வாக்குரிமை குறித்துப் பரிசீலித்த சவுத்பரோ தலைமையிலான சீர்திருத்தக் குழு முன்பு அம்பேத்கர் அளித்த எழுத்துப்பூர்வமான சாட்சியமே, டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுதி – 2இல் முதலாவதாக இடம் பெற்றுள்ளது. இச்சாட்சியம் 1919 ஆம் ஆண்டு அளிக்கப்பட்டது.அப்போது அம்பேத்கருக்கு 27 வயதுதான் நிவைறடைந்திருந்தது. பம்பாய் மாகாண தீண்டத்தகாதவர்களின் பிரதிநிதியாகத் தனது சாட்சியத்தை வழங்க அம்பேத்கர் சென்றார்.

இக்குழு முன்பு அவர் வலியுறுத்திய முதலாவது கருத்து : “மக்களின் ஆதரவு பெற்ற அரசு என்பது, மக்களுக்கான அரசாங்கமாக மட்டுமின்றி, மக்களால் நடத்தப்படுகின்ற அரசாகவும் இருக்க வேண்டும். இதை வேறுவிதமாகச் சொல்வதென்றால், பல்வேறு கருத்துகளுக்குப் பிரதிநிதித்துவம் வழங்குவது மட்டும் போதாது. நேரடிப் பிரதிநிதித்துவம் அவற்றுக்கு வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் மக்கள் ஆதரவு பெற்ற அரசாக அது அமையும். எனவே கருத்துக்களின் பிரதிநிதித்துவம், நபர்களின் நேரடிப் பிரதிநிதித்துவம் ஆகிய இரண்டும் இடம் பெறுமாறு வாக்குரிமை, தொகுதிகள் ஆகியவற்றை வடிவமைக்கும்போது வாக்குரிமைக் குழு பார்த்துக் கொள்ள வேண்டும்.”

சாதிகளாகவும், மதங்களாகவும் பிளவுபட்டுள்ள மக்களைக் கொண்ட இந்தியா, பிரதிநிதித்துவ அரசுக்கு தகுதியானதல்ல என்று கூறும் ஆங்கிலேயர்களின் கருத்தை அடுத்ததாக அவர் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்கிறார். இந்தியாவில் இருப்பதைப் போன்றே அய்ரோப்பாவிலும் சமூகப் பிரிவினைகள் உள்ளன. அமெரிக்காவில் நிற வேறுபாடுகள், அரசியல் வேறுபாடுகள் உள்ளன. அதோடு தனித்தனி மொழி, மதம், பண்பாட்டு ஒழுங்குகள், பண்பாடுகள் கொண்ட போல்கள், டச்சுக்காரர்கள், சுவீடன்காரர்கள், ஜெர்மானியர், ரஷ்யர் என்று நிரந்தரமான பிரிவினைகள் கொண்ட மக்கள் அமெரிக்காவில் இருக்கிறார்கள். அந்நாடு பிரதிநிதித்துவ அரசுக்குத் தகுதியானது என்றால், இந்தியா மட்டும் எப்படி தகுதியற்றதாகப் போய்விடும் என அவர் கேள்வி எழுப்புகிறார்.

அதே வேளையில் இந்தியாவில் உள்ள இப்பிரிவினைகள், அதன் சீரான அரசியல் வாழ்வின் பாதையில் தடைக்கற்களாக அமையக் கூடியவையே என்பதையும் ஒத்துக் கொள்ள வேண்டும் என்கிறார். அப்படிப்பட்ட இந்தியாவின் உண்மையான சமூகப் பிரிவுகள் : 1. தீண்டத்தக்க இந்துக்கள் 2. தீண்டத்தகாத இந்துக்கள் 3. முஸ்லிம்கள் 4. கிறித்துவர்கள் 5. பார்சிகள் 6. யூதர்கள் ஆகியவை. இவர்கள் அனைவருக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்கிறார்.

