மறப் போர் முற்றுகைகளை வரலாற்றில் பல முறை சந்தித்துள்ள தில்லி இப்போது ஓர் அறப் போர் முற்றுகையைச் சந்தித்து வருகிறது. இந்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து இரு திங்களுக்கு மேல் பற்பல வடிவிலும் போராடி வந்த பாஞ்சாலத்து (பஞ்சாப் மாநில) உழவர் பெருமக்கள் இந்தியத் தலைநகர் தில்லி நோக்கிப் புறப்பட்டார்கள். அரியானா, இராஜஸ்தான், மேற்கு உத்தரப்பிரதேச உழவர்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள்.
இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் இயற்றிய இந்திய அரசு உழவர்களோடு பேசுவதற்கு மாறாக தில்லியின் எல்லைகளில் பெருங்குழிகள் வெட்டிப் படைகளையும் அடக்குமுறைக் கருவிகளையும் குவித்து உழவர்கள் இந்தியப் பேரரசின் தலைநகருக்குள் நுழைய விடாமல் தடுப்பதில்தான் குறியாக இருந்தது.
உழவர்கள் மீது குளிர்நீர்ப் பீரங்கிகளும் கண்ணீர்ப் புகையும் தடியடியும் ஏவப்பட்டன. ஆனால் உழவர்கள் அற வலிமை கொண்டும் ஆத்திரமூட்டலுக்கு இரையாகாத உறுதி கொண்டும் ஆட்சியாளர்களின் சூழ்ச்சியை முறியடித்தனர். வழிமறித்தவர்களே இப்போது வழிமறிக்கப்பட்டவர்களாகித் தவிக்கிறார்கள்.
தில்லி இப்போது உழவர்களின் முற்றுகைப் பிடியில் சிக்கிக் கொண்டு விட்டது. இயற்கையமைவில் நிலம்சூழ்ந்த தில்லி நகரம் இப்போது மக்கள்கடல் சூழ்ந்த நகரமாகி விட்டது. இப்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா உழவர்களை தில்லிக்குள் வரச் சொல்கிறார். போராட்டம் நடத்துவதற்குத் திடல் ஒதுக்கிக் கொடுக்கிறார்.
அது திடல் இல்லை, திறந்தவெளிச் சிறை என்பது உழவர்களுக்குப் புரிந்து விட்டது. அவர்கள் உறுதியாக மறுத்து விட்டார்கள். பேச்சுவார்த்தைகளில் உழவர்களுக்குப் பாடம் நடத்த முயன்ற அதிகாரிகளுக்கு உழவர் தலைவர்கள் பாடம் நடத்தியுள்ளார்கள்.
உழவர்களை இந்திய அரசு நெடுங்காலமாகவே வஞ்சித்து வருகிறது கடந்த எழுபதாண்டு காலத்தில் அரசு அவர்களுக்குத் தந்த எந்த வாக்குறுதியையும் காப்பற்றவில்லை. குறிப்பாக இப்போதைய நரேந்திர மோதி அரசு வாயாலேயே வடைசுடுவதை அவர்கள் நன்கு உணர்ந்து கொண்டு விட்டார்கள்.
புதிய வேளாண் சட்டங்களின் செயல்பாட்டால் சிறும அடிவிலை (MSP) என்ற ஒன்றே இல்லாமற்போய் விடும் என்று உழவர்கள் எடுத்துக் காட்டுகின்றார்கள். அரசுக் கொள்முதல், விளைபொருளுக்குக் கட்டுப்படியான விலை, நியாய விலைக் கடைகள். உணவுப் பாதுகாப்பு… எல்லாமே பழங்கதையாகிப் போகும் என்று உழவர்கள் அச்சப்படுகின்றார்கள்.
இந்த அரசு பெருந்தொற்றுக் காலத்தைப் பயன்படுத்திக் கருத்துக் கேட்போ உரையாடலோ இல்லாமல் இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் அவசரச் சட்டங்களாகப் பிறப்பித்தது. நாடாளுமன்றத்திலும் பொருள்பொதிந்த விவாதம் ஏதுமின்றி முரட்டுத்தனாமாக இவை சட்டமாக்கப்பட்டன.
குடியுரிமைப் பறிப்புச் சட்டங்களும், கொடுங்கோன்மைச் சட்டங்களும், சூழல்நலனுக்கு எதிரான சட்டங்களும் இதே முரட்டடி வழியில்தான் கொண்டு வரப்பட்டன. தேசியக் கல்விக் கொள்கை என்ற கல்விமறுப்புக் கொள்கையும் இதே வழியில்தான் வந்தது என்ன செய்தாலும் எதிர்த்துப் போராட மக்களால் முடியாது எனபதுதான் மோதி அரசின் கணக்கு.
ஆனால் வயிற்றுக்குச் சோறிடும் உழவனை வஞ்சிக்க வேளாண் சட்டங்கள் என்ற பெயரில் உழவுத் தொழிலைப் பெருங்குழுமங்களிடம் தாரை வார்க்க அரசு முனைந்த போது இவ்வளவு பெரும் எதிர்ப்பு வரும் என்று ஆளும் கும்பல் எதிர்பார்த்ததில்லை.
