ஓர் அரசானது சட்டம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை செம்மைப்படுத்தி மக்களைத் திறம்பட பாதுகாக்க வேண்டும். தமிழ்நாட்டில் அவ்வாறு தான் அரசின் செயல்பாடுகள் இருக்கின்றனவா என்ற கேள்விக்கு விடை - சில மாதங்களாக நாட்டில் நடைபெறும் செயல்களை கூர்ந்து கவனித்தால் நமக்கே தெரியும். தற்போதைய சூழலில் மிகவும் பிரசித்தி பெற்ற வார்த்தை "என்கவுண்டர்". தோராயமாக 25 ஆண்டுக்கு முன்பு இந்த ஆங்கில வார்த்தையை மக்களிடம் கேட்டால், ஏதோ கவுண்டர் சாதிப் பிரிவு போலிருக்கிறது என்பர்.  ஆனால் தற்போது, சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் இதன் உள் அர்த்தம் நன்கு தெரியும். இதற்குக் காரணம், சில ஆண்டுகளாக நம் காவல்துறையின் தொடர் என்கவுண்டர் நடவடிக்கைகள்.

அனைவரும் அறிந்த சமீபத்திய  என்கவுண்டர் செய்தி:

கடந்த 23 சனவரி அன்று பெருங்குடி பரோடா வங்கியில் 19 லட்சமும், பிப்ரவரியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 14 லட்சமும் என சென்னையில் அடுத்தடுத்து இரண்டு வங்கிக் கொள்ளைகள். இவர்களைப் பிடிப்பதற்கு 30 பேர்கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. 22 பிப்ரவரி அன்று நள்ளிரவில், வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட 5 நபர்களை என்கவுண்டர் மூலம் கொன்றோம் என்று காவல்துறை அறிவித்தவுடன், வழக்கம் போல பல இடங்களில் இருந்து காவல்துறைக்கு பாராட்டு மழைகள். சென்னையில் பல இடங்களில் காவல்துறையின் நடவடிக்கையைப் பாராட்டி சுவரொட்டிகள். சில பிரபல ஊடகங்கள், இதனைப் பாராட்டி செய்தி வெளியிட்டு காவல்துறையின் ஆதரவையும், அரவணைப்பையும் பெற்றன.velacheri_encounter_400

இந்த செயல் பற்றி பெரும்பாலான மக்களின் குரல் இவ்வாறுதான் ஒலிக்கிறது.

- இது போன்ற என்கவுண்டர் நடவடிக்கை தான், மற்றவர்களுக்குப் பயத்தை உண்டு பண்ணும். இனி இது போன்ற கொள்ளையில் ஈடுபட பயப்படுவார்கள் என்றும்
- பொதுமக்கள் பணத்தை சூறையாடிய கயவர்களை கொல்வது தான் சரி என்றும்
- கொள்ளையர்கள்  சுட்டதால் தான்  காவல்துறை தங்களைப் பாதுகாக்க திருப்பி சுட்டார்கள்/ ஆகவே காவல் துறை தன் கடமையைச் செய்தது என்று சிலரும்;

மேலே கூறப்பட்ட கருத்துக்கு மாறாக:
*
- "கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும் பொய் , தீர விசாரிப்பதே மெய்" என்பதை மறந்து காவல்துறை அவர்களைப் பிடித்து விசாரிக்காமல் கொன்றது கண்டிக்கத்தக்கதே என்றும்
- கொள்ளையனைப் பிடிக்க 30 பேர் கொண்ட குழு அமைத்து, ஐந்து பேரில் ஒருவரைக்கூடவா அரசால் உயிருடன் பிடிக்க முடியவில்லை? (என்ன கொடுமை இது ) என்றும்
- கொல்லப்பட்ட அவர்கள் தான் உண்மையான குற்றவாளியா? சிபிஐ  விசாரணை வேண்டும் என்றும்
- இவ்வாறு காவல்துறை கொல்லத்தொடங்கினால், நீதிமன்றங்களும், நீதி அரசர்களும், நீதி விசாரணையும் எதற்கு? என்றும்
- காவல்துறையினர் இந்த என்கவுண்டர் பற்றி முன்னுக்கு பின் முரணாக பேசுவதிலிருந்தே தெரிகிறது, இது  ஒரு  போலி என்கவுண்டர் என்றும்
-காவல்துறையினர் நன்கு ஆயுதப் பயிற்சி பெற்றவர்கள் - அவர்களால் காலின் முட்டிக்கு கீழ் ஒருவரைக்கூடவா சுடமுடியவில்லை என்று சிலரும்

மேற்கூறியதுபோல மக்களிடமிருந்து இரு விதமான வாதங்களும் முன் வைக்கப்பட்ட‌ன. மேலும் மனித உரிமை அமைப்புகள் பலவும் காவல்துறைக்கு தங்களின் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன.

