கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

நகர்வலம் ...

மாநகர் முழுவதும் போலிஸைத் தவிர வேறு எந்த அரசுத் துறை அலுவலர்களையும் பார்ப்பது குதிரைக் கொம்பு தான்..!!

அப்பப்ப கொசு மருந்து தெளிக்கும் பெண்கள் தான் வந்து, தனியாரிடம் காசு கொடுத்து வாங்கி வைத்துள்ள தண்ணீரில் ஏதோ மருந்தை ஊத்திட்டுப் போறாங்க...

tiruppur cotton mill roadமாநகராட்சி 3 நாளைக்கு ஒரு தடவை சுமார் 2 மணி நேரம் தண்ணி விடுவார்கள். அதிகபட்சம் வீட்டுக்கு 10 குடம் கிடைக்கும். அதில் தான் ஆய் போனா கழுவுவது முதல் குடிப்பது, துணி துவைப்பது வரை ( A TO Z) பார்த்துக் கொள்ள வேண்டும்.. மாதம் 6௦௦க்கு தண்ணி வாங்க வேண்டும்.

ஒரே ஒரு நாள் அந்த தண்ணியை மூடி வைக்கவில்லை என்றால் அப்புறம் குடத்திலிருந்து தண்ணி வராது, கொசு தான் வரும் அவ்வளவு சுத்தம் ..!!!

முன்பு கம்யூனிஸ்டுகாரங்க மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து மக்களைத் திரட்டி போராடுவாங்க. இப்ப BJP, இந்து முன்னணி சர்ச்சைகளை தீர்க்கவும், ஆன்மீக இந்துக்களை தக்க வைத்துக் கொள்ளவும் போராடுகிறார்கள்.

மின்சார வாரிய நிலை என்னான்னு தெரியல. ஆனா மக்கள் யாரும் கண்டு கொள்வதில்லை என்பதால் அலுவலர்கள் யாரும் வீதிகளில் வருவதில்லை ....

உபரி மின்சாரம் உள்ள மாநிலமா..? காற்றாலை மின்சாரம் தயாரிக்கும் மாவட்டமா இது.. ? ஒன்னும் புரியல. 24*7*365 னு TV செய்தி போடுவது போல பகலிலும் இரவிலும் மின்னிக்கிட்டே இருக்கும் வடிவேல் பட காமெடி போல மின்சாரம் இருக்கும். ஆனா திடீர் திடீர்னு இருக்காது...

ஆனா வீட்டு, கம்பெனி மின்சாரக் கட்டணத்தை கடைசி தேதிக்குள்ள கட்டவில்லையென்றால் மறுநாள் காலையில் லைன் மேன் கதவைத் தட்டுவார்.....பீஸ் கட்டையைப் புடுங்க.

தமிழகத்தில் அதிகப் பெண்கள் படிக்கும் மாநகராட்சி பள்ளிக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் மின்சாரக் கட்டணம் கட்டவில்லையாம்...டாலர் சிட்டி மாநகராட்சியின் நிதிநிலை அப்படி.

மின்சாரக் கம்பங்கள் அனேகமாக விளம்பரப் பேனர்கள், அட்டைகள் கட்டுவதாலே பலமாக நிற்கிறது. அதுவும் இல்லாட்டி ஒடிந்து விழுந்தேவிடும்.

மாநகராட்சி குப்பைத்தொட்டி வைப்பது, குப்பைகளைக் கொட்டுவதும் கூட மின்சாரக் கம்பம், மின்மாற்றிகள் இருக்கும் இடத்திலேயே வைத்திருப்பார்கள். பின்பு தீ வைத்து எரித்துவிட்டு இரண்டு பேரும் (தனியார் குப்பை அள்ளும் நிறுவனம், மின்வாரியம்) புது பில்லில் புது மெட்டீரியல் வாங்குவார்களான்னு தெரியல....எல்லாம் கணக்குப்பிள்ளைக்குத்தான் தெரியும்....

அதே நேரம் குப்பை அள்ளும் தொழிலாளிக்கு கையுறை, கால் செருப்பு கூட கொடுப்பதில்லை...

நிறைய வீடுகளும், கட்டிடங்களும் திருப்பூருக்குள் காலியாகவே கிடக்கிறது... சிலர் ஆடை நிறுவனங்களை டாஸ்மாக் பார்களாக மாற்றி வருகின்றனர்.

