ambedkar bookவாசிப்பும் பகிர்வும்

டாக்டர் அம்பேத்கரின் படைப்புகளை மலையாகக் கற்பனை செய்துகொண்டால் அந்த மலையின் முகடுகள் ஒவ்வொன்றின் நீள அகல உயரங்களை ஒரு பருந்துப் பார்வையில் எளிமையாகப் பார்க்க வைத்து புரட்சியாளரை உள்வாங்க வைக்கும் நல்லதொரு முயற்சிதான் 'டாக்டர் அம்பேத்கரின் படைப்புகள் - ஓர் அறிமுகம்' என்கிற நூல்.

புரட்சியாளர் அம்பேத்கரின் பேச்சும் எழுத்தும் ஆங்கிலத்தில் 30க்கு மேற்பட்ட தொகுதிகளாக வெளிவந்துள்ளன. தமிழில் 37 தொகுதிகளாக திராவிடர் விடுதலைக் கழக இணையதளத்தில் (dvkperiyar.com) கையடக்க ஆவணமாகக் கிடைக்கின்றன. ஒவ்வொன்றும் சில நூறு பக்கங்கள் முதல் பல நூறு பக்கங்கள் வரையிலான தொகுப்புகளாக உள்ளன.

அவற்றையெல்லாம் வாசிக்க விரும்பும் ஆசை பலருக்கு இருந்தாலும், அவை முழுமையும் படிப்பதற்கான பக்குவமும், பொறுமையும், வாய்ப்பும் எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் இருப்பதில்லை.

அவ்வாறானவர்களுக்கு அம்பேத்கரின் படைப்புகளை, அவரின் தேர்ந்த படைப்புகளின் சாரத்தை ஒரு தேநீர் அருந்தும் அனுபவத்தைப் போல நேர்த்தியாக அறிமுகப் படுத்தியிருக்கிறார் இந்நூலின் ஆசிரியர் மு.நீலகண்டன்.

அரசியல், பொருளியல், சட்டவியல், சமூகவியல், சமயம் என்று 5 பகுதிகளாகப் பிரித்து அம்பேத்கரின் வெவ்வேறு கால கட்டப் படைப்புகளை அவற்றின் கரு சிதையாமல் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன.

அரசியல்:

சௌத்பரோ குழுவிடம் அம்பேத்கர் அளித்த சாட்சியத்தில் தீண்டாதாருக்கான சுயநிர்ணய உரிமையின் அவசியத்தை வலியுறுத்தும்போது, "...முகமது நபியின் மதத்தை சுல்தான் மாற்ற முடியும் என்றாலும் அவ்வாறு செய்ய மாட்டார். போப், கிறிஸ்துவ மதத்தைக் கவிழ்த்துவிட முடியும் என்றாலும் அவ்வாறு செய்ய மாட்டார்.

அதேபோல் முக்கியமாக உயர் சாதி இந்துக்களையே கொண்ட சட்டசபை தீண்டாமையை ஒழிப்பதற்கோ, கலப்பு மணங்களை அனுமதிப்பதற்கோ, தீண்டாதார் பொது வீதிகளையும், பொதுக் கோவில்களையும், பொதுப் பள்ளிக் கூடங்களையும் பயன்படுத்த கூடாது என்ற தடையை நீக்குவதற்கோ, சுருக்கமாகச் சொன்னால் தீண்டாதார் மீது சுமத்தப்பட்டுள்ள மாசுகளை நீக்கி சுத்தப்படுத்துவதற்கு வழி செய்யும் சட்டம் எதையும் இயற்றாது." என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் "...சுயாட்சி மேல் சாதியினரின் பிறப்புரிமையாகக் கருதப்படுவதைப்போலவே, தீண்டத்தகாதாரின் பிறப்புரிமையாகவும் இருக்கிறது" என்பதை வலியுறுத்தியுள்ளார். அம்பேத்கர் தனது ஆணித்தரமான வாதத்தின் மூலம், "இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் நோக்கம் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சமவாய்ப்பு கொடுப்பது தான்" என்று அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வறிக்கையின் ஒரு இடத்தில், ''இவர்கள் மற்றவர்களை போல பிறருடைய அதிகாரத்தைத் தாங்கள் கைப்பற்றிக் கொள்ள விரும்பவில்லை மாறாக சமூகத்தில் தங்களுக்குரிய இயல்பான இடம் தங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள்." என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