இப்பிரதிநிதித்துவம் நேரடிப் பிரதிநிதித்துவமாகவும் இருக்க வேண்டும். அனைத்துப் பிரிவினரும், “வெறும் வாக்காளர்களாக மட்டும் இருப்பது போதாது. சட்டம் இயற்றுபவர்களாகவும் இருப்பது அவசியமானது. இல்லையெனில் சட்டமியற்றுபவர்கள் எஜமõனர்களாகவும், வாக்காளர்கள் ஆளுகைக்குட்பட்டவர்களாகவும் மட்டுமே இருக்க வேண்டியிருக்கும்” என்றும் அம்பேத்கர் எச்சரிக்கிறார். பிரதேச வாரியான தேர்தல் தொகுதிகள் முறையில் ஒரு குறிப்பிட்ட குழுவினரே பெரும்பான்மையினராக இருப்பதால், சிறிய குழுக்களுக்குப் பிரதிநிதித்துவம் கிடைப்பதைத் தடை செய்து விடுகின்றனர். எனவே, பிரதேச வாரியான தேர்தல் தொகுதிகள் விரும்பத்தக்கவை அன்று என்பது அம்பேத்கர் முன்வைத்த கருத்து.

தீண்டத்தக்க இந்துக்களிடையேயும் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் என்ற வேறுபாடுகள் கூர்மை அடையத் தொடங்கிய காலம் அது. பார்ப்பனர் அல்லாதார் தங்களுக்கு தனிப் பிரதிநிதித்துவம் வேண்டும் எனக் கோரினர். இது குறித்துக் கருத்து தெரிவிக்கும்போது, மக்கள் தொகையின் அடிப்படையில் பல்வேறு பிரிவினரின் எண்ணிக்கையையும், அவர்களின் வாக்காளர் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரங்களையும் அம்பேத்கர் தருகிறார்.

அப்புள்ளி விவரங்களின் அடிப்படையில், பார்ப்பனர்களின் மக்கள் தொகை யுடன் அவர்களின் வாக்காளர் விகிதத்தை ஒப்பிடும்போது மிக அதிகமாக இருக்கிறது. பார்ப்பனர் அல்லாத பிற்படுத்தப்பட்ட சாதியினர், பார்ப்பனர்களை விட மக்கள் தொகையில் அதிக எண்ணிக்கையில் இருந்தபோதும் – வாக்காளர் பட்டியலில் மிகமிகக் குறைவானவர்களே இவர்களில் வாக்காளர்களாக இருக்கிறார்கள். அதோடு தங்களுக்கான நேரடிப் பிரதிநிதித்துவத்தை இவர்களால் பெற முடியாது என்று விளக்குகிறார்.

எனவே லிங்காயத்துகள், மராட்டாக்கள் ஆகிய பம்பாய் மாகாண பார்ப்பனர் அல்லாத தீண்டத்தக்க இந்துக்களுக்குப் பிரதிநிதித்துவம் கிடைக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அத்தகைய சிறப்பு ஏற்பாடு என்னவாக இருக்க வேண்டும் என்பதில் அம்பேத்கர் பிறரை விட மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தார். “என்னைப் பொருத்தவரை, அச்சிறப்பு ஏற்பாடு தனி வாக்காளர் தொகுதிகளாகவோ, ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகளாகவோ செய்யப்படுவதை விட, வாக்காளருக்கான தகுதியை குறைத்து நிர்ணயிக்கும் வடிவத்தில் செய்வது நல்லது. பார்ப்பனர்களின் வாக்காளர் தகுதியை விட பார்ப்பனர் அல்லாதாருக்கும் குறைத்து நிர்ணயிக்க வேண்டும். இந்த ஏற்பாட்டால் வாக்காளர் பட்டியலில் பார்ப்பனர் அல்லாத தீண்டத்தக்க இந்துக்கள், தங்களின் நிலையை மேம்படுத்திக் கொள்ள முடியும். அதோடு பார்ப்பனர்களுக்குச் சாதகமான நிலையும் சமன் செய்யப்படும். பார்ப்பனர்கள் நாட்டின் சமூக வாழ்வில் மிகவும் கேடான செல்வாக்கை செலுத்தி வந்திருக்கிறார்கள். அரசியலில் அவர்களது மோசமான செல்வாக்கு மிகக் குறைவானதாக இருக்கும்படி கட்டுப்படுத்தப்படுவது அனைவரின் நலனுக்கும் நல்லது. மிகவும் ஒதுங்கி வாழ்பவர்களாக இருப்பதைப் போலவே, பார்ப்பனர்கள் மிகப் பெரிய சமூக விரோதிகளாகவும் இருக்கிறார்கள்.”

