தமிழகத்தில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் தமிழக அரசியல் களத்தை மக்களுக்கு இன்னும் தெளிவாகப் படம்பிடித்து காட்டுகின்றன. மாநில உரிமைகள் அனைத்தும் பறிபோய்விட்ட நிலையில் இங்கு ‘மாநில அரசு’ என்ற ஒன்று தேவையா! என்று மக்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர். மக்களை வெகுவாக பாதிக்கும் முக்கிய பிரச்சினைகளான கொசுத்தொல்லை, டெங்கு, அத்தியாவசியப் பொருட்கள் விலையேற்றம், மின்வெட்டு, குடிநீர் தட்டுப்பாடு, விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாநிலை, தரமான கல்வி கிடைக்காத நிலை, குடிகளைக் கெடுக்கும் மது போன்றவைகளில் எவ்வித உறுதியான நடவடிக்கையும் இன்றி மக்கள் விரோத நிலைப்பாட்டையே மாநில அரசு எடுத்து வருகிறது. பிரச்சினைகளைக் களைவதற்கு மாவட்ட ஆட்சியர்களை முடுக்கி விடுவதற்குப் பதிலாக, அவர்களை சாராய வியாபாரிகளாகவே மாற்றி வருகிறது. பல மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகமும் சாராயம் விற்பதையே முதன்மைப் பணியாகக் கொண்டு செயல்படுகிறது. மேற்சொன்ன அடிப்படைத் தேவைகளுக்காகவும், உரிமைகளுக்காகவும் சனநாயகரீதியாக போராடும் மக்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதற்கு ஏற்றவாறு காவல் துறையை பயன்படுத்தி வருகிறது மாநில அரசு.

தேசிய அளவில் விவசாயம், தண்ணீர், மின்சாரம், அத்தியாவசிப் பொருட்கள் விலை போன்றவைதான் எளிய மக்களின் வாழ்வையே நிர்ணயிக்கின்ற சக்திகளாக இருக்கின்றன. நாட்டின் பொதுவான வளங்களான தண்ணீரும், மின்சாரமும் தேவைக்கேற்றவாறு பகிர்ந்து கொடுக்கப்பட்டால்தான் மாநிலங்களுக்கிடையிலான சமநீதி நிலைநாட்டப்படும். தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மற்ற எல்லா மாநிலங்களுக்கும் பகிர்ந்து கொடுக்கப்படுவதால், அண்டை மாநிலங்கள் மின்வெட்டு என்ற சிக்கலில்லாமல் இருக்கின்றன. ஆனால், உற்பத்தி செய்யப்படும் மாநிலத்திற்கு மின்சாரம் இல்லை. இதை வேடிக்கை பார்க்கவும், கடிதம் எழுதவும் ஒரு அரசும், எதிர்க்கட்சியும், மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள உதவாக்கரை கட்சிகளும் தேவையா என்பது மக்களின் அங்கலாய்ப்பாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் என்றுமில்லாத அளவிற்கு மின்வெட்டு ஏற்படுவதால், தொழில் முடக்கம், பசி, பட்டினி மற்றும் கடன் பிரச்னை, விவசாயம் கடுமையான பாதிப்பு, கல்வி பயிலும் மாணவ மாணவியர் கடும் இன்னலுக்குள்ளாகுதல், நிம்மதியாக உறங்காமல் மனநலம் பாதிப்பு, கொசுத் தொல்லை, கொலை கொள்ளை சம்பவங்கள், கலாச்சார சீர்கேடு, எதையும் திட்டமிட்டு செயல்படுத்த முடியாத அவலம் போன்ற சொல்லொண்ணாத் துன்பங்களுக்கு தமிழக மக்கள் உள்ளாகும் கொடுமை. அதேபோல, தண்ணீர் தரமுடியாது என்று திட்டவட்டமாக அண்டை மாநிலங்கள் மறுப்பதால் சிறுவிவசாயிகள் வாழ்வே கேள்விக்குறியாகி தற்கொலை செய்துகொள்வது ஆரம்பமாகியுள்ளது. என்றுமில்லாத அளவிற்குப் பெருகிவரும் கொசுத்தொல்லையால் மக்கள் நிம்மதி இழந்துள்ளனர்.

