இந்த இடங்களில் இதற்கு முன் அநேக தடவைகளில் வந்து பேசியிருக்கின்றேன். அப்போது வந்த சமயங்களில் நான் எதைப் பற்றி பேசினேனோ அதே விஷயங்களைப் பற்றித்தான் இப்போதும் பேச வந்திருக்கின்றேன். ஆனால் அந்தக் காலங்களில் எனது பிரசங்கத்தைக் கேட்க வந்த ஜனங்களை விடவும் உற்சாகத்தைவிடவும் இப்போது எத்தனையோ மடங்கு அதிகமான ஜனங்களும் உற்சாகங்களும் காணப்படுவது எனக்கே ஆச்சரியமாய் இருக்கிறது. ஒரு சமயம் எனது கொள்கைகள் ஏதாவது மாற்றமடைந்து விட்டதா என்பதாக நானே யோசித்துப் பார்ப்பதுண்டு. எவ்வளவு யோசித்தாலும் எனது பழைய கொள்கைகளிலிருந்து ஒரு சிறிதும் மாற்றிக் கொண்டதாக எனது மனச்சாக்ஷி சொல்லுவதே இல்லை.
மகாத்மா காங்கிரஸ் காலத்திலும், அதற்கு முன் நான் தனியே அபிப்பிராயம் கொண்டிருந்த சமயத்திலும் எந்தக் கொள்கையில் நம்பிக்கை கொண்டிருந்தேனோ அவற்றில் ஒரு சிறிதும் மாற்றமேற்பட்டதாக எனக்குத் தோன்றுவதே இல்லை. அதாவது மகாத்மாவின் ஒத்துழையாமை காங்கிரசுக்கு முன்னால் பார்ப்பனரல்லாதார் அரசியல் உரிமைகளுக்கும் சமூக உரிமைகளுக்குமாக காங்கிரஸ் சார்பாக ஏற்பட்டிருந்த சென்னை மாகாணச் சங்கம் என்னும் பார்ப்பனரல்லாதார் மக்களுக்காக மாத்திரம் ஏற்பட்டிருந்த சங்கத்தில் நானும் ஒரு முக்கியஸ்தனாக இருந்த காலத்தில் எனது கொள்கையும், அச்சங்கக் கொள்கையுமான வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திலும், மகாத்மா காங்கிரசில் நான் இருந்தபோது காங்கிரஸ் கொள்கையாகவும், எனது கொள்கையாகவும் இருந்த நிர்மாணத் திட்டம் அதாவது கதர், தீண்டாமை விலக்கு, மதுவிலக்கு ஆகிய கொள்கைகளிலும் ஒரு சிறிதும் மாறுபடாததோடு அவைகள் அப்பொழுதைவிட இன்னமும் பலமாக என் மனதில் பதிந்து கிடக்கின்றன.
வகுப்புவாரி உரிமை இல்லாமல் நமது நாட்டிலுள்ள வகுப்புகள் ஒற்றுமைப்படாது என்பதும், நிர்மாணத் திட்டங்கள் நிறைவேற்றப்படுவதல்லாமல் வேறொன்றும் சுயராஜ்யமடைய மார்க்கமல்ல என்பதும் எனது சரீரத்திலும், ரத்தத்திலும், மயிர்க்கால்களிலும் இரண்டறக் கலந்து ஊறி விட்டதோடு இவ்விரண்டையும் பெறுவதன் முன்னம் மக்கள் சுயமரியாதை அடைய வேண்டும் என்பதும் சித்திரவதை செய்தாலும் மாற முடியாதபடி பதிந்து ஊறிக் கிடக்கின்றது. ஆனால் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைப் பற்றி என்னுடன் கூட அக்காலத்தில் ஒத்துழைத்த தலைவர்கள் என்போர் அரசியல் தந்திரம் என்னும் பேரால் சுயநலத்தைக் கொண்டோ, பிற நலத்தைக் கொண்டோ குட்டிக் கரணங்கள் போட்டுக் கொண்டிருந்தாலும், எந்தக் காரணத்தை முன்னிட்டும் எனக்கு அதில் ஒரு சிறிதும் மாற்றமேற்படவில்லை. அதுபோலவே நிர்மாணத் திட்டங்களைப் பற்றியும் மகாத்மா காந்தி காங்கிரஸ் காலத்தில் என்னுடன் ஒத்துழைத்த தலைவர்களும் காங்கிரசு சபை என்பதும் சுயநலத்தை உத்தேசித்தோ சுயநலப்பட்டவர்கள் காங்கிரசை சுவாதீனப்படுத்திக்கொண்டு மகாத்மாவை வெளியேறச் செய்ததினாலோ முறையே மாறுபட்ட அபிப்பிராயங் கொண்டு விட்டாலும், காங்கிரசின் ஆதிக்கத்திலிருந்து இத்திட்டங்கள் மாறுபாடு அடைந்து விட்டாலும் கூட அதின் தத்துவங்களும், அவசியங்களும், எனது மனதிலும், வாக்கிலும், செய்கையிலும் ஒரு சிறிதும் மாறுபட மாட்டேன் என்கின்றன.
