‘குஜராத் கோப்புகள்: மறைக்கப்பட்ட கோர வடிவங்கள்’ என்ற பெயரில், பிரபல இதழியலாளர் ராணாஅயூப் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய நூலை, பாரதி புத்தகாலயத்தினர் தமிழில் வெளியிட்டுள்ளனர். ச.வீரமணி அவர்கள் தமிழில் மொழி பெயர்ப்பு செய்துள்ளார். நல்ல அட்டை வடிவமைப்புடன் நேர்த்தியாக வந்துள்ளது. பின் அட்டைப் படம் இன்றைய இந்திய அரசியல் எப்படி உள்ளது என்பதை விளக்குவதாக உள்ளது.
நூலாசிரியர் பற்றி
தெஹல்கா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியரான இவர், 2010 ம் ஆண்டில் தன் உயிரையும் பணயம் வைத்து இந்த ஆதாரங்களைத் திரட்டி உள்ளார். 2001 ம் ஆண்டுமுதல் 2010ம் ஆண்டு வரை குஜராத் மாநிலத்தில் பணிபுரிந்த காவல்துறை மற்றும் உள்துறை உயர் அதிகாரிகளைப் பேட்டி கண்டு 2002 ல் நடந்த குஜராத் படுகொலைகள் மற்றும் போலி என்கவுண்டர்கள் குறித்து அவர்கள் மனம் திறந்து பேசியதை ரகசியமாகப் பதிவு செய்தார்.
தன்னை அமெரிக்காவில் வாழும் இந்தியாவைச் சேர்ந்த ஒரு திரைப்பட இயக்குநர் எனக் கூறி தன் பெயரையும், தனது அடையாளத்தையும் மாற்றிக் கொண்டு, குஜராத்தின் முக்கியப் பிரமுகர்களைப் பேட்டி எடுத்து அதனைத் தனது ‘தெஹல்கா’ நிறுவனத்திடம் அளித்தார். அவர்கள் வெளியிட மறுத்துவிட்டனர். இதனை வெளியிட்டால் நாம் கொல்லப்படுவோம் என தெஹல்காவினர் தெரிவித்து விட்டனர்.
எனவே அவற்றையெல்லாம் தொகுத்து ஆங்கிலத்தில் ‘குஜராத் ஃபைல்ஸ்’ என வெளியிட்டார். இவரது புலனாய்வுக் கட்டுரைகளால் குஜராத்தின் அன்றைய உள்துறை அமைச்சரும் மோடியின் தளபதியுமான அமித்ஷா மற்றும் குஜராத் மாநிலத்தின் முக்கிய காவல்துறை அதிகாரிகள் அனைவரும் சிறை சென்றனர்.
இதழியல் துறையில் பணி செய்ய விரும்பும் இளம் பத்திரிக்கையாளர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு கையேடாக அமையும். தான் எடுத்துக் கொண்ட பணிக்காக தன்னை எப்படியெல்லாம் ரானா அயூப் அவர்கள் மாற்றிக் கொண்டு பல்வேறு அச்சுறுத்தல்களுக்கிடையே பணி செய்துள்ளார் என்பதும், தான் சார்ந்த சமூக மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்ற எதிரிகளிடம் பேசும் போது கூட, உணர்ச்சி வசப்படாமல் செய்தி சேகரித்துள்ளார் என்பதும் முற்போக்காளர்களும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் ஆகும்.
இந்துமதம் கட்டமைத்துள்ள பெண் அடிமைத்தனத்திற்குச் சிறிதும் குறைவில்லாமல் பெண்களை பர்தா என்னும் விலங்கு பூட்டும் இஸ்லாமிய சமூகத்திலிருந்து மிகப் பெரும் இதழியலாளராக உருவாகியுள்ள ரானாஅயூப் அவர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். தமிழகத்தில் ஏ.சி அறையில் அமர்ந்து பொய்யை எழுதும் மோசமான பத்திரிக்கைகளுக்கு ஒரு பாடமாகும்.
போலி என்கவுண்டர்கள்
என்கவுண்டர்கள் பெரும்பாலும் 99 சதவீதம் பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, இஸ்லாமிய மக்கள் மீதும் நக்ஸலைட் என்று கூறி கம்யூனிஸ்ட்கள் அவர்களுக்கு ஆதரவான பழங்குடியின மக்கள் மீதும்தான் நடத்தப்பட்டுள்ளது. எங்காவது ஒரு இந்து மத வெறி இயக்கத்தைச் சார்ந்தவன் யாராவது என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனரா? அல்லது அவர்கள் தவறே செய்யாத உத்தமர்களா? அப்பாவியான மக்களைக் கொன்ற எந்த மதவெறியனோ, பெருமுதலாளியோ எங்கேயாவது தண்டனைக்குள்ளாகி உள்ளனரா?
