மதுரையில் 480 தோழர்கள் கைது

ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தவறிய காவல்துறையைக் கண்டித்து, தென்மண்டல காவல் துறை ஐ.ஜி. அலுவலகத்தை முற்றுகை இடும் போராட்டம் 3.11.2016 அன்று, காலை 11-00 மணியளவில் நடைபெற்றது. மதுரை, புதூர் பேருந்து நிலையத்தில் அணி திரண்ட தோழர்களிடையே கூட்டமைப்பின் தலைவர்கள் உரையாற்றினர். போராட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ்ப்புலிகள்கட்சித் தலைவர் நாகை. திருவள்ளுவன் நோக்க உரையாற்றினார். திராவிடர் விடுதலை கழகத் தலைவர்கொளத்தூர்மணி, சி.பி.எம்.எல். மக்கள் விடுதலைக் கட்சியின் மீ.த.பாண்டியன், த.பெ.தி.க. பொதுச்செயலாளர் கோவை இராமக்கிருட்டிணன், மனிதநேய மக்கள் கட்சிப் பொதுச்செயலாளர் அப்துல் சமது, எச்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் தெகலான் பாகவி, ஆதிதமிழர்ப் பேரவைத் தலைவர் இரா.அதியமான், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் புதுக் கோட்டை செரீப், மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகப் பொதுச் செய்லாளர் பிரிசெல்லா பாண்டியன், இளந்தமிழகம் செந்தில், மே 17 இயக்கம் திருமுருகன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமிழ்நேசன், விடுதலைக் கட்சி துணைப் பொதுச்செயலாளர் ஆற்றலரசு ஆகியோர் உரையாற்றிய பின்னர் ஐ.ஜி அலுவலகத்தை நோக்கிப் பேரணியாக தோழர்கள் புறப்பட்டனர்.

சுமார் 200 மீட்டர் தூரம் கடந்தபோது காவல் துறையினர் தோழர்களைத் தடுத்து கைது செய்தனர். காவல்துறையினர் கணக்குபடி கைது செய்யப்பட்ட 480 தோழர்களும் பத்மசூர்யா திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். அரங்கில் மதிய உணவுக்குப் பின்னர் பிற்பகல் 3.30 மணியளவில் ஒருங்கிணைப்பாளர் நாகை திருவள்ளுவன் தலைமையில் கருத்தரங்கம் தொடங்கியது. பாகவி பொது சிவில் சட்டத்தின் மோசடிகள் குறித்தும், அப்துல் சமது மோடி ஆட்சியின் மதவெறிப் போக்கைக் குறித்தும், திருமுருகன் மோடி ஆட்சியில் தமிழர்கள் உரிமைகள் பறிக்கப் படுவதைக் குறித்தும், புரட்சிகர இளைஞர் முன்னணித் தோழர் குமரன் உள்ளிட்டோரும் உரையாற்றினர். மாலை 6-00 மணியளவில் தோழர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

திருப்பூரில் அறிவியல் மன்றம் நடத்திய மகளிர் சந்திப்பு

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்திய மகளிர் சந்திப்பு திருப்பூரில் 23.10.2016 அன்று நடைபெற்றது. இதில் திருப்பூர் கோவை பகுதி தோழர்கள் 30 பேர் கலந்து கொண்டனர். காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடந்த இந் நிகழ்வு பெரும் உற்சாகத் துடனும் பயனுள்ளதாகவும் நடைபெற்றது.

முதல் நிகழ்வாக கலந்து கொண் டோர் தங்களைப் பற்றியும் தங்களுக்கு பொது வாழ்விலுள்ள பங்கு பற்றியும் அறிமுகப்படுத்திக் கொண்டனர். பிறகு அந்தக் காலப் பெண்கள் வாழ்வு தான் சிறந்தது என்று ஒரு குழுவும் அதனை மறுத்து இந்தக் காலப் பெண்கள் வாழ்வு தான் சிறந்தது என்று ஒரு குழுவும் விவாதித்தனர். இதில் பெண்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் முன்னேற்றங்கள் குறித்து பல்வேறு கருத்துகள் முன் வைக்கப்பட்டு விவாதித்தனர்.

பிற்பகல் பெரியார் ஒர் அறிமுகம் என்ற தலைப்பில் சிவகாமி பேசினார். பிறகு பொட்டு வைத்தல், தாலி ஓர் அடிமைச் சின்னம், அணிகலன் என்பது பெண்ணடிமையை உறுதிப் படுத்தும் விலங்கு, பெண்ணே பெண்ணுக்கு எதிரியா? என்பன போன்ற கருத்துகள் வினா விடை மூலம் விவாதிக்கப்பட்டன.

இறுதியாக நிகழ்வு குறித்த தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். நிகழ்வில் சத்திய மங்கலம் கோமதி, கோபி மணிமொழி ஆகியோர் மிகச் சிறப்பான கருத்துகளை முன்வைத்து நெறிப்படுத்தினர்.

மதிய உணவாக மாட்டுக்கறி பிரியாணி வழங்கப்பட்டது. இந்நிகழ்வைச் சிறப்பாக நடத்த கோபி நிவாசு, திருப்பூர் தனபால், முத்து, நீதிராசன், கருணாநிதி, முகில் ராசு ஆகியோர் உதவினர். அறிவியல் மன்றம் தொடர்ச்சியாக இத்தகைய மகளிர் சந்திப்புகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.