கீற்றில் தேட...

தமிழில் திறனாய்வு என்பது நீண்ட பாரம்பரியமுடையதெனினும், புறநிலையில் ஒரு படைப்பினை நுணுகி ஆராய்தல் நூற்றாண்டுப் பழமையுடையது. இலக்கியப் படைப்புகளை வாசித்து, அவற்றில் பொதிந்துள்ள நுட்பங்களை ரசித்து மகிழ்தலும், மேலைநாட்டுத் திறனாய்வுக் கோட்பாடுகளை வறட்டுத்தனமாகப் பிரயோகித்து விமர்சனமெனச் சிலாகிப்பதும் வழக்காக இருந்த காலத்தில், தனிநாயகம் அடிகளாரின் விமர்சன அணுகுமுறை தனித்துவமானது. வ.வே.சு. ஐயர், டி.கே.சி. போன்றோரின் விமர்சனம், ரசனையை அடிப்படையாகக் கொண்டிருந்தபோது, அதனைப் பல்வேறு களங்களுக்கு விரித்தவர் தனிநாயகம் அடிகள். அவருடைய விமர்சனப் பார்வை, தொடக்கத்திலேயே புதிய போக்குகளை அறிமுகம் செய்தது. தமிழுடன் ஆங்கிலம், ஸ்பானிஷ், லத்தீன், பிரெஞ்சு, போர்த்துகீஸ் போன்ற பல்வேறு மொழிகளைக் கற்றுத்தேர்ந்த தனிநாயகம் அடிகளின் ‘அனைத்துலகப் பார்வை’ முழுக்க அறிவியலை அடிப்படையாகக்கொண்டது. ஒப்பிடுதலும் தர மேம்பாட்டினை அறிதலும் அவரது விமர்சனப் பார்வைக்குச் செழுமையூட்டின. தமிழ்மொழி, தமிழிலக்கிய மேன்மை, தமிழரின் பாரம்பரியச் சிறப்பினை உலகமெங்கும் வாழும் பிறமொழி அறிஞர்களிடம் பரப்புதலை வாழ்வின் இலக்காகத் தனிநாயகம் அடிகள் கொண்டிருந்தார். அவருடைய தமிழார்வம், போலிப் பெருமையையும் பண்டிதத்தின் பகட்டினையும் உள்ளடக்கியதன்று. தமிழ்த் திறனாய்வில் சொந்த முயற்சியின் விளைவாகக் கண்டறிந்த உண்மைகளைப் பரப்பிட வாழ்நாள் முழுவதும் இடையறாது உழைத்த தனிநாயகம் அடிகளின் உழைப்பு, ஒப்பீடு அற்றது. நவீனத் தமிழின் பன்முகத்தன்மைகளைப் பற்றி மதிப்பிடும்பொழுது, தனிநாயகம் அடிகளாரைத் தவிர்த்துவிட்டு ஆராய்தல் இயலாதது.

ஈழத்திலுள்ள காவலூர் அருகிலுள்ள கரம்பொன் என்ற சிற்றூரில், ஹென்றி ஸ்ரனிஸ்லாஸ்- சிசில் இராசம்மா வஸ்தியா பிள்ளை தம்பதியரின் முதல் குழந்தையாக 02-08-1913 அன்று தனிநாயகம் அடிகள் பிறந்தார். இவரது இயற்பெயர் சேவியர். அவர் சொந்த ஊரில் தொடக்கக் கல்வியும் யாழ்ப்பாணத்தில் கல்லூரிக் கல்வியும் கொழும்பு நகரில் இறையியல் கல்வியும் பயின்றார். பின்னர் திருவனந்தபுரம் மறை மாவட்டத்தில் சேர்ந்த தனிநாயகம், மேற்படிப்பினுக்காக ரோம் நகருக்குச் சென்றார். The Carthaginian Clergy என்ற தலைப்பில் இறையியலில் முனைவர் பட்டம் பெற்றார். அது, 1950இல் நூல் வடிவில் வெளியாகியுள்ளது. இந்தியாவிற்கு திரும்பி வந்தவர் சிறிது காலம் வடக்கன் குளத்தில் ஆசிரியராகப் பணியாற்றிவிட்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் சேர்ந்து முதுகலை, இலக்கிய முதுகலை (எம்.லிட்) பட்டங்கள் பெற்றார்.' நில அமைப்பும் தமிழ்க் கவிதையும்' என்பது ஆய்வுத் தலைப்பாகும். அவருடைய வகுப்பறைத் தோழர் வி.அய்.சுப்பிரமணியம்.

thani nayagamஜப்பான், அமெரிக்க ஐக்கிய நாடு, பிரேசில், எக்குவதோர், பெரு, மெக்சிகோ, இத்தாலி முதலிய பல நாடுகளுக்குச் சென்று உரை நிகழ்த்திய அடிகளார், அமெரிக்க ஐக்கிய நாட்டில் மட்டும் தமிழின் சிறப்பைப் பற்றி ஒரே ஆண்டில் 200 விரிவுரைகள் ஆற்றினார். அவருடைய ஆய்வுரைகள், ஏற்கெனவே இந்தியாவில் ஆய்வில் ஈடுபட்டிருந்த பல மேலைநாட்டு அறிஞர்களின் கவனத்தைத் தமிழின் பக்கம் திருப்பின. அறிஞர்கள் பலரைத் தமிழாய்வில் ஈடுபட ஊக்குவித்த அடிகளார், பல்வேறு மேலைநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறை அமைந்திடவும் வழிவகுத்தார். இந்தியாவிலும் இலங்கையிலும் மட்டுமே பல்கலைக்கழகங்களில் தமிழாய்வு மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையை மாற்றி, உலக அரங்கில் பல நாடுகளிலும் தமிழாய்வு நடைபெற வழிவகுத்த பெருமை அடிகளாருக்கே உரியது. இந்திய நாகரிகத்தின் முழுமையையும் இலக்கியச் செழுமையையும் உரிய முறையில் ஆராய்ந்து அறிய வடமொழி அறிவோடு தமிழறிவும் இன்றியமையாதது என்பதை அறிஞர் உலகத்துக்கு அடிகளார் உணர்த்தினார்.

தமிழாய்வுக் கட்டுரைகளைத் தமிழில் மட்டும் படைத்தால் போதாது, அவை ஆங்கிலத்திலும் எழுதப்பட்டால்தான் உலக அரங்கினைச் சென்று அடையமுடியும் என்பதால் தமிழாய்வுக்காக ஆங்கில இதழ் ஒன்று வெளியிடப்படுவது கட்டாயத் தேவை என்பதைத் தம் உலகத் தமிழ்த் தூதுப் பயணத்தின்போது அடிகளார் அறிந்தார். எனவே 1952ஆம் ஆண்டில் 'Tamil Culture' முத்திங்கள் இதழை அடிகளார் வெளியிடத் தொடங்கினார். இது தனியொருவர் மேற்கொண்ட தனிப்பெரும் முயற்சி மட்டுமல்ல, 12 ஆண்டுகளுக்குப் பின்பு உலகத் தமிழாராய்ச்சிக் கழகம் தோன்ற வழிவகுத்தது. மேலை நாடுகளைச் சார்ந்த தமிழறிஞர்களாகிய கமில் சுவலபில், ழான் பீலியோசா, எ.ஆந்த்ரனோவ், எம்.பி. எமனோ, ஆர்னோ லேமன், எஃப்.பி.ஜே.கியூப்பர், ஜே.ஆர். மார், எட்கர் நோல்ட்டன், சி.ஆர். பாக்சர், தாமஸ் பர்ரோ போன்றோரும் இந்திய, இலங்கைத் தமிழறிஞர் பலரும் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கிவந்த ஆய்விதழ், பல மேலைநாட்டுப் பல்கலைக்கழகங்களின் நூலகங்களில் இடம் பெற்ற சிறப்புக்குரியதாகும்.

