Anand Teltumbdeதேசத்தை அழிப்பவர்கள் தேசபக்தர்களாகவும், தன்னலமற்ற சேவகர்கள் தேச விரோதிகளாகவும் சித்திரிக்கப்படும் காலகட்டம் இது. அரசு இயந்திரம் எந்த ஒரு தனிநபர் மீதும் மிகப்பெரிய அநீதியை இழைக்க முடியும். அப்படியாகத்தான் நாடறிந்த ஆளுமை ஒருவரை, போலிக் குற்றச் சாட்டையே குற்றமாகக் கருதி, அவர் உள்நாட்டு பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறார் என்று பிணையில் வர முடியாதவாறு ஒரு தனிநபர் பயங்கரவாத சட்டத்தில் இந்த அரசு, சிறையில் அடைத்துள்ளது.

புனையப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் :

 அவர் செய்ததாகச் சொல்லப்படும் குற்றம் என்னவெனில்:

  1. ஏப்ரல் 2018ல் பாரிஸில் அவர் கலந்துகொண்ட ஒரு மாநாடு நடத்தப்பட்டது. அந்த மாநாட்டுக்கான செலவுகளை மாவோயிஸ்ட்கள் செய்திருந்தனர்.
  1. சென்னை ஐ.ஐ.டி.யில் அம்பேத்கர் பெரியார் கல்வி மையம் தொடங்கியதில் ஒரு காரணமாக இருந்தார்.
  1. மிலிந்த்' பிரதிநிதியாக இருந்த `சுரேந்திரா' என்பவரிடம் இருந்து சமூக விரோத செயலைத் தூண்ட ரூ.90,000 பெற்றார்
  1. புனே அருகே பீமா - கொரேகானில் 2018 ஜனவரி 1 ஆம் தேதி வன்முறை நிகழ்ந்தது. அந்த வன்முறைக்கு முந்தைய நாள், 2017 டிசம்பர் 31 ஆம் தேதி, புனேவில் எல்கார் பரிஷத் (உரக்கப் பேசுவோம்) மாநாடு நடத்தப்பட்டது. அந்த மாநாட்டில் ஆற்றிய உரைகளால் மறுநாள் வன்முறை தூண்டப்படக் காரணமானவர்.
  1. பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்வதற்கு மாவோயிஸ்ட்கள் சதித் திட்டம் தீட்டியதில் தொடர்பு.

மேற்சொன்ன ஐந்து குற்றச்சாட்டுகளும் ஐந்து கடிதங்களின் வாயிலாகத் தாமே கண்டெடுத்தது போல் மும்பை காவல்துறை 2018 இல் வெளியிட்டது. ஆனால் இந்த ஆண்டு (2020) அக்டோபர் மாதம் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) வெளியிட்ட குற்றப்பத்திரிகையோ, கல்வி மாநாடுகளுக்காக பிலிப்பைன்ஸ், பெரு, துருக்கி மற்றும் பிற சர்வதேச மாநாடுகளில் கலந்து கொண்டு மேலும் அவர்களின் சித்தாந்தம், வெளிநாட்டு இலக்கியங்கள் மற்றும் வீடியோக்கள் (பென் டிரைவ் / மெமரி கார்டுகளில்) கொண்டு வந்து மாவோயிஸ்ட் உறுப்பினர்களுக்கு பயிற்சி மற்றும் வகுப்புகள் நடத்த முயற்சி செய்தார் என்கிறது.

மேலே 2018 இல் சொல்லப்பட்டுள்ள ஐந்து குற்றச்சாட்டுகளில் முதல் குற்றச்சாட்டை மட்டுமே கொஞ்சம் விரிவுபடுத்தி 2020இல் தேசிய புலனாய்வு அமைப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.. ஐந்தாவது குற்றச்சாட்டான மோடியை கொல்ல சதி சத்தமின்றி அரசாங்கமே வாபஸ் வாங்கிவிட்டாலும் ஒரு துண்டுச் சீட்டில் அவர் பெயர் இருந்ததற்காக அவர் குற்றவாளி என்று குற்றம்சாட்டி அவரை சிறைக்குள் தள்ளியது காவல்துறை.

