சில நாட்களுக்கு முன்பு செய்தித்தாள்களிலும் பத்திரிக்கைகளிலும் வந்த ஒரு செய்தி. நிலவில் கால் பதித்த முதல் மனிதன் நீல் அர்ம்ஸ்ட்ராங்க் காலமானார். அன்னாருக்கு வயது 82. பலருக்கு இந்த செய்தி விண்வெளியில் மனிதன் அடைந்த மிகப்பெரிய சாதனையாக மட்டும்தான் தெரியும். ஆனால் எனக்கோ அன்னாளில் நான் தவற விட்ட ஒரு முக்கியமான நிகழ்வாக மட்டும் இல்லாமல் பல மாதங்கள் என் மனதை அழுத்திய ஒரு இழப்பாகவும் இருந்தது. விண்வெளியில் சாதனை படைக்க அந்த மாமனிதன் தன் நெடும் பயணத்தை மேற்கொண்டு விட்டான். எட்டு நாளைக்குள் நிலவுக்குப்போய் மறுபடியும் பூமிக்குத் திரும்பி விட வேண்டும். ஒவ்வொரு நாளும் என் நெருங்கிய உறவினர் ஒருவரை எங்கோ புறவெளியில் தனியாக விட்டு விட்டோமோ என்பதான கவலையிலும் பதற்றத்திலும் நான் இருந்த சமயம் அது.

apollo_11_crew_640

நான் சராசரிக்கும் கொஞ்சம் குறைந்த மாணவன். விஞ்ஞானப் பாடத்தில் மட்டும் எண்பதிற்குக் குறைவில்லாமல் மதிப்பெண்கள் எடுப்பேன். பிற பாடங்களில் குறைந்த பட்ச தேர்வுக்கான மதிபெண்கள் எடுப்பதே பெரும்பாடாக இருக்கும். கணக்குப் பாடத்தைப் பற்றி கேட்கவே வேண்டாம். கணக்கு வகுப்பில் அரை மயக்கத்தில்தான் இருப்பேன். அந்த சமயத்தில் நீராவி எஞ்சினின் குறுக்கு வெட்டுத் தோற்றம் என் மனக் கண் முன் வரும். சிறிது நேரம் கழித்து பிஸ்டன் மெல்ல மெல்ல இயங்க ஆரம்பிக்கும். அதை நானே இயக்கவும் செய்வேன். பிஸ்டன் சிலிண்டரில் இருந்து கசியும் நீராவியின் சூட்டினை ரசிப்புடன் முகர்ந்து கொண்டு இருக்கும் போது சுரீர் என்று முதுகுத்தண்டு வலிக்கும். கணக்கு வாத்தியார் பொறுமை இழந்து தன் பிரம்பினால் என் முதுகில் ஒரு சில கோடுகள் போட்டு இருப்பார்.

நூலகத்திற்குச் சென்றால் விஞ்ஞானப் புத்தகங்களை மட்டும் தான் படிப்பேன். குறிப்புகளும் எடுத்துக்கொள்வேன். படித்தவற்றை மறக்காமல் தேர்வில் அடிக்கோடிட்டு எழுதவும் செய்வேன். என் விஞ்ஞான ஆசிரியர் என்னை குட்டி விஞ்ஞானி என்று அழைத்தவுடன் எனக்கு சிறகுகள் முளைத்து விடும். பிறகென்ன பால் வெளியில் சஞ்சாரம். மாறுபட்ட கிரகங்களின் புவி ஈர்ப்பால் அலைக்கழிக்கப்பட்டு பூமிக்குத் திரும்பும் போது என்னைச் சுற்றி நண்பர்கள் என்னையே வினோதமாக வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

ஒரு நாள் இரண்டு பூதக் கண்ணாடிகளை உள்ளூர் சந்தையில் வாங்கி டெலஸ்கோப் செய்து இரவு நேரங்களில் மொட்டை மாடியே கதியாக இருந்தேன். என் அதிமும்முரமான வான ஆராய்ச்சிகளை ரகசியமாக ஒளிந்திருந்து கவனித்த என் பாட்டி அம்மாவிடம் ஒன்றிற்குப் பத்தாக போட்டுக் கொடுக்க, அம்மா மிரண்டு போய் எச்சரிக்க, அன்றோடு என் வான ஆராய்ச்சிகளும் நிரந்தரமாக முடக்கி வைக்கப்பட்டது. என் புத்தி பிரண்டு போகாமல் என்னைத் தக்க நேரத்தில் காப்பாற்றி விட்டதாக பாட்டிக்கு பரம திருப்தி.