1964ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற கீழ்த்திசை மாநாட்டில் உலகமெங்கிலுமிருந்தும் கலந்துகொண்ட பேராசிரியர்களை ஒருங்கிணைத்து அனைத்துலகத் தமிழாராய்ச்சிக் குழு தோற்றுவிப்பதில் அடிகளார் மூலவராக விளங்கினார். அந்த அமைப்பின் பொதுச் செயலர்களாகத் தனிநாயகம் அடிகளும் கமில் சுவலபிலும் பொறுப்பேற்றனர்.

அடிகளார் முதல் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1966 ஆம் ஆண்டு மலேயாவில் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். இரண்டாம் மூன்றாம் நான்காம் உலகத் தமிழாராய்ச்சி ஏற்பாடுகளிலும் உற்சாகத்துடன் கலந்துகொண்டார்.

சென்னையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நிறுவப்படுவதற்கான செயலாக்கத்தில் அடிகளாரின் பங்கு கணிசமானது. அந்நிறுவன வெளியீடான Journal of Tamil Studies இதழுக்குச் சிறிதுகாலம் ஆசிரியராகப் பணியாற்றினார்.

இறுதியில் ஓய்வுபெற்று ஈழத்தில் தங்கியிருந்த அடிகளார் 01-09-1980 அன்று அகாலமானார்.

அடிகளாரின் நூல்கள் அடிகளாரின் முதல் நூல் 'தமிழ்த் தூது' இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பு 1952-ஆம் ஆண்டு வெளியானது. அடிகளாரின் உலகப் பயண அனுபவங்கள் ’ஒரே உலகம்' என்ற தலைப்பில் 1963ஆம் ஆண்டு நூல் வடிவம் பெற்றன.

Reference Guide to Tamil Studies (1966)> Nature poetry in Tamil - the clasical period (1963)> Tamil Studies Abroad : A symposium (1968) Tamil Culture as Civilization Readings, The Carthaginian Clergy (1950) ஆகிய நூற்கள் ஆங்கிலத்தில் அடிகளார் எழுதியவையாகும்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அடிகளார் ஆற்றிய சொற்பொழிவானது ’திருவள்ளுவர்’ என்ற தலைப்பில் 1967ஆம் ஆண்டு நூல் வடிவில் வெளியாகியுள்ளது.

Tamil Culture என்ற ஆங்கிலக் காலாண்டிதழ் அடிகளாரின் ஆசிரியர் பொறுப்பில் 1952-ஆம் ஆண்டு முதல் 1967-ஆம் ஆண்டு வரை வெளிவந்தது. அவை பன்னிரண்டு தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளன.

அடிகளார் எழுதிய முப்பது ஆய்வுக் கட்டுரைகள் Tamil Culture இதழில் வெளியாகியுள்ளன. அவர் எழுதிய சுமார் 70 கட்டுரைகள் பல்வேறு இதழ்களிலும் கருத்தரங்க மலர்களிலும் வெளிவந்துள்ளன.

அடிகளார், இலக்கியம், இலக்கணம் என்று தமிழிலக்கியப் பரப்பினுக்குள் சுருங்கியிருந்த ஆய்வுப் போக்கினைத் ‘தமிழாய்வு’ என்ற புதிய தளத்திற்குள் விரிவுபடுத்தினார். பண்பாடு, ஒப்பிலக்கியம், மொழியியல், கல்வி, இறையியல், புவியியல், மெய்யியல், நாட்டுப்புறவியல், கவின் கலைகள், வரலாறு போன்ற பல்வேறு துறைகளுடன் தமிழ் இலக்கிய ஆய்வைத் தொடர்புபடுத்தி ஆராய்ந்திட வழிவகுத்திட்ட அடிகளாரின் செயற்பாடுகள் தனித்துவமானவை. பன்மொழி அறிவுடைய அடிகளார் உலக இலக்கியப் படைப்புகளை மூலமொழிகளிலே வாசிக்கும் வாய்ப்புப் பெற்றவர் ஆதலால், தமிழிலக்கியப் படைப்புகளை ஒப்பிட்டுநிலையில் ஆராய்ந்திடும் ஆற்றல் உடையவராக விளங்கினார். தமிழாய்வுக் கட்டுரைகளை வெளியிட Tamil Culture என்றும் ஆங்கிலக் காலாண்டிதழைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தார். இதனால் உலகமெங்கும் தமிழாய்வு குறித்து அக்கறையுள்ள அறிஞர்களிடம் அடிகளாருக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. பண்டைத் தமிழ் இலக்கியச் சிறப்பினையும் தமிழரின் வரலாற்று முக்கியத்துவத்தையும் ஒப்பீட்டு நிலையில் ஆழமாக ஆராய்வது, அவரது அடிப்படையான ஆய்வுப் போக்காகும். 1947ஆம் ஆண்டிற்கு முன்னும் பின்னும் தமிழகத்திலும் உலக நாடுகளிலும் நடைபெற்று வரும் பல்வேறு சமூக, அரசியல், பொருளியல், பண்பாட்டு மாற்றங்களைக் கூர்ந்து அவதானித்த இயல்புடைய அடிகளார், எவ்விதமான அரசியல் இயக்கத்தையும் சார்ந்தவரோ ஆதரித்தவரோ இல்லை. ஆனால் அவருடைய தமிழ் பற்றிய கோட்பாடுகள், தமிழர் பற்றிய கண்டுபிடிப்புகள் திராவிட இயக்க அரசியல் வளர்ச்சிக்கு மறைமுகமாக உதவியுள்ளன. தமிழ் பற்றிய ஆரவாரமும் வெற்று அலங்கார ஜாலங்களும் முதன்மைப்படுத்தப்பட்ட தமிழகச் சூழலில், அறிவியல்ரீதியில் தமிழாய்வை வளப்படுத்தியவர் அடிகளார். 'வாளொடு முன் தோன்றிய முதல் மனிதன் தமிழனே’ என்று வீண் பெருமை பேசிக் கொண்டிருந்த காலகட்டத்தில் அவர் வரலாற்று ஆதாரங்களையும் மெய்மைகளையும் கொண்டு தமிழாய்வினுக்குப் புதிய பரிமாணங்களைச் சேர்த்திட்டார்.