ஆனால் சென்னை மாகாண சங்கத்தின் மூலம் செய்துவந்த வகுப்புவாரி உரிமை பெறும் தொண்டும் காங்கிரஸின் மூலம் செய்து வந்த நிர்மாணத் திட்டப் பிரசாரத் தொண்டும் இப்போது எந்த சமூகத்தாருக்கு அது முக்கியமாயும் உண்மையாயும் அது யாருக்கு ஏற்பட வேண்டுமோ அந்த சமூகத்தார் சங்க மூலமாக நிறைவேற்ற வந்திருக்கின்றேன். இதுதான் வித்தியாசம் என்று சொன்னால் சொல்லலாம். ஆனால் இச்சங்கத்தின் மூலம்தான் இவற்றை உண்மையாய் நிறைவேற்றி வைக்க முடியுமேயல்லாமல் இக்கொள்கைகளுக்கு பிறவி எதிரிகளாகிய பார்ப்பனர்கள் அவர்கள் சம்மந்தப்பட்டதும் அவர்கள் ஆதிக்கத்திலிருப்பதும் அவர்கள் சுயநலத்திற்காகவே ஏற்படுத்தப்பட்டதான சென்னை மாகாணச் சங்கத்தின் மூலமாகவோ, காங்கிரசின் மூலமாகவோ நிறைவேற்றப் பாடுபட்டதைப்போல முட்டாள்தனமான காரியம் வேறில்லை என்பதை நான் இப்போது நன்றாய் உணர்ந்தேன். நான் மாத்திரமல்லாமல் மகாத்மா காந்தியும் உணர்ந்து தனியே இவற்றை நடத்தி வைக்கப் பாடுபட்டு வருகிறதையும் நீங்கள் பார்க்கிறீர்கள் அல்லவா?
உதாரணமாக வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கு பார்ப்பனர்கள் சம்மதிப்பார்களா? 100-க்கு மூன்று பேராயுள்ள சமூகத்தார் 100-க்கு 97 பங்கு உத்தியோகத்தையும் அரசியல் சுதந்திரங்களையும் அனுபவித்துக்கொண்டு 100-க்கு 97 பேர்களாய் உள்ள நமக்கு 100க்கு மூன்று பங்கு வீதம் அதுவும் பிச்சைக் கொடுப்பது போல் கொடுத்து மீதியை ஏகபோகமாய் அனுபவித்துக் கொண்டு நம்மை அடக்கி ஆண்டு கொண்டிருப்பவர்கள் 100-க்கு 3 போக, பாக்கி 100-க்கு 97 இழக்கும்படியான வகுப்புவாரி உரிமையை ஒப்புக் கொள்ளுவார்களா? என்பதை யோசித்துப் பாருங்கள். அதுபோலவே நிர்மாணத் திட்டம் என்பதையும் பார்ப்பனர்களின் ஆதிக்கத்திலிருக்கும் இயக்கங்களே ஒப்புக்கொள்ள முடியுமா என்பதையும் யோசியுங்கள்.