இந்தச் சூழலோடு, கூடங்குளம் அணுஉலைக்கெதிரான போராட்டங்களும் அவற்றைத் தொடர்ந்து நடைபெற்று வரும் நிகழ்வுகளும் தமிழகத்தில் தீய சக்திகளையும், நல்ல சக்திகளையும் அடையாளம் காண்பதற்கு மிகச் சரியான வாய்ப்பினை தமிழக மக்களுக்கு உருவாக்கித் தந்துள்ளது. தமிழக அரசியல் களம் மிகத் தெளிவாக அமைந்துள்ளது. இங்கே இரு வேறு சக்திகளும் இரு அணிகளாக உருவாகி வருகின்றன.

இருசக்திகளுக்கும் இடையிலான போராட்டம் கடந்த சில ஆண்டுகளாகவே நடைபெற்று வந்தாலும், கடந்த ஓராண்டாக அது வலுவடைந்துள்ளது. மனிதத்தையும், மனித உயிர்களையும், மனித மாண்பையும் நேசிப்பவர்கள் ஓரணியிலும், மனிதர்களைக் காவு வாங்கத் துடிக்கும் இரத்தவெறி பிடித்த கும்பல் மற்றொரு அணியிலும் அணிவகுத்து நிற்கின்றன.

ஒருபுறம் மாநில அரசும், மத்திய அரசும், மத்திய அரசிலே பங்கு கொண்டிருக்கும் கட்சியினரும், அதிகார வர்க்கமும், வல்லரசு கனவிலே மிதக்கும் கருங்காலிகளும், மின்சாரத்தைக் கொண்டு கொள்ளை இலாபம் அடிக்கத் துடிக்கும் உள்நாட்டு, பன்னாட்டு முதலாளிகளும், உயிர்க் கொலைக்கருவியை உருவாக்கிப் புகழ்பெற விரும்பும் அப்துல் கலாம்களும், தான்தோன்றித்தனமாக பணத்திற்காக எதையும் செய்யத் துடிக்கும் கமிசன் ஏஜெண்டுகளும் அணிவகுத்து நிற்கின்றனர். அவர்களோடு, இங்குள்ள நாட்டின் பாசிச போக்கினை வளர்த்தெடுக்க மதவெறியைத் தூண்டி அரசியல் ஆதாயமடைய முனையும் ஆர்.எஸ்.எஸ்., பா.ச.க., இந்து முன்னணி, விஷ்வ இந்து பரிஷத், இந்து மகா சபை, இந்து மக்கள் கட்சி என சங்க பரிவாரங்களும், தி.மு.க., அ.தி.மு.க., அவைகளுக்கு பள்ளக்கு தூக்கும் கம்யூனிஸ்டுகள், காங்கிரசு அடிமைகள், பாசிச செயா பரிவாரங்கள், செயாவின் பின்னால் அணிவகுத்து நிற்கும் பார்ப்பனீய கருத்தாக்கத்தில் சிக்கிக் கொண்ட காவல்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை போன்றவைகளும் அவர்களுக்கு ஏவல் புரியம் துணை இராணுவப் படைகள் என அனைத்து தீய சக்திகளும் ஒரு அணியில் அணிவகுத்து நிற்கின்றனர்.