இந்தியா முழுமைக்குமே என்கவுண்டர் என்பது அரசியல் பழிவாங்கலுக்காகவே நடைபெற்றுள்ளது. அதுபோலவே தான் குஜராத்திலும் நடந்துள்ளது. சொராபுதீன் என்கவுண்டர் மற்றும் இஸ்ரத் ஜஹான் என்கவுண்டர் என பல என்கவுண்டர்கள் அரசியல் பழிவாங்கல், சமூதாய இயக்கங்களை மடைமாற்றம் செய்தல், மக்கள் கவணத்தை திசை திருப்புதல் ஆகியவற்றிற்குத்தான் பயன்பட்டுள்ளது.
இந்த நூலின் 14 ம் பக்கத்தில் “அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த, அமித்ஷா விற்கும், உயர் அதிகாரிகளுக்கும் இடையே என்கவுண்டர்கள் நடைபெற்ற சமயங்களில் நடந்த தொலைபேசி உரையாடல்களின் பதிவுகளாகும்.” மேலும்
“என்கவுண்டர் என்ற பெயரில் அப்பாவிகளைக் கொன்று அவர்களைப் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்த வேண்டும் என்கிற கபடத்தனமான சதித்திட்டம்” என்று குறிப்பிட்டிருந்தது மாநிலக் குற்றப் புலனாய்வுத் துறையால் (சிஐடி) தரப்பட்ட அறிக்கை.
சொராபுதீன் ஒரு சிறிய ரவுடி. அவர் குஜராத்தின் மிகவும் முக்கியமான காவல்துறையைச் சார்ந்த ஐபிஎஸ் அதிகாரியான அபய் சூடாசாமா என்பவருக்கு நெருக்கமானவர் என்று சொல்லப்படுகிறது. அபய்சூடாசாமா(ஹவாலா பணம் புளங்க கூடியவர்) என்ற அதிகாரி அமித்ஷாவிற்கு நெருக்கமானவர் என்ற பேச்சும் உண்டு. சொராபுதீன் போன்ற ரவுடிகளைத் தங்கள் அரசியல் சுயநலத்திற்கு பயன்படுத்திவிட்டு இரகசியம் வெளியே தெரியாமல் இருக்க இவர்களுக்கு லஷ்கர் இ தொய்பா என பெயரிட்டு கொலை செய்வது தான் இந்தியா முழுக்க அதிகார வர்க்கத்தின் செயலாகும்.
இந்த நூலின் 63 ம் பக்கத்தில் குஜராத் மாநிலத்தின் காவல்துறை கூடுதல் துணைத்தலைவர் ராஜன் பிரியதர்சி அவர்களின் நேர்காணலில் இருந்து “ஒட்டு மொத்த நாடும் அந்த என்கவுண்டர் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறது. அமைச்சரின் கட்டளைக்கிணங்க சொராபுதீனையும் துளசி பிரஜாபதியையும் அவர்கள் தீர்த்துக் கட்டினார்கள். இந்த அமைச்சர் அமித்ஷா இருக்கிறாரே, அவர் எப்பொழுதும் மனித உரிமையில் நம்பிக்கை இல்லாதவர். இந்த மனித உரிமை ஆணையங்கள் மீது எனக்கு எப்போதுமே நம்பிக்கை கிடையாது என்று அவர் எங்களிடம் சொல்வது வழக்கம்”
ஒரு மாநிலத்தின் உள்துறை அமைச்சரே என்கவுண்டர் செய்ய சொல்வதும் எனக்கு மனித உரிமை ஆணையங்கள் மீது நம்பிக்கை இல்லை என்பதும் ஜனநாயகத்தின் மீது பற்றுள்ள அனைவருக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தல் ஆகும். இவர்கள் கையில்தான் இந்தியா சிக்கியுள்ளது.
மேலும் குஜராத்தின் உள்துறைச் செயளாலர் அசோக் நாராயணன், உளவுத் துறைத் தலைவர் ஜி.சி.ரெய்கர் ஆகியோரும் தங்களுடைய நேர்கானலில் சொராபுதீன், இஸ்ரத் ஜஹான் என்கவுண்டர் வழக்குகளில் அரசியல்காரணம் உள்ளது என்றும் அவர்கள் அப்பாவிகள் என்றும் பதிவு செய்கின்றனர். எனவே என்கவுண்டர்கள் மட்டுமல்லாமல் இங்கே தூக்குத் தண்டனைகளும் ஜாதி, மதம் பார்த்து வழங்கப்படுகிறது.
குஜராத் படுகொலைகள்
உலகத்தின் முன்பு வெட்கி தலைகுனியும் நிலையை இந்தியாவிற்கு ஏற்படுத்திய பல சம்பவங்களில் குஜராத்தில் நடந்த படுகொலைகளும் ஆகும். அதைப் பல அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் முன்னின்று நடத்தியதற்கான ஆதாரங்களை அவர்களிடமிருந்தே பெற்று, பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைக் காரணம் காட்டி மூன்று மாதங்களாக தொடர்ந்து வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு, அதை இந்துக்களின் எழுச்சி என்று கொண்டாடிய மனித ரத்தம் குடிக்கும் மிருகங்கள்தான் இந்த காவிபயங்கரவாதிகள். ஆனால் கோத்ரா சம்பவமே காவல் துறை அதிகாரிகளால் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. 2002 ல் நடைபெற்ற கலவரத்தில் மோடியின் அமைச்சரவையில் குழந்தைகள் நலம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மாயா கோட்னானி யின் மருத்துவமனைக்கு அருகில் நரோடா பாட்டியா படுகொலைகள் நடைபெற்றன.