பள்ளி இறுதித் தேர்வு நாளும் வந்தது. கேள்வித்தாள்கள் வெளிவந்து விட்டதாக நண்பர்கள் வட்டாரத்தில் ஒரு வதந்தி பரவி இருந்தது. என் நெருங்கிய நண்பன் பாபுவோ தினமும் ஒவ்வொரு பாடத்திலும் பத்து கேள்விகளை தேர்ந்தெடுத்து அதற்கான பதில்களை என் மண்டைக்குள் ஏறுமாறு சுருக்கமாக எழுதி என்னை மனப்பாடம் செய்ய வைப்பான். எனக்கான தண்டனைகளை நிறைவேற்றும் முழு அதிகாரத்தை அம்மாவிடம் இருந்து அவன் பெற்றுக் கொண்டிருந்ததால் தேர்வு முடியும் வரை அவனின் கண்டிப்பான நேரடி மேற்பார்வையில்தான் நான் இருந்தேன். கணக்குப் பாடம் உட்பட எல்லா பதில்களையும் மனப்பாடம் செய்து அவனிடம் ஒப்பிக்கவேண்டும். விஞ்ஞானப் பாடத்திற்கு மட்டும் விலக்கு அளித்திருந்தான்.

எப்பொழுதும் பிரம்புடன் ஒரு நிரந்தரமான கோபப் பார்வையுடன் என்னை சுற்றிச்சுற்றி வருவான். ஓரிரு நாட்களில் அவன் ஒரு கண்டிப்பான ஆசிரியராகவே மாறி விட்டான். அன்றைய தேர்வு முடிந்த பிறகு அடுத்த நாள் தேர்வுக்கு என்னை தயார்படுத்துவான். கண்ணைக் கட்டிய பந்தயக் குதிரைபோல இருந்தேன் நான். ஒரு வழியாகத் தேர்வும் முடிந்து அதன் முடிவும் நாளிதழ்களில் வெளியாகி இருந்தது. நான் அனைத்து பாடங்களிலும் தேர்வாகி இருந்தேன். அம்மாவோ மதிபெண்கள் வரும் வரை நம்பவே இல்லை. வழக்கம் போல எல்லா பாடங்களிலும் இன்னும் ஒரிரண்டு மதிப்பெண்கள் குறைவாக எடுத்து இருந்தால் தேர்வாகி இருக்க மாட்டேன் என்ற நிலை. விஞ்ஞானப் பாடத்தில் மட்டும் அதிகமான மதிப்பெண்கள் எடுத்திருந்தேன். இந்த மதிப்பெண்களை வைத்து கல்லூரி நுழைவிற்காக மிகவும் போராட வேண்டி இருந்தது.

அம்மாவும் யார் யாரிடமோ சிபாரிசுக் கடிதங்களை வாங்கிக் கொடுத்தாள். பகல் முழுவதும் கல்லூரியில் இட வேட்டை. மாலையில் வாய்ஸ் ஆஃப் அமெரிக்க வானொலியின் நேரடி ஒலிபரப்பினை கேட்பேன். எங்கள் வீட்டு வானொலிப் பெட்டியோ மிகவும் சிறியது. அதில் சிற்றலை 25 அல்லது 31 மெகாஹெட்ஸில் முள்ளினை நுணுக்கமாக வைப்பதற்குள் ஒரு பாடு படவேண்டி இருக்கும். கென்னடி ஸ்பேஸ் சென்டரில் அப்பல்லோ 11ன்னின் ஆயத்தப்பணிகள் மேற்கொண்டிருந்த சமயம் அது. நாட்கள் போனதே தெரியவில்லை. அடுத்த நாள் நம் ஊர் நேரப்படி காலை இரண்டு மணி வாக்கில் நிலவில் ஆர்ம்ஸ்ட்ராங்க் கால் பதிப்பார் என்ற செய்தியினை அடிக்கடி ஒலிபரப்பிக் கொண்டிருந்தார்கள்.

வாசலில் இருந்து கொண்டு நண்பர்களிடம் இந்த சரித்திர நிகழ்வைப்பற்றி பதட்டத்துடன் விவரித்துக் கொண்டிருந்த சமயம். ஒரு கருப்பு மோரீஸ் மைனர் காரின் கதவினைத் திறந்து ஒரு முதியவர் என் அம்மாவைப் பற்றி விசாரித்தார். அம்மாவை அழைத்தேன். அவளுக்கோ முகமெல்லாம் மகிழ்ச்சி. வேகமாக அவரை வீட்டினுள் அழைத்துக் கொண்டு போனாள். என்னிடம் அவரை அறிமுகப்படுத்தினாள். அவர்தான் மரகத சுப்ரமணியம் பிள்ளை. அம்மா படிக்கும் காலத்திலிருந்தே அவளுக்கு பல விதங்களில் உதவியிருக்கிறார். நான் அவரைப்பற்றி பாட்டி சொல்லக் கேட்டிருந்தாலும் அன்றைக்குத்தான் முதன் முதலாகப் பார்த்தேன். கொஞ்சம் பூரிப்பான உடம்பு. பொன் நிறம். நீலக்கல் பதித்த கடுக்கண் அணிந்திருந்தார். உயர்ரக ஜல்லடை மல் துணியில் தைத்த கை பனியன் போட்டிருந்தார். கழுத்தில் அணிந்திருந்த கயிற்றில் கோர்த்திருந்த ஒற்றை ருத்ராட்ச மணி அவரின் தொண்டைக்குழியில் கச்கிதமாகப் பதுங்கி இருந்தது. ஐந்தரை அடிக்குள்தான் இருப்பார். அவரின் செய்கைகளில் வசதியான நிலக்கிழாரின் மிடுக்கு தெரிந்தது.

தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். என்னைப் பற்றி அவர் அதிகம் தெரிந்து வைத்திருந்தார். மதிய உணவின் சமயத்தில்தான் அம்மா என் கல்லூரி விஷயத்தை அவரிடம் கூறினாள். உடனே அவர் தனக்கு ஆழ்வார்குறிச்சி கல்லூரியில் எல்லோரையும் தெரியும் என்றும், அன்று மாலையே நானும் அம்மாவும் அவருடன் அம்பாசமுத்திரம் வரவேண்டும் என்று கூறினார். அம்மாவுக்கோ மிகவும் மகிழ்ச்சி. அப்படியே தன் சொந்த ஊரான கல்லிடைகுறிச்சிக்கும் போகத் திட்டமிட்டு இருந்தாள். என்னால் எதுவும் மறுப்பு கூற முடியவில்லை. திட்டமிட்டபடியே பாட்டியை வீட்டிற்குக் காவல் வைத்துவிட்டு எல்லோரும் மாலையில் அம்பை கிளம்பி விட்டோம்.

இரவு பத்து மணி வரை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு அம்மாவிடம் அடிக்கடி மணி கேட்க அவள் அலுத்துப் போய் கடிகாரத்தைக் கழற்றி என்னிடமே கொடுத்து விட்டு தூங்க ஆரம்பித்தாள். மிகவும் தாமதமாக நேரம் கடந்து போய்க் கொண்டிருந்தது. அடிக்கடி வானத்தைப் பார்த்தவாறு இருந்தேன். மணி பன்னிரெண்டு. இன்னும் இரண்டு மணி நேரத்தில் ஆர்ம்ஸ்ட்ராங்க் நிலவில் கால் பதிக்கப் போகிறார். வீட்டில் இருந்திருந்தால் நண்பர்களுடன் நேரடி வானொலி ஒலிபரப்பினைக் கேட்டிருந்திருப்பேன். எதையோ இழந்த சோகம் மனம் முழுவதும் அப்பி இருந்தது. கடிகார முள் மணி இரண்டினை நெருங்கிக்கொண்டிருந்தது. காரின் கண்ணாடி ஜன்னல் வழியாக சுற்றும் முற்றும் பார்த்தேன். திரண்டிருந்த மேகங்கள் எங்கேயோ நிலவை ஒளித்து வைத்து எனக்கு வேடிக்கை காட்டிக்கொண்டிருந்தன.

ஒரு வழியாக உள்ளூர் கல்லூரியிலேயே இடமும் கிடைத்தது. ஏதோ போய்க்கொண்டிருந்தேன். ஒரு மாதத்திற்கு மேல் ஆகி விட்டது. நடைமுறை வாழ்க்கைக்கு என்னால் திரும்பவே முடியவில்லை. ஒரு நாள் மாலை வீடு திரும்பும் போது மேஜையின் மேல் ஒரு தடித்த கடித உறை இருந்தது. பெறுநர் பகுதியில் என் பெயர் இருந்தது. அனுப்புனர் பகுதியில் யு.எஸ்.ஐ.ஸ், மதராஸ் என்றிருந்தது. உரையைத் திறந்தேன். அம்மா அடுக்களையில் ஏதோ வேலையாக இருந்தாள். அதிலிருந்த அறிமுகக் கடிதத்தில் என் விண்வெளி ஆர்வத்தினைப் பற்றி மிகவும் புகழ்ந்திருந்தார்கள். அதனுடன் கேபினெட் அளவில் மிகவும் பாதுகாப்புடன் கெட்டியான அட்டையினை சுற்றியபடி ஒரு புகைப்படம் இருந்தது. அதில் நிலவில் பயணம் செய்த அப்பல்லோ 11-ன் விண்வெளி வீரர்களின் படம் இருந்தது. அதில் நிலவில் கால் பதித்த முதல் மனிதனான நீல் ஆர்ம்ஸ்ட்ராங்க், இரண்டாம் மனிதனான ப்ஸ் ஆல்டிரின் மற்றும் அவர்கள் இருவருக்கும் தாய் விண்கலத்தில் இருந்து உதவிய எட்வர்ட் காலின்ஸ் தத்தம் விண்வெளி உடையுடன் மிகவும் கம்பீரமாக தோற்றமளித்தார்கள். அம்மா தான் என் சார்பாக கடிதம் எழுதி இருக்கவேண்டும். ஓடிச்சென்று அம்மாவை பின்புறமாக இருகக் கட்டிக் கொண்டேன். அப்படியே அவளை தூக்கிக்கொண்டு நடுக் கூடத்திற்கு வந்தேன். இதைப் பார்த்த பாட்டி மிரட்சியுடன் அம்மாவை கீழே இறக்கி விடும்படி கெஞ்சாத குறையாக மன்றாடினாள். கூடத்தில் மாட்டியிருந்த அந்த புகைப்படத்தை எப்போது பார்த்தாலும் ஆர்ம்ஸ்ட்ராங்குடன் அம்மாவின் ஞாபகமும் சேர்ந்து வரும்.

- பிரேம பிரபா

Pin It