கதரினால் பார்ப்பனர்களுக்கு ஏதாவது லாபமுண்டா? அவர்கள் பெண்டு பிள்ளைகள் கூலியில்லாமலும் வயிற்றுக்கு ஆகாரமில்லாமலும் எங்காவது பாடுபடுகிறார்களா? அல்லது கதர் நிறைவேற்றப்படுவதால் அவர்களுக்கு ஒரு காசாவது ஆதாயமுண்டா? வேஷத்திற்கும் இத்திட்டம் நிறைவேற்றுவது என்கிற பேரால் நம்மை ஏமாற்றி நம்மிடம் பொருள் பறிக்கவும் ஓட்டுப் பெறவும் அந்தப் பேரைச் சொல்லிக் கொண்டு சில பார்ப்பனர்கள் நம்மை ஏமாற்றி வயிறு வளர்க்கவும் ஓட்டுப் பெறவுமே அல்லாமல் வேறு எதற்கு அவர்கள் பாடுபட அவசியமிருக்கிறது. அதுபோலவே தீண்டாமை விஷயத்திலும் பார்ப்பனர்களுக்கு ஏதாவது அக்கறை உண்டா? அவர்கள் நம் எல்லோரையும் தீண்டாதவர்கள், தாழ்ந்தவர்கள், இழிந்தவர்கள் தங்களது வைப்பாட்டி மக்கள் என்று சொல்லிக் கொண்டு ஆதிக்கம் செலுத்தி வாழுகிறவர்கள். நம்முடன் சமமானவர்கள் என்று சொல்லிக்கொள்ள சம்மதிப்பார்களா? தீண்டாமை ஒழிந்தால் இந்த நாட்டில் பார்ப்பனர்கள், பிராமணர்கள் என்று சொல்லிக்கொள்ள இடமுண்டா? ஆதலால், அவர்களோ அவர்கள் ஆதிக்கத்தில் உள்ள சங்கங்களோ இதை நிறைவேற்றி வைக்க சம்மதிக்கும் என்று நினைப்பதைப் போன்ற பெரிய இளிச்சவாய்தனமான காரியம் வேறில்லை.
ஏதோ சில பார்ப்பனர் தீண்டாமை ஒழிப்பதில் வெகு அக்கறை உள்ளவர்கள் போல் காட்டிக்கொண்டாலும், ‘பறையர்’, ‘சக்கிலியர்’, ‘நாயக்கர்’, ‘நாடார்’ என்று சொல்லப்படுகிறவர்கள் வீட்டில் சாப்பிட்டாலும் தீண்டாமை ஒழியவும் மக்கள் பிறவியில் வித்தியாசமில்லை என்று சொல்லவும் செய்யப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து ராஜினாமா கொடுத்து விட்டு ஓடி விட்டார்கள் என்பது பொய்யல்ல. அதுபோலவே மதுவிலக்கு செய்ய வேண்டிய அவசியமும் நமது பார்ப்பனருக்கு எப்படி ஏற்படும்? பார்ப்பனர்களா மதுவருந்திக் கெடுகிறார்கள்? அவர்களிலும் சிலர் மதுவருந்துவதாக வைத்துக் கொண்டாலும் அது அவர்கள் குடும்பம் கெடும் மாதிரியோ ஒழுக்கம் கெடும் மாதிரியோ இல்லை. அவர்கள் மதுவருந்தினாலும் லாபமடைகிறார்கள் என்றே சொல்லவேண்டும். அதனால் சமூகச் சீர்திருத்தக்காரர்கள் என்கிற பேரும் பெற்று பெரிய துரைகள் சிநேகமும் பெற்று பணமும், பதவியும், உத்தியோகமும் சம்பாதிக்க வழி செய்து கொள்ளுகிறார்களே அல்லாமல் நம்மைப்போல் `குடிகாரர்கள்’ ஆவதில்லை.
