள் வெளியிடாமல் மவுனம் காத்தே வந்தன. அதுவும் மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டே இருந்தது.

police 323இந்தியாவைப் பொருத்தவரை இன, மொழி, மதம் வேறுபாடின்றி பல்வேறு மக்கள், பல்வேறு குழுக்களாகவும், பல்வேறு பிரிவுகளாகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இதுபோன்று மக்கள் வாழ்ந்து வரும் சூழ்நிலையில், சில நேரங்களில் பிரச்சனைகள் வருவது என்பது இயல்பான ஒன்றுதான். இதுபோன்று தான் ஹைதராபாத்திலும் நடைபெற்றது. சீக்கிய சமூகத்தின் கொடியை யாரோ எறித்து விட்டார்கள் என்று தொடங்கிய கலவரம், கடைசியில் முஸ்லிம் தான் எறித்தார் என்ற வதந்தி பரப்பப்பட்டுள்ளது. இதில், இந்துத்துவா சக்திகள் தீவிரமாக செயல்பட்டுள்ளன. அதனுடைய வெளிப்பாடு முஸ்லிம் சீக்கியர்களின் கலவரமாக மாறியுள்ளது.

இரு தரப்பிலும் மக்கள் திரள கல்வீச்சுக்கள் நடைபெற்றுள்ளது. அதனால் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இதுபோன்று, கலவரங்கள் நடைபெறும் பொழுது, அதில் உள்ள உண்மை நிலவரங்களை கண்டறிந்து, அந்தப் பிரச்சனைகள் பெரிதாக மாறாமல் தடுப்பது காவல்துறை மற்றும் உளவுத்துறையின் வேலையாகும். இந்த வேலைகளை முறையாக செய்யும் பொழுதே, இரு சமூகங்களுக்கிடையில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும். இதுபோன்ற முன்னேற்பாடுகளை செய்யத் தவறும் போதே பெரிய கிளர்ச்சியாக மாறும். உயிழிப்புகள் ஏற்படும். பாரிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

சமீபகாலங்களில் நடைபெறக்கூடிய ஒவ்வொரு பிரச்சனைகளிலும் இதுதான் நடைபெறுகின்றது. காவல்துறை மற்றும் உளவுத்துறையினர் மக்கள் மத்தியில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண முற்படாமல், லத்திச் சார்ஜ் மற்றும் துப்பாக்கிச் சூடுகள் நடத்தி உயிரிழப்புகளையே ஏற்படுத்துகின்றனர். இது முஸ்லிம்களின் விஷயத்தில் அதிகமாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

ஒரு சிறு பிரச்சனையின் தொடக்கத்தை காவல்துறையினர் துப்பாக்கிச்சூட்டின் மூலம் பெரிதாக்கியுள்ளனர் என்றே சொல்லலாம். காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு அவசியம் என்ன என்றே தெரியவில்லை. பல்வேறு விதத்திலும் இது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது நமக்கு தமிழ்நாட்டில் ஏற்பட்ட பரமக்குடி துப்பாக்கிச் சூட்டையே ஞாபகப்படுத்துகிறது. அதுவும் இப்படித்தான். இரு சமூகங்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனையை காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டின் மூலம் தீர்க்க முற்பட்டனர். விளைவு, அந்த இடத்திலேயே ஆறு தலித்துகள் அநியாயமாக கொல்லப்பட்டனர். அரசு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கிவிட்டு, மௌனம் காத்தது. இழப்பீடு வழங்கினால் அந்த குடும்பத்தின் நிலைக்கு தீர்வு ஏற்பட்டு விடுமா? என்ற கேள்வி தான் நம்முன் எழுகிறது.

ஹைதராபாத்தைப் பொருத்தவரை பல்வேறு சம்பவங்கள் இதுபோன்று நடைபெற்றுள்ளது. குறிப்பாக, 2007ம் ஆண்டு மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பின் போது, ஆறு முஸ்லிம்களை காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டின் மூலம் கொன்றனர். குண்டுவெடிப்பின் போது இறந்த முஸ்லிம்களை, தூக்குவதற்காக உறவினர்கள் சென்றனர். அப்பொழுதுதான் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஆனால், காவல்துறையினர் இதை வேறுமாதிரியாக காரணம் கூறினர்.

அதாவது, குண்டுவெடிப்பின்போது களைந்து சென்ற முஸ்லிம்கள், அருகில் உள்ள கடைகளை தாக்க முற்பட்டனர். அதனால் தான் துப்பாக்கிச் சூடு நடத்தினோம் என்று கூறியது காவல்துறை. இதுபோன்ற சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். எல்லா நேரத்திலும் காவல்துறையின் தோட்டாக்கள் முஸ்லிம்களை நோக்கியே திரும்புகின்றன. ஒவ்வொரு நிகழ்விலும் எதிர்வினைகள் முஸ்லிம்களை நோக்கியே இருக்கின்றன.

ஒரு பிரச்சனையை கட்டுக்குள் கொண்டு வர காவல்துறையினர் நடவடிக்கைகளை எடுக்கும் போது, அது முன்னேற்றம் ஏற்படவில்லையெனில் தண்ணீரை பீய்ச்சி அடிக்க வேண்டும். அப்படியும் கட்டுக்குள் வரவில்லையென்றால் லத்தி சார்ஜ் என்று படிப்படியான முயற்சிகள் செய்ய வேண்டும். அப்படியும் களையவில்லையென்றால் தான் உயர் அதிகாரிகளின் அனுமதி பெற்றே துப்பாக்கியை பயன்படுத்த வேண்டும். அதுவும் வானத்தை நோக்கித்தான் சுட வேண்டும். அப்படியும் கட்டுப்படுத்த முடியவில்லையென்றால் தான் காலுக்கு கீழ் சுட வேண்டும்.

இப்படி, பல்வேறு கட்டுப்பாடுகள், வரைமுறைகள் இருந்தும் காவல்துறையினர் எதையுமே பின்பற்றவில்லை. நேரடியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பிலும் இதுதான் நடந்துள்ளது. இதுபோன்று, துப்பாக்கிச் சூடுகளில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இவர்களின் சம்பளத்திலிருந்து இழப்பீடு வழங்க வேண்டும். துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்க வேண்டும். அப்பொழுதுதான், இதுபோன்ற அவசியமில்லாத துப்பாக்கிச் சூடுகள் குறையும். இல்லையென்றால், முஸ்லிம்களை நோக்கி பாயும் இந்தத் தோட்டாக்களுக்கு முடிவில்லாமல் போய்விடும்.

- நெல்லை சலீம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It