விண்வெளியில் இருந்து அரிய, மிக உயர் ஆற்றலுடைய துகள்கள் பூமியில் வந்து விழுகின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமட்டராசு ((Amaterasu) என்று பெயரிடப்பட்டுள்ள இத்துகள்கள் விண்வெளியின் வெறுமையான பகுதியில் இருந்து வருவது ஆய்வாளர்களை குழப்பத்திலும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது. ஜப்பானிய புராணத்தில் வரும் அமட்டராசு என்ற சூரிய தேவதையின் பெயரில் அழைக்கப்படும் இத்துகள்கள் இது வரை கண்டறியப்பட்டதில் மிக அதிக ஆற்றலுள்ள காஸ்மிக் கதிர்களில் ஒன்று.

அதிக ஆற்றல் உடைய காஸ்மிக் நிகழ்வுகள் ஏற்படும்போது உண்டாகும் ஆற்றல் ஒரு நட்சத்திரம் வெடித்துச் சிதறும்போது உருவாகும் ஆற்றலை விட அதிகமாக இருக்கும் நிலையில் மட்டுமே இது போன்ற உயர் அளவு துகள்கள் தோன்றுகின்றன என்று கருதப்படுகின்றது. ஆனால் அமட்டராசு துகள்கள் பால்வீதி நட்சத்திர மண்டலத்தின் எல்லைப் பகுதிக்கு அருகில் இருக்கும் அருகாமை விண்வெளி வெற்றிடத்தில் (local Void) இருந்து உருவாகின்றன.

“இவற்றின் மூலம் (source) மற்றும் துகள்களின் பாதையைக் கண்டறிந்தபோது அப்பகுதியில் இருந்து இது போன்ற உயர் ஆற்றல் துகள் உருவாகத் தேவையான உயர் ஆற்றல் அங்கு எதுவும் இல்லை என்பது புதிராக உள்ளது” என்று ஆய்வுக் கட்டுரையின் இணை ஆசிரியரும் யூட்டா (Utah) பல்கலைக்கழகப் பேராசிரியருமான ஜான் மாத்யூஸ் (Prof John Matthews) கூறுகிறார். இது பற்றிய ஆய்வுக் கட்டுரை சயன்ஸ் ஆய்விதழில் வெளிவந்துள்ளது.amataresu particleஇந்தத் துகள்கள் 240 எக்ஸா எலக்ட்ரான் வோல்ட்ஸ் (exa-electron volts EeV) ஆற்றல் உடையவை. இவை மணிக்கு 95 மைல் வேகத்தில் பயணிக்கும் ஒரு கோல்ஃப் பந்தின் வேகத்திற்கு சமமானது. பூமியில் இது வரை கட்டப்பட்டதில் உயர் ஆற்றல் உடைய துகள்களை உருவாக்கும் லார்ஜ் ஹைடிரான் கொலைடர் கருவியில் இருந்து வெளிப்படும் துகள்களின் ஆற்றலை விட இவை பல மில்லியன் மடங்கு அதிக ஆற்றல் உடையவை.

1991ல் கண்டுபிடிக்கப்பட்ட, 320 எக்ஸா எலக்ட்ரான் வோல்ட் ஆற்றல் உடைய ஓ-மை-காட் (Oh-My-God) துகளே அதிக ஆற்றலுடைய காஸ்மிக் கதிர் துகள்கள். ஒரு சூப்பர்நோவாவில் இருந்து வெளிவிடப்படும் ஆற்றலை விட இது பல மடங்கு அதிகம். தூண்டப்படும்போது இத்துகள்களைக் கட்டுப்படுத்த அதிக அளவு ஆற்றல், மிக உயர்ந்த காந்த மண்டலம் அவசியம்.

“இந்த உயர் ஆற்றல் காஸ்மிக் கதிரை முதல்முதலாக கண்டுபிடித்தபோது இது தவறான கண்டுபிடிப்பாக இருக்கலாம் என்று நம்ப முடியாமல் இருந்தது. கடந்த முப்பதாண்டில் இந்த அளவு உயர் ஆற்றல் உள்ள துகள்கள் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல்முறை. மற்றொரு நட்சத்திர மண்டலத்தில் இருக்கும் மிக அதிக நிறையுடைய சூப்பர் கருந்துளை இதற்குக் காரணமாக இருக்கலாம். பரந்த வெளிப்பரப்பில் பொருட்கள் அவற்றின் துணை அணு அமைப்புகளாக மாற்றப்படுகின்றன. புரோட்டான்கள், எலக்ட்ரான்கள், அணுக்கருக்கள் பிரபஞ்சத்தில் ஒளியின் வேகத்தில் வீசப்பட்டுக் கொண்டே இருக்கின்றன” என்று ஜப்பான் ஒசாகா மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழக இணைப் பேராசிரியரும் ஆய்வாளருமான டாஷிஹிரோ ஃபுயூஜியை (Toshihiro Fujii) கூறுகிறார்.