இந்த விடயத்தை மேலோட்டமாக பார்க்காமல், கொஞ்சம் ஆழமாக பார்த்தால், கொள்ளை, கொலை போன்ற மாபாதகங்களில் ஈடுபடுவோருக்கு  கடுமையான தண்டனைகள் கொடுக்கப்படவேண்டும் என்பதில்  எந்த  மாற்றுக் கருத்தும் யாருக்கும் இருக்கமுடியாது. ஆனால், அவை மரண தண்டனைகளாக இல்லாமல், கடுமையான தண்டனைகளாக இருக்க வேண்டும்.

ஏனெனில் மனிதர்களுக்கு  மரணம் இயற்கையாகத் தான் நிகழ வேண்டுமேயன்றி கொலையாக  அல்ல. தன் உயிரைத் தானே மாய்த்துக்கொள்ளும் உரிமையே மனிதனுக்கு இல்லாத போது, அடுத்தவர் உயிரைப் பறிக்கும் உரிமையைக் கொடுத்தது யார்?

மரணம் எங்கு செயற்கையாக நடக்கிறதோ (அதாவது மனிதம் எங்கு கொலை செய்யப்படுகிறதோ) அங்கு மனித உரிமை மீறல் நடக்கிற‌து என்பதே உண்மை! பிறப்பால் எவரும் கொள்ளையனாகவோ / கெட்டவனாகவோ பிறப்பதில்லை. தவறான வளர்ப்பாலும், சமூக சூழலாலும் தான் அவர்கள் மனம் தவறான பாதைக்குச் செல்கிறது. இப்படிப்பட்டோருக்கு சிறைக்கூடத்தில் நல்லொழுக்கத்தை இடைவிடாது சில வருடங்கள் கற்பித்தல் மூலம் அவர்களின் மனத்தின் கறையை அகற்றி மீண்டும் நல்லோராக மாற்றி, நல்வழிப்படுத்த இயலும். இதுதான் சிறைக்கூடங்களின் கடமையும் கூட.

காவல்துறையினரின் கடமை - குற்றவாளி என்று அவர்கள் சந்தேகிப்பவர்களைப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். குற்றவாளியா / நிரபராதியா என்று முடிவெடுக்க ஒரு நீதி விசாரணை கட்டயாமாக வேண்டும்.

மகாத்மா ஒருமுறை கூறியிருக்கிறார் - ஆயிரம் குற்றவாளிகள்  தப்பித்துவிடலாம், ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்று. அப்படி இருக்கும் போது விசாரணை ஏதுமின்றி கொல்லப்பட்டால், எப்படி கண்டுபிடிக்க முடியும் -உண்மையில் இவர்கள் தான் கொள்ளையர்களா? இந்த கொள்ளைக்குப் பின்னால் மூளையாக செயல்பட்டது யார்?  யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது? கொள்ளை அடிக்கப்பட்ட  பணம் என்ன ஆனது? ஆகவே தான் போலி என்கவுண்டர்கள் இல்லா காவல்துறை நமக்கு வேண்டும்.

நம் மக்களின் மனப்போக்கு சற்றே மாற வேண்டும். என்கவுண்டர் மற்றும் தூக்கு தண்டனை போன்ற விடயங்களை ஆதரிக்காமல், எப்போதும் நீதி மற்றும் மனித உரிமையின் பக்கம் நின்று, அதைத் தாங்கிப் பிடிக்க வேண்டும். என்கவுண்டர் என்ற வார்த்தை காவல்துறையின் அகராதியில் இருந்து கிழிக்கப்படவேண்டும். மேலும் மரண  தண்டனைகள் அனைத்தும் சட்டத்தின் பக்கங்களிருந்து அழிக்கப்பட வேண்டும். 

மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் இறப்பு  நிச்சயம். இப்பூவுலகில் அனைவருக்கும் இயற்கையாக மட்டுமே மரணம் நிகழ வேண்டும்.

Pin It