வரலாற்றுப் பார்வையும் ஒப்பியல் அணுகுமுறையும் அடிகளார் நிகழ்த்திய ஆய்வுகளின் அடித்தளமாக விளங்குகின்றன. வரலாற்றுப் பார்வை என்பது சமுதாயத்தின் பல்வேறு கூறுகளையும் ஒருங்கிணைத்து நுட்பமாக ஆராய்ந்து, அறிவியலடிப்படையில் கொள்ளத்தக்கனவற்றை ஏற்றுக்கொண்டு, வேண்டாதனவற்றைப் புறந்தள்ளி, காரணகாரிய அறிவுடன் விளக்குவதாகும். கடந்த காலம் பற்றிய விளக்கத்தை அளிப்பதுடன், மாறிவரும் புதிய சமூகத்தின் அம்சங்களையும் கணக்கிலெடுத்துக்கொள்வது இத்தகைய ஆய்வின் சிறப்பாகும். பல்கலைக்கழகங்களில் மும்முறை முனைவர் பட்ட ஆய்வேடுகள் அளித்துள்ள அடிகளார், ஒவ்வொரு ஆய்வுக் கட்டுரையினையும் அடிப்படையான தரவுகளைக்கொண்டு, தருக்கரீதியில் விவாதித்துப் புதிய முடிவுகளுடன் எழுதியுள்ளார். அவரது கட்டுரையாக்க முறையானது ஆய்வியல் நெறியினை அடிப்படையாகக் கொண்டதாகும்.

தமிழ் பற்றிய அடிகளாரின் கருத்துகள்

பொதுவாகத் தமிழகத்தைவிட ஈழத்தில் தமிழ் பற்றிய வரலாற்றுப் பிரக்ஞை கூடுதலாக உண்டு. சைவத்தின் சிறப்புகளை விளக்கிய ஆறுமுக நாவலர், தமிழின் மேன்மைகள் குறித்தும் விளக்கியுள்ளார். யாழ்நூல் எழுதிய விபுலானந்த அடிகள், கனகசபைப் பிள்ளை, சி.வை.தாமோதரம் பிள்ளை, ஆனந்த குமாரசாமி போன்றோர் தமிழரின் பாரம்பரியச் சிறப்புகளை வரலாற்றுரீதியில் விளக்கியுள்ளனர். சிங்களவருடன் சேர்ந்து வாழவேண்டிய நெருக்கடியான சூழலில், 'தமிழ்’ என்ற அடையாளத்தைப் பேணவேண்டிய சூழல் ஈழத் தமிழருக்கு எப்பொழுதும் உண்டு. இத்தகைய பின்புலத்தில் அடிகளாரின் ‘தமிழ்’ பற்றிய தேடல் உருவாகியிருக்க வாய்ப்புண்டு. பண்டைத் தமிழ் இலக்கியத்தின் மேன்மைகளை அசலாகக் கண்டறிந்த அடிகளார், சங்க காலத் தமிழரின் வாழ்வியல் முறைகளை நுணுகி ஆராய்ந்து மீட்டுருவாக்கம் செய்கின்ற தன்மையினையும் அறிய முடிகின்றது.

கிறிஸ்தவ சமயத் துறவியான தனிநாயகம் அடிகள், சமய நெறிக்கெனத் தன்னை ஒப்புக் கொடுத்தவரெனினும், தமிழ்ப் பற்று மிக்கவர். பன்மொழிப் புலவரான அடிகளார், தமிழ் மொழியின் சிறப்பினையும், அது உலக அளவில் பெறவேண்டிய அங்கீகாரம் குறித்தும் ஆழமாகச் சிந்தித்துச் செயற்பட்டார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியா என்றால் சமஸ்கிருதமும், வைதிக சநாதன சமய நெறிகளும் மட்டுமே என்ற கருத்து உலகமெங்கும் நிலவியது. “மேலை நாடுகளில் வெளிவந்துள்ள இந்திய இலக்கிய வரலாற்று நூல்களில், தமிழிலக்கியத்தைப் பற்றிய கருத்துச் சிறிதேனும் இல்லை ஒரு சொல்லேனும் இல்லை” என்று வேதனைப்படும் அடிகளார், இந்திய இலக்கிய வரலாற்று நூல்களிலும் தமிழுக்குரிய இடம் அளிக்கப்படவில்லை என்று குறிப்பிடுவது கவனத்திற்குரியது. இந்நிலை மாறிட வேண்டுமென விரும்பிய அடிகளார், அதற்கான அடிப்படைச் செயற்பாடுகளை அவருடைய வாழ்நாள் முழுவதும் இடைவிடாமல் செய்துள்ளார்.

“உலக இலக்கியத் திரட்டு (World Classics) என்னும் பெருந்தொகை நூல்களில், நம் இலக்கிய நூல்களும் இடம்பெறும் பெருமை அடைவித்தல் வேண்டும்" என்ற அடிகளாரின் ஆர்வத்தில் தமிழை அனைத்துலக இலக்கியப் பரப்பினுக்கு உயர்த்தும் முயற்சி பொதிந்துள்ளது. தமிழ் இலக்கியப் படைப்புகளை நுணுகி ஆராய்ந்திடும் திறனாய்வாளரான அடிகளார், “தமிழில் எல்லாச் சமயத்தினரும் உரிமை பாராட்டக்கூடிய இலக்கியப் படைப்புகள் உள்ளன” என்று குறிப்பிடுகின்றார். மேலும் அவர் பன்னிரு திருமுறைகள், நாலாயிரத் திவ்வியப் பாடல்களின் சாரத்தினை நுட்பமாக அணுகி, தமிழை இரக்கத்தின் மொழி, பக்தியின் மொழி” என்று முடிவெடுக்கின்றார்.

உலகமெங்கும் பல நாடுகளில் தமிழ் மொழி பேசப்படுவதால், தமிழுக்கெனப் பொது ஒலிப்புமுறை என்ற கருத்தினையும் அடிகளார் முன்வைக்கின்றார். இது அவருடைய மொழியியல் அணுகுமுறையின் வெளிப்பாடாகும்.

தமிழ் உலகமொழியாவதற்கான தகுதியுள்ளது எனவும் தமிழின் தனித்தன்மைகளையும் வளங்களையும் உலகமெங்கும் ஆங்கிலம் வாயிலாகப் பரப்ப வேண்டுமெனவும் குறிப்பிடுகின்ற அடிகளாரின் பார்வை முழுக்க அறிவியலை அடிப்படையாகக் கொண்டது. 1934-39ஆம் ஆண்டுகளில் ரோம் நகரில் கிறிஸ்தவ இறையியல் கல்வி பயின்றபோது அவர் பெற்ற பரந்த உலகியல் தொடர்பும், பின்னர் அவர் கற்ற உலக மொழிகளும் தமிழ் பற்றிய அவருடைய கருத்தியலை வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றியுள்ளன.

தமிழ் பற்றிய அடிகளின் கருத்துப் பன்முகத்தன்மையுடையது. “நம் எண்ணங்களை வெளிப்படுத்தும்பொழுது, பிறமொழிக் கலப்பின்றி வெளிப்படுத்த முயலுவோமாகில், நம் மொழி வளம் பெறுவதற்கும், நம் இலக்கியம் உயர்வதற்கும் வழிகாட்டுவோம்". பிறமொழிக் கலப்பின்றித் தமிழைப் பயன்படுத்த வேண்டுமென்ற நோக்குடைய அடிகளார், மொழித்தூய்மை என்ற பெயரில் நடைபெறும் வறட்டுத்தனமான செயல்களையும் கண்டிக்கின்றார். “செந்தமிழ் இயக்கத்தை விரும்பிப் பழைய இலக்கியத்தில் வரும் வடசொற்களின் இடத்தில் தமிழ்ச் சொற்களைப் பெய்து பதிப்பிக்கும் முறைகேடு ஒன்று, அண்மையில் தோன்றியுள்ளது. சிறப்பாக மாயூரம் மாவட்ட நீதிபதி வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் போன்ற நூல்கள், இக்கொடிய மருத்துவச் செயலுக்கு இலக்காயின". அடிகளாரின் பார்வையில் சமூக விமர்சனம் பொதிந்துள்ளது. சமூக மொழியின் அழகே அதன் கொச்சை வடிவமாகும். வாழ்க்கையின் பல்வேறு விசித்திரங்களும் நூதனங்களும் பதிவாகிவிடும் மொழியின் வழியே படைப்பாளியின் உச்சபட்ச சாதனை வெளிப்படுகின்றது. இயந்திர ரீதியிலான மொழித் தூய்மையானது வறட்டுத்தனமானது; மொழியின் வளர்ச்சிக்குக் குந்தகம் விளைவிப்பதாகும்.

