மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டுக்கு சட்டம் கொண்டுவரப்பட்டவுடன் பார்ப்பனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். புதுடில்லியில் உள்ள ‘எய்ம்ஸ்’ என்ற உயர் மருத்துவ பட்டப்படிப்பு ஆராய்ச்சி மய்யம், போராட்டத்தின் மய்யக் களமாக செயல்பட்டது. தேசிய தொலைக் காட்சி ஊடகங்களும், இந்தியாவின் பெரும் தொழிலதிபர்களும், பார்ப்பன தேசிய ஏடுகளும் கட்டுப்பாடாக, இடஒதுக்கீட்டுக்கு எதிரான பிரச்சாரத்தை முடுக்கி, ஆட்சியை மிரட்டினர். ஆட்சியாளர்களும் மிரட்டலுக்கு பணிந்தனர். 

27 சதவீதம் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டால், அதே அளவு திறந்த போட்டிக்கான இடங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்தனர். அதுவும் 27 சதவீத பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டை, முதலில் 9 சதவீதம் மட்டும் 3 ஆண்டுகளில் ஒதுக்குவது என தீர்மானிக்கப்பட்டது. இடஒதுக்கீட்டால் “பாதிக்கப்படும்” மாணவர்களுக்கான கூடுதல் இடங்களை உருவாக்கி, அதற்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திய பிறகே இந்த 9 சதவீத இடஒதுக்கீட்டையும் அமுல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றமும், நிபந்தனை விதித்தது. 2011-12 ஆம் கல்வி ஆண்டுக்குள் இந்த வசதிகளை செய்து முடிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால், அதற்கான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. மத்திய நிதிநிலை அறிக்கையில் கல்விக்கான நிதி ஒதுக்கீடும் மிக மோசமாக குறைக்கப்பட்டுவிட்டது.  

இந்த நிலையில் 27 சதவீதத்தில் முதல் கட்டமாக அமுலாகவிருந்த 9 சதவீத இடஒதுக்கீட்டை மேலும் 3 ஆண்டுகள் தள்ளிப் போட மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் முடிவெடுத்து விட்டதாக அமைச்சக அதிகாரி வசந்த்குமார் மொஹந்தி என்பவர் அறிவித்துள்ளார். ஆக 6 ஆண்டுகளாக உயர்கல்வி நிறுவனங்கள், 27 சதவீத இடஒதுக்கீட்டுக்கான சட்டம் உருவான பிறகும் அமுல்படுத்தப்படாத நிலை தொடருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான வாய்ப்பு உரிமைகள் தட்டிப் பறிக்கப்பட்டுள்ளன. மிக முக்கிய இப்பிரச்னையில் அமைச்சகத்தின், ஒரு அதிகாரி மட்டத்திலேயே ஒரு அறிவிப்பை வெளியிட்டு, பிரச்சினையின் ஆழத்தை, முக்கியத்துவத்தை மலினப்படுத்திவிட்டது, மத்திய மனித வளமேம்பாட்டுத் துறை! சமூக நீதி பேசும் அரசியல் கட்சிகள் மவுனம் சாதிக்கின்றன. ஏற்கனவே நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் வழியாக இடஒதுக்கீடு உரிமைகள் முழுமையாகப் பறிக்கப்பட்டுவிட்டன.

சமூகநீதியின் தலைநகரம் தமிழ்நாடு என்று மேடைகளில் பேசும் கி.வீரமணிகள், இடஒதுக்கீடு இல்லாத நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை நடத்துவதோடு, தமிழகத்தில் அங்கீகாரம் ரத்தான அத்தகைய பல்கலைக்கழகங்களுக்காக உச்சநீதி மன்றம் போய் வழக்காடுகிறார்கள். நியாயமாக, இத்தகைய பல்கலைக்கழகங்களுக்கு முதல் எதிர்ப்புக் குரலே வீரமணிகளிடமிருந்துதான் வந்திருக்க வேண்டும். பெரியார் இயக்கம், இடஒதுக்கீடு கொள்கைக்காக நிதி திரட்டிய காலம் ஒன்று இருந்தது. இப்போது இடஒதுக்கீடே இல்லாமல், நிகர்நிலைப் பல்கலைக்கழகம் நடத்துவதற்கு உச்சநீதி மன்றத்தில் வாதாட நிதி திரட்டுவதும், அதற்கும், சமூக நீதி ஆதரவாளர்கள் என்று கூறிக் கொண்டிருப்பவர்கள், ‘கண்களை மூடிக் கொண்டு’ நிதி வழங்கும் வெட்கக் கேடும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. 

