மாற்றுத் திறனாளி பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகள் மாற்றுத் திறனாளியாக பிறக்கும் வாய்ப்பு குறைவு. ஆனால் தாழ்த்தப்பட்ட பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தை தாழ்த்தப்பட்டோனாகவே பிறக்கிறது. பிற்படுத்தப்பட்ட பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தை பிற்படுத்தப்பட்டோனாகவும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோனாகவுமே பிறக்கிறது. ஒரு குழந்தை பிறந்ததுமே அதை ஒரு சாதியைச் சேர்ந்தவனாகவே பார்க்கும் சமூகத்தில் இருக்கிறோம். அப்படியிருக்கும்போது சாதியத்தின் பிடியிலிருந்து அந்தக் குழந்தையைக் காக்க கல்வியில், வேலையில் என சலுகை கொடுத்து கை தூக்கிவிட வேண்டியது அவசியமாக இருக்கிறது.

அந்தக் குழந்தை சாதிரீதியான அழுத்தத்திலிருந்தும், பொருளாதார, சமூக அழுத்தங்களிலிருந்தும் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம். என்னதான் சாதியை அடிப்படையாகக் கொண்ட இடஒதுக்கீடு திட்டம் நடைமுறையில் இருந்தாலும் அதெல்லாம் வெறும் கண்துடைப்பு என்பதை கொஞ்சம் உற்றுப் பார்த்தால் புரியும். இங்கு மொத்தமாகப் பிரிக்கப்படும் சாதி ரீதியான இடஒதுக்கீட்டிற்கு தனி உள்ஒதுக்கீடு முறை மிகவும் அவசியம். இன்று வரை சாதி இடஒதுக்கீட்டால் ஒரு தரப்பு மட்டுமே வளர்ந்துள்ளது. அது பெரும்பான்மைமிக்க சமூகமாகவே இருக்கிறது. உதாரணமாக தலித் இடஒதுக்கீட்டில் அருந்ததியனருக்கான இடஒதுக்கீடு சரிவர கிடைக்கவில்லை என்பதும், பிற்படுத்தப்பட்டோரில் கூட  சில சாதிகளே தொடர்ந்து இடஒதுக்கீட்டினால் பலனடைவதும் அறிந்ததே.

அதற்கு மக்கள் தொகை அடிப்படையில் வழங்கப்படும் இடஒதுக்கீடே சிறந்த தீர்வாக இருக்கும் என்பதை நீண்ட காலமாக பெரியார் இயக்கங்கள் முதல் சில சாதி சங்கங்கள் வரை வலியுறுத்திக் கொண்டே உள்ளன. அதற்கான முயற்சியாகவே இந்த சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பினை போராடிப் பெற்றுள்ளோம் என்றாலும், இப்போது நடைமுறையில் எடுக்கப்படும் கணக்கெடுப்பு திருப்திகரமாக இல்லை என்பதே உண்மை. சாதி ஒழிப்பு என்பதை பேச்சளவில் மட்டுமே சொல்லும் அரசியல்வாதிகள், சாதியை அழிக்காமல் அதனை வளர்க்கவே நினைக்கின்றார்கள் என்பது நாம் அறிந்ததே. அவர்களின் சதி இந்த கணக்கெடுப்பிலும் உள்ளது என்பதை விளக்கவே இந்த கட்டுரை.

இந்த சாதி வாரியான கணக்கெடுப்பில் அங்கீகாரம் செய்யப்பட்ட சாதிகளின் பட்டியலை முன்பே அரசு வெளியிட்டிருக்க வேண்டும். பெரும்பாலான மக்கள் தங்கள் சாதிகளின் பெயர்களை சரிவர தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். நடைமுறையில் இருக்கும் சாதிப் பட்டங்களும், சாதிக் கட்சிகளும் இன்னும் குழப்பத்தினை தந்து கொண்டு இருக்கின்றன என்பதே உண்மை. 'சாதி அறியாத மக்களா? வியப்பாக உள்ளதே' என்று சிலர் நினைக்கக் கூடும். ஆம் உண்மையில் தாங்கள் என்ன சாதி என்பதை அறியாதவர்களாகவே மக்கள் இருக்கிறார்கள். உதாரணமாக சோழிய வெள்ளாளர் சாதியானது F.C ஆக இருந்து போராட்டங்களுக்குப் பின் B.C ஆக மாற்றப்பட்டது. இருந்தாலும் மாநில அளவில் மட்டுமே சோழிய வெள்ளாளர் சாதியானது B.C ஆக உள்ளது. மத்தியில் இந்த மாற்றம் செய்யப்படவில்லை. சோழிய வெள்ளாளர் சமூகத்தில் சோழிய வேளாளர், சோழ வெள்ளாளர், வெற்றிலைக்காரர், கொடிக்கால்காரர் மற்றும் கீரைக்காரர் என்று சொல்லக் கூடிய சிறு சிறு பிரிவுகள் உள்ளன.