தமிழரின் தொன்மை அடையாளங்கள்

அடிகளாரின் ’ஒன்றே உலகம்’ புத்தகம் அவர் உலகமெங்கும் பயணித்த அனுபவங்களைப் பதிவாக்கியுள்ளது. 1930கள் தொடங்கிச் சில பத்தாண்டுகளாகப் பல்வேறு நாடுகளுக்குச் சென்ற அடிகளாரின் கவனம், அந்த நாடுகளுக்கும் தமிழ்/ தமிழ்நாட்டுக்கும் இடையிலான தொடர்புகளைக் கண்டறிவதில் முனைந்திருந்தது. அவர் தந்துள்ள தகவல்கள் தமிழாய்வில் தனித்துவத்தை வலியுறுத்துகின்றன. எங்கே சென்றாலும் அவர் விவரித்துள்ள கட்டுரைகளில் தமிழ்மீது கொண்டிருந்த அக்கறையும் ஈடுபாடும் வெளிப்பட்டுள்ளன. தமிழரின் தொன்மையான அடையாளங்கள் சிந்து சமவெளி நாகரிகம் பரவியிருந்த இடத்தில் இன்றும் எச்சமுடன் காணப்படுவதை அடிகளார் விளக்குகின்றார். மேலும் ஜப்பான் மொழிக்கும் தமிழுக்குமிடையில் சில அம்சங்களில் ஒற்றுமை நிலவுவதையும், நுணுக்கமாகச் சுட்டுகின்றார். ஹவாய் தீவுகளில் மலர்களையும் மாலைகளையும் பெரிதாகப் போற்றுவதைக் கண்டபோது அடிகளுக்குச் சங்க இலக்கியக் காட்சிகள் நினைவில் தோன்றுகின்றன. கீழ்த்திசை நாடுகளில் புத்த சமயத்தைப் பரப்புவதற்கும் வணிகத்தைப் பெருக்குவதற்கும் பண்டைக் காலந்தொட்டே தமிழர்கள் தொடர்புகொண்டிருந்தனர். தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் திருவெம்பாவை பாடப்படுவதைக் கண்டறிந்து உலகிற்கு அறிவித்தவர் அடிகளே ஆவார். தாய்லாந்து மொழியிலுள்ள சொற்கள், அங்குள்ள பழமையான கோபுரங்கள், ஓவியங்கள் போன்றன தமிழகத்திற்கும் தாய்லாந்து நாட்டிற்கும் இடையிலான நெருங்கிய உறவினை எடுத்துரைக்கின்றன. இந்தோனேஷியா, வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகளில் இன்றளவும் காணப்படும் தமிழ்ப் பண்பாட்டின் எச்சங்களை விளக்குவதன்மூலம், தமிழ் அனைத்துலக மொழியாகப் பரிணமிப்பதின் தேவையை அடிகள் விளக்கியுள்ளார். இந்தோனேஷியா மொழியில் வழங்கும் சில சொற்கள் முன்னர் தமிழ்நாட்டுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்ததை நினைவூட்டுகின்றன என்று குறிப்பிடும் அடிகளார், தந்துள்ள சான்றுகள்: சுக்கு, இஞ்சி, கலம், கடலி, வட்டில், வாடை, கஞ்சி, கொத்துமல்லி, குதிரை, கூடை, பெட்டி, பிட்டு, கொடி(தாலி), கபல்(கப்பல்), அம்மா, அக்கா, மாமா, தம்பி.

பிஜித் தீவு, மொரிஷியஸ், தென்னாப்பிரிக்கா போன்ற பல்வேறு நாடுகளில் குடியேறியிருப்பதன் மூலம் தமிழரின் வரலாறு விரிகின்றது. இத்தகைய குடியேற்றச் சூழலை ஆராய்வதன் மூலம் தமிழர் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யவியலும் என்று அடிகளார் கருதுகின்றார்.

அடிகளார் ஆசிரியராக இருந்து வெளியிட்ட Journal of Tamil Studies இதழில் வெளியான 'இருபதாண்டு காலத் தமிழ் ஆய்வுகள்’ கட்டுரை பன்முகத்தன்மையுடன் அரிய தகவல்களின் தொகுப்பாக உள்ளது. கடந்த இருபதாண்டுகளில் உலகமெங்கும் பல்வேறு பல்கலைக் கழகங்கள், ஆய்வு மையங்கள், அறிஞர்கள் தமிழாய்வில் கவனம் செலுத்தி வருவதனைத் தக்க சான்றுகளுடன் கட்டுரையில் அடிகளார் விளக்கியுள்ளார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவில் இடம்பெற்றிருந்த அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம் ஆகிய மொழிகளுக்கு மட்டும் முன்னுரிமை தரப்பட்டது. இந்நிலையானது 1965ஆம் ஆண்டு மாற்றமடைந்துள்ளது. பதினெட்டுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் தமிழ் கற்பிக்கப்படுகிறது என்பதை விளக்கிடும் வகையில் அட்டவணை தரப்பட்டுள்ளது. இலண்டன், ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ், லைடன், சார்லஸ், உப்சிலா பல்கலைக்கழகங்களில் தமிழாய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்சமயம் ஹைடல்பெர்க், போன், ஸ்டாக் ஹோம், மலேயாப் பல்கலைக்கழகங்களிலும் தமிழுக்குரிய இடம் தரப்பட்டுள்ளது. தமிழ்நாடு தவிர்த்த பிற மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழாய்வுகள் நடைபெற்று வருவது பட்டியலிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

மேலைநாட்டு அறிஞர்களான பர்ரோ,எமனோ, கமில் சுவலபில் போன்றோர் தமிழாய்வில் தற்சமயம் ஈடுபட்டிருப்பது, தமிழ் மொழிக்கு உலக அளவில் கிடைத்துள்ள அங்கீகாரத்தின் வெளிப்பாடு என்பது அடிகளாரின் கருத்து.

தமிழ்ச் சமூகவியல் உலகச் சமூகவியலுக்கும் தமிழ் இலக்கியம் உலக இலக்கியத்துக்கும் தமிழ் இசை உலக இசைக்கும் தமிழ் மனிதநேயம் உலக மனித நேயத்துக்கும் வளம் சேர்த்திட, உலகப் பல்கலைக்கழகங்களில் தனக்குரிய இடத்தைத் தமிழ் பெற வேண்டுமாயின் தமிழகத்தில் விரிவான அளவில் பல்துறைகளையும் ஒருங்கிணைத்துத் தமிழாய்வுகள் மேறகொள்ளப்பட வேண்டுமென அடிகளார் வலியுறுத்துகின்றார். தமிழரை உலக மனிதராக மாற்றுவதற்கான தொலைநோக்குத் திட்டம் அடிகளாரின் கருத்தில் பொதிந்துள்ளது.

