மக்கள் பாடகர் தோழர் கோவனை உடனே விடுதலைசெய்!
கருத்துரிமையை முடக்கும் ( IPC -124 A) சட்டத்தை உடனே அகற்று.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பிரச்சாரப் பாடகரும் கவிஞருமான தோழர் கோவன் அவர்களை கடந்த 30.10.2015 வெள்ளி அதிகாலை 2.30 மணிக்கு திருச்சியில் தோழர் கோவன் வீட்டிற்குச் சென்ற சென்னை குற்றப் பிரிவு போலிசார் கைது செய்தனர். தற்போதைய நிலவரப்படி அவர் மீது 124 ஏ தேசத்துரோக நடவடிக்கை, 153 சமூகத்தில் இரு பிரிவினருக்கிடையில் மோதல் ஏற்படுத்துதல், 502/1 அவதூறு செய்தல் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். அதே நேரம் தோழர் கோவனைக் கைது செய்து எங்கே வைத்திருக்கிறார்கள் என்பதை சொல்ல போலிசு மறுக்கிறது.
தோழர் கோவன் செய்த குற்றம் என்ன? “மூடு டாஸ்மாக்கை மூடு, ...ஊத்திக்கொடுத்த உத்தமி .. விளங்குமா இந்த அம்மா!” போன்ற வரிகள் அடங்கிய ஒரு பாடலைப் பாடியுள்ளார். அதன் வீடியோ பதிவுகள் யூ டியூபிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவின. எதிர்க்கட்சிகள் ஆட்டம் எல்லாம் டாஸ்மாக் விவகாரத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீதான முதல்வர் ஜெயலலிதா எதிர்வினைக்குப் பின்னர் அடங்கிவிட்டன. ஆனால் மக்கள் அதிகாரம் கோரும் ம.க.இ.க.வின் குரலும் பாடகர் தோழர் கோபனின் குரலும் அடங்கவில்லை. அது தெருத் தெருவாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.
டாஸ்மாக்கை மூடச் சொல்வதும், அம்மாவை விமர்சிப்பதும் தேசத்துரோகம் ஆகிவிட்டது. மத்தியில் மோடி தான் தேசம், மாநிலத்தில் அம்மாதான் தேசம்! இவர்களை எதிர்ப்பது தேசவிரோதம்! இதுதான் ஜனநாயக நாடு என்று கூறிக் கொள்ளும் இந்தியாவின், தமிழ்நாட்டின் ஆளும் கும்பல்களின் மாற்றுக்கருத்துக் கொண்டவர்களை அணுகும் முறை.
இந்தத் தேசத் துரோகச் சட்டம் என்பது என்ன? இதன் பின்னணி என்ன? அது எவ்வாறு அரசியல் மாற்றுக்கருத்து கொண்டோரை பழிவாங்கப் பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றிய ஒரு பார்வை இது.
இந்தியத் தண்டனைச் சட்டத்தின் (ஐ.பி.சி.) நான்காவது பிரிவில் அரசுக்கு எதிரான குற்றங்களின் கீழ் பிரிவு 124 அ அரசெதிர் குற்றம் என்பதைப் பின்வருமாறு வரையறுக்கிறது:
‘பேசப்பட்ட சொற்கள் மூலமோ, குறியீடுகள் மூலமோ, காணத்தக்க வகையில் பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலமோ அல்லது வேறு வகையிலோ இந்தியாவில் சட்டத்தின் மூலம் நிறுவப்பட்ட அரசாங்கத்தின் மீது வெறுப்பையோ அவமதிப்பையோ கொண்டுவருகிற அல்லது கொண்டுவர முயற்சிக்கிற அல்லது அதிருப்தியைத் தூண்டுகிற அல்லது தூண்ட முயற்சிக்கிற எவரொருவரும் வாழ்நாள் சிறைத்தண்டனையும், அத்தோடு தண்டத் தொகையும் சேர்த்தும் அல்லது மூன்றாண்டுகள் வரை நீட்டிக்கக் கூடிய சிறைத் தண்டனையும், அத்தோடு தண்டத் தொகை சேர்த்தும் அல்லது தண்டத் தொகை விதித்தும் தண்டிக்கப்படுவார்.’