உண்மையாய் பார்ப்பனரல்லாதாராகிய நம் சமூகத்தில் அடியோடு குடி எடுபட்டுப் போகுமானால் பார்ப்பனர்கள் உத்தியோகத்தின் மூலமாகவும் வக்கீல் உத்தியோகத்தின் மூலமாகவும் இப்போதைப்போல் பிழைக்க முடியுமா? குடி நின்று விட்டால் பார்ப்பன உத்தியோகத்தில் பகுதி எடுபட்டுப் போகாதா? பார்ப்பன வக்கீல் போர்டுகள் எல்லாம் காபி ஓட்டல் போர்டுகளாகவும், பஞ்சாங்க போர்டுகளாகவும், பிச்சை எடுக்கும் தொழில் போர்டுகளாகவும் ஆகிவிட வேண்டாமா? ஆதலால் அவர்கள் மதுவிலக்குக்கு அனுகூலமாய் இருப்பார்கள் என்பது ஓநாய் ஆட்டுக்கு வைத்தியம் செய்வது போல்தான் இருக்கும். ஏதோ சில பார்ப்பனர் மதுவிலக்குக்குப் பாடுபடுவதாய்ச் சொல்லுவது நம்மை ஏமாற்றவே அல்லாமல் வேறென்ன? உதாரணமாக ஒரு ஒத்துழையாமைப் பார்ப்பனர் ஒரு கள்ளு உற்பத்தி செய்து பணம் சம்பாதிக்கும் பார்ப்பனருக்கு மதுவிலக்குப் பேரால் ஓட்டு வாங்கிக் கொடுக்கவில்லையா? தவிர சுயராஜ்யக் கட்சியார் மது விலக்கு செய்ய ஒப்புக்கொண்டார்கள்; அவர்களுக்கு ஓட்டுக் கொடுங்களென்று குறள் எழுதவில்லையா? இப்பொழுது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அந்த ‘ஒத்துழையாமை’ பார்ப்பனருக்குத் தெரியவில்லையா? ஆகவே, பார்ப்பனர்களோ பார்ப்பன ஆதிக்கமுள்ள சங்கமோ மதுவிலக்குச் செய்யும் என்று எண்ணுவதைப் போன்ற ஏமாந்த தன்மை வேறில்லை.
ஆதலால்தான் அவர்கள் சம்பந்தமும் ஆதிக்கமும் உள்ள சங்கங்களை விட்டுவிட்டு உண்மையாய் அவசியமுள்ள சங்கத்திற்கு வந்து பிரசங்கம் செய்ய வந்திருக்கின்றேன். அதைவிட பலமடங்கு ஜனங்கள் இங்கு வந்திருப்பதின் மூலமும் நீங்கள் காட்டும் உணர்ச்சியின் மூலமும் உங்கள் கடமைகளை அறிந்திருக்கிறீர்கள் என்பதை உணருகிறேன். அதுவும் சென்ற மதுரை மகாநாட்டில் இத் தீர்மானங்களை ஏகமனதாய் ஒப்புக்கொண்டதிலிருந்தும் அதற்குப் பிறகு நாட்டில் எங்கு பார்த்தாலும் கதர் விருத்தியும் சுயமரியாதையில் கவலை கொண்டு அதற்கு பூர்வாங்கமான வேலையும் நடந்து வருவதைப் பார்க்கும் போது எனக்கு ஏற்படும் மனத் திருப்தியும் ஆனந்தமும் அளவிடக் கூடவில்லை. இவ்விஷயங்களை நடத்துவிப்பதற்காகவே ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்டிருந்தாலும் அது அரசியலில் செலவழித்த காலத்தை இதில் செலவழித்ததாக சொல்ல முடியவில்லை.