தமிழிலக்கியப் பார்வை

தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகிய நூல்களைத் தமிழின் முக்கியமானவையாக அடிகளார் கருதுகின்றார். பக்தி இலக்கியப் படைப்புகளின் 'இரங்குதலைப்’ பற்றிக் குறிப்பிடுகையில் உலகில் வேறு எம்மொழி இலக்கியத்திற்கும் இத்தகைய சிறப்பில்லை என்று கூறுகின்றார்.

'நில அமைப்பும் தமிழ்க் கவிதைகளும்: செவ்வியல் காலகட்டம் என்ற அடிகளாரின் ஆய்வேட்டில் பண்டைத் தமிழருக்கும் இயற்கைக்கும் இடையிலான தொடர்புகள் நுணுக்கமாக விளக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டு நிலவெளி காடு, மலை, வயல், கடற்கரை ஆகிய நிலப்பரப்பினைக் கொண்டிருந்த தன்மையையும், கோடையில் பாலைபோல மாறிடும் நிலத்தின் இயல்பைக் கருதிப் பாலை என்ற நிலப்பரப்பினையும் ஆக ஐந்து வகை நிலங்களைக் கொண்டிருந்ததை முக்கிய அம்சமாக அடிகளார் எடுத்துரைக்கின்றார். ஐவகை நிலங்களுக்குரிய ஐவகை ஒழுக்கங்களையும் வகுத்து முதல், கரு, உரிப்பொருள்களையும் கண்டறிந்து மனிதனை இயற்கையின் பகுதியாகக் கருதிடும் சங்கக் கவிதைகள் சித்திரிக்கும் உலகு, தமிழுக்கே உரிய கொடையாகும். இலை, தழையிலான ஆடைகளையும் மலர்களையும் மாலைகளையும் அணிந்துகொண்டு வீரம், கொடை, மானத்தினைப் போற்றிய தமிழரின் சமூக வாழ்க்கை பரந்துபட்டது. தமிழர் சமயமானது இயற்கை பற்றிய கருத்தியலுடன் தொடர்புடையது. மரவழிபாடு, பாம்பு வழிபாடு, குன்று வழிபாடு போன்றன முழுக்க இயற்கையுடன் தொடர்புடையன. சங்க மரபு மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான தொடர்புகள் அடிப்படையிலானது. நம்பிக்கைகள், பொது அறிவு, ஒழுக்கம், பழக்கவழக்கங்கள் போன்றன இயற்கையை மையமிட்டுச் சித்திரிக்கப்பட்டுள்ளன. பழந்தமிழர் வாழ்வில் பிரிக்கவியலாத அம்சம் 'இயற்கை’ என்பது அடிகளாரின் ஆழமான நம்பிக்கை.

சங்ககாலத் தமிழ்ப் பாடல்களின் தனித்தன்மையையும் மேன்மையையும் சமஸ்கிருதம், லத்தீன், கிரீக் இலக்கியப் படைப்புக்களுடன் ஒப்பிட்டு நிறுவியுள்ள அடிகளின் பார்வை, ஒப்பியல் அடிப்படையிலானது. தமிழ் இயற்கைப் பாடல்கள் இயற்கையிறந்த அம்சங்களுடன் மேலோட்டமான தொடர்புடையன. சம்ஸ்கிருத, கிரேக்க, லத்தீன் படைப்புகள் இறையியலுடன் நெருங்கிய தொடர்புடையன என்ற துல்லியமான வரையறை, அடிகளாரின் ஆய்வுத் திறனுக்குச் சான்றாகும்.

பண்டை இலக்கியப் படைப்புகளை நவீனப் போக்குகளின் அடிப்படையில் ஆராய்தலும் அடிகளாருக்கு ஏற்படையதாகும். பழந்தமிழ் இலக்கியத்தில் கல்வி பற்றி விளக்கும்போது, குறிஞ்சி நிலத்தில் அகவன் மகள் மூலம் கல்வி பரவியது என்கிறார். மனிதனுக்குச் சவாலாக விளங்கிய இயற்கையின். ஆற்றலைக் கண்டு அஞ்சியவரின் அச்சத்தைப் போக்கிடவும் மந்திரமோதி நோய் தீர்த்திடவும், எதிர்காலம் உரைத்திடவும், வளம் பெற வழியுரைத்திடவும் விளங்கிய அகவன் மகளின் பணி, கல்விச் சிந்தனைக்கு வித்திட்டது என்பது அடிகளாரின் கருத்து. பின்னர்ப் பாணர்கள் மூலம் வாய்மொழி இலக்கியம் பரவத் தொடங்கியது. பாணர்கள், இசை, நாட்டியம், புகழ்ச்சிப் பண் மூலம் சமூக இயக்கத்தில் கலந்திருந்தனர். இனக்குழு மக்களின் கடந்தகால வீரச்செயல்களையும் நிகழ்கால விருப்பங்களையும் வெளியிடும் குரலாகப் பாணர் விளங்கினர்.

குறுநில மன்னர்களின் ஆதிக்கம் சமூகத்தில் வலுப்பெற்றபோது, ’புலவர்’ பரம்பரையினர் மூலம் கல்வியானது மக்களிடையே பரவியது என்று அடிகள் புதிய விளக்கம் தருகின்றார், அடிகளார். புலவர்கள் மரபுசார் நிலையிலும் மரபுசாரா நிலையிலும் கல்விப் பணியாற்றியுள்ளனர். இன்னொருநிலையில் சமுதாயத்தின் சட்டகங்களை வடிவமைக்கின்றவர்களாகவும் அறத்தினை வலியுறுத்துகின்றவர்களாகவும் புலவர்களின் செயற்பாடுகள் விளங்கின. மன்னர்களுக்கும் புலவர்களுக்குமிடையில் நிலவிய உறவு, அன்றைய சமூகத்தில் கல்விக்கு இருந்த செல்வாக்கின் வெளிப்பாடுதான். மனிதனை முழுமையாக்குவதும் உலகத்தாரால் அவன் ஏற்றுக்கொள்ளப்படுவதும் கல்வியினால் சாத்தியமென்று புறநானூற்றுப் பாடல்மூலம் தமிழரின் கல்வியியல் சிந்தனைகளை வடிவமைத்துள்ளார் அடிகள். பண்டைக்காலத் தமிழ்ச் சமுதாயத்தில் கல்வி, கல்வியியலாளர் பற்றி அறிவியல் அடிப்படையில் நுணுகி ஆராய்ந்திடும் அடிகளாரின் முனைவர் பட்ட ஆய்வேடு, தமிழர் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்துள்ளது.

