புரட்சியாளர் அம்பேத்கரைப் பொறுத்தவரை அவருடைய சிலைகள் மூன்று விதங்களில் அவமதிக்கப்படுகிறது. முதலில் காலம் காலமாக அவர் எதிர்த்து வந்த சாதிய வருணாசிரம முறையை முட்டுக்கொடுத்து தாங்கிப் பிடிக்கிற  இந்துத்துவக் கோட்பாட்டை ஏற்று நடைமுறைப்படுத்த பணியாற்றுகிற பழமைவாத, அடிப்படைவாத சக்திகளின் மலர் மாலைகளால் அவமதிக்கப்படுகிறது. இரண்டாவதாக, புரட்சியாளர் அம்பேத்கரின் சீரிய முயற்சியால் இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு உரிமைகளைப் பெற்றுக்கொண்ட பிற்படுத்தப்பட்டவர்களின் செருப்புகளாலும், கடப்பறைகளாலும் அவமதிக்கப்படுகிறது. மூன்றாவதாக, புரட்சியாளர் அம்பேத்கரின் வாழ்நாள் முழுவதும் யாருடைய நலனுக்காகவும் உரிமைகளுக்காகவும் மாண்புகளுக்காகவும் போராடினாரோ அந்த தலித் மக்களின் முளைப்பாரிகளாலும், பாலாபிசேகங்களாலும் அவமதிக்கப்படுகிறது.

ambedkar_241புரட்சியாளர் அம்பேத்கர் தான் வாழ்நாள் முழுதும் மாசில்லாமல் நேசித்த தலித் மக்களிடம் எதிர்பார்ப்பது பாலாபிசேகத்தையும் முளைப்பாரியையும் அல்ல. இன்னுஞ்சொல்லப்போனால் தன்னுடைய சாதிக்காரர் என்பதற்காக தலித்துகள் தன்னை நேசிப்பதையும் பூசிப்பதையும் அவர் கிஞ்சிற்றும் விரும்ப மாட்டார். புரட்சியாளரின் போராட்டங்கள் யாவும் தலித் மக்களின் சலுகைகளுக்காகவும் நலன்களுக்காகவும் அல்ல. மாறாக, சனநாயகத்துக்கு, அறிவியலுக்கு, மனிதநேயத்திற்கு, இயற்கைக்கு புறம்பானதும் மாறானதுமான சாதிய அமைப்பு முறையை எதிர்த்த போராட்டங்களேயாகும். புரட்சியாளரின் சாதியக்கட்டுமானத்தை தகர்க்கும் போராட்டத்தின் பலன்களை கூடுதலாக அனுபவிக்கிற மக்கள் தொகுப்பாக வேண்டுமானால் தலித்துகள் இருக்கலாமே தவிர, இதர பகுதி மக்களும் புரட்சியாளரின் போராட்டங்களால் விளைந்த பயன்களை அனுபவிப்பவர்களே ஆவர். ஆலயத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுகிற தலித்துகளுக்கு புரட்சியாளரின் சாதி ஒழிப்புப் போராட்டம் பயன்படுகிறதோ அதே அளவுக்கு கோவில் கருவறைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுகிற சூத்திரர்களுக்கும் அனைத்து சாதிப் பெண்களுக்கும் பயன்படுகிறது.

புரட்சியாளரின் போராட்டங்கள் எதுவும் தலித் விடுதலையை தனித்துப் பேசுபவை அல்ல. அவை யாவும் தீண்டாமையை, வன்கொடுமைகளை, இழிவுகளை, பெண்ணடிமையை, ஆலய நுழைவை, சூத்திரப்பட்டத்தை நியாயப்படுத்துகிற சாதியக்கட்டுமானத்தை வேரோடு தகர்க்க முனைகிற போராட்டங்களே ஆகும்.

இன்றைக்கு கூட மேல் சாதியென்று அறியப்படுகிற ஏதோ ஒரு சாதியில் பிறந்த ஒரு பணக்கார மாணவன் வெளிநாடு சென்று படிப்பது வியப்பாகவும் பெருமையாகவும் பார்க்கப்படுகிற சூழலில், 1916ம் ஆண்டில் இன்றைக்குச் சரியாக 96 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடு  சென்று படிக்கிற ஆற்றலும் திறமையும் பெற்றிருந்த மாணவனாக புரட்சியாளர் திகழ்ந்தார். அவ்வாறு ஆற்றலும் திறமையும் மிகுந்த புரட்சியாளர் அம்பேத்கர் அவர் படித்த கொலம்பியா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ஒரு மானுடவியல் கருத்தரங்கில் ஆய்வுக்கட்டுரை ஒன்றை சமர்ப்பித்தபொழுது அவர் எடுத்துக்கொண்ட தலைப்பு “இந்தியாவில் சாதிகள் – அவற்றின் தோற்றம், வளர்ச்சி, அமைப்பியக்கம்” என்பதாகும். தன்னுடைய 25ம் வயதில் பாடத்திட்டத்தை தாண்டி அவர் ஆர்வம் காட்டிய துறையாக சாதி ஒழிப்பே இருந்தது மிகுந்த போற்றுதலுக்குரியதாகும்.

அந்தக் கட்டுரையும் கூட, சாதியால் பாதிக்கப்பட்டவர்கள் சாதியின் மீது கோவம் கொண்டு தூற்றுகிற ஆத்திர வார்த்தைகளாக இல்லாமல், விருப்பு வெறுப்பு இல்லாத ஆய்வுக்கட்டுரையாகவும் இன்றளவும் இந்திய சாதிய வரலாற்றையோ, இந்திய மானுடவியல் வரலாற்றையோ ஆய்வு செய்யப்போகிற வரலாற்று மாணவர்களுக்கு அடிப்படைச் சாசனமாக விளங்குகிறது என்றால் மிகையாகாது.