பாஞ்சாலத்து உழவர்கள் கிளர்ந்தெழுந்தார்கள். அரியானா உழவர்கள் அந்த அணிவகுப்பில் சேர்ந்து கொண்டார்கள். இராஜஸ்தான், மேற்கு உத்தரப் பிரதேசம் ஆகிய பகுதி உழவர்களும் களங்கண்டார்கள். தமிழ்நாடு உட்பட இந்தியாவின் மற்றப் பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்தன. இவை யாவற்றுக்கும் கொடுமுடியாகத்தான் தில்லி முற்றுகை நடந்து வருகிறது
தில்லிதான் தன் மோசடிச் சட்டங்களால் உழவர் வாழ்வை முதலில் முற்றுகையிட்டது. உழவர்கள் எதிர் முற்றுகையே இட்டுள்ளார்கள். எனவேதான் தில்லி மீதான உழவர் முற்றுகைக்கு ஆதரவாக இந்தியாவெங்கும் பலதரப்பட மக்களும் போராடி வருகின்றார்கள்.
’மன்கிபாத்’தில் ”பாமர” உழவர்களுக்கு மோதி சொல்லும் அறிவுரைகளைக் கேட்டு உழவர் வீட்டு ஏர்கலப்பையும் சிரிக்கிறது. பேச்சுவார்த்தைக்கு அழைத்து மா வல்லுநர்கள் தரும் படவிளக்கங்கள் உழவர்களின் நியாயமான அச்சங்களை வலுவாக்கவே செய்கின்றன. இந்தச் சட்டங்களை விட்டால், அங்காடி ஆற்றல்களிடம் சிக்கித் தங்கள் உழவும் வாழ்வும் அழிந்து விடும் என்பதை அவர்கள் ஆழமாக உணர்ந்துள்ளார்கள்.
போராட்டத்துக்குக் காரணமான வேளாண் சட்டங்கள் பற்றி 2020 செப்டெம்பர் இதழ் - தேசத்தின் குரலில் ”வேலியுடைக்கும் வேளாண் சட்டங்கள்” என்ற தலைப்பில் நாம் எழுதியிருந்ததை நினைவுபடுத்த விரும்புகிறோம். இந்தச் சட்டங்கள் மீது நாம் எழுதியது, மற்றவர்கள் எழுதியது, வேளாண் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் அவற்றுக்கு முழுமையாகவோ பகுதியாகவோ ஆதரவளித்து வேறு சிலர் எழுதியது… இவை எல்லாவற்றையும் விட தில்லியின் எல்லையில் ஏர்முனையால் உழவன் எழுதியதே இறுதித் தீர்ப்பாக இருக்க முடியும். அரசு இந்த வேளாண் சட்டங்களை விலக்கிக் கொள்ள வேண்டும், அல்லது ஆட்சியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும். வேறு வழியில்லை.
மோதி கும்பல் வருந்துமா? திருந்துமா? போராட்டத்துக்குரிய நியாயங்களை ஏற்காமல், இது எதிர்க்கட்சிகளின் வேலை என்றன ஆர்எஸ்எஸ் ஊதுகுழல்கள். பிறகு இது காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் தூண்டுதல் என்றார்கள். காசுமீர் மக்கள் போராடினால் பாகிஸ்தான்! பஞ்சாப் மக்கள் போராடினால் காலிஸ்தான்! பஞ்சாப் பாசக தலைவர்கள் சிலரே இந்த அவதூறினை மறுத்துள்ளனர்.
போராட்டத்தை வழிநடத்தும் ஒருங்கிணைப்புக் குழுவில் இடதுசார்பு உழவர் அமைப்புகளும் தற்சார்பான விவசாய சங்கங்களும் முகன்மையாக இடம்பெற்றுள்ளன. இது ஒரு பெருந்திரள் போராட்டம். இந்த உழவர் போராட்டம் தொழிலாளர்களின் உரிமைக் கோரிக்கைகளை ஆதரிப்பதும். தொழிலாளர்கள் தமது பொது வேலைநிறுத்தத்தில் உழவர் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்ததும் நம்பிக்கையூட்டும் செய்திகள்.
யாருக்காக இந்த வேளாண் சட்டங்கள்? இந்த வினாவிற்குரிய விடையும் உழவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருப்பதால்தான், அவர்கள் அம்பானி, அதானி வகையறாக்களுக்கு எதிராகவும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆர்எஸ்எஸ் வகையறாவின் மதம்சார் பிளவு முயற்சிகள் இந்த உழவர் எழுச்சியின் முன்னே மண் கவ்வி விட்டன. இராமர் கோயில், வடமொழி ஆராதனை, ஊர்ப் பெயர் மாற்றம், வரலாற்றைத் திருத்துதல், மதமாற்றப் பூச்சாண்டி, லவ்ஜிகாத் புரளி, பயங்கரவாத மிரட்டல் எதுவும் உழுகுடியிடம் எடுபடவில்லை.
பாஞ்சாலம் மூட்டிய தீ பாசிச எதிர்ப்புப் போராட்டப் பாதைக்கு ஒளியூட்டி நிற்கிறது. இந்தத் தீ பரவும் வகை செய்தல் வேண்டும். உழவர் போராட்டத்தையும் தொழிலாளர் போராட்டத்தையும் தமிழ்நாட்டில் நாம் முழுமையாக முன்னெடுப்போம்! பாஞ்சாலம் முதல் பைந்தமிழ் நாடு வரை போராட்டத் தீ பற்றிப் படரட்டும்!
- தியாகு