காட்டுமிராண்டிகள், காட்டுமிராண்டித்தனம் --- பொதுவாக கொடூரங்களைக் குறிக்க இந்த சொல்லை நமது எழுத்தில், பேச்சில் நாம் பயன்படுத்துகின்றோம். அர்த்தம் தெரிந்து இதனைப் பயன்படுத்துவதாகத் தெரியவில்லை.

tribe_282காட்டுமிராண்டிகள் என்பது காட்டில் வாழும் பழங்குடி மக்களை குறிக்கும் சொல் என்றே நான் புரிந்து கொள்கின்றேன். வன்முறை, சூழ்ச்சி, கொடூரம் என்ற எதுவும் இல்லா அன்பு வழி வாழ்க்கை வாழும் காட்டு மக்களை ஏன் கொடூரத்தின் குறியீடாக இகழவேண்டும்?

சமீப காலங்களில் இது போல வன விலங்குகளை குறிப்பிடுவதைக்கூட முகமது அலி போன்ற வன விலங்கு ஆர்வலர்கள் எதிர்க்கின்றனர். உதாரணமாக நரி போல வஞ்சனை என்றும், கொடூரத்தைக் குறிக்க மிருகத்தனம் என்ற பதங்களை பயன்படுத்துவது அர்த்தமற்ற சொல்லாடல்கள் என்றே கருதப்படுகின்றது. உண்மையில் நுகர்வுவெறி பிடித்த நாகரீக மனிதர்களைப்போல கொடியவர்கள் வனவாசிகளோ அல்லது வன விலங்குகளோ இல்லை.

காவல்துறையின் கொடூரங்களைக் குறிக்க நாம் காட்டுமிராண்டிகள் என்ற சொல்லுக்குப் பதில் 'காக்கிமிராண்டிகள்' என அழைக்கலாம். அரசியல்வாதிகளின் கொடுமையைக் குறிக்க நாம் 'ஓட்டு மிராண்டிகள்' எனலாம். நாகரீக சமூகம் எனக் கூறப்படும் சமூகங்களீல் பல 'நாட்டு மிராண்டிகள்' உள்ளார்கள் என்பதன் வெளிப்பாடாகவே அரச வன்முறை நிகழ்வுகள் உள்ளன. அணு உலைக்காக ஓயாது ஆதரவுக் குரல் கொடுக்கும் 'அணுமிராண்டிகள்' நமது ஆட்சியாளர்களாக உள்ளனர். தனது சுய லாபத்திற்காக யாருக்கும் கெடுதல் நினைக்காத இம் மக்களை வேட்டையாடிம் 'காசு மிராண்டிகள்', 'கம்பெனி மிராண்டிகள்' என பல கொடூரர்கள் நம்மைச் சுற்றியே உள்ளனர். தங்களின் நிலங்களை அபகரிக்கும் நபர்களை, அந்நியர்களை மலைவாழ் பழங்குடிகள் கீழ் நாட்டார் என அழைக்கின்றனர். அது குணத்திற்கும், இடத்திற்கும் சிலேடையாய் குறிக்கும் சொல்லாகவே உள்ளது. மொத்தத்தில் 'நாட்டு மிராண்டிகள்'.

koodankulam_344

வெள்ளைக்காரனுக்கு கருப்பர்கள் எதிரிகள். அவனின் காலனியாதிக்கத்திற்கு எதிராக ஆப்பிரிக்கா, இந்தியா என பல்வேறு பகுதியில் போராடினர். எனவே வெள்ளையன் அவனுக்கு அமங்களம் எனக் கருதும் எல்லாவற்றையும் 'கருப்பு' என்ற அடைமொழியில் அழைத்தான். 'கருப்பு தினம்', 'கருப்பு சட்டம்'..... என்பது போன்று. தற்போது கருமர்களாகிய நாமும் நவீன வெள்ளையர்கள் என்ற மனோபாவத்தில் 'கருப்பு' என்ற சொல்லை நம்மை அறியாது பேசுகின்றோம்.

பழங்குடி மக்களின் வாழ்க்கையினை அறிந்தவனாக தங்களிடம் வேண்டுகின்றேன். அந்த வாழ்க்கையில் சூது, வாது இல்லை. இதுவெல்லாம் பாரதி 'அய்யோ எனப் போவான்' என்று பாடியது போல படித்தவனிடம் உள்ளது. உண்மையில் ஆதிப் பொதுவுடமைக் கூறுகளைக் கொண்ட 'காட்டுமிராண்டி'களின் (பழங்குடி மக்களின்) வாழ்க்கை அற்புதமானது. உங்களின் எதிர்காலத் தலைமுறைக்கு நல்வாழ்க்கைக்கான உதாரணமாக சொல்லத்தக்கது. இனி கொடூரங்களைக் குறிக்க காட்டுமிராண்டிகள் என்ற சொல்லாடல்களை பயன்படுத்தாதீர்கள்.

- ச.பாலமுருகன்

Pin It