விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகில் உள்ள முதலிப்பட்டி - ஓம்சக்தி பயர் ஒர்க்ஸ் என்கிற பட்டாசு தொழிற்சாலையில் 05.09.2012 அன்று பிற்பகல் சுமார் 12.10 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் 38 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் கடுமையான தீக்காயங்களுடன் சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை, மதுரை ஆகிய அரச மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து எமது எவிடன்ஸ் அமைப்பின் உண்மையறியும் குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரடியாகச் சென்று களஆய்வு மேற்கொண்டனர். களஆய்வில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இப்பத்திரிக்கைச் செய்தி  வெளியிடப்படுகிறது.

ஓம்சக்தி பட்டாசு தொழிற்சாலையில் வெடி உருட்டு, ராக்கெட், சங்கு சக்கரம் உள்ளிட்ட பல்வேறு பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. முருகேசன் என்பவருக்கு சொந்தமான இப்பட்டாசு தொழிற்சாலையை பால்பாண்டி என்பவர் குத்தகை எடுத்து நடத்தி வந்துள்ளார். பட்டாசு உற்பத்தி செய்யப்படுகிற அறை, மருந்து லோடு வைக்கிற அறை, பதப்படுத்தப்பட்ட பட்டாசுகள் வைக்கிற குடோன் என்று சுமார் 55 கட்டிடங்களைக் கொண்டது ஓம்சக்தி பட்டாசு தொழிற்சாலை. ஆனால் 35 கட்டிடங்களுக்கு மட்டுமே கட்டுவதற்கு இத்தொழிற்சாலைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. சுமார் 120 தொழிலாளர்கள் பணி செய்ய அனுமதித்த இத்தொழிற்சாலையில் சுமார் 320 தொழிலாளர்கள் பணி செய்து வந்துள்ளனர். திருத்தங்கல், வாடியூர், செல்லைநாயக்கன்பட்டி, நாரணாபுரம், சங்கரலிங்கபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இங்கு வேலை செய்து வந்துள்ளனர். இவர்களில் 50 தொழிலாளர்கள் மட்டும் இ.எஸ்.ஐ. விதிகளுக்கு உட்பட்டு உள்ளனர். இறந்து போனவர்களில் 90 சதவீதத்திற்கு மேற்பட்டோருக்கு இ.எஸ்.ஐ. இல்லை.

இந்நிலையில் கடந்த 05.09.2012 அன்று பிற்பகல் 12.10 மணியளவில் ஓம்சக்தி பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு செய்கிற போது வெடி மருந்து உராய்வினால் இவ்விபத்து ஏற்பட்டிருக்கிறது என்று சொன்னாலும் விபத்திற்கான உண்மைக் காரணம் ஆராயப்பட்டு வருகின்றன. குறிப்பாக கெமிக்கல் குடோன் மற்றும் ரசாயன துகள்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள குடோன் ஆகிய இரண்டு அறைகளின் கடும் பாதிப்பினால் அதிகளவு உயிர் சேதம் ஏற்பட்டிருப்பது தெரிய வருகிறது. தீ விபத்து ஏற்பட்டவுடன் அங்கு பணி செய்த பல தொழிலாளர்கள் உயிர் பயத்துடன் பயந்து கொண்டு சிதறி ஓடியுள்ளனர். இவர்களில் சிலர் விபத்தினால் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோன்று விபத்தினால் காயமடைந்தவர்களை காப்பாற்றுவதற்காக ஓடிவந்த பொது மக்களும் பலர் கொல்லப்பட்டுள்ளனர். பட்டாசு விபத்தில் ராஜா என்கிற 16 வயது சிறுவன் முதல் 50 வயது அந்தோணி ராஜ் வரை இதுவரை 38 பேரை பலியாகியுள்ளனர்.

ஓம்சக்தி பட்டாசு தொழிற்சாலையில் எவ்வித பணி பாதுகாப்பு சாதனங்களும், தொழிலாளர் பாதுகாப்பிற்கான உத்திரவாத கருவிகளும் இல்லை. குறிப்பாக எந்தெந்த மருந்துகளுக்கு எந்தெந்த அறைகளை பயன்படுத்த வேண்டுமென்கிற நிபுணத்துவ திட்டமிடல் இங்கு இல்லை. உதராணத்திற்கு அலுமினிய ஒயிட் பவுடர் ஈரப்பதத்துடன் வைத்திருக்க வேண்டும். அலுமினிய பிளாக் பவுடர் தண்ணீர் படாமல் மிகவும் பாதுகாப்புடன் காய்ந்த நிலையில் வைத்திருக்க வேண்டும். ஆனால் இத்தொழிற்சாலையில் இதுபோன்ற விதிகள் கடைபிடிக்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் பட்டாசு தொழிற்சாலையில் வேலை செய்யக்கூடிய தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்கிற விதிமுறை உள்ளது. இங்கு வேலை செய்யக்கூடிய எந்த தொழிலாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படவில்லை. குறிப்பாக தொழிலாளர்கள் பலர் தங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்கிற விபரம் கூட தெரியாது என்று கூறுகின்றனர்.

