பாரதிய சனதாக் கட்சி இந்திய ஆட்சிப் பொறுப்பை ஏற்று ஓராண்டு முடியப்போகிறது.

1. ஆட்சிக்கு வந்த 100 நாள்களில் அந்நிய நாட்டு வங்கிகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்போம் என்று சொன்ன நரேந்திர மோடி அதில் படுதோல்வி அடைந்து விட்டார்.

இதற்கு மன்மோகன் சிங் ஆட்சி எந்த முயற்சி யும் எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டியது பாரதிய சனதாக் கட்சி, மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் ‘புலி வரு கிறது, புலி வருகிறது’ என்பதுபோல, மோடியின் ஆட்சியும் இதுபற்றிச் சொல்லச் சொல்ல, அந்நிய நாட்டு வங்கிகளில் கள்ளப் பணம் வைத் திருந்தவர்களை எச்சரிப்பது போல் ஆகிவிட்டது. அவர்கள் தங்கள் தங்கள் பணத்தைத் திரும்ப எடுத்துக் கொள்ளவும் அல்லது வேறு வேறு நாட்டு வங்கிகளுக்கு மாற்றிக் கொள்ளவும் வழிவகுத்துவிட்டது.

2. அந்நிய நாடுகளுக்குப் பயணம் சென்று, “இந்தியாவுக்கு வாருங் கள், இங்கு தொழில்களை நிறுவுங்கள். இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுத்த மோடி, அப்படி வரக்கூடிய அந்நியர்களுக்கு, அவர்கள் தொழில்களை இங்கு நிறுவிட வசதியாக ஆயிரக்கணக்கான ஏக்கர் வேளாண் நிலங்களைக் கையகப்படுத்தி, குறைந்த விலைக்கு அந்நிய நாட்டுப் பெருமுதலாளி களுக்கு விற்கத் திட்டமிட்டார்.

அதற்காக, ‘வேளாண் நிலங்களைக் கையகப்படுத்தும் மசோதாவை’ நாடாளு மன்றத்தில் முன்மொழிவதற்கு மாறாக, அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தார். அவசரச் சட்டத்துக்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெற வேண்டி, தன் கட்சிக்குப் பெரும்பான்மை உள்ள மக்களவையில் நிறைவேற்றி னார்.

545 உறுப்பினர்கள் கொண்ட மக்களவையில் பாரதிய சனதாவுக்கும் கூட்டணிக் கட்சிக்கும் சேர்த்து 336 உறுப்பினர்கள் இருப்பதால் மக்களவையில் ஒரு தடவை நிறைவேற்றப்பட்டது.

ஆனால் 4-4-2015க்குள் மாநிலங்கள் அவையில் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. ஏன் அப்படி?

245 பேர்களைக் கொண்ட மாநிலங்கள் அவையில் இப்போது 243 பேர் இருக்கிறார்கள். இவர்களுள் 45 பேர் மட்டுமே, பாரதிய சனதா மற்றும் கூட்டணியினர்.

ஆனால் காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் 132 பேர் இருக்கிறார் கள். எனவே மாநிலங்களவையில் மூர்க்கமான எதிர்ப்பைச் சந்திக்க நேர்ந்தது.

மக்களவைக்கு இடையில் ஒரு மாதம் விடுப்பு இருந்தது.

எனவே 5-4-2015க்குள் மசோதாவை நிறை வேற்ற முடியாததால், இரண்டாந்தடவையாக, குடிஅரசுத் தலைவர் மூலம் மீண்டும் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இப்போதும் மாநிலங் கள் அவையில், எல்லா எதிர்க் கட்சிகளும் ஒன்று திரண்டு எதிர்ப்பதால் அம்மசோதாவை நிறை வேற்ற முடியாத நிலை தோன்றிவிட்டது.

இந்நிலையில் மக்களவை உறுப்பினர்கள் 20 பேர், மாநிலங்களவை உறுப்பினர்கள் 10 பேர் கொண்ட நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு இரண்டாவது சட்டவரைவு உட்படுத்தப்பட்டுள் ளது.