இப்பகுதியை படிக்கும் வாசகர்களுக்கு ஒரு சிறிய குழப்பம் ஏற்படுவது இயல்புதான். அதிலும் வயதில் குறைந்த வாசகர்களுக்கு இன்னும் அதிகமாகக் குழப்பம் ஏற்படலாம். வாக்குரிமைத் தகுதி குறித்துப் பேசும்போது அது என்ன என்ற கேள்வி அவர்களுக்கு எழக்கூடும். வாக்குரிமைத் தகுதி என்பது வாக்குரிமை பெறுவதற்குத் தேவையான தகுதிகளே ஆகும். தற்பொழுது இந்தியாவில் பதினெட்டு வயது நிரம்பியிருந்தாலே வாக்குரிமைக்கான தகுதியாக இருக்கிறது. அந்தக் காலங்களில் வாக்குரிமைத் தகுதியாக ஒருவர் பெற்றுள்ள கல்வியின் அளவு, அவரது வருவாய், அவருடைய சொத்து ஆகியவை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மேற்கண்டவற்றில் பார்ப்பனர்களுக்கும், பார்ப்பனர் அல்லாதாருக்கும் மலைக்கும் மடுவுக்குமான அளவில் வேறுபாடு இருந்ததால், பார்ப்பனர் அல்லாதாருக்கு அத்தகுதிகளின் அளவைக் குறைத்து நிர்ணயிக்க வேண்டும் என்கிறார்.

அடுத்து, தலித்துகளாகிய தீண்டத்தகாதவர்களின் கோரிக்கைகள் பற்றி அம்பேத்கர் கூறுகிறார் : “தீண்டத்தகாதவர்கள் எப்போதும் பரிதாபத்திற்குரியவர்களாகக் கருதப்படுகிறார்கள். ஆனால், அவர்களுக்குப் பாதுகாக்கப்பட வேண்டிய நலன்கள் என எவையும் இல்லை என்ற காரணத்தைச் சொல்லி, ஒவ்வொரு அரசியல் திட்டத்திலும் அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். இருப்பினும் அவர்களுடைய நலன்கள் தாம் மிக முக்கியமானவையாக, பெரிதெனக் கருதப்பட வேண்டியவையாய் இருக்கின்றன. பறிமுதல் செய்யப்படுவதிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டிய சொத்துக்கள் நிரம்ப இருக்கின்றன என்பதனால் அன்று. ஆனால் அவர்கள் தங்களது அடிப்படை அடையாளங்களையே பறிகொடுத்து விட்டு நிற்கிறார்கள். சமூக மற்றும் மத ரீதியான தடைகள் அவர்களது மனிதத் தன்மையை÷ய காவு கொண்டு விட்டன. எனவே, ஆபத்திலிருக்கும் அவர்களது நலன்கள் மனித இனத்தின் நலன்களாக இருக்கின்றன. இவ்வாறான முதன்மையான நலன்களை ஒப்பிடும்போது சொத்து குறித்த நலன்கள் எல்லாம் ஒன்றுமேயில்லை.”

மேற்கண்டவாறு தீண்டத்தகாதவர்களுக்கு என்று தனிப்பட்ட நலன்கள் இருக்கின்றன என்பதை நிறுவுகிறார் : “1. தனி மனித சுதந்திரம் 2. தனி மனிதப் பாதுகாப்பு 3. சொத்து வைத்துக் கொள்ளும் உரிமை 4. சட்டத்திற்கு முன்பான சமத்துவம் 5. மனசாட்சிப்படி நடப்பதற்கான சுதந்திரம் 6. கருத்துரிமை மற்றும் பேச்சுரிமை 7. கூட்டம் கூடுவதற்கான சுதந்திரம் 8. ஒரு நாட்டின் அரசாங்கத்தில் பிரதிநிதித்துவத்திற்கான சுதந்திரம் 9. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்களில் பதவி வகிக்கும் உரிமை ஆகிய உரிமைகளின் தொகுப்பாக குடியுரிமை என்பது உள்ளது.

“பிரதிநிதித்துவத்திற்கான உரிமையும், அரசுத் துறைகளில் பதவி வகிக்கும் உரிமையும் குடியுரிமையை முழுமை பெறச் செய்யும் இரு முக்கியமான உரிமைகளாக இருக்கின்றன. ஆனால் தீண்டத்தகாதவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் தீண்டாமை, இவ்வுரிமைகளை அவர்கள் அடைய முடியாத தொலைவில் நிறுத்தியிருக்கிறது. சில இடங்களில் மிகச் சாதாரணமான உரிமைகளான தனி மனித சுதந்திரம், தனி மனிதப் பாதுகாப்பு ஆகியவைகூட அவர்களுக்குக் கிடைக்கவில்லை.

