தமிழ்நாட்டில் 2007ம் ஆண்டு துவக்கத்தில் நாளொன்றுக்கு அரை மணி நேரமாக ஆரம்பித்த மின்வெட்டு, தற்போது பதினெட்டு மணி நேரமாக நீண்டுள்ளது. இதன் காரணமாக பிரசவம் நடக்கும்போதும் இருளில் மூழ்கிப் போகின்றன மருத்துவமனைகள். இல்லங்களிலும், உணவகங்களிலும் சட்டினி தயாரிக்கும் இயந்திரம் பாதியில் நின்று போகிறது. பாதியில் நின்று விடுகிறது பிணம் எரித்துக் கொண்டிருக்கும் இயந்திரம். ஆலைகள் மூடப்படுகின்றன; வேலையிழப்பு மிகுந்துவிட்டது. இப்படியாக மின்வெட்டு அமலில் உள்ள ஒவ்வொரு பொழுதிலும் கருவறை முதல் கல்லறை வரையிலும் மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். இரவு நேரங்களில் மின்னொளியில் பிரகாசித்துக் கொண்டிருந்த நகரங்கள் இருண்ட வனங்களாக காட்சியளிக்கின்றன. இது போன்றவைகளால் கணிப்பொறி யுகமான தற்காலத்திலும், கற்காலத்தில் வாழும் அனுபவத்தை உணர முடிகிறது.

power_cut_350தமிழ்நாட்டில் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, தங்கு தடையற்ற மின்சாரம் வழங்குவோம் என்பதே அனைத்து பிரதான அரசியல் கட்சிகளின் வாக்குறுதியாக இருந்தது. எங்களது கழக ஆட்சி எதிர்வரும் 2011 தேர்தலில் தோற்குமானால் அதற்கு, தற்போது நீடிக்கும் மின்வெட்டே காரணமாக இருக்கும் என்று கடந்த தி.மு.க. ஆட்சியின்போது, அப்போதைய மின்துறை அமைச்சர் ஆரூடம் கூறினார். அப்படியே ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது. அதற்கு மின்வெட்டு பிரதான காரணமாகவும் அமைந்தை நாம் அனைவருமே நன்கு அறிவோம். ஆனபோதிலும் இன்றளவும் சரிசெய்ய முடியாத தலையாய பிரச்சனையாகவே மின்வெட்டு நீடித்து வருகிறது.

இப்படியான கட்டுக்கடங்காத மின் வெட்டிற்கு, மக்கள் தொகைப் பெருக்கம், பொது மக்களின் அதீத மின் உபயோகம், கூடங்குளம் அணுமின் நிலையம் உற்பத்தி துவங்கிட நீடிக்கும் தடை என்பது போன்ற பல்வேறு காரணங்கள் ஆட்சியாளர்களால் தொடர்ந்து கூறப்பட்டு வருகின்றன. உண்மையிலேயே இவைகள் தான் காரணமா?

கடந்த 2006ம் ஆண்டு வரையிலும், மின் உற்பத்தி, மின் விநியோகம், மின் கம்பி மூலமான இழப்பு குறைவு, மின்சார சேவை போன்ற பணிகளில் இந்தியாவில் சிறந்த 10 மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகவே இருந்து வந்தது. ஆனால் அதற்குப் பிறகுதான் நிலைமை தலைகீழாக மாறியது. மின் வாரிய நிறுவனங்களான அனல்/நீர் மின் நிலையங்கள், காற்றாலை, எரிவாயு, தனியார், நடுவணரசின் தொகுப்பு உள்ளிட்டவைகளின் மூலமாக கிடைக்க வேண்டிய 10,242 மெகாவாட்டில், 8500 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வருவதாக அறிக்கைகள் கூறுகின்றன. இருப்பினும் மின் தட்டுப்பாடு தொடர்கிறது. இதிலிருந்து பார்க்கும் போது மின்சார தேவைக்கேற்ற மின் உற்பத்தி குறித்த திட்டமிடுதல்களை நமது முன்னாள், இந்நாள் ஆட்சியாளர்கள் சரியாக செய்யாததே அனைத்திற்கும் அடிப்படை காரணம் என்பது புலனாகிறது. இதற்கு மிகச்சிறந்த சான்றாக விளங்குவது அதிக எண்ணிக்கையிலான சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான அனுமதி அளிப்பு.