மறுபுறம், தங்கள் உயிரையும் வாழ்வையும் ஒரு பொருட்டாக கருதாமல், தமிழக ஒட்டுமொத்த மக்களின் இன்னுயிரைக் காக்கவும், பேரழிவுக் கொலைக்கருவியின் அபாயத்தை நன்கு புரிந்து கொண்டு தமிழகத்தின் வருங்கால சந்ததியினரின் எதிர்காலத்தை காக்கவும், இங்குள்ள கடல் உயிரிகள், கடல்வளம், மண்வளம், நீர்வளம் என தமிழக மக்களின் வாழ்வாதாரங்களைப் பேரழிவிலிருந்து காக்க வேண்டி, உண்ணாமல் உறங்காமல் பட்டினிப் போராட்டம் நடத்தி காவல்துறை, துணை இராணுவப் படைகள், பாசிச அரசுகள், மனித இயல்பு துளியும் இல்லாத கருங்காலிக் கும்பல்களின் எதிர்ப்புக்களையும், சிறை சித்திரவதைகளையும் எதிர்கொண்டு, ஏற்றுக்கொண்டு கடற்கரையோரத்தில் வாழ்ந்து வரும் அப்பாவி குழந்தைகள், பெண்கள், மீனவர்கள், இளைஞர்கள் என்று தன்னெழுச்சியுடன் போராடிவரும் சாதாரண மக்களும், அவர்களுடன் அணியமாகி வரும் ஆயிரக்கணக்கான மனித உரிமைப் போராளிகள், சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள், அணுஉலையின் தீமைகளை நன்கு கற்றறிந்ததால், அது மனித குலத்திற்கு ஒவ்வாதது என்று பிரச்சாரம் செய்யும் பண்பாளர்கள் என நல்ல சக்திகள் யாவும் அவர்களோடு அணிவகுத்து நிற்கின்றார்கள். இவர்களோடு. ம.தி.மு.க., போன்ற ஒரு சில அரசியல் கட்சிகளும், திராவிடர் இயக்கங்கள், தமிழ்த் தேசிய அமைப்புகள், சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மனித உரிமைகள் குறித்த செயல்பாடுகளில் தொழிலாளர் அமைப்புக்கள், விவசாயிகளின் சங்கங்கள், சமூக நீதி காக்கும் முன்னாள், இந்நாள் நீதிபதிகள் என மற்றொரு சாரார் வேறு அணியிலும் அணியமாகி களம் அமைத்து செயல்பட்டு வருகின்றனர்.

முந்தைய அணிக்கு அரசு எந்திரம் முழுவதும் துணை நிற்கிறது. இராணுவம், கடற்படை, விமானப்படை, காவல்துறை, மத்திய ரிசர்வ் போலீஸ்படை, துணை இராணுவம் என வலுவான ஆயுதம் தாங்கிய பெருங்கூட்டம், அவர்கள் தாளத்திற்கு ஏற்ப அசைந்து கொடுக்கும் நீதித்துறை என்று அந்த அணி மிகப்பலம் பொருந்தியதாக உள்ளது. மேலும், வதந்திகளையும், பொய்ப்பிரச்சாரங்களையும், திட்டமிட்டு பரப்புவதற்காக ஏராளமான அரசு, மற்றும் தனியார் ஊடகங்கள் 24 மணி நேரமும் பொய்யைப் பரப்பி உண்மையான ஆற்றல் கொண்ட மக்கள் போராட்டத்தை அழித்தொழிக்க கங்கணங்கட்டிக் கொண்டு வேலை செய்கின்றன.

2-வது அணியிடம் இருப்பதெல்லாம் யாராலும், எந்த சக்தியாலும் தகர்க்க முடியாத மனித நேயமும், மனித மாண்பைக் காக்கும் ஆற்றலும், மன வலிமையும், தன்னைக் கடந்து சிந்தித்து செயல்படும் மனிதர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியும், சில தன்னலமில்லாத தலைவர்களின் வழிநடத்துதலும் தான். உலகிலே இதுவரை எங்கும் கேள்விப்படாத வகையில் 430 நாட்களுக்கும் மேலாக, இந்தப் போராட்டக் களம் தொடர்ந்து சிறிதும் சுணக்கமின்றி பேராற்றலுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதைக்கண்டு உலகின் மனித உரிமை மற்றும் சமூகநீதிக்கான அமைப்புக்கள் வியந்து நிற்கின்றன. தம் ஆதரவுக் கரங்களை மெல்ல நீட்ட ஆரம்பித்துள்ளன.

“‘தேசத் துரோகக் குற்றம்’ என்பது பழைய ஆங்கிலேய அரசின் அடக்குமுறை சட்டம். அதை இந்நாட்டு குடிமக்கள் மீது ஏவி வதைப்பதை கண்டனம் செய்கிறேன்” என்று மும்பை உயர்நீதிமன்றம் ‘அசீம் திரிவேதி’ என்ற நாக்பூர் நகர கார்ட்டூனிஸ்ட்டு அடக்குமுறைக்குள்ளான வழக்கில் நீதி வழங்கிக் கொண்டிருக்கும் போதே, இடிந்தகரைப் பகுதி சனநாயகரீதியாக போராடிக்கொண்டிருக்கும் மீனவர்கள், பெண்கள், என 10 ஆண்கள் மீதும், 3 பெண்கள் மீதும் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள், இளைஞர்கள் உட்பட போராடும் மக்கள் மீது இதுவரை 320 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. 269 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். 5 பேர் மீது குண்டர்தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. போராளி அந்தோணி ஜான் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு முதல்பலி ஆனார். சகாயம் விமானப்படையின் விமான அச்சுறுத்தலுக்கு பலியாக்கப்பட்டார். துப்பாக்கித் தோட்டாவும் முப்படை ஆயுதங்களும் தன்னலமற்ற போராளிகளை என்ன செய்துவிட முடியும்?