அதற்கு அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?

3 மூன்றாவது தடவையாகவும் கடைசித் தடவையாகவும் குடிஅரசுத் தலைவர் மூலம் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும்.

அந்த மூன்றாவது தடவையும் மாநிலங்கள் அவையில் கடும் எதிர்ப்பு இருந்தால், வாக்கெடுப் பில் பாரதிய சனதாக் கட்சி ஆட்சி தோல்விய டைய நேரிடும்.

அதைத் தவிர்க்க ஒரே வழி நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தை (Joint Session)க் கூட்டி, 788 நாடாளுமன்ற உறுப்பினர்களுள் எத்தனைப் பேர் வாக்கெடுப்புக் கூட்டத்தில் பங் கேற்கிறார்களோ அதில் மூன்றில் இரண்டு பங்குப் பேர்களின் வாக்கைப் பெற்று, புதிய நிலம் கையகப்படுத்தல் சட்டத்தை நிறைவேற்றுவது தவிர வேறு வழியில்லை.

இந்தச் சட்டம் இவர்கள் முன்மொழிந்துள்ள வடிவத்தில் நிறைவேற்றப்படக் கூடாது என்று, ஏன் பலரும் எதிர்க்கிறோம்?

வெள்ளையன் 1947-இல் வெளியேறினான்.

4. அதன்பிறகு, 1947 முதல் இந்திய அரசினாலும், மாநில அரசுகளாலும் வேளாண் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதால் அவர்கள் பாரம்பரிய மாக வாழ்ந்த இடத்திலிருந்து வெளியேற்றப் பட்ட மக்கள் 6 கோடிப் பேர்; அதாவது 6 கோடிக் குடும்பங்கள். அப்படி வெளியேற்றப்பட்டவர்கள் சிற்றூர்ப்புற ஏழைகள், குறுநில வேளாண்மைக்காரர்கள், மீனவர்கள் மற்றும் கல் உடைக்கும் தொழிலாளர்கள் ஆவர்.

இவர்களுள் 40 விழுக்காட்டுப் பேர் மலைவாசி களும், வனவாசிகளும் ஆன ஆதிக்குடிகள்; 20 விழுக்காட்டுப் பேர் பட்டியல் வகுப்பினர் (ஆதித் திராவிடர்கள்). ஆதிக்குடிகளும் ஆதித் திராவிடர் களுமே மிகவும் இழப்புக்கு ஆளானவர்கள் (“The Hindu”, 25-4-2015). சத்தீஸ்கரிலும் ஜார்க்கண்டிலும் ஒடியாவிலும் உண்மையில் தங்கள் தங்கள் பாரம்பரிய இருப் பிடங்களையும் வேளாண் நிலங்களையும் இழந்த ஆதிக் குடிகளும், ஆதித் திராவிடருமே அதிகம் பேர்.

5. இந்த மூன்று மாநிலங்களும் கனிமவளம் நிறைந்த மாநிலங்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

6. இந்தியாவில் 25 கோடி குடும்பங்கள் உள்ளன. இதில் வேளாண் நிலம் வைத்துள்ள குடும்பங் கள் 12.5 கோடி. இதில் 9.5 கோடி குடும்பங் கள் தலைக்கு அரை ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரை வைத்துள்ள சிறு, குறு வேளாண் குடும்பங்கள்.

இவர்களுக்கு வேளாண் நிலங்களுக்காகத் தரப்படும் இழப்பீட்டுத் தொகையைக் கொண்டு, எந்த வேளாண்மைக்காரரும் எங் கேயும் வேளாண்மை செய்ய ஏற்ற நிலத்தைச் சொந்தமாக வாங்க முடியாது.

மேலும் நிலத்தை விற்றவருக்கோ அல்லது அவருடைய மகன், மகள் ஆகியோருக்கோ - அங்கு நிறுவப்படும் தொழிற்சாலையில் வேலை தரப்படமாட்டாது.