அரசால் பயன் பெறுபவர்கள் ஒப்பந்ததாரர்கள் மட்டுமே....தேவையோ இருக்கோ இல்லையோ அரசால் கட்டப்படும் பாலம், நூலகம், அலுவலகக் கட்டிடம், தொழிலாளிகள் தங்கும் விடுதி, வணிகவளாகம் இப்படி எவ்வளவோ பாழ்பட்டுக் கிடக்கிறது.

(குறிப்பாக அவினாசி மெயின் ரோட்டில் புஷ்பா தியேட்டர் அருகில் இருக்கும் அரசுக் கட்டிடம் , டான்சி நிலம், கதர்வாரிய நிலம், போக்குவரத்துத் துறைக் கட்டிடம், பல நூலகக் கட்டிடங்கள், பழைய பஸ் நிலையப் பாலம், ஊத்துக்குளி ரோடு 2வது ரயில்வே கேட் அடுத்த பாலம்)

மாநகராட்சி குப்பை அள்ளும் (வடமாநில மக்களே அதிகம்) தொழிலாளிகளுக்கு தார்ப் பாய் சுற்றிய குடிசைகள் தான் வாழ்விடம். குடிசைமாற்று வாரியத்தால் கட்டப்படும் வீடுகள் யாருக்கோ ...?

இன்று அனைத்து வித வேலைகளுக்கும் வடமாநிலத் தொழிலாளிகள் தான் இருக்கிறார்கள், வேலைக்கும் வருகிறார்கள். நம்மவர்கள் அரசின் சரக்கடித்துவிட்டு வாரத்திற்கு 2-3 நாட்கள் வேலைக்கு வருவதே கஷ்டம் தான்..

அனைத்து அரசு சுவர்களிலும் *தூய்மை இந்தியா* விளம்பரம் உண்டு...தூய்மை தான் இல்லை.

ஒன்னு தாங்க உண்மை... இன்று திருப்பூரில் தற்சார்புத் தொழிலும் இல்லை, லாபகரமான வணிகமும் இல்லை, பழைய தொழிலாளிகளும் இல்லை, பழைய திருப்பூரும் இல்லை...

பனியன் தொழிலும் கவலைக்கிடமாகவே போய்க் கொண்டுள்ளது.

ஆனா டாஸ்மாக் சரக்கு விற்பதில் முதலிடத்தில் இருக்கிறது.

பனியன் நிறுவனங்களின் நிலை...

GSTக்குப் பின் மொத்த வர்த்தகம் 24% குறைந்ததுடன் லாபமும் இல்லாமல் 30% ஏற்றுமதி நிறுவனங்கள் Job Work நிறுவனங்களாக மாறிவிட்டனர்...

tiruppur garmentsஉலக வர்த்தக கலக ஒப்பந்தத்தை நிறைவேற்றும்படியாக ஏற்றுமதிச் சலுகையை 7.7% லிருந்து 2%மாகவும், ஸ்டேட் லெவி 3.5%லிருந்து 1.7%மாகவும் குறைத்துவிட்டது பாசிச பாஜக மோடி அரசு...

ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் நஷ்டமாவதால் நிறுவனங்கள் தொழில் செய்வதை குறைத்துக் கொண்டு வருகின்றனர். அதனால் ஆடை ஏற்றுமதிக்குப் பயன்படும் பருத்தி நூலும், துணியும் சென்ற ஆண்டை விட 300 கோடி அதிகரித்து 5963 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

3% நிலையிலிருந்து பங்களாதேஷ், வியட்நாம் நாடுகள் இன்று 15% ஏற்றுமதி நிலைக்கு உயர்ந்துள்ளனர் இந்தியா 3% நிலையிலேயே உள்ளது. ஆனாலும் மோடி ஆட்சியால் நாடு வளர்ச்சிப் பாதையில் செல்கிறது என்று சிலர் புருடா விட்டுக்கொண்டே உள்ளனர்.

ஆனால் மாநகராட்சி வரி 100% முதல் 250% வரி அதிகமாகியுள்ளது... கட்டிட உரிமையாளர்கள் வாடகை அதிகப்படுத்துவதால் வாடகைக் கட்டிடத்தில் இயங்கும் நிறுவனத்தினர் மாநகராட்சி எல்லையைக் கடந்து சென்றுவிட ஆயத்தமாகிவிட்டனர்....