பட்டாசு தொழிற்சாலை விபத்து ஏற்பட்டவுடன் சுமார் 1 மணி நேரம் கடந்து தான் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். இதற்கிடையே பொது மக்களே அப்பகுதிக்குச் சென்ற பலரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். பட்டாசு விபத்துகள் ஏற்படக்கூடிய சிவகாசி பகுதியில் தீயணைப்புத் துறையினரின் பணிகள் சிறப்பு நிபுணத்துவத்துடன் இருந்திருக்க வேண்டும். ஆனால் இப்பகுதியில் உள்ள தீயணைப்பு பணிகள் சாதாரண நிலையில் உள்ளன.

பட்டாசு விபத்தினால் கொல்லப்படுவது ஒரு பக்கம் துயரமான சம்பவமாக இருந்தாலும் இவ்விபத்தில் பாதிக்கப்பட்டோரை காப்பாற்றுவதற்காக சென்ற பலரும் கொல்லப்பட்டுள்ளனர். ஆகவே பட்டாசு விபத்திற்கான விழிப்புணர்வு சிவகாசி பகுதியில் எள்ளளவும் ஏற்படவில்லை என்பது இச்சம்பவம் சிவில் சமூகத்திற்கு உணர வைக்கிறது.

தமிழகத்தில் கடந்த 2011ம் ஆண்டு 20,149 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இவற்றில் சிறிய அளவிலான தீ விபத்துகள் 19,517, சாதாரணமான தீ விபத்துகள் 478, பயங்கரமான தீ விபத்துகள் 154 ஏற்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மட்டும் தீ விபத்தினால் 38 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2010ல் 75 பேரும், 2009ல் 127 பேரும், 2008ல் 69 பேரும், 2007ல் 72 பேரும், 2006ல் 65 பேரும், 2005ல் 99 பேரும், 2004ல் 249 பேரும், 2003ல் 89 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற கோர விபத்துகள் ஏற்பட்டவுடன் அரசின் நடவடிக்கைகள் துரிதமாக இருந்தாலும் நாளடைவில் அலட்சியத்துடன் இருப்பது கண்டனத்திற்குரியது.

பட்டாசு தொழிற்சாலையின் விதிகளும் மீறல்களும்

1.            தொழிற்சாலை விதிகள் 1950 பிரிவு 95ல் பட்டாசு தொழிற்சாலையில் உள்ள பாதைகள் திறந்து வெளிப்பாதையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இங்கு திறந்தவெளி பாதையாக இருந்தாலும் போதிய இடைவெளியுடன் இல்லாமல் 35 கட்டிடங்கள் இருக்க வேண்டிய இடத்தில் 55 கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

2.            3F Rules, schedule 24 Rule-ல் பட்டாசு தொழிற்சாலையின் தரையில் 3 மி.மீ. அளவிற்கு திக்னஸ் கொண்ட ரப்பர் சீட் போட வேண்டும் வரையறுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்ல உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகள் எந்தவிதத்திலும் தீ பிடிக்காத அளவிற்கு தனியாக அறையில் மிகுந்த பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும் என்றும் Rule 7-ல் கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற திக்னஸ் கொண்ட ரப்பர் சீட் போடப்படவில்லை.

3.            தொழிலாளர்கள் பாதுகாப்பு, தொழில் நுட்பதிறன், பாதுகாப்பு ஏற்பாடுகள், காற்றோட்ட வசதி, இட வசதி, பணியாளர்களின் நலன் உள்ளிட்ட வசதிகள் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்படுத்த வேண்டுமென்று தொழிலாளர் நல சட்டம் 1948 மற்றும் வெடி மருந்து சட்டம் 1884 விதிகள் 1993 ஆகியவற்றில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தொழிலாளர் பாதுகாப்பு குறித்து எவ்விதமான கட்டமைப்புகள் இத்தொழிற்சாலையில் ஏற்படுத்தப்படவில்லை.