அன்றைக்கு கிராமங்களில் ₹10 நிலவரி செலத்தியவர்களும், நகர்ப்புறங்களில் ₹2000க்கு வருமான வரி கட்டியவர்களும் அல்லது ₹36 வீட்டுவாடகை செலுத்தியவர்ளும், பல்கலைக் கழகங்களில் இளங்கலைப் பட்டம் பெற்று 7 ஆண்டுகளும் முதுகலை பட்டம் பெற்று 5 ஆண்டுகளும் ஆனவர்களும்தான் வாக்கு செலுத்தினர் என்ற உண்மையை, இன்றைய வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை என்கிற அடிப்படையுடன் ஒப்புநோக்கும்போதுதான் வாக்குரிமையின் வரலாறு எவ்வளவு வலிமிகுந்தது என்பது புரியும்.

'பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை' என்கிற ஆய்வின் வழியாக தீர்மானகரமாக 'பிரிவினை' ஒன்று தான் தீர்வு என்பதை எவ்விதமான உணர்ச்சிப் பற்றுமின்றி தெளிவுபடக் கூறியுள்ளார். 'இரானடே, காந்தி, ஜின்னா' என்கிற உரையில், "காந்தி, ஜின்னா இருவரும் வழிபாட்டு உருவங்களாகவும், மாமனிதர்களாகவும் திகழ்கிறார்கள்... தனி முதன்மை மட்டுமின்றி இருவரும் தாங்கள் தவறே இழைக்கமாட்டாதவர்கள் என்று உரிமை கொண்டாடுகின்றனர்... இவ்விருவரால் இந்திய அரசியலே உறைந்து கிடக்கிறது எனலாம்" என்று சாடுகிறார் அம்பேத்கர்.

பொருளியல்:

கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகமும் நிதிக்கோட்பாடும் என்கிற கட்டுரை வழியாக 'கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியில் இந்தியாவின் பொதுக்கடன் முழுவதும் போரினால் ஏற்பட்டது" என்பதை ஆய்வுப்பூர்வமாக வெளிப்படுத்தி பிரிட்டிஷ் அரசாங்கத்தைச் சாடுகிறார்.

"முதல் என்பது நுகர்வு போக உபரியாகத் திரட்டி வைக்கப்பட்ட முந்தைய உழைப்புச் செல்வம்" என்றும் "நமது சமுதாயம் ஒரு முதல் பற்றாக்குறையான சமுதாயமாக உள்ளது" என்றும் கூறுகிறார்.

"ஒரு உழவனுக்கு தனது நிலம் தன் கையில் உள்ள பிற காரணிகளின் அளவைப் பொறுத்தே பொருளாதார உகப்பு நிலையில் பயிரிட ஏற்றதற்குச் சிறியதாகவோ பெரியதாகவோ அமையமுடியும். வெறும் நிலவுடமையின் அளவு எந்தத் தனிப் பொருளாதார அர்த்தமும் உடையது அல்ல" என்கிறார்.

"எனவே சிறு நிலவுடைமை பொருளாதார உகப்பு நிலை விளைச்சலுக்கு ஏற்றதல்ல என்பதும், பெருநிலவுடமை தான் பொருளாதார உகப்புநிலைக்கு ஏற்றது என்பதும் பொருளியலின் மொழியல்ல; வெற்றுச் சொற்களே" என்று மிகத் துல்லியமாக சிறு நிலவுடைமைக்கான தீர்வை வழங்கியிருக்கிறார்.

நிலத்தை பெரும்பண்ணை ஆக்குவதும் நிலச் சிதறல்களை ஒன்றாக்குவதும் ஒருங்கிணைந்த நிலவுடமையைச் சிதறாமல் தொடர்ந்து பாதுகாப்பு செய்வதற்கும் சரியான தீர்வு 'நிலத்தை தொழில் மயமாக்குவதே' ஆகும் என்பது அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வை ஆகும்.

