கடந்த சூன்-16 அன்று, ‘பொதுமக்களின், குறிப்பாக பெண்களின் அன்றாட வாழ்விற்குப் பெரும் இடையூறாக இருக்கும் இளையான்குடி பகுதியில் அமைந்துள்ள ஒரு மதுபானக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி இளையான்குடி வட்டாட்சியர் அலுவலக முற்றுகையிடும் போராட்டத்தை தியாகி இம்மானுவேல் பேரவையின் சார்பில் அறிவித்தோம். அரசு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. வட்டாட்சியர் தலைமையில் நடந்த அமைதி கூட்டத்தில் தமிழ்நாடு வாணிபக் கழகம்(டாஸ்மாக்) சார்பில் அந்நிறுவனத்தின் உதவி மேலாளர் கலந்து கொண்டார். அவ்வமைதிக் கூட்டத்தில் அவர் சொன்ன ஒரு கருத்துதான் கூட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.
 
தமிழ்நாடு வாணிபக் கழக உதவி மேலாளர் சொன்னது:

  “எங்கெல்லாம் மனித நடமாட்டம் மிகுந்து உள்ளதோ, அங்கெல்லாம் மதுபானக் கடையைத் திறக்கலாம். இது அரசின் கொள்கை”

  ஆக, தமிழ்மண்ணில் உலாவும் அத்தணை மாந்தர்களையும் மதுவுக்கு அடிமையாக்கி விட வேண்டும் என்பது தான் அரசின் ‘உயரிய’ கொள்கை. இது தான் மக்கள் நல அரசு என்று தம்பட்டமடித்துக்கொள்ளும் ஆட்சியாளர்களின் இலட்சணம்.

  ஐரோப்பியர்கள் பிற நாடுகளைக் கபளீகரம் செய்து, மண்ணின் மைந்தர்களை அடிமைப்படுத்தி வைப்பதற்காகவே, மது உள்ளிட்ட போதைப் பொருட்களை புகுத்தி மக்களை மயக்கமடையச் செய்தார்கள். மக்களும் மது தரும் மயக்கத்தில் சுருண்டு அடிமை வாழ்வு வாழ்ந்தார்கள்; எதிரிகளின் முன் தலை சாய்ந்தார்கள். அன்று மண்ணின் மைந்தர்களை அடிமைப்படுத்த ஐரோப்பியர்கள் பயன்படுத்திய மது, இன்று தமிழக ஆட்சியாளர்கள் நடத்தும் தகிடுதத்தங்கள் பொதுமக்கள் தெரிந்து கொள்ளாமல் இருப்பதற்கு உற்ற கருவியாய் உதவுகிறது.

  ஆட்சியாளர்கள் தொடர்ந்து சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காகவே புதுப்புது மதுபான வகைகளைப் புகுத்தி, மக்களை நுகர்வு கலாச்சார வலையில் மூழ்கடித்து வருகிறார்கள்; மக்களும் மது தரும் போதையில் ஆட்சியாளர்கள் நடத்தும் அதி நவீன மெகா ஊழல்களைக் கண்டும் காணாமல் மதப்பில் இருந்து வருகிறார்கள்.

  “மது நஞ்சுக்கு நிகரானது; வெட்கம், மானம் என்பன அவர்களை (குடிகாரர்களை) விட்டு விலகி விடும்” என மதுவினால் உண்டாகும் தீங்கை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்த வள்ளுவப் பெருந்தகையார் தம் வள்ளுவத்தின் வழியே தெளிவுப்படுத்தியுள்ளார். அதற்காகவே தன் திருக்குறளில் ஒரு தனி அதிகாரத்தையே படைத்தளித்துள்ளார்.

  இளங்கோவடிகளும் தன் சிலப்பதிகாரத்தில், “மயக்கம் தரும் மது அருந்துதல் ஆகாது” என்கிறார்.

  “மதுக்குடிப்பது கொலை செய்வதற்குச் சமமானது” என்கிறது ஆசாரக் கோவை என்னும் தமிழ்நூல்.