அடிகளின் ஆய்வுக் கட்டுரைகள்

ஆய்வின் அண்மைக் காலத்திய போக்குகளை வெளிப்படுத்தும் வகையில் ஆய்வுக் கட்டுரைகள் விளங்குகின்றன. சர்வதேசரீதியில் தமிழாய்வு குறித்து ஆங்கிலத்தில் தொடர்ந்து ஆய்வுக் கட்டுரைகளை அடிகளார் எழுதியுள்ளார். அவை நுண்மாண் நுழைபுலம் மிக்கனவாக அழுத்தமான கருத்துகளைப் புதிய தடத்தில் வெளிப்படுத்துகின்றன. அவரது சில ஆய்வுக் கட்டுரைகளின் தலைப்புகள் பின்வருமாறு: தமிழ்க் கையெழுத்துச் சுவடிகள், தெற்காசியாவில் தமிழ்ப் பண்பாட்டின் தாக்கம், பண்டைத் தமிழ்ச் சமுதாயத்தில் கல்வியாளர்கள், சங்க இலக்கியத்தில் மெய்யியல் வளர்ச்சி, தமிழில் அச்சேறிய முதல் நூல், தமிழகத்தில் பண்டைய ஜைன, புத்த போதனைகள், தமிழ் மனிதநேயம், தமிழ் கிரேக்க அறக்கொள்கைகள்: ஒப்பாய்வு, செவ்வியல் காலகட்டத்தில் தமிழக - ரோம் வணிகம், தமிழ் இலக்கியத்தில் கத்தோலிக்க சமயத்தின் பங்களிப்பு, தென் இந்தியாவில் சமயக் கலை, சென்னை நகரத்து நாவலாசிரியர், திரு.வி.க.வின் இயற்கையும் இயற்கையியலும், மாட்னிக்குத் தமிழர் பயணங்கள், இருபது ஆண்டுகளில் தமிழாய்வுகள், தொல்காப்பியம் தொன்மையான ஆவணம்... தமிழரின் மரபினையும் விழுமியங்களையும் உலக அளவில் அறிஞர்களிடையே பரப்பிட அடிகளார் செய்திட்ட முயற்சிகளை ஆய்வுக் கட்டுரைத் தலைப்புகள்மூலம் அறிய முடிகின்றது. இவருடைய கட்டுரைகளின் போக்குகள் பொருத்தமான ஆதாரங்கள், தரவுகளின் அடிப்படையில் காரணகாரியத்துடன் விவாதத்தைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளன.

அடிகளார் எழுதிய ‘தொல்காப்பியம்: தொன்மையான ஆவணம்’ என்னும் ஆய்வுக் கட்டுரை, இலக்கண ஆய்வில் அழுத்தமான கருத்துகளை முன்வைத்துள்ளது. உலக மொழிகளில் வெளியான சிறப்பான நூல்களைப் படித்தறிந்தும், எழில்மிக்க உலக வரலாற்றுச் சின்னங்களைக் கண்டறிந்துமுள்ள அடிகளார், தொல்காப்பியத்தைக் கைகளில் ஏந்தி விவரிக்கும்போது ஏற்படும் கிளர்ச்சி வேறு எந்த நூலாலும் ஏற்படுவதில்லை என்று அடிகளார் வாக்குமூலம் தந்துள்ளார். பொதுவாக அடிகளார் தன்னை மறந்து உணர்ச்சி வயப்படுதலோ வெற்று ஆரவாரச் சொற்களைச் சொல்லுவதோ கிடையாது. ஆனால் தொல்காப்பியத்தின் சிறப்பு அம்சங்கள், அவருக்குள் விளைவித்துள்ள தாக்கத்தினால், அதன் சிறப்புகளை நுணுக்கமாக எடுத்துரைக்கின்றார்.

இனக்குழு மக்களிடையே இன்றும் வழக்கிலுள்ளதைப் போலத் திருமணத்திற்கு முன்னரே காதலர்கள் உறவு கொள்ளுதல் சங்க காலத்தில் நிலவியது என்பதனை அடிகளார் ஏற்றுக் கொள்கின்றார். ஐந்திணைப் பாகுபாடே தொடக்ககாலத்தில் வழக்கிலிருந்தது என்பதும் பின்னர்க் கைக்கிளை, பெருந்திணை ஆகிய இரு திணைகளும் சேர்க்கப்பட்டன என்பதும் அடிகளாரின் கருத்து. தொல்காப்பியம் நூலில் செய்யுளியல் அதிகாரத்தில் செய்யுள் இயற்றுவது குறித்து விளக்கப்பட்டுள்ள நுட்பமான கருத்துக்கள், புலவர்களின் கற்பனைத் திறனை வரையறுப்பவை என்று அடிகளார் முடிவெடுக்கின்றார். தொல்காப்பியம் இலக்கண நூலாக மட்டுமின்றி, பண்டைத் தமிழகத்தின் நிலப்பரப்பு, மரங்கள், உயிரினங்கள், தட்பவெட்பநிலை எனச் சுற்றுப்புறச் சூழல் பற்றிய அம்சங்களையும், பண்பாட்டுக் கூறுகளையும் பதிவாக்கியுள்ளது முக்கியமானதாகும். மேலும் திணைக்கேற்ப மக்களிடையே பிரிவுகள் தொழில்கள், உணவு தேடல், சமூக வாழ்க்கை பற்றிய தொல்காப்பியரின் சித்திரிப்புகள், தமிழரின் இருப்புப் பற்றிய பதிவுகளுக்குச் சான்றாக விளங்குகின்றன. தொல்காப்பியம் வடமொழிச் சார்பு இல்லாமல் தமிழ்மொழி தனித்தியங்கும் என்ற கொள்கையின் அடிப்படையில் எழுதப்பட்டது என்று தக்க சான்றுகளுடன் நிறுவியுள்ளார் அடிகளார்.

தனிநாயகம் அடிகள் தன் சொந்த வாழ்க்கையில் பூக்களைப் போற்றி நேசித்தவர். சங்க காலத் தமிழரின் வாழ்க்கையானது முழுக்கப் பூக்களுடன் தொடர்புடையது என்பதைத் ’தமிழர் வாழ்வில் இயற்கையுடன் பூக்கள்’ என்ற கட்டுரையில் பதிவாக்கியுள்ளார். இணைந்து வாழும் தமிழர் இயற்கைச் சூழலைப் போற்றினர். குழந்தை முதல் தடவையாகத் தந்தையைக் காணும்போது, அவர் கழுத்தில் போருக்குரிய பூ மாலை அணிந்திருந்த காட்சி, குழந்தையின் முன் உச்சிக் குடுமியில் பூக்களைச் சூடுதல், குழந்தைகள் பூக்களால் ஆன பொம்மைகளை வைத்து விளையாடுதல், பூக்களாலும் இலைகளாலும் செய்யப்பட்ட ஆடைகளை உடுத்திக் கொள்ளுதல்... தமிழரின் வாழ்வு முழுக்கப் பூக்களுடன் தொடர்புடையது என்று நிறுவுகின்றார், அடிகளார். வேங்கை மரம் பற்றிய தமிழரின் நம்பிக்கைகள் முக்கியமானவை. வேங்கை மரத்தைப் பார்த்து வேங்கை அல்லது புலி என்று குரலெழுப்பினால், அம்மரம் கிளையைத் தாழ்த்தும் என்பது மக்களிடையே நம்பிக்கை. மணமக்கள் வேங்கை மலர்களால் தங்களை அலங்கரித்துக்கொள்வர். களவுக்காலத்தில் வேங்கை மலர்களையே காதலர்கள் ஒருவருக் கொருவர் கையுறையாகக் கொடுக்க விரும்பினர். திருமணச் சடங்கில் பூக்கள் பயன்பட்டன. காதலில் தோல்வியுற்ற தலைவன் எருக்க மாலையணிந்து மடலேறினான். கிராமங்கள் வழியே பயணம் செய்யும் மக்களுக்கு மலர்கள் வழங்கப்பட்டன. அரசர்களின் அடையாளங்களைக் குறிக்கப் பூக்கள் பயன்பட்டன. போர்க்களம் செல்லும் தமிழர்களும் பூக்களை அணிந்திருந்தனர். இயற்கையின் கொடையான பூக்களைத் தமிழர்கள், நடைமுறை வாழ்க்கையின் அங்கமாகக் கருதினர். தமிழருக்கும் பூக்களுக்குமான உறவினை விளக்கியுள்ள அடிகளாரின் கட்டுரை, பன்முகத்தன்மையுடையது.