“சட்டத்துக்கு முன்பான சமத்துவம் அவர்களுக்கு எப்போதும் உத்திரவாதப் படுத்தப்பட்ட ஒன்றாக இல்லை. இவை அவர்களுக்கு மட்டுமே உரியதான அவர்களது தனிப்பட்ட நலன்கள். இவற்றுக்காக அவர்களைத் தவிர வேறு யாரும் குரல் கொடுக்க முடியாது... தீண்டாமை என்பது தீண்டத்தகாதவர்கள் மட்டுமே குரல் கொடுக்க வேண்டிய தனிப்பட்ட நலன்களின் தொகுப்பாகும். தங்களுடைய நலன்களுக்கான கோரிக்கைகளை முன்வைக்கக்கூடிய தீண்டத்தகாதவர்களை நாம் இனங்காண வேண்டும். இரண்டாவதாக தீர்வுகளை வலியுறுத்துவதற்குப் போதுமான ஆற்றலாக வெளிப்படும் விதத்தில் போதிய எண்ணிக்கையில் அவர்களை இனங்காண வேண்டும்.” 1919இல் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் முன்பு வைக்கப்பட்ட இந்த கருத்துக்கள், இன்றைக்கும்கூட பெருமளவுக்குப் பொருத்தமானதாக இருப்பது, ஒரு வரலாற்றுப் பேரவலம் என்றுதான் சொல்ல வேண்டும்.

பிரதேச வாரியான தொகுதி முறையில் தீண்டத்தகாதவர்கள் போதுமான எண்ணிக்கையில் வர முடியுமா என்பது குறித்து அம்பேத்கர் அலசுகிறார். “1911 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பம்பாய் மாகணாத்தின் மொத்த மக்கள் தொகை 19,626,477 ஆகும். இதில் தீண்டத்தகாத மக்கள் தொகை 1,627,980. இது, மொத்த மக்கள் தொகையில் 8 சதவிகிதம் ஆகும். ஆனால் தீண்டத்தகாத வகுப்பைச் சேர்ந்த வாக்காளர்களின் சதவிகிதம் 0.09 ஆகும்.”

இந்த சதவிகிதத்தில் வாக்காளர்களை வைத்துக் கொண்டு, தீண்டத்தகாத பிரதிநிதிகள் வெற்றி பெறுவதைக் குறித்து கனவாவது காண முடியுமா? இது குறித்து அம்பேத்கர் மேலும் விளக்கமாகக் கூறுகிறார். “தீண்டத்தகுந்த சாதிகளைச் சேர்ந்த வாக்காளர்கள், தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்த வேட்பாளருக்கு வாக்களிப்பார்கள் என்று நம்பவும் இடமில்லை. சாதிகளின் படிநிலை அமைப்பு, தீண்டத்தகாதவர்களை இருபுறமும் வெட்டக்கூடிய ஒரு விதமான மத அடிப்படையை உருவாக்குகிறது; கீழ்நிலைகளில் உள்ளவர்கள் மீது அது வெறுப்பை உருவாக்குகிறது. இதனால் தீண்டத்தகாதவர்களுக்கு ஒரு வாக்குகூட அளிக்காமலே, அவர்களிடமுள்ள மிகச் சொற்பமான வாக்குகளின் பெரும் பகுதியை தீண்டத்தக்க இந்துக்கள் பெற்று விடுவது உறுதியானதாக இருக்கிறது.”

அதேபோல தீண்டத்தகாதவர்கள், வலிமையான வாக்காளர்களாக ஏன் அணி திரள முடியவில்லை என்பதையும் விளக்குகிறார். “அது அவர்களின் தவறால் ஏற்பட்டதல்ல. அவர்களது உடலோடு பிணைக்கப்பட்டுள்ள தீண்டாமைதான் அவர்களது தார்மீக மற்றும் பொருளியல் முன்னேற்றங்களுக்குத் தடையாக இருக்கிறது. செல்வத்தை ஈட்டுவதற்கான முதன்மையான வழிகளாக இருப்பவை வணிகம், தொழில் அல்லது பணி ஆகியவையே. தங்களது தீண்டாமையின் காரணமாகத் தீண்டத்தகாதவர்கள் இவற்றில் எதிலும் ஈடுபட முடியாது. ஒரு தீண்டத்தகாத வணிகனிடமிருந்து எந்த இந்துவும் எதையும் வாங்க மாட்டான். ஒரு தீண்டத்தகாதவன் பணமீட்டக்கூடிய எந்தப் பணியிலும் ஈடுபட முடியாது.”