ஜஸ்டிஸ் கட்சி யார் இத்திட்டங்களை நிறைவேற்றவும் நிறைவேற்றுகையில் இத்திட்டங்களின் எதிரிகளால் ஏற்படும் கொடுமைகளிலிருந்து தப்பவும் சிறு சிறு அரசியல் சுதந்திரங்களைப் பெறலாம் என்று நினைத்து அதில் கருத்தைச் செலுத்த ஆரம்பித்ததும் ஏற்கனவே அரசியல் சுதந்திரத்தை ஏகபோகமாய்க் கைப்பற்றிக் கொண்டிருந்த கூட்டத்தார் தங்களுக்கு ஆபத்து வந்து விட்டதாகக் கருதி ஒன்று சேர்ந்துகொண்டு பல வழிகளின் மூலமாகவும் இக் கட்சியாருக்கு செய்து கொண்டு வந்த தொந்திரவுகளும், உபத்திரவங்களும், சூழ்ச்சிகளும், கொடுமைகளும் தாங்க முடியாததானதோடு இக்கூட்டத்தாருடன் சமாளிக்கும் வேலைக்கே தங்கள் காலம் முழுவதும் செலவழிக்க ஏற்பட்டு விட்டதாலும் அதிகமாக உத்தேசித்த காரியங்களை நிறைவேற்ற முடியாமல் போயிற்று. ஆனாலும், நமது மக்கள் எவ்வழியிலும் மற்றொரு சமூகத்தாருக்கு தாழ்ந்தவர் அல்ல என்பதையும் பங்கா இழுத்தல், செடிக்கு தண்ணீர் ஊற்றல், தபால் ஆபீசுக்குப் போதல், வீதி கூட்டுதல், குழந்தை குட்டிகளை தூக்கிக் கொண்டு திரிந்து மார்க்கெட்டுக்குப் போய் காய்கறி வாங்குதல், ஜட்கா வண்டி ஓட்டுதல் முதலிய வேலைகள் அல்லாமல் வேறு வேலைக்கு லாயக்கில்லை என்று மற்ற நாட்டாரும் அரசாங்கத்தாரும் நினைக்கும் படி நமது பார்ப்பனர்கள் செய்து வைத்திருந்த மீளாத இழிவிலிருந்து தப்பிக் கரையேறி அவர்களின் உண்மையான யோக்கியதைகளாகிய அரசாங்க நிர்வாகம் நடத்துதல் முதல் எல்லா உயர்ந்த பதவிகளையும் வகிக்கத் தகுந்தவர்கள் என்பதை நிலை நிறுத்தி உயர்தர நீதிமன்றம், மந்திரி பதவி முதலிய எல்லா ஸ்தானங்களிலும் நம்மவர்களையும் அமரச் செய்து மற்றெல்லோரையும் விட எவ்விதத்திலும் குறைவானவர்கள் அல்ல என்பதையும் உலகத்திற்கு மெய்பித்து நம்மிலும் பலரை அந்த ஸ்தானங்களிலும் இருத்தி ஒரு வகையான சுயமரியாதையை உண்டாக்கி இருப்பதோடு நமது எதிரிகள் பிச்சைக்கு லாயக்குடையவர்கள் என்பதையும் உலகமறியச் செய்துவிட்டார்கள்.
என்றாலும் பாமர மக்களிடம் செய்ய வேண்டிய வேலை எவ்வளவோ அவ்வளவும் செய்தார்கள் என்று சொல்ல முடியாது. ஆதலால், அதை நிறைவேற்றவே இப்போது இக்கட்சியாருக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. அதுவும் இரண்டு விதத்தில் என்றே சொல்லலாம். அதாவது (1) இக்கட்சியார் பதவியில் இருந்த காலத்தில் இவர்கள் பேரில் பலவித பழிகளை சுமத்தியும், பார்ப்பனரல்லாதாரிலும் சில ஆகாசங்களைப் பிடித்து கூலியும் விலையுங் கொடுத்து இழிமொழிகளால் பழி சுமத்தியும் பாமர ஜனங்களை ஏமாற்றிய அயோக்கியத்தனமானது வெளியாகவும், அரசியலிலும் நமது எதிரிகள் கூட்டத்தாரே பதவியும், ஆதிக்கமும் பெறத் தகுந்த நிலைமையை அடைந்திருப்பதன் மூலம் தாங்கள் இக்கட்சியாரைவிட என்ன சாதிக்க யோக்கியதை உள்ளவர்கள் என்பதை ஜனங்கள் அறிய சந்தர்ப்பம் ஏற்பட்டிருப்பதும் (2) தேர்தல் மூலம் ஜஸ்டிஸ் கட்சியார் பாமர மக்களிடம் இறங்கி வேலை செய்ய தாராளமான சௌகரியமும் மற்றொரு விதத்திலும் பெற்றிருக்கிறார்கள். ஆகவே, இந்தச் சமயத்தைக் கைவிடாமல் பார்ப்பனரல்லாத மக்கள் ஒன்று சேர்ந்து இதை உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்காக பிரசாரம் செய்வதற்குப் பத்திரிகைகளும் அவைகளை ஆதரிக்க உங்களுடைய ஆதரவுகளும் வேண்டும்.