தமிழ் ஆவணங்கள் தேடல் இலக்கியப் படைப்புகளை ஆராய்வதுடன், ஆய்விற்கான மூலங்களை அடிப்படைக் கண்டறிதலும் தேவையாகும். உலகமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அடிகளார் மேலைநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழ்/தமிழர் பற்றிப் பல்வேறு உரைகள் ஆற்றியுள்ளார். அப்பொழுது தமிழில் அச்சு வடிவில் வெளியான பழமையான ஆவணங்களைத் தேடினார். காரணமாக அச்சடிக்கப்பட்ட தமிழ் ஆவணங்கள் பற்றிய புதிய அவருடைய அரிய முயற்சியின் தகவல்கள் வெளிவந்தன. போர்ச்சுக்கல் நாட்டிலுள்ள லிஸ்பன் நகரிலுள்ள லிஸ்பன் தேசிய நூலகம், பெலம் நகரிலுள்ள இனவியல் அருங்காட்சியகம், பாரீஸ் நகரிலுள்ள தேசிய நூலகம், ரோம் நகரிலுள்ள மறை பரப்புப் பணி பேராய நூலகம், அமெரிக்கப் பல்கலைக்கழக நூலகங்கள் போன்றவற்றுக்குச் சென்று தமிழில் வெளியான தொன்மையான நூல்களைத் தேடியலைந்தார், அடிகளார். அவரின் கடும் முயற்சி காரணமாகக் கண்டறியப்பட்ட சில நூற்களின் விவரங்கள் பின் வருமாறு:

1.            1550 ஆம் ஆண்டு என்ரீக்கோ என்றீக்கல் அடிகள் எழுதிய தமிழ்மொழி இலக்கண நூலின் 160 பக்க கையெழுத்துப்படி லிஸ்பன் தேசிய நூலகத்திலிலுள்ளது.

2.            தமிழ்ச் சொற்களை ரோமன் எழுத்துக்களில் பெயர்தெழுதியதுடன், போர்த்துக்கீசிய மொழிபெயர்ப்புடன் கூடிய 'கார்த்தில்லியா” என்ற நூல் 1554-ஆம் ஆண்டு வெளியாகியுள்ளது. இந்நூல் பெலம் நகரிலுள்ள இனவியல் அருங்காட்சியகத்தில் உள்ளது.

3.            அந்தாம் நெப்ரேயென்சா (1625-1666) என்றும் கிறிஸ்தவச் சமயத் துறவி இயற்றிய தமிழ்-போர்த்துக்கீசிய அகராதியின் கையெழுத்துப்படி பாரீஸ் தேசிய நூலகத்திலுள்ளது. இது கேரளாவிலுள்ள அம்பலக்காடு என்னும் ஊரில் 1679 ஆம் ஆண்டு அச்சடிக்கப்பட்டு நூல் வடிவில் வெளிவந்துள்ளது. அச்சுப் பிரதி வத்திகான் நூலகத்திலுள்ளது.

4.            என்ரீக்கோ என்றீக்கல் அடிகளும் புனித இராயப்பர் மனுவேல் அடிகளும் இணைந்து மொழிபெயர்த்த 'தம்பிரான் வணக்கம்’ என்னும் நூல் கேரளத்திலுள்ள கொல்லத்தில் 1574ஆம் ஆண்டு அச்சடிக்கப்பட்டு வெளியானது. இந்நூலின் பிரதி அமெரிக்காவிலுள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழக நூலகத்திலுள்ளது.

5.            கிரிசித்தியாணி வணக்கம் என்ற மொழிபெயர்ப்பு நூலினை 1579-ஆம் ஆண்டு என்ரீக்கோ என்றீக்கல் கொச்சியிலிருந்து வெளியிட்டார். இந்நூலின் பிரதி பிரான்ஸ் நாட்டிலுள்ள செர்போன் பல்கலைக் கழக நூலகத்திலிருந்தது. பின்னர் அது காணாமல் போய்விட்டது. எனினும் அப்பிரதியின் ஒளிப்பட நகல் அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக்கழக நூலகத்திலுள்ளது.

அச்சியந்திரம் மூலம் பல பிரதிகள் அச்சடிக்கப்பட்டுத் தமிழ் ஆவணங்கள் வெளியான பின்னரும் அவை பாதுகாக்கப்படாத நிலையே தமிழகத்திலிருந்தது. மேலைநாட்டு நூலகங்களில் காத்து வைக்கப்பட்டுள்ள இத்தகைய ஆவணங்களைப் பற்றிய தகவல்களை வெளிக்கொணர்ந்ததில், அடிகளாரின் பணியானது, உ.வே.சா.வின் இலக்கியச் சுவடிகள் தேடுதல் பணிபோன்று மதிப்பு மிக்கது. தமிழ் ஊடகங்களின் வரலாற்றில் அச்சுக் கலைத் தோற்றம், கிறிஸ்தவ இறையியல் பரப்புதல், மொழிபெயர்ப்பு முயற்சிகள் போன்ற ஆய்வுகளில் அடிகளார் கண்டறிந்த நூற்கள் பற்றிய தகவல்கள் என்றும் மூலங்களாக விளங்கும்.

பார்வை நூல்கள்

அடிகள் தமிழாய்வில் முனைந்திருந்தபோதும், முதன்மை ஆதாரங்களைப் பற்றிய தகவல்களைத் தீவிரமாகத் தொகுப்பதிலும் அக்கறைகொண்டிருந்தார். தமிழ்/தமிழர் பற்றி ஐரோப்பிய மொழிகளில் வெளியாகியுள்ள நூல்களைத் தொகுப்பதன்மூலம் சர்வதேசரீதியில் தமிழ் மொழியைக் கவனத்திற்குக் கொண்டுவர முயன்றார் அடிகளார். A Reference Guide to Tamil Studies தொகுப்பு நூல் 1966ஆம் ஆண்டு மலேயாவில் அடிகளாரால் வெளியிடப்பட்டது 122 பக்கங்களைக் கொண்ட இப்பார்வை நூலில் 1335 நூற்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. இலத்தீன், பிரெஞ்சு, ஜெர்மனி, செக், மலாய், ரஷ்யன், ஸ்வீடிஷ், இத்தாலி, போர்த்துக்கீசு, சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் தமிழியல் பற்றி வெளியான நூற்கள் பற்றிய தகவல்களின் தொகுப்பாக நூல் விளங்குகின்றது. தமிழோடு தொடர்புடைய பிறதுறை நூற்கள் பற்றிய தகவல்களும் நூலில் இடம்பெற்றுள்ளன. தமிழாய்வில் ஈடுபட முனைந்திடும் வெளிநாட்டவருக்குப் பார்வை நூலாக அடிகள் தொகுத்த நூல் என்றும் விளங்கும் என்பது உறுதி.