இதற்கு எடுத்துக்காட்டாக, மராட்டாக்கள் முதலிய சாதி இந்துக்கள் ஆங்கிலேயரின் படையில் சேர முன் வந்ததற்குப் பிறகு, அவர்களைத் தேர்வு செய்வதை நிறுத்திவிட்ட நிகழ்வைச் சுட்டிக்காட்டுகிறார். அவ்வாறே காவல் துறையிலும் பணி மறுக்கப்பட்டது. பெரும்பான்மையான அரசு அலுவலகங்களில் தீண்டத்தகாதார் இடம் பெறுவது சாத்தியமற்றதாக இருக்கும் நிலை ஆகியவற்றைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார்.

தீண்டத்தகாதவர்களில் பெரும்பான்மையினர் தொழில் முறை நெசவாளர்களாக இருந்த போதிலும் அவர்களால் துணி தீட்டுப்பட்டு விடும் என்ற காரணத்தைச் சொல்லி, ஆலைகளில் நெசவுப் பிரிவில் அவர்கள் அனுமதிக்கப்படாத நிலை இருக்கிறது எனச் சுட்டிக்காட்டுகிறார். வாக்குரிமைக் குழு உறுப்பினர்களில் ஒருவர், தனது சாட்சியத்தில் முஸ்லிமாக தன்னை காட்டிக் கொண்டு நெசவுப் பிரிவில் பணிபுரிந்த ஒருவர் மகர் சாதிக்காரர் என பின்னர் கண்டுபிடிக்கப்பட்டபோது, கொலை வெறித் தாக்குதலுக்குள்ளான நிகழ்வைப் பகிர்ந்து கொண்டதை அம்பேத்கர் பதிவு செய்கிறார்.

பம்பாய் மாநகராட்சிப் பள்ளிகளில், தீண்டத்தகாதவர்களின் குழந்தைகளுக்கு ஒன்று, தீண்டத்தகுந்தவர்களின் குழந்தைகளுக்கு ஒன்று என இரு வேறுபட்ட பிரிவுகள் இருக்கின்ற செய்தியையும் சுட்டிக் காட்டுகிறார். அதோடு அங்கு பணியாற்றும் தீண்டத்தக்க ஆசிரியர்களுக்கும், தீண்டத்தகாத ஆசிரியர்களுக்கும் இடையில் வெளிப்படையாகப் பாரபட்சம் காட்டப்படுவதையும் கவனத்துக்குள்ளாக்குகிறார்.

இவ்வாறான நிலைமைகளைப் பட்டியலிட்டும் கீழ்க்கண்ட வார்த்தைகளில் வாக்குரிமைக் குழுவின் கடமையை நினைவுபடுத்துகிறார் : “தற்போதைய சூழலில், செல்வம் ஈட்டுவதற்கான அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டிருக்கும்போது, பெரிய சொத்துடைமைத் தகுதியைத் தீண்டத்தகாதவர்களிடமிருந்து எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது. செல்வம் சேர்ப்பதற்கான வாய்ப்புகளை எல்லாம் அவர்களுக்கு மறுத்துவிட்டு, சொத்துடைமைத் தகுதியை அவர்களிடம் கேட்பது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாகும்...

“ஆபத்திலிருக்கும் தீண்டத்தகாதவர்களின் நலன்களை அறிந்திருக்கும் குழு தீண்டத்தகாதவர்களின் பிரதிநிதித்துவத்தைக் குறித்து தீர்மானிக்கும்போது, வாக்காளர்களின் எண்ணிக்கை பிரதிநிதிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அனுமதிக்காமல், பிரதிநிதிகளின் எண்ணிக்கை வாக்காளர்களின் அளவை கட்டுப்படுத்த வைப்பதாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.”

– அடுத்த இதழிலும்

Pin It