4.            பட்டாசு தொழிற்சாலையில் வேலை பார்க்கக்கூடிய தொழிலாளர்களுக்கு பட்டாசு உற்பத்தி பாதுகாப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட வேண்டும். ஒரு தொழிலாளருக்கு கூட இப்பயிற்சி அளிக்கப்படவில்லை.

5.            பட்டாசு தொழிலில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தான் ஈடுபட வேண்டும் என்று தொழிலாளர் நலச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இங்கு வேலை பார்த்தவர்களின் வயது விபரம் கண்டறிய முடியவில்லை. இதுகுறித்து அரசு தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

6.            பட்டாசு தொழிற்சாலையின் பணி பாதுகாப்பு, தொழிலாளர் பாதுகாப்பு குறித்து மூன்று மாதத்திற்கு ஒரு முறை Deputy Chief Inspector of Factory அவர்கள் தொழிற்சாலைக்கு தீடீர் விசிட் சென்று கண்காணிக்க வேண்டும் என்று தொழிலாளர் நலச்சட்டம் வலியுறுத்துகிறது. இங்கு முறையான கண்காணிப்பு முறை கடைபிடிக்கப்படவில்லை. உரிமம் ரத்து செய்த தொழிற்சாலையில் பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டு வந்துள்ளது. முறையான கண்காணிப்பு முறை இருந்தால் அதிகளவு தொழிலாளர் இருப்பதும், அனுமதிக்கு அதிகமான கட்டிடங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டிருக்கும்.

7.            20 பேருக்கு மேல் உள்ள தொழிற்சாலையில் அனைத்து தொழிலாளர்களுக்கும் Employee State Insurance போட வேண்டும் என்ற விதிகள் இருக்கின்றது. 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்த இத்தொழிற்சாலையில் 50 பேருக்கு மட்டுமே இ.எஸ்.ஐ. போடப்பட்டுள்ளது.

 

8.            தொழிலாளர்களுக்கான ஓய்வறை, குடிநீர், தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான ஓய்வெடுக்கும் அறை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் பட்டாசு தொழிற்சாலையில் வழங்கப்பட வேண்டும் என்று சர்வ தேசிய தொழிலாளர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

சிவகாசி பகுதி மற்றும் தமிழகத்தில் நடந்த மிக முக்கியமான பட்டாசு விபத்துகளின் பட்டியல்

             கடந்த 24.09.2002ல் கோவில்பட்டி அருகில் உள்ள முடக்கமிட்டான்பட்டி கிராமத்தில் ஏற்பட்ட பட்டாசு  தொழிற்சாலை விபத்தில் 16 பேர் மரணமடைந்தனர். 34 பேர் காயமடைந்தனர்.

             சிவகாசி - மீனாம்பட்டி கிராமத்தில் கடந்த 02.07.2005ல் ஏற்பட்ட பட்டாசு தீ விபத்தில் 20 பேர் மரணமடைந்தனர். 15 பேர் காயமடைந்தனர்.

             சிவகாசி - பர்மா காலனியில் ஏற்பட்ட தீ விபத்தில் 22.02.2006 அன்று 12 பேர் இறந்து போயினர்.

             கடந்த 12.06.2007ல் சிவகாசி - நாராயணபுரம் பகுதியில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 4 பேர் பலியாகினர்.

             கடந்த 07.07.2009ம் ஆண்டு மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகில் உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 19 பேர் பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

             கடந்த 20.07.2009 அன்று சிவகாசி - நமஸ்கரித்தான்பட்டி பகுதியில் ஸ்ரீகிருஷ்ணா பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 18 பேர் பலியாகினர்.

             கடந்த 27.07.2009 அன்று சிவகாசி அணில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியாகினர்.

             கடந்த 16.06.2010 அன்று சிவகாசியில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 7 பேர் பலியாகினர்.

             கடந்த 24.09.2010 அன்று சிவகாசி - மாரணேரி பகுதியில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் ஒரு பெண் தொழிலாளர் பலியாகினார்.

             கடந்த 21.01.2011 அன்று விருதுநகர் அருகில் நடந்த பட்டாசு விபத்தில் 8 பேர் பலியாகினர்.

             கடந்த 26.04.2011 அன்று சிவகாசியில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 2 பேர் பலியாகினர்.

             கடந்த 29.06.2011 அன்று தூத்துக்குடி - குறும்பூர் அருகே நடந்த பட்டாசு விபத்தில் 4 பேர் பலியாகினர்.