  நம் முன்னோர்கள் படைத்த தமிழ் இலக்கியங்கள் யாவும் மதுவை ஒழிக்கச் சொல்லி வலியுறுத்துகிறது. ஆனால் தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களோ, ஒட்டு மொத்த தமிழர்களையும் மதுவுக்கு அடிமையாக்கி விட வேண்டும் என கங்கனம் கட்டிக் கொண்டு அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

  “மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு” என்ற வரிகளை மது பாட்டிலில் எழுதி வைத்துக் கொண்டே விற்பனை செய்து வருகிறது அரசு. மக்களை கொல்லும் மதுபானத்தை அரசே விற்பனை செய்யலாமா என்று விவரமறிந்தவர்கள் கேட்டால் “ அது தான் பாட்டிலிலேயே அதன் தீமைகளை எழுதி வைத்திருக்கிறோமே” என்ற வியாக்கியானம் வேறு.

  ஒரு நல்ல அரசுக்கு குடிமக்கள் நலன் மட்டுமே முக்கியமானதாக இருத்தல் வேண்டும். ஆனால் நம்மை ஆளும் அரசோ ‘குடிகாரர்’ நலனையே முக்கியமானதாகக் கருதி ‘சரக்கு’களைத் தட்டுப்பாடின்றி விற்;பனைசெய்து ‘குடிமக்கள்’ மனம் கோணாமல் நடந்து வருகிறது.

  29.11.2003 முதல் தமிழக அரசு தானே மதுபானக் கடைளைத் திறந்து, நேரடியாக விற்பனை செய்து வருகிறது. அதற்கான ஏகபோக உரிமையை “டாஸ்மாக்” என்ற நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது.

  2003- ஆம் ஆண்டில் மது விற்பனை மூலம் அரசுக்கு ரூ.2862 கோடி வருவாய் கிடைத்தது. அந்தத் தொகை மெல்ல மெல்ல அதிகரித்து 2011-20012 ஆம் நிதியாண்டில் ரூ.18081 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. இவ்வாறு டாஸ்மாக் வருமானம் ஆண்டுதோறும் 20 விழுக்காடு வீதம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.        

நிதியாண்டு    மது விற்பனை வருவாய்
2002-03                ரூ.2828  கோடி
2003-04               ரூ.3639 கோடி
2004-05               ரூ.4872 கோடி    
2005-06               ரூ.6086 கோடி   
2006-07               ரூ.7300 கோடி   
2007-08              ரூ.8822 கோடி   
2008-09              ரூ.10601.5 கோடி   
2009-10              ரூ.12491 கோடி    
2010-11              ரூ.14965 கோடி    
2011-2012          ரூ.18081 கோடி 

(நன்றி: காந்திய மக்கள் இயக்கம்-வெளியீடு)

மதுபான விற்பனையின் மூலம் அரசுக்குக் கிடைக்கும் இந்த கோடிக்கணக்கான பண‌ம் யாருடையது?

  நம் தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் உழைக்கக்கூடிய மக்களில் பெரும்பான்மையினர் குடிநோய்க்கு ஆளானவர்களாகவே இருக்கிறார்கள். அவ்வாறு ஒரு குடும்பத்தில் ஒருவர் ஒரு நாளைக்கு குறைந்தபட்ச அளவுள்ள மதுபாட்டிலில் அடைக்கப்பட்ட மதுவை வாங்கி உட்கொள்பவராக இருந்தாலும் கூட, 5 ஆண்டுகளில் அக்குடும்பத்திடமிருந்து அரசு பிடுங்கிக் கொள்ளும் தொகை ரூ.126000. ஆனால் 5 ஆண்டுகளில் இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி, கிரைண்டர், மிக்சி, மின்விசிறி போன்ற பொருட்களைத் தருவதன் மூலம் (கொடுத்தால் மட்டுமே) ஒரு குடும்பத்திற்கு அரசு செலவிடும் தொகை வெறும் 15460 ரூபாய் மட்டுமே. ஆக நம்மை ஆண்ட, ஆளும் ஆட்சியாளர்கள் வழங்கும் இலவசங்கள் யாருடைய பணத்திலிருந்து என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

  டாஸ்மாக் நிறுவனத்திற்குத் தேவையான மதுபானத்தை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் உரிமையாளர்கள் பெரும்பாலானோர் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளின் முக்கிய தலைவர்களுக்கு வேண்டப்பட்டவர்கள். அச்சாராய நிறுவன முதலாளிகள் ரூ.2 கோடி முதலீட்டில் தொழிற்சாலை தொடங்கி இன்று இரண்டாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இலாபம் கொழித்து வருகிறார்கள்.