உள்ளூர் குடிமக்களுக்கு முதல்வர்களை சந்திப்பது அவ்வளவு எளிதாக சாத்தியமாகாத சூழலில், பன்னாட்டு நிறுவன அதிபர்கள் அவ்வப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர்களை சந்தித்த பிறகு, இங்கு பெரும் முதலீடுகளைக் கொண்ட புதிய தொழிற்சாலைகள் ஏற்படுத்தி கொள்வதற்கான ஒப்பந்தங்களை செய்து கொள்கின்றனர். அதன் மூலமாக நாட்டில் பெரிய அளவிலான தொழில் வளர்ச்சி ஏற்படும் என்றும் மக்களும் புளகாங்கிதம் அடைகிறார்கள். உண்மையில் மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கான சிக்கலே அங்குதான் உருவாகிறது. புதிய புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யும் அதே வேளையில், அவைகளுக்கான தண்ணீர், மின்சாரம், போக்குவரத்து, சாலைகள், பயன்பாட்டு நிலம், கழிவுகள் வெளியேற்றம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் போதிய அளவில் உருவாக்கப்படாமலேயே, அதன் பணிகள் துவங்கிட அனுமதி வழங்கப்படுகிறது. இப்படியாக ஆளும் அரசுகளால், பொது நலன் என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் குடிமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு பறிக்கப்பட்டு தனியார் நிறுவனங்களுக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. இப்படியாக தமிழ்நாட்டில் கடந்த 2006ம் ஆண்டுக்குப் பிறகு மட்டும், முறைப்படி 53 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கும், கொள்கை அடிப்படையில் 12க்கும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், 2006ம் ஆண்டில் தொழிற்சாலைகளுக்கான மின்சாரம், அனுமதி அளித்தது 4708 மெகாவாட். ஆனால் மறு ஆண்டிலேயே அது 6207 மெகாவாட் ஆக உயர்ந்தது. இதன் மூலமாக 1500 மெகாவாட் கூடுதலாக தேவை ஏற்பட்டது. இப்படித்தான் மின் பற்றாக்குறை ஆரம்பமானது. சட்ட விதிகளின் படி, சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு 24 மணி நேரமும், மின்சாரம் தங்கு தடையின்றி விநியோகிக்க வேண்டும். இப்படிப்பட்ட மக்கள் விரோத, கொடிய சட்டத்தை நீக்கறவு செய்ய வேண்டி இந்திய உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இன்றளவும் நீடிக்கும் மின் வெட்டிற்கு அது ஒரு பெரும் காரணமாக அமைந்தது.

இந்தியாவில் தற்போது மின்சாரம் தொடர்பாக, இந்திய மின்சார சட்டம் 1910, இந்திய மின்சார (விநியோக) சட்டம் 1948, மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள் சட்டம் 1998, மின்சார சட்டம் 2003 ஆகிய சட்டங்கள் உள்ளன.

இந்திய மின்சாரச் சட்டம் 1910 ஆனது, அக்காலகட்டத்தில் இந்தியாவில் ஆரம்ப நிலையில் இருந்த மின் விநியோக முறைக்கு ஒரு அடிப்படை கட்டமைப்பை உருவாக்கியதுடன், மின் கம்பிகள் போடுவது மற்றும் மின் விநியோகம் தொடர்பான இதர பணிகளுக்கான சட்டரீதியான வழிவகையையும் உருவாக்கியது.

power_cut_500

மாநில மின் வாரியத்தின் உருவாக்கத்தை மின் விநியோக சட்டம், 1948 அவசியமாக்கியது. மாநிலத்தில் மின் விநியோகத்தை ஒழுங்குபடுத்தும் பொறுப்பு மாநில மின் வாரியத்திற்கு அளிக்கப்பட்டது. நகரங்களில் மட்டுமே இருந்த மின்சாரம் விரைவாக கிராமங்களுக்கும் விரிவாக்கப்பட வேண்டும் என்றும், மாநில மின்சார வாரியங்களின் மூலம் இப்பொறுப்பில் மாநில அரசும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் வழிவகை செய்யப்பட்டது. இதற்கேற்ப, அடுத்தடுத்த ஐந்தாண்டு திட்டங்களின் வாயிலாக மாநில மின்சார வாரியங்கள் விரைவான வளர்ச்சியை அடைந்தன.

ஆனால் காலப்போக்கில் பல்வேறு காரணங்களால், மாநில மின்சார வாரியத்தின் செயல்பாடுகள் மோசமான நிலையை அடைந்தது. சான்றாக, கட்டணத்தை நிர்ணயிக்கும் உரிமை மாநில மின்சார வாரியத்திடம் இருந்தாலும், பொதுவாக கட்டணங்கள் மீதான முடிவுகளை சுதந்திரமான, நிபுணத்துவம் வாய்ந்த முறையில் எடுக்க இயலாமல், மாநில அரசுகளே கட்டணங்களை நிர்ணயிக்க ஆரம்பித்தன. இது போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும், மின் கட்டணத்தை நிர்ணயிக்கும் இடத்திலிருந்து மாநில அரசை அகற்றவுமே 1998ல் மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள் சட்டம் கொண்டுவரப்பட்டது. இது மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தையும், மாநில அரசுகள் மின்சார ஒழுங்குமுறை வாரியங்கள் அமைத்துக் கொள்ளவும் வழிவகை செய்தது.

