ஆட்டம் தொடங்கிவிட்டது. கொளுத்தும் வெயிலையும் புறந்தள்ளி அனல் தெறிக்கும் பரப்புரை. “வாக்காளப் பெருமக்களே, உங்களுக்காக உழைத்திட எங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்குங்கள், உங்கள் பொன்னான வாக்குகளை எங்கள் சின்னத்தில் முத்திரையிடுங்கள். உழவர்களே, மாணவர்களே, பெண்களே உங்கள் துயரங்களை நாங்கள் தீர்க்கிறோம்”.

மக்களை எப்படி ஏமாற்றுவது என்று தேர்தல் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி! யாருக்கு வாக்களித்து எப்படி ஏமாறுவது என்று மக்களுக்குக் குழப்பம்!

இந்தியத் தேர்தல் ஆணையம் மூலமாக இந்திய அரசு தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 100 விழுக்காடு வாக்குப் பதிவு நடைபெற வேண்டும் என்ற கருத்தை மிகத் தீவிரமாக பரப்புகிறது.

“நம் விரல் - நம் குரல் - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2016’’ விழிப்புணர்வுக் கருத்தரங்கம் பல்வேறு கல்லூரிகளில் நடைபெற்றுள்ளது. இளமையும், வேகமும், ஆற்றலும் நிறைந்த உங்கள் விரலில்தான் நம் நாட்டின் எதிர்காலம் உள்ளது. வாக்களிப்பது உங்கள் கடமை, அது உங்கள் உரிமை, உங்கள் உரிமையை யாருக்கும் விட்டுத்தராதீர்கள் என்று மாணவர்களுக்கு உணர்ச்சியூட்டுகிறார்கள்.

“பிறப்பு என்பது நான்கு எழுத்து. இறப்பு என்பது நான்கு எழுத்து. வாழ்க்கை என்பது நான்கு எழுத்து. படிப்பு என்பது நான்கு எழுத்து. தேர்தல் என்னும் நான்கெழுத்தை ஒற்றுமை என்னும் நான்கு எழுத்தோடு நாம் பயன்படுத்தினால் இந்தியா என்னும் நான்கு எழுத்து தானாக வளரும்” என்று மாணவ மாணவிகளும் பேசுகின்றனர்.

தமிழினப்பகை அரசான இந்திய அரசு சனவரி 25 வாக்காளர் விழிப்புணர்வு நாள் என்று அறிவித்து உறுதிமொழி எடுக்கச் சொல்கிறது. இந்தித் திணிப்பை எதிர்த்து நம் தேசிய மொழியான தமிழைப் பாதுகாக்க தீக்குளித்தும், நஞ்சருந்தியும், குண்டடிபட்டும் நம் முன்னோர்கள் ஈகம் செய்த நாள் சனவரி 25 - 1965.

இந்த மொழிப்போர் நாளில்தான் இந்தியாவுக்கு நாம் உண்மையாக, விசுவாசமாக இருக்க வேண்டும் என்று உறுதிமொழி  எடுக்கச் சொல்கிறார்கள்.

கேட்டதெல்லாம் கிடைக்கிற வரம் தருகிறேன். ஆனால் பசிக்கு கொஞ்சம் பழையது தா என்று கேட்ட வனைப் போல் தேர்தல் கட்சிகள் கெஞ்சுகின்றன.

ஒரே ஒரு முறை வாக்களியுங்கள், மாற்றத்தைக் கொண்டு வருவோம் என்கிறார்கள்.

யாராலும் தன்னை நெருங்க முடியாத தலைவியாக உள்ள செயலலிதா அண்டிப் பிழைக்கும் அற்பர்கள் கூட்டத்தை வளர்த்து வருகிறார். அ.தி.மு.க. தொண்டர் களும் அதனைப் பெருமையாக கருதுகிறார்கள்.

செயலலிதா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் இருந்த போது அமைச்சர்கள் கண்ணீர் விட்டுக் கதறி அழுதார்கள். தாடி வளர்த் தார்கள். மண் சோறு தின்றார்கள். காவடி தூக்கி னார்கள். (அமைச்சர்கள் பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், வைத்தியலிங்கம், செந்தில் பாலாஜி மற்றவர்கள் நடித்துக் கொண்டே அடித்தது கொள்ளையோ கொள்ளை - தனிக்கதை).

சொம்பில் பால்குடம் தூக்கினால் ரூ. 500, குடத்தில் பால்குடம் தூக்கினால் ரூ. 1000, பணம் கொடுத்து பால்குடம் எடுத்தார்கள். சொம்பும் குடமும் - இலவசம்!

மண்சோறு தின்றால் ரூ. 500, மண்ணில் உருண்டால் (அங்கப்பிரதசட்ணம்) ரூ. 1000, பச்சை சேலை - இலவசம்!