விண்வெளியில் நடக்கும் அதிதீவிர நிகழ்வுகளின் எதிரொலிகளாக காஸ்மிக் கதிர்கள் நிரந்தரமாக பூமிக்கு மழை போல வந்து கொண்டிருக்கின்றன.

அமட்டராசு துகளைக் கண்டுபிடித்த யூட்டா அதிநவீன வானியல் தொலைநோக்கி (Array observatory) போன்ற கருவிகளின் உதவியுடன் இது போன்ற துகள்களைக் கண்டுபிடிக்கலாம். ஒரு குறிப்பிட்ட ஆற்றல் அளவிற்குக் கீழ் இத்துகள்களின் பாதை ஒரு பின் பந்து இயந்திரத்தில் உள்ள பந்தின் செயல்பாட்டை ஒத்துள்ளது. பின் பால் இயந்திரம் (a pinball machine) என்பது சரிவான பரப்பில் பின்கள் மற்றும் இலக்குகளுக்கு இடையில் உருளும் பந்தைக் கொண்ட ஒரு பொழுதுபோக்கு கருவி.

காஸ்மிக் நுண்னலைகளின் பின்புலத்தில் இவை வளைந்து நெளிந்த பாதையில் பயணிக்கின்றன. நட்சத்திர மண்டலங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் ஓ-மை-காட் மற்றும் அமட்டராசு துகள்கள் போன்றவை நட்சத்திரத் மண்டல காந்தப்புலங்களால் பாதிக்கப்படுவதில்லைஎன்பதால் இவற்றின் மூலத்தை நம்மால் கண்டுபிடிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இத்துகள்களின் பாதை வந்த வழியை ஆராய்ந்தால் அது வெற்றிடத்தில் இருந்து தோன்றியதாக உள்ளது.

இது போல ஓ-மை- காட் துகள்கள் உருவான இடத்தை அறியக்கூடிய ஆதாரங்கள் எதுவும் இல்லை. கணிக்கப்பட்டதை விட பெரிய காந்த சிதறலால் இவ்வாறு நிகழலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

“விண்ணில் இருந்து பூமிக்கு வந்து விழும் இது போன்றவற்றின் உயர் ஆற்றல் பற்றி இன்னும் முழுமையாக அறியப்படவில்லை. விண்வெளியின் வெவ்வேறு இடங்களில் இருந்து இவை வரலாம். இத்துகள்களுக்கு ஒரே ஒரு புதிரான மூலம் மட்டும் இல்லை” என்று ஆய்வுக் கட்டுரை இணை ஆசிரியர் மற்றும் யூட்டா பல்கலைக்கழக விஞ்ஞானி பேராசிரியர் ஜான் பெல்ஸ் (Prof John Belz) கூறுகிறார்.

யூட்டாவின் மேற்குப் பாலைவனப் பகுதியில் 1,200 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள அதி நவீன ஆற்றல் தொலைநோக்கி இது போன்ற காஸ்மிக் கதிர்களை அவை உருவாகும் மற்றும் அழியும் நிலைக்கு முன்பே கண்டுபிடிக்கும் திறனுடையது.

இப்பகுதியில் வறண்ட காற்று உள்ளது. காற்றில் ஈரப்பதம் இருந்தால் அமட்டராசு போன்ற துகள்களைக் கண்டுபிடிக்க அவசியமான புற ஊதாக்கதிர் ஒளியை உறிஞ்சிவிடும். ஒளி மாசுள்ள இடங்களில் அதிக ஒலி ஏற்படுகிறது. இது காஸ்மிக் கதிர்களை தெளிவற்றவையாக்குகிறது. மேம்படுத்தப்படும் இத்தொலைநோக்கியில் அமெரிக்கா ரோட் தீவிற்கு சமமான பரப்பில் கதிரியக்கத்தை அயனியாக்கும் சிண்டிலேட்டர் என்று அழைக்கப்படும் ஐநூறு புதிய கருவிகள் பொருத்தப்படும்.

இதன் மூலம் அமட்டராசு துகள் பற்றி மேலும் தீவிரமாக ஆராய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். வருங்காலத்தில் அண்டவெளியில் ஏற்படும் அபூர்வ நிகழ்வுகளைக் கண்டறிய இந்த தொலைநோக்கி பெரிதும் உதவும். இதன் மூலம் அண்டவெளியின் ஆழ்பரப்பில் மறைந்திருக்கும் பல இரகசியங்களுக்கு விடை கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It