நமது பாமர மக்களின் மனம் பெரும்பாலும் விஷத்தன்மையானதற்குக் காரணம் நமது எதிரிகளின் பத்திரிகைகளும் அவர்கள் தயவில் நடக்கும் நம்மவர்கள் பத்திரிகைகளும் அவர்களிடம் கூலி பெற்று நம்மவர்கள் செய்த பிரசாரங்களுமே தவிற வேறில்லை. ஆதலால் அதை நாம் வெல்ல வேண்டுமானால் உறுதியும், தைரியமும், உண்மையுள்ள பத்திரிகைகளும், பிரசாரகர்களும் நமக்கு வேண்டும். அவைகள் இல்லாமல் நாம் எவ்வளவு யோக்கியமாய் நடந்தாலும் உண்மையான கொள்கைகளை வைத்துக் கொண்டிருந்தாலும் பிரயோஜனப் படாது. மகாத்மாவை ஜனங்கள் அறியவும், அவரது கொள்கையை மக்களிடம் பரப்பவும், ஒரு கோடி ரூபாய் இருந்தாலும் 20,000 “யங் இந்தியா’’ பிரதிகளும் 30,000 “நவஜீவன்’’ பிரதிகளும் உலவியதாலும் தானே ஒழிய வேறில்லை. இப்பொழுது மறுபடியும் ஒரு கோடி ரூபாய் கிடைக்குமானால் மறுபடியும் மகாத்மா காங்கிரசைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி தனது கொள்கைகளைப் பரப்பக் கூடும். ஆதலால் பணமும், பத்திரிகையும் இல்லாமல் ஒரு காரியமும் செய்ய முடியாது.
நம்மில் எத்தனை பேர் லட்சாதிபதிகள், பத்து லட்சாதிபதிகள், கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள்! ஆனாலும் அவர்கள் இந்த முக்கியமான விஷயங்களைக் கவனிப்பதில்லை. இவ்வளவு கோடி செல்வவான்களாயிருந்தாலும் அரசியலில் ஒரு சிறு ரெவனியூž இன்ஸ்பெக்டரைக் கண்டால் நடுங்க வேண்டியவர்களாகத்தானே இருக்கிறார்கள். சமூக இயலில் ஒரு தூது பார்ப்பானைக் கண்டால் சுவாமி என்று கூப்பிடவும், கையெடுக்கவும் யோக்கியதை உள்ளவர்களாகத்தானே இருக்கிறார்கள். இந்நாட்டுச் செல்வவான்கள் லட்சுமி புத்திரர்களென்று ஆணவமாய் நினைத்துக்கொண்டிருக்கும் பைத்தியக்கார பிரபுக்களுக்கு இது படுகிறதா? தாங்கள் தேடி வைக்கும் பொருள்கள் தங்கள் பின் சந்ததியர்களுக்கு உதவுமென்றாவது வைத்துக் காப்பாற்றுவார்களென்றாவது நினைக்க என்ன உறுதி இருக்கிறது. அப்படியே இன்னமும் 10 லட்சமும் பல பங்களாக்களும், ஜமீன்களும், உத்தியோகங்களும் சேர்த்து வைத்தாலும் அவர்கள் ஒரு சிறு பிச்சைக்கார பார்ப்பனப் பையனால் தன்னை விடத் தாழ்ந்தவன் என்று நினைக்க கூடியவர்கள் தானே.