இந்த சிறு பிரிவுகளில் வெற்றிலைக்காரர் மற்றும் கொடிக்கால்காரர், கீரைக்காரர் போன்ற பிரிவில் உள்ளவர்கள் மற்றவர்களை விட பொருளாதார நிலையிலும் கல்வி நிலையிலும் சிறிது தாழ்ந்தவர்களாகவே உள்ளார்கள். உழைக்கும் வர்க்க‌மாக தினக் கூலியாக இருக்கும் இவர்களும் இந்த சாதி ரீதியான கணக்கெடுப்பில் சோழிய வெள்ளாளர் என்றே பதிய வேண்டியிருக்கிறது. மக்கள் தொகை அடிப்படையில் பார்க்கும்போது தனிப் பிரிவாக இவர்கள் மிகவும் குறைவான அளவே இருப்பார்கள். மேலும் இவர்கள் லட்சக்கணக்கில் மக்களைத் திரட்டிப் போராடவும், அரசின் கவனத்தினை தங்கள் பக்கம் திருப்பவும் வழியில்லாமல் போய் விடுகிறது. மக்கள் தொகை அடிப்படையில் அதிகமான இடஒதுக்கீடு தேவையில்லை என்றாலும் இப்படி கணிசமான அளவில் கவனிப்பாரற்று இருக்கும் மக்களை இந்த சாதி வாரிக் கணக்கெடுப்பு எப்படி கைதூக்கி விடப் போகிறது என்பது கேள்விக்குறியே.

F.C, B.C, M.B.C, S.C, S.T என்ற பிரிவுகளில் வழங்கப்படும் இடஒதுக்கீடு முறையானது இந்த 65 வருட காலம் கடந்தாவது உள் ஒதுக்கீடு படி நிலைக்குச் செல்ல வேண்டும். அதில் நகரத்தில் வாழ்பவர்களையும், கிராமத்தில் வாழ்பவர்களையும், அவர்களின் வசதி வாய்ப்புகள், பொருளாதார நிலை போன்றவற்றையும் கணக்கில் கொண்டே செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் உண்மையாக உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவி கிடைக்கும். ஓட்டிற்காக நடத்தப்படும் இந்த கணக்கெடுப்பானது பெரும்பான்மைமிக்க சமூக மக்களை அரசியல்வாதிகளுக்கு அடையாளம் காட்டும் பெரும் தவறினை மட்டுமே செய்யும். அதன் மூலம் வறுமையில் உள்ள சாதி சமூகங்களை அரசு கண்டு கொள்ளாமல் பெரும்பான்மை மிக்க மக்களுக்கு மட்டும் சலுகை தந்து ஓட்டாக மாற்றும் அபாயம் நேரும். சாதியத் தலைவர்களும் சாதிப் பெயரை குறிப்பிட்டு, பொதுப் பெயரினை அடைப்பு குறிக்குள் குறிப்பிடும் படி கோரியுள்ளார்கள். சில அமைப்புகள் பொதுப் பெயரினை மட்டும் குறிப்பிடும்படி சொல்கின்றன. தனிப்பட்ட சாதிகளின் மக்கள் தொகை தெரிந்தால் மட்டுமே அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீடு தருவதற்கு ஏதுவாக இருக்கும். இது சார்பாக மக்களுக்குத் தெளிவு செய்ய அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது வேதனை. இதிலிருந்து அரசின் திட்டம் பற்றி நமக்குப் புரிகிறது.

ஒதுக்கீடு முறையில் இன்னும் தெளிவான நிலைபாடும், பொருளாதாரம், வாழ்விடம் பற்றிய அறிவோடு கொடுக்கப்படும் உள்ஒதுக்கீடு முறையுமே மக்களின் நல்வாழ்விற்கு உதவும். வெள்ளாளர் என்று பொதுப்படையாகச் சொல்லி மிகவும் பிற்படுத்தப்பட்டோராக இருக்கும் இசை வெள்ளாளரையும், முற்பட்டவராக இருக்கும் சைவ வெள்ளாளரையும் பிற்படுத்த வெள்ளாளர்களோடு இணைப்பது இன்னும் அறிவற்ற செயலாக இருக்கும். முறையான அறிவிப்பும், அரசின் வழிகாட்டல்களும் இன்றி நடந்து முடியப்போகும் சாதி வாரி கணக்கெடுப்பினால் முறையற்ற செயல்களே நடைபெற இருக்கின்றன. மக்களுக்காக நடத்தப்படாமல், அரசியலுக்காக நடத்தப்படும் இந்த கணக்கெடுப்பினை மக்களுக்காக மாற்றுவது நம் கடமை.

எல்லா சாதி மக்களும் ஓர் நிலைக்கும் வரும்போது மட்டுமே சாதி அழியும். அது வரை சாதி ஒழிப்பு என்பது வெறும் கூச்சல் மட்டுமே. நடைமுறையில் சாதி ஒழிப்பு நடைபெற பொருளாதார ஏற்றத் தாழ்வு நிலை அகல வேண்டியது மிகவும் அவசியம்.

Pin It