பேச்சுரிமையும், கருத்து வெளியிடும் உரிமையும், அரசெதிர்ப்பும்
இந்தியாவின் குடிமக்கள் அனைவர்க்கும் பேச்சுரிமையும் கருத்து வெளியிடும் உரிமையும் இருக்கிறது என்று இந்திய அரசியல் சட்டப் பிரிவு 19 (1) அ கூறுகிறது. நிலவும் அரசாங்கக் கட்டமைப்புக்களையும் கொள்கைகளையும், நிர்வாகத் திட்டங்களையும் கண்டிப்புடன், கண்டிப்பதற்கான பாதுகாப்பும் வேறு அமைப்பு முறையைப் பின்பற்ற ஆலோசனை தெரிவிப்பதற்கும் பரிந்துரைப்பதற்குமான பாதுகாப்பும் சேர்ந்ததே பேச்சுரிமையும் கருத்து வெளியிடும் உரிமையும் ஆகும். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் அச்சு ஊடகம் மூலமாகவோ மின்னணு ஊடகம் மூலமாகவோ தன்னுடைய கருத்தை வெளியிடுவதற்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய உரிமை இருக்கிறது, என்று இந்திய அரசியல் சட்டப் பிரிவு 19 (1) அ கூறுகிறது.
இந்தியாவில் அரசெதிர்ப்புக் குற்றம் தொடர்பான சட்டத்தின் வரலாற்றுப் பின்னணி
இந்தச் சட்டம் 1863க்கும் 1870க்கும் இடையில் அதிகரித்து வந்த வகாபிய நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக முன்மொழியப்பட்டது. பின்னர் 1898ல் மாற்றியமைக்கப்பட்டது. பிரிட்டனின் சதிக் குற்றச் சட்டம் 1848, நிரந்தர வடிவங்களில் அவதூறுக்கு எதிரான பொதுச் சட்டம், அரசெதிர்ப்புச் சொற்களுக்கான ஆங்கிலேயச் சட்டம் ஆகியவை இதன் ஊற்றுக் கண்கள் ஆகும்.
இந்தியாவின் விடுதலைப் போராட்டம் பற்றி அறிந்தவர்கள் யாரும் அரசெதிர்ப்பு தொடர்பான சட்டத்தை பிரிட்டிஷார் எவ்வளவு மோசமாகப் பயன்படுத்தினார்கள் என்பதை நன்கு அறிந்துகொண்டிருப்பார்கள். பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்திய விடுதலைப் போராட்டத்தை இரும்புக் கரம் கொண்டு நசுக்குவதற்கு முயற்சி செய்தார்கள்; இந்திய விடுதலைப் போராட்டத்தின் செயல்வீரம் கொண்ட இலட்சியவாதிகளின் எதிர்ப்புக்குப் பதிலடியாக அவர்கள் மீது அரசெதிர்ப்புக் குற்றத்தை சுமத்தினார்கள்.
இந்தியாவில் அரசெதிர்ப்புக் குற்றச்சாட்டு தொடர்பான முக்கிய வழக்குகள்
அரசெதிர்ப்புக் குற்ற வழக்குகளில் தேசிய செய்தித்தாள்களின் ஆசிரியர்கள் மீது சுமத்தப்பட்ட வழக்கு முதலாவதாகும், அது 189ல் விசாரணைக்கு வந்த ஜோகிந்தர் சந்திர போஸ் வழக்காகும். அதைத் தொடர்ந்து பாலகங்காதர திலகர் இக்குற்றச்சாட்டின் பேரில் வழக்கு விசாரணைக்கு உள்ளானார். அடுத்து மிக முக்கியமான வழக்கு மகாத்மா காந்தி, சங்கரலால் ஹேங்கர் ஆகியோர் 1922ல் யங் இந்தியா இதழில் அரசுக்கு எதிராக எழுதியதற்கும் வெளியிட்டமைக்கும் இக்குற்றச்சாட்டுக்கு ஆளாகியதாகும்.
கேதார்நாத் எதிர் பிகார் அரசு (AIR 1962 SC 955; 1962 SUPP.(2) SCR 769); இந்த மேல்முறையீட்டு வழக்கில், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 124A மற்றும் 505 ஆகியவை இந்திய அரசியல் சட்ட பிரிவு 19 (1) (a)க்கு முரணானவையா என்பது இவ்வழக்கின் முக்கிய கேள்வியாக இருந்தது.