அரசும், மதுபானத் தொழிற்சாலைகளை நடத்தும் ஆளும் கும்பலுக்கு நெருக்கமானவர்களெல்லாம் கோடிகளில் திளைக்க, அக்கொடிய மதுவைக் குடித்த ஏழை-எளிய உழைக்கும் மக்கள் நோய்நொடிகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

  மதுபானத்தை குடிப்பதால் பல விதமான புற்றுநோய்கள் உள்பட 66 வகையான நோய்கள் ஏற்படுவதாக மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்..மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளில் 54 விழுக்காட்டினருக்கு மதுவுடன் நெருங்கிய தொடர்புள்ளது என்று உலக சுகாதார அமைப்புடன் இணைந்த நிம்மன்ஸ் மருத்துவமனை நடத்திய ஆய்வு கூறுகிறது, இந்த அமைப்பு பெங்களுரில் இயங்கி வருகிறது. நம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை குடியினால் சீரழியாத குடும்பங்களே இல்லை என்கிற அளவுக்கு குடிநோய் ஒவ்வொரு குடும்பத்தினரையும் ஆட்கொண்டு விட்டது. குடியினால் இளம் வயதிலேயே கணவனை இழந்து விதவையாகிப் போன பெண்கள் பலர் சோகமே உருவாய் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

  டாஸ்மாக்கின் வருவாய் ஒவ்வொரு ஆண்டும் உயர்வதைப் போன்றே, சாலை விபத்தும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் நம் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

  கடந்த 2010-2011 ஆகிய ஆண்டுகளில் சுமார் 15 ஆயிரம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்திருக்கிறார்கள். இதில் 60 விழுக்காட்டு சாலை விபத்துகள் மதுபானம் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதால் உண்டானது என்று அரசுத்துறை ஆதாரங்கள் சொல்கின்றன.
       
குடிபோதை விபத்துகள்
ஆண்டு -   இறப்புகள்
2003              9275
2004              9507
2005              9760
2006            11009
2007           12036
2008           12784
2009           13746
2010           15409

 (ஆதாரம்: அரசுத்துறைகள்)                                

பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஓர் இளைஞன் மதுவுக்கு அடிமையாகும் வயது 25 ஆக இருந்தது. ஆனால் இன்று அந்த வயது எண்ணிக்கை 13 ஆகக் குறைந்து விட்டது. எண்ணிப்பாருங்கள், எவ்வளவு பெரிய வெட்கக்கேடு!

  படித்து தன் வாழ்வை ஒளிரச் செய்ய வேண்டிய மாணவர்கள் மதுவின் மயக்கத்தில் தன் வாழ்வை இருளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். 21- வயதுக்குட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்ற விதிமுறை இருந்தும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மது விற்கப்படுகிறது. உடல் உறுப்புகள் வளர்ச்சியடையக் கூடிய இந்த வயதில் அவன் மதுவுக்கு அடிமையாவதால் மது அவன் உடலுறுப்புகளைச் சிதைத்து அவனை நிரந்தரக் குடிநோயாளியாக்கி விடுகிறது.

  “18 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்கக் கூடாது” என இமாச்சலபிரதேச உயர்நீதிமன்றம் கடந்த ஜீன் 13 அன்று தீர்ப்பு வழங்கியுள்ளது ஆனால் அந்தத் தீர்ப்பையெல்லாம் கடைபிடிப்பதாக இல்லை அரசு. (நன்றி; இந்தியா டுடே – நிலை-4-2012)

 இன்றைய இளைஞர்களிடம் மது அருந்துவது நாகரீகமான செயல் என்ற தவறான எண்ணம் வேரூன்றியுள்ளதே, அவர்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாவதற்கு மூல காரணமாக அமைகிறது.