இப்படி அரசின் நேரடித் தாக்குதலுக்கு ஆளானவர, தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங்கும், அகமதாபாத் ஐ.ஐ.எம்-மில் எம்.பி.ஏவும், கர்நாடகாவில் பி.ஹெச்.டி ஆய்வுப் பட்டமும் பெற்றவர். மத்திய அரசின் `பாரத் பெட்ரோலியம்’, ‘பெட்ரோலியம் இந்தியா லிமிடெட்’ நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகளை வகித்தவர்.

பிறகு கரக்பூர் ஐ.ஐ.டி-யிலும் கோவா மேலாண்மை கல்வி நிறுவனத்திலும் பேராசிரியராகப் பனியாற்றியுள்ளார். அத்துடன் ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு வருகை தரும் பேராசிரியராகவும், சமூகச் செயற்பாட்டாளரும் இந்தியாவின் தலைசிறந்த அறிஞராகவும் மதிக்கப்பட்ட அம்பேத்கரின் பேத்தியை மணம் முடித்தவருமான அறிவு ஜீவியும், எழுத்தாளரும், மனித உரிமைப் போராளியுமான ஆனந்த் டெல்டும்டேவைத் தான் இந்திய ஒன்றிய அரசு தேசவிரோதக் குற்றவாளி என்கிறது.

கடந்த ஏப்ரல்14ஆம் நாள் அம்பேத்கர் பிறந்த நாளை இந்திய அரசியல் தலைவர்கள் கொண்டாடினர். அம்பேத்கரைப் பிடிக்காத அரசியல் தலைவர்கள் உட்பட அனைவரும் அம்பேத்கருக்கு மரியாதை செய்தார்கள். மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு, ஒருபடி மேலே சென்று அம்பேத்கருக்கு அவமரியாதை செய்யும் விதமாக அம்பேத்கரிய கருத்தியலை நாடு முழுக்க விதைத்த அம்பேத்கரின் பேரனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்து அம்பேத்கருக்கு இகழஞ்சலி செய்து காட்டினார்கள்.

அரசுக்கு ஏன் இந்த அச்சம்:

உண்மையிலே ஆனந்த் டெல்டும்டே குற்றவாளியாக இருக்க வாய்ப்பு இருக்கிறதா என்றால் அதில் துளியும் உண்மை இல்லை. பின்பு ஏன் ஆட்சியாளர்கள் அவரை சிறையில் அடைத்துள்ளார்கள்? ஒருவேளை அவர் அரசை விமர்சிப்பதை மட்டுமே தன் கொள்கையாக வைத்திருந்தார் என்றால், அவரை பத்தோடு பதினொன்றாகக் கருதி அரசு கண்டுகொள்ளாமல் இருந்திருக்கும்.

அரசை விமர்சிப்பதை விட, அதிகாரம் எப்படி செயல்படும் என்று இளம் தலைமுறையினருடனும், அடித்தட்டு மக்களிடமும் ஆனந்த் டெல்டும்டே தொடர்ந்து பேசி வந்தார். சீற்றத்தோடு பேசுவதைவிட சிந்திக்கும் விதமாக பேசியது தான் மாபெரும் தவறெனக் கருதி ஒன்றிய அரசு டெல்டும்டேவை சிறையில் அடைத்தது.

ஆனந்த் டெல்டும்டேவின் தெளிவான வாதங்கள் யாருக்கும் வசதியாக இருக்காது, ஆனால் நாம் அனைவரும் அவற்றை அவசியம் படிக்க வேண்டும் சிந்திக்க வேண்டும். ஏனெனில் அவை நம்மை கடுமையாகச் சிந்திக்க வைப்பவை என்கிறார் எழுத்தாளர் சுனில் கிலானி. டெல்டும்டேவின் சிந்தனை எப்படிப்பட்டது என்பதைப் பார்ப்போம்.