எந்த அமைச்சரின் ஊழலை, கொள்ளையை செயலலிதா தடுத்து நிறுத்தினார்? ஊழலை மையப் படுத்தி செயல்படுகிறார் செயலலிதா. அமைச்சர்களை பலமுறை மாற்றுகிறாரே, காரணம் சொன்னாரா?

செயலலிதா பிடித்து வைத்தால் பிள்ளையார், வழித் தெரிந்தால் சாணி! அண்டிப்பிழைக்கும் கூட்டம் இதனை நிர்வாகத் திறமை என்று பாராட்டும்.

ஒளிரும் நிகழ்காலம் - மிளிரும் வருங்காலம் இது மக்களுக்கான முழக்கம் அல்ல! அ.தி.மு.க. தனக்காகவே உச்சரிக்கும் மந்திரம்.

தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் 6,823 மதுபானக் கடைகள் உள்ளன. 11 மதுபானத் தொழிற் சாலைகளும், 8 பீர் தொழிற்சாலைகளும் இயங்கு கின்றன. பிராந்தி, விஸ்கி, ரம் போன்றவற்றை தயாரிக்கும் நிறுவனங்கள் டிஸ்டிலரிஸ் என்றும், பீர் தயாரிக்கும் நிறுவனங்கள் புருவரிஸ் என்றும் அழைக்கப்படுகின்றன. 2003-ஆம் ஆண்டு செயலலிதா ஆட்சியில் டாஸ்மாக் மூலம் மது விற்பனையை அரசு தொடங்கியது.

டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்ட 2003-லிருந்து ஒவ்வொரு ஆண்டும் குடித்துவிட்டு ஊர்தி ஓட்டுவதால் சாலை விபத்துகளும் அவற்றில் நிகழும் உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதை “ஆனந்த விகடன்”  படம்பிடித்துக் காட்டியது. (காண்க: ஆனந்த விகடன், 19.08.2015).

2006 -- 2011 வரை தி.மு.க. ஆட்சி நடைபெற்றது. இந்த காலகட்டத்தில்தான் “உளியின் ஓசை’’ திரைப் படம் எடுத்த செயமுருகன், முன்னாள் அமைச்சர் செகத்ரட்சகன் மற்றும் தி.மு.க. பினாமிகளுக்கு 5 டிஸ்டிலரிஸ் நிறுவனங்களுக்கும் நான்கு புருவரிஸ் நிறுவனங் களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. 

சசிகலாவிற்கு சொந்தமான மிடாஸ் நிறுவனத்தின் மூலம் ஆண்டு ஒன்றிற்கு ரூ.  2000 கோடி இலாபம் கிடைக்கிறது.

 2010 இல் காங்கிரசுடன் இருந்த கூட்டணி உறவை கூடாநட்பு கேடாய் முடிந்தது என்று வசனம் பேசிய கலைஞர் இப்போது 41 தொகுதிகளை காங்கிரசுக்கு கொடுத்துவிட்டு வாக்கு கேட்டு வருகிறார்.

செயலலிதா கருணாநிதியின் பரிணாம வளர்ச்சி! ஒருவருக்கு மாற்று மற்றொருவரல்ல!

“நான்கு போலிசும் நல்லா இருந்த ஊரும்’’ என்ற திரைப்படம் போலத்தான் செயல்படுகிறது மக்கள் நலக் கூட்டணி. எந்த கொள்கையும், கோட்பாடும் இல்லாத விசயகாந்த் தமிழ்நாட்டின் முதல்வர் வேட்பாளர் என்பது சனநாயத்தின் மிகப்பெரிய கேலிக்கூத்து.

மேற்கு வங்கத்தில் காங்கிரசை ஆதரிக்கும் சி.பி.எம். கட்சியிடம் இது குறித்து கேட்டால் அது நடைமுறை தந்திரம் என்கிறார்கள். ஐக்கிய முன்னணி தந்திரம்,  நடைமுறை தந்திரம், தொகுதி உடன்பாடு என்று தங்கள் சந்தர்ப்பவாதத்திற்குப் பல பெயர்களைச் சூட்டிக் கொண்டு மக்களை ஏமாற்ற இடதுசாரிகள் வருகிறார்கள்.

யோக்கியர்களாக உள்ளவர்களுக்கு வாக்களிக்கக் கூடாதா? என்று சிலர் கேட்கிறார்கள் நல்லவர்கள் இந்தத் தேர்தல் களத்தில் சாதிக்க முடியாது. இங்கு நடப்பது சனநாயகத் தேர்தல் அன்று. பணநாயகத் தேர்தல். அதுமட்டுமல்ல அடிப்படையில் இந்திய அரசுக்குக் கங்காணியாக அடிமையாக இருக்கிறோம் என்று நாம் அளிக்கிற ஒப்புதல் அடிமை சாசனம் தான் இந்த தேர்தல் முறை!

ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி சென்னை, பம்பாய், கல்கத்தா ஆகிய இடங்களை மையமாகக் கொண்டு மூன்று மாகாணங்களாகத் தங்கள் ஆதிக்கப் பகுதிகளை நடத்தியது. 1773-இல் இங்கிலாந்து பாராளு மன்றம் “இந்தியா ஒழுங்குமுறைச் சட்டம்’’ என்ற சட்டத்தை இயற்றியது. கல்கத்தாவில் உள்ள கவர்னர் இனி கவர்னர் செனரல் (தலைமை ஆளுநர்) என அழைக்கப்படுவார் என்று விதித்து சென்னையையும் பம்பாயையும் அதன் கீழ் கொண்டு வந்தது. 1773-இல் தான் முதன்முதலாக ஒரு நடுவண் அரசு இந்தியாவில் உருவாக்கப்பட்டது.

இந்தியாவுக்கான பிரித்தானிய அமைச்சர் இந்திய வைசிராய் மாண்டேகு செம்ஸ்போர்டு 1919ஆம் ஆண்டு கொண்டு வந்த மாண்டேகு செம்ஸ்போர்டு சட்டப்படி முதன் முதலாக மாகாணங்கள் தங்கள் வரவு - செலவுத் திட்டங்களைத் தயாரித்துக் கொள்ள வகை செய்யப் பட்டது.  மாகாணங் களில் ஓர் இரட்டை ஆட்சிமுறை உருவாக்கப்பட்டது.

மாண்டேகு செம்ஸ்போர்டு கொண்டுவந்த சட்டம் தான் சுதந்திர இந்தியாவிலும் நடைமுறையில் உள்ளது. தமிழ்நாடு இந்தியாவுக்கு காலனியாக, அடிமை தேசமாக உள்ளது. இங்கு உள்ளது சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட சட்டமன்றம் அன்று,  வெறும் மசோதா மன்றம் மட்டுமே!

வெள்ளைக்காரன் கொண்டுவந்த தேர்தலை காந்தி புறக்கணித்தார். சிங்களவன் நடத்திய தேர்தலை தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் புறக்கணித்தார். தேசிய விடுதலை கோரக்கூடிய நாமும் இந்திய அரசு நடத்தக் கூடிய தேர்தலை புறக்கணிக்க வேண்டும்.

“தேசிய விடுதலை இலட்சியம் கொண்டு, அந்த இலட்சியமுள்ள அமைப்புடன் உறவுகொண்டு அதன் போராட்ட உத்திகளில் ஒன்றாக வாக்களிக்க மறுக்கும் அரசியல் நிலைபாட்டை ஏற்ற மக்களை, வாக்களிக்கும் மக்கள் மிகுந்த மதிப்புடனும் வியப்புடனும்தான் பார்ப்பார்கள். இந்த வழியில் வாக்களிப்பவர்களை விட வாக்களிக்க மறுப்பவர்கள் கூடுதல் மரியாதை பெறுவார்கள்.

ஆட்டுமந்தை போல், மாட்டு மந்தை போல், ஓட்டு மந்தையைப் பராமரிக்கின்றன தேர்தல் கட்சிகளும் ஆளும் வர்க்கமும். அந்த மந்தையில் சேராமல் உரிமைக் குரல் எழுப்புபவர்களுக்கு சமூக மரியாதை கூடுமா-குறையுமா? கூடும்.

நமது தமிழ்த் தேசியப் புரட்சிப் பாதை கொரில்லாக் குழுப் போராட்டப் பாதையும் அல்ல.தேர்தல் பாதையும் அல்ல! மக்கள் திரள் புரட்சிப் பாதை! பணம் - பதவி - விளம்பரம் ஆகியவற்றிற்கு ஆசைப் படாதவர்கள், எதிரிகளோடு மோதுவதற்கு அஞ்சாத விடுதலை வீரர்கள் புரட்சிகர மக்கள் திரளின் முன்னணிப் படையாக அணிவகுக்க வேண்டும்.

“வாக்குச் சாவடிகளுக்கு அழைப்போர் மக்களை ஏகாதிபத்தியத்தின் வாசலுக்கு அழைக்கிறார்கள்.

வாக்களிக்க மறுக்கக் கோரும் நாம், மக்களை இன விடுதலைப் பாதைக்கு அழைக்கிறோம்’’ என்று தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் விடுக்கும் அழைப்பை ஏற்று அணிவகுப்போம்!

சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம்!

Pin It