குற்றச்சாட்டுக்குரிய பேச்சில் இடம்பெற்ற வாசகங்கள் “இன்று, குற்றப் புலனாய்வுத் துறை (CID) நாய்கள் பரூனியைச் சுற்றித் திரிந்துகொண்டிருக்கின்றன. பல அதிகாரி நாய்கள் இந்தக் கூட்டத்தில் கூட உட்கார்ந்திருக்கின்றன. இந்திய மக்கள் பிரிட்டிஷ்காரர்களை இந்த நாட்டில் இருந்து விரட்டியடித்து விட்டு இந்தக் காங்கிரஸ் குண்டர்களுக்கு வாக்களித்துத் தேர்ந்தெடுத்து வண்டியில் உட்கார வைத்துள்ளார்கள். இன்று இந்தக் காங்கிரஸ் குண்டர்கள் மக்களின் தவறுகளால் வண்டியில் உட்கார்ந்திருக்கிறார்கள். நாம் பிரிட்டிஷாரை விரட்டியடித்தபோதே, இந்தக் காங்கிரஸ் குண்டர்களையும் விரட்டியடித்திருக்க வேண்டும்..” என்பதாகும்.
ஏராளமான வாய்மொழி சாட்சியங்களைப் பதிவு செய்த பிறகு, விசாரணை குற்றவியல் நடுவர் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 124A மற்றும் 505 இரண்டின் கீழும் குற்றவாளிகளுக்கு ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்திருந்தார். குற்றவாளிகள் பாட்னா உயர்நீதிமன்றத்தில் செய்த மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டு கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. இறுதியாக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124A அரசியல் சட்ட ரீதியாகச் செல்லத்தக்கது என்று முடிவு செய்யப்பட்டது. இந்தப் பிரிவு பேச்சுரிமை, கருத்துரிமை ஆகிய அடிப்படை உரிமைகளைக் கட்டுப்படுத்தினாலும் கூட, அந்தக் கட்டுப்பாடுகள் பொது ஒழுங்கின் நலனுக்கானவை, அவை அடிப்படை உரிமைகளின் மீது சட்டரீதியாக அனுமதிக்கக் கூடிய தலையீட்டின் வரம்புக்குள் உள்ளவை என்று அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.
அரசெதிர்ப்புக் குற்றம் தொடர்பான பிற வழக்குகள்
- கெஹோ பாம் ஹசாரிகா மற்றும் பிறர் எதிர் அஸ்ஸாம் அரசாங்கம் (1951 Cr.L.J.68;
- மனுபாய் திரிபோவந்தாஸ் படேல் மற்றும் பிறர் எதிர் குஜராத் அரசாங்கம் மற்றும் இன்னொருவர் ( 1972 Cr.L.J. 388; (1971) GLR 968)
- உத்தம்ராவ் த/பெ. கேசவராவ் பட்வாரி எதிர் மராட்டிய அரசாங்கம் மற்றும் இன்னொருவர்.
- மத்தியப்பிரதேச அரசாங்கம் எதிர் பாலேஷ்வர்தயாள் மற்றும் பிறர் (1967 Cr.L.J.1110)
- பிலால் அஹமது காலூ எதிர் ஆந்திரப்பிரதேச அரசாங்கம் (1997)
- பலவந்த சிங் எதிர் பஞ்சாப் அரசாங்கம் (1995)
அண்மைக் காலத்தில் காசுமீர் இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளப்பட்ட பிறகும் கூட காசுமீரின் பிரச்சனை தீர்க்கப்படவில்லை என்று கூறியதற்காக அருந்ததி ராயும் மாவோயிஸ்டு பிரசுரங்களை வைத்திருந்ததாக பினாயக் சென்னும் இக்குற்றச்சாட்டுக்கு ஆளாக்கபபட்டது அனைவரும் அறிந்ததே. இது போன்று இந்தியாவெங்கும் பலர் மீது இக்குற்றச்சாட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால் தான் “காந்தியின் தன்வரலாறு ஒருவரிடத்தில் இருந்தால் அவர் காந்தியவாதி என்று அழைக்கப்படலாமா?” என்று உச்ச நீதிமன்றம் எள்ளலுடன் கேட்டது.