பொதுவாகப் பெரியார் மற்றும் அம்பேத்கரை நாம் சமூக விஞ்ஞானிகள் என்று அழைப்போம். ஏன் அப்படி அழைக்கிறோம் என்றால் இந்தச் சமூகத்தில் மாறவே மாறாது என்று இரண்டாயிரம் வருடமாக பொது புத்தியில் திணிக்கப்பட்ட சாதிய ஏற்றத்தாழ்வை தகர்க்கும் செயலைத் தொடங்கி வைத்ததோடு அச்சிந்தனையை இச்சமூகத்திற்குள் விதைத்துள்ளார்கள். பெரியார் அம்பேத்கர் விதைத்த கருத்தியலோடு டெல்டும்டே வேறு சில கருதாக்கங்களையும் இணைந்து வெளிப்படுத்துகிறார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் சாதி நீக்கப்பட்ட அரசியலமைப்பாக தோற்றமளித்தாலும் இந்தியக் குடியரசு என்பது சாதியின் அஸ்திவாரத்தில் தான் கட்டப்பட்டுள்ளது என்கிறார். சாதி என்பது அங்கிங்கெனாதபடி எங்கும் பரவியிருக்கிறது, அதன் இருப்பை உணர சாதாரண அறிவே போதும். இடைநிலைச் சாதிகளில் ஒரு பகுதியினர் அதை ஏற்க மாட்டார்கள். தலித்கள், தலித்தல்லாதவரிடம் சாதிப் பிரச்சனை குறித்த பார்வையில் மாறுபாடு இருப்பதே பிரச்சனை இருப்பதை நிரூபிக்கிறது என்கிறார்.

ஆனந்த் டெல்டும்டே அதிகமாக தலித்துகளை பற்றியே பேசுகிறார் என்று கம்யூனிஸ்டுகள் சொல்வதைப் போலவே இவர் கம்யூனிஸ்டுகளைப் பற்றி மட்டுமே அதிகமாகப் பேசுகிறார் என்று தலித் செயல்பாட்டாளர்களும் சொல்கிறார்கள். உண்மையில் அவர் தலித் மற்றும் கம்யூனிஸ்டுகள் ஒற்றுமையைப் பற்றியே அதிகமாக பேசுகிறார்.

இது ஆதிக்க வர்க்கத்திற்கு பேராபத்து என்று சரியாக உணர்ந்து கொண்டது இந்துத்துவ இயக்கம் மட்டுமே. ஆகையால்தான் டெல்டும்டேவை சிறையில் அடைத்தது.

இந்துத்துவவாதிகள் அம்பேத்கரை காவி மயமாக்க படாதபாடு படுகிறார்கள். இதற்கு தலித் இயக்கத்திலுள்ள சில நடுத்தர வர்க்கத்தினரின் சுயநலம் துணைபோகிறது என்பதை டெல்டும்டே அழுத்தமாகக் குறிப்பிடுகிறார்.

அம்பேத்கரைக் கடவுளாகப் புனிதராகப் பார்ப்பதைக் கடுமையாகக் கண்டிப்பதோடு அம்பேத்கரை நாம் புரட்சியாளராகத் தான் பார்க்கவேண்டும் என்கிறார்.

இந்தியாவிலேயே பெரிய மாநிலத்தில் முதலமைச்சராக இருக்கும்போது நாம் ஒரு முன்மாதிரியாக நடந்து கொள்ளவேண்டும், இவர்கள் கையில் ஆட்சி போனால் இப்படித்தான் நடத்துவார்கள், சீரழிப்பார்கள் என்று சொல்லும் அளவுக்கு மாயாவதி நடந்து கொள்ளக் கூடாது என்று தலித் அரசியல் இயக்கங்களின் செயல்பாடுகளை, உண்மைத் தன்மையின் மூலம் கடுமையாக விமர்சிக்கிறார்.

கம்யூனிஸ்ட் இயக்கமும் தலித் இயக்கமும் :

சாதி ஒழிக்காமல் இந்தியாவில் புரட்சி வராது, அதேசமயம் ஒரு புரட்சி இல்லாமல் சாதியை ஒழிக்க முடியாது. ஆதிக்க வர்க்கம், உழைக்கும் வர்க்கத்தை பிரிக்க சாதியை ஒரு சக்திவாய்ந்த கருவியாகப் பயன்படுத்த முடியும் என்பதைப் பாரம்பரியமாக ஆதிக்கம் செலுத்தி வந்த ஆதிக்கசாதிகள் உணர்ந்ததோடு அதை மேலும் வலுப்படுத்த அதிகார அசமத்துவத்தை அதிகரித்து அத்தோடு தலித் மற்றும் தலித் அல்லாதோர் இடையிலான புதிய முரண்பாட்டு அம்சங்களை உருவாக்கி தொடர்ந்து வளர்த்து வந்ததை விவரிக்கும் டெல்டும்டே இதற்கு தீர்வாக தலித் மற்றும் இடதுசாரி இயக்கங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்கிறார்.