Tamil Studies abroad என்ற நூலானது 1968-ஆம் ஆண்டு அடிகளால் வெளியிடப்பட்டது. இந்தியாவில் பிற மாநிலங்களிலும் பிற நாடுகளிலும் நடைபெற்று வரும் தமிழாய்வுகள் குறித்த தகவல்கள் நூலில் இடம்பெற்றுள்ளன. உலக அளவில் தமிழாய்வின் பரந்துபட்ட இடத்தினை அறிஞர்களிடையே அறிவித்திட உதவும் இப்பார்வை நூல், இன்னொரு நிலையில் தமிழாய்வை மேற்கொள்ளப் பிறமொழி அறிஞர்களைத் தூண்டுவதாகவும் அமைந்துள்ளது.

அடிகளார் திறனாய்வின் முக்கிய அம்சங்கள்

1.            தமிழ் அனைத்துலக மொழி, தமிழரின் பண்பாடு வரலாற்றுச் சிறப்புடையது. உலகமெங்கும் தமிழர் பரவியுள்ளமையினால் தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்கள், ஆங்காங்கே பதிவாகியுள்ளன.

2.            தொல்காப்பியம் தமிழ் மொழியின் தனித்துவமான இலக்கண நூலாகும். தமிழின் வளத்தையும் தமிழரின் பண்பாடு, நிலவியல், சுற்றுப்புறச் சூழல், சமூகவியல் பற்றிய ஆழமான பதிவுகளையும் கொண்டது. கவிதையியல் பற்றிய நுட்பமான செய்திகளை வெளிப்படுத்துகிறது.

3.            பண்டைத் தமிழர் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தனர். அவர்தம் வாழ்வில் ஒவ்வொரு காலகட்டத்திலும் பூக்கள் இடம் பெறுகின்றன. இயற்கைக்கும் தமிழருக்குமான தொடர்பு, உலக இலக்கியப் பரப்பில் தனித்துவமானது.

4.            கிரேக்கக் காப்பியங்களுடன் ஒப்பிடத்தக்க சிலப்பதிகாரம் தமிழரின் கலையியல், சமயம் பற்றிய கருத்தியல் வெளிப்பாட்டின் முக்கிய அம்சமாகும்.

5.            கன்பூசியஸ் போன்றோர் போதிக்கும் அறநெறியை விடத் திருக்குறள் மேன்மையானது.

6.            திராவிட மொழிக் குடும்ப மொழிகளைப் பற்றியும் தமிழ் மொழி பற்றியும் தொடர்ந்து ஆங்கிலம் வழியாக ஆய்விதழ்களில் எழுதுவதன்மூலம் தமிழ், சர்வதேச அறிஞர்களிடையே கவனம் பெறும்.

7.            தமிழாய்வை ஆங்கிலம் உள்பட மேலைநாட்டு மொழிகளில் நிகழ்த்துதல் வேண்டும். இதன்மூலம் உலக அறிஞர்களின் பார்வை தமிழாய்வின் பக்கம் திரும்பும்; தமிழுக்குச் சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும்.

8. தமிழகத்திற்கும் தென் கிழக்காசிய நாடுகளுக்குமிடையில் நிலவியல், அரசியல், பண்பாடு, சமயம், மொழியியல் உறவுகளை வெளிப்படுத்துவதன் மூலம் அறிஞர்களை அத்துறையில் ஆய்வுகளை மேற்கொள்ள வழிவகுத்தல்.

9.            தமிழாய்வு என்பது மொழி, இலக்கியம் பற்றிய ஆய்வு மட்டுமன்று; இனம், சமயம், மொழியியல், மானுடவியல், சமூகவியல், வரலாறு, அகராதியியல், நாட்டுப்புறவியல் போன்ற பல் துறைகளும் ஒருங்கிணைந்தது ஆகும்.

அடிகளாரின் அடிப்படை நோக்கங்கள்

தமிழ்/தமிழர் பற்றி வாழ்நாள் முழுவதும் ஆக்கரீதியில் சிந்தித்த அடிகளாரின் அடிப்படையான நோக்கங்கள் பின்வருமாறு:

1.            கன்பூசியஸ், செனக்கா போன்ற அறநூல் ஆசிரியர்களின் படைப்புகளைப் போலத் திருக்குறள் நூலும் உலகமெங்கும் பரவிட வகை செய்திடல் வேண்டும்.

2.            ஹோமரின் ஒடிசியையும் வெர்ஜினியின் இலியத்தையும் போலச் சிலப்பதிகாரத்தையும் உலகம் போற்றுமாறு செய்திடல் வேண்டும். தமிழின் தனிச்சிறப்பான காப்பியமான சிலப்பதிகாரம் பல்வேறு சிறப்புகளை உடையது.

3.            சாபோ, சேக்ஸ்பியர் போன்றோரின் காதற் பாக்களைவிட உயர்வான சங்க இலக்கியப் பாடல்கள் உலகமெங்கும் பரவுதல் வேண்டும்.

4.            உலக இலக்கியத் திரட்டு நூல்களில் தமிழ் இலக்கியப் படைப்புகளும் இடம்பெறும் வகை செய்திடல் வேண்டும்.

5.            தமிழுக்குப் பொது ஒலிப்புநிலை வேண்டும்.

6.            உலகமெங்கும் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ்/தமிழர் தனித்தன்மைகளை உலகுக்கு அறிவிக்குமாறு ஆவன செய்திட வேண்டும்.

அடிகளாரின் ஆய்வுப்போக்குப் பன்முகத் தன்மையுடையது. அவருடைய ஆய்வில் கடந்த காலம் குறித்த ஆழமான விமர்சனக் கண்ணோட்டமும் எதிர்காலம் குறித்த நுட்பமான தேடலும் பொதிந்திருக்கின்றன விருப்புவெறுப்புகளுக்கு இடந்தராமல் அறிவியலடிப்படையில் தரவுகளைத் திரட்டித் தருக்கரீதியில் ஆராய்ந்திடும் போக்கு அடிகளாரின் திறனாய்வில் அடிப்படை அம்சமாகும். மாறிவரும் புதிய உலகத்தின் தேவைக்கேற்பவும், ஏற்கனவே தேங்கிப் போயுள்ள சூழலைத் தகர்த்தெறியவும் அடிகளாரின் ஆய்வுகள் முயன்றன. நவீனப் போக்குகளின் தன்மைகளுக்கேற்ப, பண்டைய தமிழிலக்கியத்தின் சிறப்புகளை எடுத்துரைப்பதில் அடிகளார் சிறந்து விளங்கினார். அடிகளாரின் முயற்சி காரணமாகச் சர்வதேசரீதியில் மேலைநாட்டு அறிஞர்களின் கவனம், தமிழாய்வின் பக்கம் பெருமளவில் திரும்பியது. தமிழ் / தமிழர் குறித்த திறனாய்வில் தனிநாயகம் அடிகளாரின் இடம் என்றும் முக்கியமானதாக விளங்கும்.

- ந.முருகேச பாண்டியன்