  இன்றைய இளைய தலைமுறையினர் தாங்கள் மது அருந்துவதை எண்ணிப் பூரித்துப் போகிறார்கள், அதை நண்பர்களிடம் சொல்லி அங்கலாய்த்துக் கொள்கிறார்கள் மதுவை விரும்பாத பிற நண்பர்களைக் கண்டால் அவனை எள்ளி நகையாடும் போக்கும் அவர்களிடத்தே உள்ளது. பெற்றோர்களின் கனவினை நனவாக்கவல்ல விடுதியில் தங்கிப்படிக்கும் 19 முதல் 26 வயதுடைய மாணவர்களிடையே 60 விழுக்காடு அளவுக்கு குடிப்பழக்கம் அதிகரித்திருப்பதாக அஸோசம் என்ற அமைப்பு நடத்திய ஆய்வு கூறுகிறது.

மது என்பது நம் எதிர்காலத்தை- நம் வாழ்வைச் சூனியமாக்க வந்த நஞ்சு என்பதை உணர மறுக்கிறார்கள். மேலும் 13 வயதில் குடிப்பழக்கத்திற்கு ஆளாகும் 10 பேரில் 4 பேர் 25 வயதில் உயிருடன் இருக்க மாட்டார்கள் என்று அதிர்ச்சியூட்டும் செய்தியை வெளியிட்டுள்ளது மருத்துவ ஆய்வுகள். இந்த அதிர்ச்சியூட்டும் தகவல் எல்லாம் அரசுக்குத் தெரிந்தும் நம் எதிர்காலத் தலைமுறையினரை நின்று கொல்ல திட்டமிட்டுள்ளது போல் “மதுக்கொள்கை” அமைத்து செயல்பட்டு வருகிறது அரசு.

இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு-47 மக்களின் வாழ்க்கைத் தரம் பற்றி கூறுகிறது.மேலும் பொது சுகாதாரத்திற்கு ஊறு விளைவிக்கும் மது போன்ற பொருட்களை விற்கக்கூடாது என்று கூறுகிறது இந்திய அரசின் சட்டம். ஆனால் பொதுமக்கள் உயிர்வாழ்வதற்குத் தடையாக அரசு நடத்தும் மதுபானங்களே விளங்குகின்றன. அரசின் இந்த நிலைப்பாடு இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. மேலும் வருமானம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எதையும் விற்கலாம் என்ற அரசின் செயல் ஒரு நல்ல அரசுக்கு அழகல்ல.

மதுப்பழக்கம் என்கிற குடிநோய் தனிநபர் ஒழுக்கம் சார்ந்தது மட்டுமல்ல. மாறாக அது ஒரு சமூகச் சிக்கலும் ஆகும் என்பதை அரசு உணர்ந்து செயல்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இவ்வளவு கோடிக்கு மது விற்பனை செய்தாக வேண்டும் என இலக்கு வைத்துச் செயல்படும் அரசு, என்றாவது ஏதேனுமொரு மக்கள் நலத் திட்டங்களில் இலக்கு வைத்துச் செயல்பட்டதுண்டா?

பணமொன்றையே பெரிதாகக் கருதி பதவி சுகம் காணும் ஆட்சியாளர்கள் மக்கள் நலனில் அக்கறை கொண்டு மதுக்கடைகளை அகற்றுவார்கள் என்றெண்ணிக் கொண்டிருப்பது மடமையே ஆகும். பண முதலைகளின் நலனுக்கான இந்த அரசு உழைக்கும் மக்களின் உயிர் குடிக்கும் மதுக்கடைகளை முற்றாக அடைக்க முன்வராது. எனவே மக்கள் அனைவரும் தங்கள் உயிர்காக்கும் போராட்டத்திற்காய் அணிதிரண்டு மதுபானக் கடைகளை அடித்து நொறுக்கும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். நொறுங்கி உடையும் பாட்டில்களில் ஓசையில்தான், உழைக்கும் மக்கள் மற்றும் எதிர்கால இளைய தலைமறையினரின் பிரகாசமான வாழ்வு அடங்கியிருக்கிறது.

மக்களின் உன்னதமான உயிர்களை அரசு காத்தால் என்ன? மக்கள் தாங்களே போராடிக் காத்துக் கொண்டால் என்ன?       

- தங்க.இளங்கண்ணன், தேசிய அரசியல் குழு, தியாகி இமானுவேல் பேரவை, தமிழ்நாடு.

Pin It