சிறு நிறுவனங்களின் அவல நிலமை:

எண்ணிக்கை அளவிலும், வேலைவாய்ப்பு அளிப்பதிலும் சிறு நிறுவனங்களே அதிக பங்கு வகிக்கின்றன! பெரு நிறுவனங்களிடம் ஆர்டர் பெறும் இந்நிறுவனங்கள் அதற்கான நூலை தனது சொந்தப் பொறுப்பில் வாங்கி, அதனை நிட்டிங், வாஷிங், சாயமேற்றுவது, பிரிண்டிங், பிளீச்சிங், ஆகியவற்றுக்காக தனிச் சிறப்பாக இயங்கும் சிறு நிறுவனங்களிடம் ஜாப் ஒர்க்காகக் கொடுத்து முடிக்கின்றனர். இதற்கான கட்டணத்தை ஜாப் ஒர்க் நிறுவனங்கள் உடனே பெற்றுக் கொள்வதில்லை. பரஸ்பர புரிதலின் அடிப்படையில் 30 நாள் கடனாக செய்து தருகின்றனர். பின்னர் கட்டிங், தையல், அயர்ன், பேக்கிங் வேலைகளை முடித்துக் கொடுக்கும் சிறு நிறுவனங்கள் இதற்கான கூலியைப் பெரு நிறுவனங்களிடமிருந்து வாங்கிய பிறகுதான் ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு கடனை அடைக்கின்றனர். ஒரு வேலை இப்பணம் கிடைப்பதில் தாமதமானாலோ அல்லது வங்கியில் நடைமுறைச் சிக்கல் ஏற்பட்டாலோ வார வட்டிக்கு கடன் பெற்று இக்கடனை அடைத்தாக வேண்டும்! மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது இவ்வாறுதான் பல நூறு சிறுநிறுவனங்கள் போண்டியாகிப் போனது!

ஏற்கனவே 30% லாபத்தில் ஆர்டர் கொடுத்து வந்த பெருநிறுவனங்கள் தற்போது தொழில் போட்டியின் காரணமாக 20% சதமாக குறைத்து விட்டன. இந்நிலையில் கட்டிட வாடகை, மின்கட்டணம், வார இறுதியில் கொடுக்க வேண்டிய கூலியாள் சம்பளம் என எப்போதும் நெருப்பின் மீது நிற்கும் நிலையில்தான் சிறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன! இவ்வாறு ஏற்கனவே சாவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டு விட்ட இச்சிறு நிறுவனங்களை, சவக்குழிக்குள் தள்ளி இறுதிச்சடங்கு நடத்துவதற்கு மோடி அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம்தான் ஜி.எஸ்.டி.!

tiruppur newsஎன்ன சொல்கிறது ஜி.எஸ்.டி?

ஜி.எஸ்.டி. என்பது சரக்கு மற்றும் சேவை வரி என்று பொதுவாகக் கூறப்பட்டாலும், ஒரு பொருளின் உற்பத்தி நிலையிலிருந்து இறுதியாக நுகர்வோரைச் சென்றடையும் வரையுள்ள வர்த்தகச் சங்கிலியின் ஒவ்வொரு கண்ணியிலும் வரி விதிப்பதுதான் ஜி.எஸ்.டி-யின் வரி விதிப்பு முறை!

ஒரு ஆயத்த ஆடை, பஞ்சு கொள்முதலில் தொடங்கி இறுதியாக பேக்கிங் செய்யப்படுவது வரை சுமார் 10 நிலைகளைக் கடந்து உருவாகிறது. இதன்படி ஒவ்வொரு நிலையிலும் 5, 12, 18, 24 சதவீத வரி விதிக்கிறது ஜி.எஸ்.டி! இதற்கு முன் ‘வாட்’ வரியின்போது விலக்களிக்கப்பட்ட நிட்டிங், வாஷிங், காம்பேக்டிங், துணி ஆகியவற்றுக்கும் கூட ஜி.எஸ்.டி.யில் 5% வரி விதிக்கப்பட்டுள்ளது! தையல்நூல், அட்டைப் பெட்டி, கம்டேப், பட்டன், லேபில், ஹேங்கர் ஆகியவற்றுக்கு ‘வாட்’ வரியைவிட 3 மடங்கு அதிகமாக ஜி.எஸ்.டி.யில் வரி உயர்த்தப்பட்டுள்ளது!

இந்தக் கூடுதல் வரிவிதிப்பினால் கச்சாப் பொருள்களின் விலை உயர்வு, அதற்கான கூடுதல் முதலீடு செய்ய வேண்டிய நெருக்கடி என்பதைத் தாண்டி, இதன் வரி விதிப்பு நடைமுறைகளும் சிறு நிறுவனங்களை கடும் நெருக்கடிக்குத் தள்ளுவதாக உள்ளது.