1922 ல் காந்தியின் மீது இக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட போது அவர் கூறியதாவது:
“நிலவும் அரசாங்க அமைப்பு முறை மீது வெறுப்பு கொள்ளுமாறு மக்களிடம் போதிப்பது ஏறத்தாழ எனக்கு மிகப்பெரிய விருப்பத்துக்குரிய ஒன்றாக ஆகிவிட்டது என்ற உண்மையை எந்த வகையிலும் இந்த நீதிமன்றத்திடமிருந்து மறைக்க நான் விரும்பவில்லை. (அரசாங்கத்தின் மீது) பாசத்தைத் தயாரிக்கவோ அல்லது சட்டத்தின் மூலம் ஒழுங்குபடுத்தவோ முடியாது... குடிமக்களின் சுதந்திரத்தை நசுக்குவதற்கு வடிவமைக்கப்பட்ட இந்தியத் தண்டனைச் சட்டத்தின் அரசியல் பிரிவுகளில் இது (124 A) பட்டத்து அரசாக இருக்கிறது...”
மேலும், “மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட நாட்டுப்பற்றாளர்களில் சிலர் இந்தச் சட்டத்தின் கீழ் தண்டிககப்பட்டிருக்கிறார்கள்” என்பதால் இந்தச் சட்டத்தின் கீழ் தாம் குற்றம் சாட்டப்பட்டதைப் பெருமிதமாகக் கருதுவதாக காந்தி கூறினார்.
இந்த, 124 அ, சட்டம் “பெருமளவுக்கு ஆட்சேபகரமானது, மிகவும் வெறுக்கத்தக்கது. அதை எவ்வளவு விரைவில் கைவிடுகிறோமோ அந்த அளவுக்கு நல்லது” என்று முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு கூறியுள்ளார்.
அப்படியானால் நமது சட்டப் புத்தகத்தில் இந்த சட்டப்பிரிவு இன்னும் ஏன் இருந்துவருகிறது? நமது சிந்தனையாளர்களும் சமூக செயல்பாட்டாளர்களும் அவர்கள் அனுதாபம் கொண்டுள்ள ஒரு சித்தாந்தம் அல்லது கருத்தினை வெளிப்படுத்துகிறார்கள் என்பதற்காக அவர்களை அச்சுறுத்தவும், வழக்கு விசாரணையில் துன்புறுத்தவும் இந்த சட்டம் ஏன் பயன்படுத்தப்படுகிறது?
இந்திய அரசியல் அமைப்பின் குறைபாடுகளையும் அரசின் கொள்கைகளையும் திட்டங்களையும் விமர்சிப்போரும் மாற்று அரசியல் அமைப்பிற்கான கருத்துகளை முன்வைப்போரும் தொடர்ந்து இச்சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு சிறைவைக்கப்படுவது இன்றளவும் தொடர்கிறது.
ஒரு காலத்தில் இந்திய விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்கு காலனிய பிரிட்டிஷ் அரசாங்கம் பயன்படுத்திய ஒரு சட்டத்தை, இந்தியாவின் சொந்த மக்களின் குரல்வளைகளை நெறிப்பதற்கு – சுதந்திரமாக கருத்து வெளியிடுவதைத் தடுப்பதற்கு, அரசமைப்புக்கு மாற்றான ஓர் அமைப்பை முன்மொழியும் வெளியிடுவதைத் தடுப்பதற்கு – இந்திய அரசு தக்கவைத்துக் கொள்வதை அனுமதிக்கக் கூடாது. வழக்கொழிந்த பிற சட்டங்களைப் போலவே இந்த இ.த.ச.124 அ பிரிவும் அகற்றப்பட்ட வேண்டிய ஒன்றாகும்.
எனவே அரசின் மக்கள்விரோதக் கொள்கைகளையும் நடைமுறைகளையும் விமர்சிக்கும் சுதந்திரத்திலும் கருத்துரிமையிலும் ஜனநாயகத்திலும் நமபிக்கை கொண்ட ஒவ்வொருவரும் இந்த மக்கள்விரோத, தேசவிரோத இ.த.ச. 124 அ பிரிவை உடனடியாக அகற்ற குரல் கொடுக்கவேண்டும்.
மக்கள் விரோத, தேசவிரோத இ.த.ச. 124 அ பிரிவை அகற்றிட அணிதிரள்வோம்!
கருத்துரிமையைப் பாதுகாக்க ஒன்றுபடுவோம்!
தமிழக அரசே! மக்கள் பாடகர் தோழர் கோவனை உடனடியாக விடுதலை செய்!
- நிழல்வண்ணன்