நடுத்தர வர்க்கத்திலிருந்தும், நகர பின்னணி கொண்ட உயர்சாதியில் இருந்தும் வந்த கம்யூனிஸ்டுகள் ஐரோப்பாவிலிருந்து கடன் பெற்ற தத்துவார்த்த சிந்தனையை பயன்படுத்தி சிக்கலான இந்திய எதார்த்தத்தை புரிந்து கொள்ள முயன்றார்கள். புரட்சிக்குப் பிறகு பொதுப் பொருளாதார அடித்தளம் மாறும்போது சாதி பிரச்சனை காணாமல் போய்விடும் என்று இடதுசாரிகள் நம்பினார்கள்.

இதன் விளைவாக சாதியப் பிரச்சினையை புறக்கணித்தார்கள். அதனால் மோசமாக பாதிக்கப்பட்ட தீண்டத்தகாத தலித்களை சாதியோடு தனியாக போராட விட்டுவிட்டார்கள். தலித் இயக்கம் வலுப்பெற்ற போது இடதுசாரிகள் இயக்கத்துடனும் விரோத மனப்பான்மை உருவானது.

தலித்களும் தம் மேல் உள்ள சாதிகளால் திணிக்கப்பட்ட மத கலாச்சார ஒடுக்குமுறையில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள். தம் மீதான சுரண்டலின் மற்ற அம்சங்களை புறக்கணித்த சூழலே நிலவியது என்கிறார்.

சாதி குறித்து கேள்விகள், மேலெழும்ப விடாமல் அமுக்கும் புள்ளியில் வலதுசாரிகளும், இடதுசாரிகளும் ஒன்றிணைகின்றன. ஏமாற்றுத்தனமான இந்துமத அடிப்படையில் வலதுசாரிகளும், தெளிவற்ற வர்க்க ஒற்றுமைக்காக இடதுசாரிகளும், மேற்சொன்ன புள்ளிகளில் ஒன்றிணைந்து இருக்கிறார்கள் என்கிறார்.

கம்யூனிஸ்டுகளுக்கு சாதிய பார்வை மாற வேண்டும் என்று சொல்வதோடு அம்பேத்கர் ஒரு மார்க்சியர் இல்லை என்ற போதிலும் குறிப்பிட்ட நோக்கங்களுக்கான சக்தியை ஒருங்கிணைக்கும் கொள்கைகளில் எப்போதுமே தேர்ந்த பொதுவுடமைவாதியாகவே இருந்துள்ளார்.

அம்பேத்கர் எழுதிய சட்டத்தை நடைமுறைப்படுத்துகிறவர்கள் தீண்டாமையைக் குற்றமாக, சட்டவிரோதமாக சொல்லிக்கொண்டாலும் அவர்கள் திறமையாக சாதியை தெய்வீகமாக ஆக்கிவிட்டார்கள். அது இன்று தலித்கள் மீது கூட்டு வன்முறை தாக்குதலாக பரிணமித்துள்ளது. ஒரு தலித் தவறு செய்தால் அவனைத் தண்டிக்க தலித் அல்லாத அனைத்து சாதியினரும் ஒன்று கூடும் போக்கு அதிகரித்து வருவது சாதி இறுக்கத்தை மேலும் அதிகரிக்கும் என்கிறார்.

இடஒதுக்கீடு :

இட ஒதுக்கீடு விடயத்தில் தலித் இடஒதுக்கீடு என்பது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இச்சமூகத்தால் இழைக்கப்பட்ட அநீதிக்கு தலித்கள் கேட்கும் நஷ்டயீடு இல்லை. இப்போதும் நிகழ்ந்து வரும் சாதி வெறியால் பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்படும் ஓர் அடையாளப் பாதுகாப்பும் அல்ல.

கடந்தகால வரலாற்றுத் தவறுக்கான நஷ்டஈடு என்பது அரசின் செயல்திட்டத்தில் இருக்குமானால் அதற்கு தேவைப்படும் நிதியை திரட்ட இந்த நாட்டை பல லட்சம் முறை விற்க வேண்டியதாக இருக்கும். ஆகையால் இட ஒதுக்கீடு என்பது தலித் பங்கேற்பை உறுதிப்படுத்தும் ஒரு வழிமுறைதானே அன்றி அது நீதி வழங்கும் நடவடிக்கை அல்ல என்கிறார்.