உண்மையைப் புரிந்து கொண்டு நீதிக்கான போரிலே, வரிசையாக கடலோர கிராம மக்கள் கிராமம் கிராமமாக அணியமாகி வருகின்றனர். இந்தியாவின் 120 மேன்மக்கள் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு தங்கள் பேராதரவை தெரிவித்து கையொப்பமிட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்ட மனித உரிமை பெண்போரளிகள், பெண் இயக்கவாதிகள் தனியொரு மனுவினை முதல்வருக்கு அனுப்பி வைத்துள்ளனர். போராட்டக் களத்தை அகில உலகும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

தமிழகத்தின் அவலம் என்னவென்றால், இடையிலே இந்த 2 அணிகளின் போராட்டத்தையும் வெறுமனே நின்று வேடிக்கைப் பார்க்கும் கூட்டம்தான் பெருங்கூட்டமாக இருக்கின்றது. ‘இன்றைய தலைமுறையினர் புரியும் மிகப்பெரும் அநீதி தம் கண்முன்னே, நடைபெறும் சமூகக் கொடுமைகளை வெறுமனே நின்று வேடிக்கை பார்ப்பதுதான் - அது மிகப்பெரும் பாவச் செயலுமாகும்’ என்று அமெரிக்க கறுப்பின விடுதலைப் போராளி மார்ட்டின் லூதர் கிங் அனுபவரீதியாக கருத்துரைத்துள்ளார்.

இடிந்தகரை மக்களின் இப்போராட்டம் ஒட்டுமொத்த தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கான போராட்டம் என்பதோடு தமிழக மக்களின் தன்மானம் காக்கும் போராட்டம் என்பதையும் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் புரிந்து கொண்டு வருகின்றனர்.

கூடங்குளம் அணுஉலைக் கழிவுகளை கோலார் தங்கவயலில் கொட்டப்போவதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கருத்து தெரிவித்த சில மணி நேரங்களிலேயே ஒட்டுமொத்த கர்நாடக மாநிலமும் விழித்துக் கொண்டது. அதை கோலார் தங்க வயலைச் சார்ந்த மக்களின் போராட்டமாகப் பார்த்து ஒதுங்கிக் கொள்ளாமல், அனைத்து மக்களும் சாதி, மத, இன, கட்சி பேதமின்றி ஒன்றிணைந்து கொடுத்த குரலில் மத்திய அரசு வெல‌வெல‌த்துப் போனது. மறுநாளே அப்படியொரு திட்டம் இல்லையென்று தன்னிலை விளக்கம் அளித்தது மத்திய அரசு.

ஆனால், தமிழகத்திலோ தலைகீழ்நிலை. எதைப் பற்றியும் அலட்டிக்கொள்ளாத அரசியல் கட்சிகளும் அரசும். கர்நாடகத்தில் நடந்த மக்கள் எழுச்சி அணுஉலையின் பேராபத்தை தமிழகத்தில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கும் மக்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். கர்நாடக மக்களின் அரசியல் விழிப்புணர்வைப் பார்த்து தமிழக மக்கள் பாடம் கற்றுக் கொள்வார்களா? அணுஉலைக்கெதிரான போராட்டம் நம்மை மட்டுமல்ல நமது தலைமுறையையும் காப்பதற்கான போராட்டம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. வெறும் வேடிக்கை பார்க்கும் கூட்டமாக நீண்ட காலம் இருக்கமுடியாது. மேற்சொன்ன அணிகளிலே நாம் எந்த அணியில் நம்மை இணைத்துக் கொள்ளப் போகிறோம் என்பதில்தான் தமிழகத்தின் எதிர்காலம் அமையும் என்பது திண்ணம்

Pin It