சாதியைக் கடைப்பிடிக்கிற தனிநபர்கள் மீது ஒருநாளும் புரட்சியாளர் வெறுப்புக்கொண்டவரல்ல. உண்மையில் அவர்களைப் பார்த்து பரிதாப்படவே செய்தார். சாதியக்கட்டுமானத்தை ஒழிக்கவே அவர் முனைந்தாரே அன்றி சாதியைக் கடைப்பிடிக்கிற தனிநபர்களை ஒழிக்க விரும்பியதில்லை.

புரட்சியாளர் அம்பேத்கர் முன்னெடுத்த சாதி ஒழிப்புப் போராட்டம் வெறும் தலித்துகளின் நலனை மாத்திரமே முன்நிறுத்தியது அல்ல. அது தலித்துகளை சூத்திரர்களை, பிற்படுத்தப்பட்டவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களை அவர்களின் நலன்களை முன்நிறுத்திய போரட்டமேயாகும்.

ஆனால், புரட்சியாளரின் தொலைநோக்கான, விரிந்த, விசாலமான, வெகு மக்களை உள்ளடக்கிய பார்வையைப் புரிந்து கொள்ளாமல், அவர் நம்முடைய சாதியைச் சேர்ந்தவர் இல்லை என்கிற வெறுப்பும் தங்கள் அடிமைகளில் ஒருவர் என்கிற சிந்தனையுமே அம்பேத்கர் சிலையின் மீது கடப்பாறையை வீசுவதற்கு காரணமாக அமைகிறது.

புரட்சியாளர் அம்பேத்கரின் இறுதி இலக்கெல்லாம், ஒரு முழுமையான சனநாயக, சமத்துவ, சுதந்திர, மனிதநேய, அறிவியல் மனப்பான்மை கொண்ட, இயற்கையான, பகுத்தறிவு பொதுவுடமைச் சமுதாய அமைப்பேயாகும். அத்தகையதொரு சமூக அமைப்பை படைக்க இடையூறாக இருந்த சாதிய அமைப்பு முறையை ஒழிக்காமல், தீண்டாமையை ஒழிக்காமல், கடவுளை ஒழிக்காமல், இந்துத்துவத்தை ஒழிக்காமல் முடியாது என்பதாலேயே சாதி ஒழிப்பில் கூர்மையாகப் பணியாற்றினார்.

புரட்சியாளர் அம்பேத்கரின் பணி, அவர் மறைந்து அரை நூற்றாண்டுக்கு மேலாகியும் முடியாமல் போனதற்கு ஒரு வகையிலான காரணம், அம்பேத்கரிஸ்டுகளே ஆவர். தீண்டாமை ஒழிப்பிலும் தலித் விடுதலையும் மட்டுமே அக்கறையை செலுத்திவிட்டு பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளிலும் கார்ல் மார்க்சின் பொதுவுடைமைக் கொள்கைகளிலும் கவனம் செலுத்த மறுக்கின்றனர். மூட நம்பிக்கைகளும் தனியுடைமைக் கொள்கைகளும் மலிந்து தீண்டாமை மட்டுமே இல்லாமல் போனதொரு சமூகம் தலித்துகளுக்கு எந்த வகையிலும் பயன்படாது என்பதை அம்பேத்கரிஸ்டுகள் புரிந்து கொள்ள வேண்டும். அப்படியானதொரு சமூகம் மீண்டும் சாதியை உற்பத்தி செய்து கொள்ள அதிகமான வாய்ப்பு உள்ளது என்பதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

புரட்சியாளரின் கூற்றுகளில் மிகப்பிரபலமான ஒன்றென்றாலும் தேவை கருதி மீண்டும் நினைவு கூர்வோம். இந்திய அரசியல் சாசனத்தை இந்திய அரசியல் நிர்ணய சபையில் தாக்கல் செய்து பேசியபோது சொன்னார், ஒரு மனிதன் ஒரு வாக்கு என்கிற அரசியல் சமத்துவ சமூக அமைப்புக்குள் நுழைய இருக்கிறோம். இந்த அரசியல் சமத்துவத்தை பயன்படுத்தி சமூக சமத்துவ சமுதாயத்தை உருவாக்க தவறுமேயானால் இந்த அமைப்பை மக்கள் தூக்கி எறிவார்கள்.

ஒரு மனிதன் ஒரு வாக்கு என்பது அரசியல் ஜனநாயகம். ஒரு மனிதன் ஒரு மதிப்பு என்பதே அம்பேத்கரின் சமூக ஜனநாயகம்.

அந்த இலக்கை நோக்கி முன்னேற அம்பேத்கர் தன்னுடைய சாதிக்காரர் என்பதற்காக மட்டுமே அவரை நேசிக்கிற தலித்துகளும், தன்னுடைய சாதிக்காரர் இல்லை என்பதற்காக அவரை வெறுக்கிற மற்ற சாதியினரும் பயன்படமாட்டார்கள்.

அம்பேத்கர் காண விரும்பிய சமூக ஜனநாயகத்தை படைக்க தலித்துகள் மட்டுமல்லாது, தலித்துகளை மனிதர்களாக எண்ணுகிற இடதுசாரி, முற்போக்கு, பகுத்தறிவு, சமூகநீதிச் சிந்தனையாளர்களும் இணைந்து பணியாற்றுவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாகும்.

Pin It