ஜி.எஸ்.டி.யின் நடைமுறையும், சிறு நிறுவனங்களின் அழிவும்:

மாதத்தின் முதல் 15 நாட்களுக்குள் கொள்முதல் விவரங்களையும், அடுத்த நாட்களில் 10 விற்பனை விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்! 30-ம் தேதிக்குள் இவற்றுக்கான வரிகளையும் முன்கூட்டியே செலுத்திவிட வேண்டும்! இதில் கூடுதலாக செலுத்தப்பட்ட வரித்தொகை ஏழு நாட்களுக்குள் உங்கள் வங்கிக் கணக்கில் (input tax recovery) வரவு வைக்கப்படும் என்கிறது ஜி.எஸ்.டி. கவுன்சில்! இதனால் உள்ளீட்டு வரி வரவு வைக்கப்படும் வரை கொள்முதல் மற்றும் விற்பனை ரசீதுகளை பாதுகாப்பதுடன், தன்னிடம் வர்த்தகம் செய்பவர் வரி செலுத்திவிட்டாரா என்பதையும் கண்காணிக்க வேண்டியதுள்ளது. மேலும் இதற்காகவே கூடுதல் பணியாளர்களை நியமிப்பது, ஆடிட்டருக்கு மாதக் கட்டணமும் செலுத்துவது ஆகிய செலவுகளும் சிறு நிறுவனங்களின் தலையில் கூடுதல் சுமையாக ஏற்ரிவிடப்படுகிறது!

ஆண்டுக்கு 20 லட்சம் வரை வர்த்தகம் செய்பவர்கள் ஜி.எஸ்.டி.யில் பதிவு செய்ய வேண்டியதில்லை என்கிறது ஜி.எஸ்.டி. கவுன்சில்! ஆனால் ஜி.எஸ்.டி. பதிவு எண் இல்லாதவர்களிடம் வர்த்தகம் செய்தால் உள்ளீட்டு வரியைத் திரும்ப பெற முடியாது என்பதால் இத்தகைய சிறு நிறுவனங்களை பெருநிறுவனங்கள் புறக்கணித்து விடுகின்றன. எனவே வேறு வழியின்றி எல்லா சிறு நிறுவனங்களும் ஜி.எஸ்.டி.யில் பதிவு செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இல்லாவிட்டால் தொழிலில் நீடிக்க முடியாது!!

tiruppur news 1மேலும், உள்ளீட்டு வரியை 7 நாட்களுக்குள் வரவு வைத்து விடுவோம் என்ற தனது வாக்குறுதியை அரசே காற்றில் பறக்க விட்டுவிட்டது. ஜி.எஸ்.டி. அறிமுகமாகி ஆறு மாதங்கள் ஓடிவிட்ட நிலையில் முதல் மாதம் செலுத்திய உள்ளீட்டு வரியே இதுநாள் வரை வரவு வைக்கப்படவில்லை! எப்போது வரும் என்ற உத்தரவாதமும் இல்லை. இதனால் பொருளை விற்பவர்கள் முன்கூட்டியே உள்ளீட்டு வரியையும் பிடித்துக் கொள்வது வாடிக்கையாகி விட்டது! இவ்வாறு அடுக்கடுக்கான சிக்கல்களை உருவாக்குவதன் மூலம் “நீ பிழைத்திருக்க வேண்டுமானால் எனக்கு வரி கட்டு. இல்லாவிட்டால் ஒழிந்து போ” என்று சிறு நிறுவனங்களை மிரட்டுகிறது மத்திய அரசின் ஜி.எஸ்.டி!

ஜி.எஸ்.டி.யின் விளைவுகள்:

மேற்கண்ட பல்வேறு நெருக்கடிகளால் திருப்பூர் ஆயத்த ஆடை தொழிலே கடும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி-க்கு முன்பு ஆர்டர் கொடுத்த பெருநிறுவனங்களும், ஏஜெண்டுகளும் புதிய வரிச்சுமையை ஏற்க மறுத்து பழைய விலையிலேயே உற்பத்தி செய்து தருமாறு கோருகின்றன! முடியாத நிலையில் ஆர்டரை ரத்து செய்து விடுகின்றன! மறுபுறமோ புதிய ஆர்டர்களில் வழக்கமான அளவுக்கும் குறைவான லாபமே கிடைப்பதால் நடைமுறைச் செலவுகளுக்கே ஈடுகொடுக்க முடியாமல் தொழிலையே கைவிட்டு ஓடும் நிலைக்கு சிறு நிறுவனங்கள் ஆளாகியுள்ளன! இதற்கு முன்பு தொழில் போட்டியின் காரணமாக லாபம் குறைவாகக் கிடைத்தாலும், மத்திய அரசு தரும் ஏற்றுமதிக்கான ஊக்குவிப்புத் தொகையால் (duty draw back) ஓரளவு இழப்பை ஈடுகட்ட முடிந்தது. முன்பு 7% ஆக இருந்த இத்தொகையையும் ஜி.எஸ்.டி-க்குப் பின் 3% ஆக குறைத்து விட்டது மோடி அரசு! அனைத்துத் தொழில் பிரிவுகளையும் சொந்தமாகக் கொண்டுள்ள RUPA , POOMEX, PUMA, RELIANCE, BIRLA, LUX என விரல்விட்டு எண்ணக் கூடிய சில நிறுவனங்கள்தான் ஜி.எஸ்.டி.யின் பலனை அனுபவிக்கின்றனர். இன்று உள்நாட்டு வர்த்தகத்தில் ஏகபோகமாக விளங்குவதும் இவர்கள்தான்!

மாதத்தில் பாதிநாள் வேலை இல்லை. வேலை இருந்தாலும் உரிய சம்பளம் கொடுக்க முடிவதில்லை. இதனால் திருப்பூரில் 60% சிறுதொழில் நிறுவனங்கள் முடங்கி விட்டது.

ஜி.எஸ்.டி.க்குப் பின் அக்டோபரில் மட்டும் 1400 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி சரிந்துவிட்டது! திருப்பூரின் வர்த்தக நிறுவனங்களுக்காகவே காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை இயங்கிவந்த வங்கிகள் எல்லாம் காலை 10 முதல் மாலை 4 மணி வரை என்ற வழக்கமான முறைக்குத் திரும்பி விட்டன! நிலவும் தொழில் முடக்கத்தால் ஏற்பட்டுள்ள வரியிழப்பை ஈடுகட்டுவதற்காக, திருப்பூர் நகராட்சி தனது எல்லைக்கு உட்பட்ட சொத்துக்களின் மதிப்பை பன்மடங்கு உயர்த்திவிட்டது. இதன் மூலம் வரிவருவாயை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது திருப்பூர் நகராட்சி! இவ்வாறு ‘டாலர் சிட்டி’யான திருப்பூர் இன்று ‘டல்’ சிட்டியாகி விட்டது! ஆனால் மோடி கும்பலோ, “ஜி.எஸ்.டி.யால் விலைவாசி குறையும்” ‘ஏற்றுமதி பெருகும்” என்று மக்களை மோசடி செய்து வருகிறது!

கார்ப்பரேட் சேவைக்கே ஜி.எஸ்.டி!

1984-க்கு முன்பு வெறும் 4 கோடியாக இருந்த திருப்பூரின் ஏற்றுமதி இன்று 25,000 கோடியாக உயர்ந்து நிற்பதற்கு ஆணிவேராக செயல்பட்ட தொழிலாளர்களும், அவர்களுக்கு வேலைவாய்ப்பளித்த சிறு நிறுவனங்களும் இன்று நெருக்கடியில் சிக்கி மூச்சுத் திணறிக் கொண்டிருப்பது திடீரென ஜி.எஸ்.டி.யால் மட்டும் உருவானதல்ல! மத்திய ஆட்சியாளர்களின் தொடர் நடவடிக்கைகளால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை!

1984 வரை எளிய வரிவிதிப்பு, நேரடி பணப் பரிமாற்றம் என ஆயத்த ஆடை உற்பத்தி சுமூகமாகவே இருந்து வந்தது. 1984 வரை 10 கோடிக்குத்தான் ஏற்றுமதி நடந்து வந்தது.

உலக வர்த்தகக் கழக ஒப்பந்தத்திற்குப் பின் ஏற்றுமதிக்கான உற்பத்திக்கு முக்கியத்துவம் என்று திசை மாற்றி இழுத்துச் சென்றது மத்திய அரசு! ஆலைகளை நவீனப்படுத்துவதற்கு கடனுதவி, இறக்குமதி செய்யப்படும் கருவிகளுக்கு வரிச்சலுகை கொடுத்து ஊக்கப்படுத்தியது மத்திய அரசு! இதனால் 1990 முதல் 2007க்குள் 11,000 கோடியாக வளர்ந்து விட்டது!