உங்கள் முறை வருவதற்கு முன் பேசிவிடுங்கள்:

2018இல் வெளியிட்ட ‘சாதியின் குடியரசு’ என்கிற தனது புத்தகத்தில் அரசை எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களை அது எப்படி ஒடுக்கும் என்பதை விவரிக்கிறார்;

ஏழைகளுக்காக போராடுவது, ஜனநாயக உரிமை மீறல்களுக்கு எதிராகப் பேசுவது, அரசின் நடவடிக்கைகளில் அரசியலமைப்புத் தன்மையை கேள்விக்கு உட்படுத்துவதை இந்திய அரசு ஒத்துக்கொள்ளாது. தேசப் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று தேசத்தின் எதிரிகளாக கேள்வி கேட்பவர்களை சித்தரிக்கும்.

அரசின் சிவில் உரிமை மீறல்களை கேள்வி கேட்போர் மீது இதே கண்ணோட்டத்தை விரிவுபடுத்துவது, அவர்களை மாவோயிஸ்ட் என்று முத்திரை குத்தி தனது அடக்குமுறை அதிகாரத்தை ஏவும் என்று எழுதியுள்ளார்.

2018இல் அவர் விவரித்தது போலவே அரசு போலியான, சூழ்ச்சிகளால் பொய்களால் நிரம்பிய குற்றச்சாட்டை அவர் மீது திணித்து சிறையில் அடைத்துள்ளது

ஏற்கெனவே இதே வழக்கில் ஹைதராபாத்தைச் சேர்ந்த கவிஞர் வரவர ராவ், தானேவைச் சேர்ந்த வழக்கறிஞர் அருண் ஃபெரெய்ரா, ஃபரிதாபாத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் வெர்னன் கோன்சல்வ்ஸ் ஆகியோர் சுமார் ஒன்றரை ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இப்படி அரசையும் ஆளும் இந்துத்துவத்தையும் கேள்விக்கு உட்படுத்துவர்கள் மீது பாரபட்சமின்றி பொய்வழக்குப் புனைந்து அவர்களைச் சிறையில் அடைத்துள்ளார்கள்.

அவர்களைப் பொறுத்தவரை இந்து, இந்து மதம், இந்துத்துவா, இந்துஸ்தான், என்ற இந்த நால்வகை கோட்பாடுதான் ஆர் எஸ் எஸ்'ஸின் அடித்தளம், இந்த அடித்தளத்தை தகர்க்க முயற்சித்தால், முயற்சிக்கும் நபருக்கு தகுந்தாற் போல் ஆர்.எஸ்.எஸ் தன் சதிவலையை உருவாக்கும்.

எதிர்ப்பவர் சிறுபான்மையினராக இருந்தால் அவர்களை அப்புறப்படுத்துவது ஆர்எஸ்எஸ்'க்கு எளிது அதுவே அரசியல்வாதியாக, ஆட்சியாளராக இருந்தால் ஊழல், லஞ்சம், பாலியல் குற்றச்சாட்டு என்கிற பிரச்சாரத்தை அவர்கள் மீது கட்டமைக்கும்.

அதுவே சமூக செயற்பாட்டாளர்கள் (அ) எழுத்தாளராக இருந்தால் அவர்களை மிரட்டுவார்கள். பணியவில்லை என்றால் தேசதுரோக வழக்கு வரை அவர்கள் மீது பாயும். ஊழல், லஞ்சம், மிரட்டல், தேசப் பாதுகாப்பு என்று எதற்கும் அஞ்சாமலோ, அல்லது அவர்கள் மீது இச்சட்டத்தை திணிக்க முடியாமல் போனாலோ, அவர்கள் மீது கோட்சே ஃபார்முலா'வைப் பயன்படுத்துவார்கள்.

இறுதியாக ஆனந்த் டெல்டும்டே சிறைக்குச் செல்லும்போது ஒரு அறிக்கை வெளியிட்டார். அதன் இறுதியாக அவர் சொன்னது, “உங்களுடன் மீண்டும் எப்போது பேசமுடியும் என்று எனக்கு தெரியாது. ஆனால் உங்கள் முறை வருவதற்கு முன் நீங்கள் பேசிவிடுவீர்கள் என நம்புகிறேன்..”

- வெங்காயம் ஆசிரியர் குழு

Pin It