7.புதிய குடியிருப்பு இடமும் தொழிலும் வேளாண் நிலமும் அரசினாலேயே தரப்பட ஏற்ற எந்த ஏற்பாடும் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் இல்லை.

இப்போது நினையுங்கள்-மோடி அரசு வேளாண்மையை அடியோடு அழிக்கும் அரசா அல்லவா என்று.

இவை நிற்க.

8.  “கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவனைத் தூக்கி மணையில்வை” என்ற முதுமொழிக்கு ஒப்ப, இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 10-5-2015 அன்று, அயோத்தியாவில் பேசுகையில், பின்கண்ட 3 செய்திகளைப் பற்றி மிகவும் அங்க லாய்ப்போடு பேசியிருக் கிறார்.

1.அயோத்தியில் இராமர் கோயிலை அரசு கட்டுவது

2.காஷ்மீருக்குச் சிறப்பு உரிமையை அளிக்கும் அரசமைப்புச் சட்ட விதி 370 என்பதை இந்திய அரசமைப்பிலிருந்து நீக்குவது;

3. பொது உரிமை இயல் சட்டத்தை (Uniform Civil Code) நிறைவேற்றுவது என்கிற மூன்றும், 2014 பாரதிய சனதாக் கட்சி யின் தேர்தல் அறிக்கையில், எங்கள் கட்சியால் தரப்பட்ட வாக்குறுதிகள்.

இந்த மூன்று வாக்குறுதிகளையும் நிறை வேற்றுவதற்கு, மாநிலங்கள் அவையில் எங் களுக்குப் பெரும் பான்மை ஆதரவு இல்லாததே காரணம்” என்பதை வெளிப்படையாக அறிவித் திருக்கிறார்.

பொது உரிமை இயல் சட்டம் - இந்து, இஸ்லாம், கிறித்து மதங்களுக்கிடையே உள்ள உரிமை இயல்களை ஒரே தன்மையில் ஆக்குவதை நோக்கமாகக் கொண்டது. இது வேண்டப்பட்டது.

ஆனால் அயோத்தியில் இராமர் கோயில் கட்டு வது இந்து மதத்தை - இந்துத்துவக் கொள்கை யை வளர்க் கவும், நிலைக்க வைக்கவும் இந்திய அரசே நேரடியாக ஈடுபடுவது. இந்துத்துவக் கொள் கையை ஏற்காத மற்றெல்லாக் குடிமக்களுக்கும் இது எதிரானது; கண்டனத்துக்குரியது.

அரசமைப்பு விதி 370 என்பதை நீக்குவது என்பது, ஜம்மு-காஷ்மீர் அரசமைப்புச் சட்டம். இந்திய அரசமைப்புச் சட்ட உறுதிமொழி இவற் றுக்கு எதிரானது. ஜம்மு-காஷ்மீரிலுள்ள மக்க ளில் 80 விழுக்காட்டுப் பேராக உள்ள இஸ்லா மியர்களைத் தனி நாட்டுப் பிரிவினையை நோக் கித் தள்ளுவது.

இவற்றையெல்லாம் பற்றி இந்தியா முழுவதிலுமுள்ள மார்க்சிய - லெனினிய - பெரியாரிய - அம்பேத்கரிய-லோகியா ஆகியோரின் கொள்கை யினரும், இவற்றினை வென்றெடுக்கப் போராடும் கட்சிகளும் இயக்கங்களும் அமைப்புகளும் மிகவும் கவலைப்பட வேண்டும். இவர்கள் ஓரிடத்தில் கூடி, சில நாள்கள் விவாதிப்பதும், ஏற்ற மாற்றுத் திட்டங்களை உருவாக்கு வதும்-இந்தியாவில் மக்கள் நாயகத்தையும் உழைக்கும் மக் களின் நலன்களையும் காப்பாற்றிடப் பெரிய அளவில் உதவும்.