             தமிழகத்தில் பட்டாசு தொழிற்சாலை விபத்தில் மிகப் பயங்கரமான விபத்து கடந்த 2002ல் 36, 2003ல் 35, 2004ல் 40 ஏற்பட்டுள்ளது. பயங்கரமற்ற விபத்து 2002ல் 2134, 2003ல் 1908, 2004ல் 1838 விபத்துகளும் ஏற்பட்டுள்ளன.

             சிவகாசி பகுதியில் 650 பட்டாசு தொழிற்சாலைகளில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி செய்து வருகின்றனர்.

             விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கடந்த ஜுலை 2011ல் பட்டாசு விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு பிரிவு ஏற்படுத்துவதற்காக தமிழக அரசிற்கு ரூ.4 கோடி அளவில் புரபோசல் அனுப்பியுள்ளார். தற்போது சிவகாசி அரசு மருத்துவமனையில் தீக்காயங்களுக்கான ஏ.சி. வசதியுள்ள 6 படுக்கைகள் மட்டுமே உள்ளன.

பரிந்துரைகள்

பட்டாசு தொழிற்சாலை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு, தொழிற்சாலையில் அமைக்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள், சுகாதாரம், தொழில்நுட்ப திறன், அறிவு, உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் கொண்டதாக உள்ளதா என்பதை குறித்து உடனடியாக ஆய்வு நடத்தப்பட வேண்டும் ஆய்வில் மேற்க்கண்ட உரிமைகள் கடைப்பிடிக்கப்;படவில்லை அல்லது போதிய அளவிற்கு இல்லை என்று தெரிய வந்தால் தொழிற்சாலையின் உரிமத்தை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்

    பட்டாசு தொழிற்சாலைகளில் ‘பாதுகாப்பு வசதிகளை’ அமைக்க நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்க்கொள்ளவேண்டும் இந்த திட்டத்தில் தொழிலாளர் உரிமை ஆர்வலர்களையும், குழந்தை உரிமை, மனித உரிமை ஆர்வலர்கள், சமூக ஆய்வாளர்கள் வழக்கறிஞர்கள், தொழிற்சங்கவாதிகள் அரசு சாரா அமைப்பினர் உள்ளிட்டவர்களையும் இணைத்து திட்டம் வகுக்கப்பட வேண்டும்

    இறந்துபோனவாகளுக்கு மாநில அரசு ரூ.5,00,000 மற்றும் மத்திய அரசு ரூ.5,00,000 என்று நஷ்ட ஈடு வழங்க வேண்டும் (மத்திய மாநில அரசு பொறுப்பு இருப்பதால்)

    பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.3,00,000 நஷ்டஈடு வழங்க வேண்டும்.

    சிவகாசி பகுதியில் பட்டாசு விபத்தால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு என்று சிறப்பு மருத்துவக் குழுக்களை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சிவகாசி பட்டாசு தொழிற்சாலை விபத்து குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை கமிஷன் அமைக்கவேண்டும். இந்த விசாரணை கமிஷனில்; ஓய்வு பெற்ற நீதிபதிகள், தொழிலாளர் உரிமை வல்லுநர்கள் இடம் பெறுவது அவசியமானது.

    சர்வதேசிய தொழிலாளர் அமைப்பு இதுப்போன்ற சம்பவங்களில் உடனடி தலையிட்டு தேசிய, சர்வதேசிய அளவிற்கு அரசின் பதில் சொல்லும் கடமையை உறுதிப்படுத்தும் அளவிற்கு கவனம் கொண்டுவரப்படவேண்டும்

    இதுவரை இப்பகுதிகளில் பட்டாசு தொழிற்சாலை விபத்தில் இறந்துபோனவர்கள் ஊனமானவர்கள், ஆதரவற்றவர்கள், குழந்தை தொழிலாளர்கள் என்கிற அளவில் கணக்கிடப்பட்டு அவர்களுக்கான மறுவாழ்வு, நீதி, நிவாரணம், குறித்த திட்டங்களில் மத்திய மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் இவையாவும், “Fire Workers Victim Protection Programme” அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்க்கொள்ள வேண்டும்

    சிவகாசி வெடிவிபத்துக்கு மத்திய வெடிமருந்து துறையும், மாநில ‘Inspector of Factor’ துறையும் பொறுப்பேற்று சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

    உடனடியாக ‘Chief Controller of Explosives’ சிவகாசி பகுதிக்கு வந்து – பாதுகாப்பு குறித்த ஆய்வு மேற்க்கொள்ள வேண்டும். 

- ஆ.கதிர், செயல் இயக்குனர், எவிடன்ஸ் அமைப்பு

Pin It