ஒரிஸா உள்ளிட்ட சில மாநில அரசுகள், மாநில சட்டங்களின் வாயிலாக சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளன. டெல்லி மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களும் தமது சீர்திருத்த சட்டங்களின் மூலம், மாநில மின்சார வாரியங்கள் தனியார்மயமாவதற்கும் வழிவகை செய்தன. உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகத்தில் தனியார் துறையின் பங்கீட்டை ஊக்குவிக்கும் கோட்பாட்டுடனும், அரசை ஒழுங்குமுறை பொறுப்புகளிலிருந்து விலக்கி, ஒழுங்குமுறை ஆணையங்களிடம் ஒப்படைக்கும் நோக்குடனும், நிலுவையிலிருந்த சட்டங்களின் முக்கிய அம்சங்ககளை ஒரே சட்டத்தில் உள்ளடக்கும் விதமாகவும் மின்சார சட்டம் ஒன்று 2003ல் கொண்டுவரப்பட்டது. இப்படியாக மின் துறையில் தனியார் மயமானது சட்டப் பூர்வமாக்கப்பட்டது.

முழுமையான மின் விநியோகம் அளிக்கப்பட வேண்டும் என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். ஆனால் தற்போது இந்த உரிமையானது திசைமாறி, மின் வெட்டு செய்யப்படும் நேரத்தையாவது சரியாக அறிவியுங்கள் என்ற சூழலுக்குச் சென்றுள்ளது. இந்த கோரிக்கையை வலியுத்தி, மதுரை உயர்நீதி மன்றத்திலும், இந்திய உச்சநீதி மன்றத்திலும் பொது நல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மின்சாரம் தயாரிப்பு, விநியோகம் மற்றும் அதன் மூலமான வருவாயினங்கள் என்பவைகளை உள்ளடக்கிய வெள்ளை அறிக்கையை தமிழகத்தின் கடந்தகால மற்றும் தற்போதைய அரசுகள் வெளியிட வேண்டும். மின் வெட்டு தொடர்பாக, ஆளும் மற்றும் ஆண்ட அரசுகள் ஒன்றையொன்று குறைபட்டுக் கொண்டாலும், எக்காலத்திலும் பாதிக்கப்படுவது என்னவோ குடிமக்கள் மட்டும் தான்.

சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளிட்ட பெரும் தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு வரும் தங்கு தடையற்ற மின் விநியோகம், வெகுவாக குறைக்கப்பட்டு நாட்டின் குடிமக்களின் அத்யாவசியத் தேவைகளுக்குத் திருப்பி விடப்பட வேண்டும். அதிக பணம் வசூலித்துக் கொண்டு தனியார் விளம்பரப் பலகைகளுக்கு அளிக்கப்படும் மின்சாரமானது நிறுத்தப்பட வேண்டும். அருகிலுள்ள கேரளா மாநிலத்தில் குண்டு பல்புகளை அந்த மாநில அரசே வாங்கிக்கொண்டு, அதற்குப் பதிலாக, மின்சாரத்தைக் குறைவாக பயன்படுத்தும் CFL பல்புகளை மானிய விலையில் வழங்கி வருகிறது. இதன் காரணமாக கேரளாவில் மின் வெட்டானது கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. இது போன்ற சிறந்த மாதிரிகள் அமலாக்கம் செய்யப்பட வேண்டும். வெப்பம் மிகுந்த தமிழ்நாட்டில், பெங்களூரில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருவதைப்போல சூரிய ஒளியில் இயங்கும் மின்சாதனங்கள் புழக்கத்தில் பெருவாரியாகக் கொண்டு வரப்பட வேண்டும். மின்சாரம் தொடர்பான மாற்றுத் திட்டங்களுக்கு அரசுகளால் போதிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். மத்திய மற்றும் மாநில அரசுகளால் மரபுசார் எரிசக்தித் திட்டங்களுக்கு தொடர்ந்து முன்னுரிமை மறுக்கப்பட்டு வருகிற சூழல் மாற்றப்பட்டு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

இது போன்ற மற்றும் இன்னபிற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முனைப்புடன் அமலாக்கம் செய்தால் தமிழ்நாட்டில் தொடரும் ஈடு செய்ய இயலாத இழப்புகளை ஏற்படுத்தும் மின் வெட்டை முடிவுக்குக்கொண்டு வர இயலும்; இருளில் தொடரும் தமிழர்களின் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

(படங்கள் நன்றி: தி ஹிந்து)

- இ.இ.இராபர்ட் சந்திரகுமார்

Pin It