குஜராத்தின் உள்துறைச் செயலாளர் அசோக் நாராயணன் தனது பேட்டியில் “ பல சமயங்களில் அமைச்சர்கள் வீதிகளில் நின்றுகொண்டு, கூட்டத்தினருக்கு கட்டளை பிறப்பித்துக் கொண்டிருந்தார்கள். நான் முதல்வர் (மோடி) அறையில் உட்கார்ந்திருந்தபோது அது போன்ற ஒரு நிகழ்வு நடந்தது” (பக்கம் 89, 90)
மோடியின் அமைச்சரவையின் உள்துறைச் செயலாளரின் கூற்றே இப்படி இருக்கிறது. கலவரத்திற்கான முதல் குற்றவாளியாக மோடி கைது செய்யபட்டிருக்க வேண்டும். அல்லது மிகவும் யோக்கியமானவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் சங் பரிவார் மோடியை கட்சியிலிருந்து நீக்கியிருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை? ஏனெனில் செய்யச் சொன்னதே ஆர். எஸ்.எஸ் தான்.
பட்டேல் சமூகத்தின் இடஒதுக்கிட்டிற்காகப் போராடிய ஹர்த்திக் பட்டேல் தனது கையில் இருந்த வாளை உருவி, செய்தியாளர்களைப் பார்த்து, “நான் வெட்டிய கைகளின் எண்ணிக்கை எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா”? என்று கேட்கிறார் மேலும் அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள், ஆர்.எஸ்.எஸ் மற்றும் வி.எச்.பி தவைர்கள் பேசிய பேச்சின் ஆதாரம் வெளியடப்பட்டது. கொத்துக் கொத்தாக ஒரு சமூகத்தையே கொலை செய்த அயோக்கியர்களின் கையில்தான் இன்று இந்தியாவே சிக்கியுள்ளது.
நேற்று குஜராத் - நாளை இந்தியா
குஜராத்தை இந்துத்துவத்தின் சோதனைச் சாவடியாக பார்த்த ஆர்.எஸ்.எஸ் பிடியில்தான் இன்று இந்தியா சிக்கியுள்ளது. பெரியார், அம்பேத்கர் தொண்டர்கள், மார்க்சியவாதிகள் முன்பு மிகப் பெரிய சவால் எழுந்துள்ளது. தனது சொந்த கட்சியைச் சேர்ந்த மாநில உள்துறை அமைச்சராக இருந்த ஹரேன் பாண்ட்யா கொலை பற்றியும் சந்தேகம் எழுப்பியுள்ளார் அவரின் மனைவி ஜக்ருதிப்பென். தனக்குப் பிடிக்காதவக்ளைக் கொலை செய்துவிட்டுப் பழியை முஸ்லீம்கள் மீது போடுவது என்பதும் தனது அமைப்பைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களைக் கலவரத்தில் ஈடுபடுத்தி அதில் அரசியல் ஆதாயம் தேடுவதும் இந்த இந்துப் பாசிசக் கும்பலின் பாணி. இந்தப் பாசிசக் கும்பலிடம் இருந்து மக்களைக் காப்பாற்றும் பொறுப்பு நமக்கு உள்ளது.
எத்தனை என்கவுண்டர்கள்? எத்தனை ஆயிரம் படுகொலைகள்? அனைத்தும் இந்து மத நம்பிக்கையை வைத்து, அதன் புராணக் கதைகளை வைத்து, சாதாரண மக்களை ஆயுதபாணிகளாக மாற்றுகிறார்கள். இவர்களை எந்த இந்து நம்பிக்கையை மக்களிடம் சொல்லி திரட்டுகிறார்களோ அந்த நம்பிக்கைகளை விமர்சனம் செய்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை தாங்கள் இந்துக்கள் அல்ல என்று முழங்க வைப்பதில்தான் நமது வெற்றி அடங்கியுள்ளது. இல்லை இது நாளை இந்தியா முழுவதும் நடக்கும்
ஆர்.எஸ்.எஸ் ஒரு கொலைகார அமைப்பு என்பதை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியும் இந்தியாவின் பிரதமர் ஒரு கொலைகாரர் என்பதையும் தெளிவாக விளக்கியும் வந்துள்ள ‘குஜராத் கோப்புகள்’ நூலை முற்போக்குவாதிகள் தங்களுக்கான அறிவாயுதமாகப் பயன்படுத்த வேண்டும்.
தமிழில்- ச.வீரமணி
நூல் அறிமுகம் - சி.இராவணன்
கிடைக்குமிடம் - பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை,தேனாம்பேட்டை, சென்னை - 600018 விலை 170 பேச-044 - 24332424