இவ்வாறு உள்நாட்டு சந்தைக்கான உற்பத்தியில் இருந்தவர்களை, கார்ப்பரேட் திமிங்கலங்களின் பிடியிலுள்ள உலகச் சந்தையோடு திருப்பூர் ஆயத்த ஆடைத்தொழிலை கோர்த்துவிட்டது மத்திய அரசு.

இதன் பிறகு 2005-ஏப்ரலில் கொண்டு வரப்பட்ட ‘வாட்’ வரிவிதிப்பு மூலம் அதுவரை இருந்த நேரடிப் பணபரிமாற்றத்தை வங்கிப் பரிமாற்றத்திற்குள் கொண்டு வந்தார்கள்! அடுத்து மோடியின் ‘பணமதிப்பிழப்பு’ நடவடிக்கையோ வங்கிப் பரிமாற்றத்திற்கு மாறுவதைக் கட்டாயமாக்கி விட்டது! இதன் தொடர்ச்சியாகவே ஜி.எஸ்.டி. கொண்டு வரப்பட்டிருக்கிறது. இவ்வாறு படிப்படியாக திட்டமிட்டு, சுற்றி வளைத்து, தான் விரித்த வலைக்குள் இரையை வீழ்த்தும் திறமையான வேட்டைக்காரனைப் போல மத்திய அரசு செயல்பட்டு வருகிறது!

வலையில் விழுந்த இரையை கார்ப்பரேட்டுகளுக்கு விருந்தாக்குவதுதான் மோடி அரசின் நோக்கம்! வேலையிழந்த தொழிலாளர்களும், சிறு நிறுவனங்களும் பெரும் நிறுவனங்களின் அற்பக் கூலிக்கு வேலை செய்யும் கொத்தடிமைகளாக மாறி விடுங்கள் என்கிறார் மோடி! ஏன் மாற வேண்டும்?

ஆயத்த ஆடை தொழிலில் நமக்குப் போட்டியாக உள்ள பங்களாதேஷ் நம்மை விடக் குறைந்த விலையில் உற்பத்தி செய்து வருகிறார்கள். நாம் பங்களாதேஷை விட மிகக் குறைந்த செலவில் உற்பத்தி செய்தால்தான் சர்வதேச ஆயத்த ஆடை வர்த்தகத்தில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு லாபம் அதிகரிக்கும்! அப்போதுதான் அவர்கள் இந்தியாவுக்கு ஆர்டர் கொடுப்பார்கள்! நம் நாட்டின் அந்நிய செலாவணி அதிகரிக்கும்! நாடு வல்லரசாக முடியும்! எனவே கொத்தடிமைகளாக மாறி நாட்டுக்காக தியாகம் செய்யுங்கள்! என்கிறார் மோடி!

ஆயத்த ஆடைத் தொழில் மட்டுமல்ல, நாட்டின் அனைத்து தொழில்களையும், இயற்கை வளங்களையும் கார்ப்பரேட் நலனுக்காக தாரை வார்ப்பதையே மோடி அரசு தீவிரக் கொள்கையாகக் கொண்டுள்ளது. இதற்கேற்ப ஏற்கனவே உள்ள சட்ட விதிமுறைகளை, வரி விதிப்பு முறைகளை ஒழித்துக் கட்டிவிட்டு கார்ப்பரேட் நலனுக்கு சாதகமான வகையில் மறுகட்டமைப்பு செய்து வருகிறது மோடி அரசு! அதன் ஒரு கண்ணிதான் ஜி.எஸ்.டி. என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்! ஒருவேளை மே 23க்கு பிறகு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும் இது தொடரும். ஆகையால் ஜி.எஸ்.டி எதிர்ப்பு என ஒற்றைக் கோரிக்கையோடு நின்றுவிடாமல், ஒட்டுமொத்த மக்கள் நலனுக்கு எதிராக மாறிவரும் அரசுக் கட்டமைப்புக்கு எதிரான போராட்டமாக வளர்த்தெடுக்க வேண்டும்.....

அதில் கட்சிகளைத் தாண்டி தொழிலாளிகள், சிறு, நடுத்தர முதலாளிகள் ஓரணியில் ஒன்று சேர வேண்டும்.

- MN & தருமர், திருப்பூர்