தனியார் துறை இடஒதுக்கீட்டை, அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி கிடப்பில் போட்டு, பெரும் தொழில் நிறுவனங்களிடம் மண்டியிட்டு விட்டது. 

மத்திய அரசுக்கு, கொள்கை வகுக்கும் உலக மயக் கொள்கையின் ஆதரவாளர்களான பார்ப்பன உயர்சாதி வர்க்கம், மாநிலங்களின் நிதி ஆதாரங்களைப் பறித்து, மத்தியில் குவிக்கத் தொடங்கி விட்டன. ‘இந்து’ நாளேட்டில் அமியாகுமார் பச்சி என்ற ஆய்வாளர் எழுதிய கட்டுரையில் (மார்ச் 10), இதைத் தெளிவாக விளக்கியிருக்கிறார். 

மாநில அரசுகள் அரசியல் சட்ட ரீதியாக மக்களுக்கு நிறைவேற்ற வேண்டிய கல்வி உரிமை, சுகாதார உரிமை, வாழ்வாதார உரிமைகளை நிறைவேற்றவிடாமல், மாநில அரசுகளுக்கான நிதி வருவாய்க்கான பாதைகளை, பார்ப்பன உயர்சாதி அதிகார வர்க்கம் அடைத்து, மத்திய அரசிடம் கொண்டு போய்விட்டதை அந்தக் கட்டுரை படம் பிடித்துக் காட்டியுள்ளது. நிதி ஆதாரங்களை முழுமையாக தன்வசமாக்கிக் கொண்ட மத்திய அரசு, அதை அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிதி நிறுவனங்களிடம் கையளித்துவிட்டது. அந்த நிதி நிறுவனங்களோ, இந்தியாவின் மாநில அரசுகளுக்கு நிபந்தனைகளுக்கு மேல் நிபந்தனைகளைத் திணித்து, நிதி ஒதுக்கீடு செய்கிறது. இதனால், மாநிலத்தின் பின்தங்கிய பகுதிகள் புறக்கணிக்கப்படுகின்றன.  

இப்படி, அதிகாரம் குவிக்கப்பட்டுள்ள துறைகளில் ஒன்றாக கல்வித் துறையும் மாறிவிட்டது. மத்திய அரசே, பெரும் நிதி மூலத்தனத்தோடு பல்கலைக்கழகங்களை மாநிலங்களில் தொடங்குகிறது. இந்தப் பல்கலைக்கழகங்களில் பின்தங்கிய பகுதிகளில் மட்டுமல்ல, மிகச் சிறப்பாக பல்கலைக் கழகங்கள் இயங்கும் மாநிலங்களிலும், மத்திய அரசு பல்கலைக் கழகங்களைத் தொடங்கி, ஏற்கனவே சிறப்பாக நடைபெற்று வரும் மாநில அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதி ஒதுக்கீடு கிடைக்கச் செய்யாமல் முடக்கி விடுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக இப்போது உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய ஆணையம் ஒன்றை மத்திய மனித வளத்துறை அமைச்சகம் உருவாக்கி, கல்விக்கான அதிகாரம் முழுவதையுமே மத்திய அரசின் பிடிக்குள் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. 

இந்திய மக்கள் தொகையில் 5 முதல் 10 சதவீதம் உள்ள மேல்தட்டு உயர்சாதி பணக்கார பிரிவினருக்காகவே இந்தியாவின் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்படுவதாக அந்தக் கட்டுரை கூறுகிறது. வெகு மக்களை பாதிக்கும் மத்தியப் பார்ப்பன ஆட்சியின், இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புகள் எதுவுமின்றி, மீண்டும் காங்கிரசுடன் கூட்டணி சேரும் ஒரே நோக்கத்தோடு, தமிழக ஆளும் கட்சி செயல்பட்டு வருவது, மிகப் பெரும் அவலமாகும். ஒவ்வொரு நாளும் பாராட்டுகளையும் விழாக்களையும் அரங்கேற்றிக் கொண்டு, கடுமையான பிரச்னைகளிலிருந்து மக்களை திசை திருப்பிக் கொண்டிருக்கிறது தி.மு.க. ஆட்சி!  

- விடுதலை இராசேந்திரன்

Pin It