இங்கே இருக்கும் ஸ்ரீமான் பனகால் ராஜா அவர்கள் எத்தனை தலை முறைகளாக ராஜ வம்சத்தைச் சேர்ந்தவரானாலும், எவ்வளவு சமஸ்கிருத பாண்டியத்தியமுடையவரானாலும் இன்னும் எவ்வளவு பெரிய பூணூல் போட்டிருந்தாலும், எவ்வளவு பெரிய பரம்பரை ராஜா பட்டம் பெற்றிருந்தாலும், இன்னும் 94 வருடங்களுக்கு மந்திரி பதவி வகித்தாலும் அவரும் “சூத்திரன்’’; பார்ப்பனர்களின் வைப்பாட்டி மகன்; அடிமை; வேதம் படிக்கக் கூடாதவர்; சுவாமி அருகில் போய் சுவாமியைத் தொடக்கூடாதவர்; ஒரு இழிவான பார்ப்பனன் பக்கத்தில் கூட உட்கார்ந்து சாப்பிடக்கூடாதவர் என்று சொல்லப்படுவதை நன்றாய் உணருங்கள். இவ்வூரிலுள்ள பிரபுவான ஸ்ரீமான் தளவாய் முதலியார் அவர்கள் இன்னும் வருஷத்தில் 2,3 லட்சம் ரூபாய் அதிகமான வரும்படி வந்தாலும் இன்னும் 10 அரண்மனை, மாட மாளிகை, கூட கோபுரமிருந்தாலும் இன்னும் அநேக கோவில்கள் கட்டி கட்டளைகள் நடத்தினாலும், அவர்களும் அவர்கள் பிள்ளை குட்டிகளும் சூத்திரர்களென்று தான் கருதப்படுகிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். இது ஒழிக்க வேண்டுமா? அல்லது இன்னும் மந்திரி உத்தியோகமும் வேண்டுமா? என்று தான் உங்களைக் கேட்கிறேன்.
ஆகையால் சகோதரர்களே! நமது பார்ப்பனர்கள் பதினாயிரக்கணக்கான வருஷங்களாக நம் தலையில் வைக்கப்பட்ட இழிவானது வெகு சுலபத்தில் வெகு சீக்கிரத்தில் மாறக்கூடிய காலம் வந்திருக்கின்றது. இதை இழந்துவிடாதீர்கள். இதுசமயம் தவறினால் பின்னால் விமோசனம் இல்லையென்றே சொல்வேன். நமது உணர்ச்சியை இதுசமயம் உலகம் ஒப்புக் கொண்டு விட்டது. பார்ப்பனர்களும் இதுவரை தங்கள் சூழ்ச்சியின் பெயரால் ஆணவம் அடைந்திருந்தவர்கள் இப்போது வெட்கப்படுகிறார்கள். நல்ல சமயத்தைக் கைவிட்டு விடாதீர்கள். பணங்கொடுக்கக் கூடியவர்கள் பணங்கொடுங்கள்! பத்திரிகை வாங்கிப் படிக்கக் கூடியவர்கள் வாங்கிப் படியுங்கள்; ஒன்றும் உதவ முடியாதவர்கள் பார்ப்பனர்களின் காலில் விழாதீர்கள்; அவன் காலைக் கழுவி தண்ணீர் சாப்பிடாதீர்கள்; அவனுக்குப் பணங் கொடுத்து விழுந்து கும்பிட்டால் உங்கள் பெற்றோர்களுக்கும் உங்களுக்கும் உங்கள் பிள்ளை குட்டிகளுக்கும் மோட்சம் உண்டு என்று நினைக்கும் முட்டாள்தனத்தை ஒழியுங்கள். பார்ப்பனர் மூலம்தான் சுவாமியை தரிசிக்க வேண்டும், அவன்தான் தரிசனை காட்ட வேண்டும், அவனைத்தான் தரகனாக்க வேண்டும் என்கிற அறியாமையையாவது விலக்குங்கள். சுயமரியாதை இல்லாத சுயராஜ்யம் காதொடிந்த ஊசிக்கும் சமானமாகாது - மனிதரின் பிறப்புரிமை சுயமரியாதை ! சுயமரியாதை !! சுயமரியாதை !!! என்பதை உணருங்கள்.
(குறிப்பு: 22.2.1927 இல் திருநெல்வேலி, பாளையங்கோட்டை முதலிய இடங்களில் ஆற்றிய சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 27.02.1927)