"வேளாண்மை பிரச்சனைகளின் அடிப்படைத் தீர்வின் திறவுகோல் இந்தியாவைத் தொழில்மய நாடாக்குவதிலேயே அடங்கும்" என்று 1918ஆம் ஆண்டிலேயே இந்திய வேளாண்மை குறித்த தன்னுடைய கருத்தாக்கத்தை டாக்டர் அம்பேத்கர் வெளியிட்டார் என்றும், வேளாண்மை அரசுத் தொழிலாக இருக்க வேண்டும் என பின்னாளில் அம்பேத்கர் விரும்பியதாகவும் ஆசிரியர் மு.நீலகண்டன் குறிப்பிட்டுள்ளார்.

"ரூபாயின் பிரச்சினை அதன் தோற்றமும் அதற்கான தீர்வும்" என்கிற ஆய்வுக்கட்டுரை பின்னாளில் "இந்திய செலாவணி மற்றும் வங்கித் தொழிலின் வரலாறு" என்ற தலைப்பில் மறுபதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. 'இந்திய ரிசர்வ் வங்கி' உதயத்திலும் இந்தக் கட்டுரையின் பங்கு உள்ளது நினைவுகூரத்தக்கது.

மிகக் கடுமையான உழைப்பின் பயனாக உருவாகிய இந்த ஆய்வுக் கட்டுரையில் "இந்தியச் செலாவணி நிர்வாகத்தில் அரசியல் ஈடுபாட்டைக் தடுக்கும் ஒரே வழி ரூபாய் நாணயங்கள் வெளியிடுவதைத் தடுப்பது அல்லது நிறுத்துவதே ஆகும். இதுதான் நமக்கு வேண்டியது. இது விந்தையாக காட்சியளிக்கலாம். பாதுகாப்பு என்பது குறிப்பிட்ட அளவுடன் நிரந்தரமாக மாற்ற முடியாத ரூபாய் வெளியிடுவதில் இருக்கிறது." என்கிறார் டாக்டர் அம்பேத்கர்.

சட்டவியல்:

இந்திய ஒன்றியம் என்று சொல்வதை அர்த்தமற்ற வகையில் எதிர்த்து வருபவர்கள் கவனிக்க வேண்டியது, 'இந்தியா' என்றோ 'பாரதம்' என்றோ இல்லாமல் இந்திய அரசியலமைப்பை "இந்திய ஐக்கிய மாநிலங்களின் அரசியலமைப்பு" என்ற பெயரால் குறிப்பிட டாக்டர் அம்பேத்கரும் வலியுறுத்தியுள்ளார் என்பதுதான்.

சமூகவியல்:

'இந்தியாவில் சாதிகள் அவற்றின் இயக்கமும் தோற்றமும் வளர்ச்சியும்' என்கிற ஆய்வுக் கட்டுரையில், "சாதியின் பல்வேறு இயல்புகளை ஆய்வு செய்யும்போது அகமணம் அல்லது தன் இனத்திற்குள்ளேயே மணம் செய்து கொள்ளும் பழக்கமே சாதியின் அடிப்படையான ஒரே இயல்பு. அதாவது கலப்புமணம் இன்மையோ அல்லது கலப்பு மனத்தடையோதான் சாதியின் சாராம்சம் ஆகும்" என்கிறார். "சாதியும் அகமண வழக்கமும் ஒன்றே" என்பதைத் தெளிவாக்குகிறார்.

அகமண வழக்கம் அல்லது கதவடைத்த அமைப்பு - தனித்து இயங்குவது இந்துச் சமுதாயத்தின் ஒரு போக்காக இருந்தது. அகமண வழக்கமும் பிராமணர்களிடமிருந்து பிறந்து மற்ற வர்ணத்தாருக்குப் பரவியது. பின்னர் பிராமணரல்லாத உட்பிரிவினரும் அல்லது வர்க்கத்தினரும் முழு விருப்பத்தோடு பின்பற்றத் தொடங்கினர்.

பிறரைப் பார்த்து அவர்களைப் போல வாழும் தொற்றுநோய்ப் பழக்கம் அனைத்துப் பிரிவினரையும் பிடித்துக் கொண்டதால், ஒருவருக்குள் ஒருவர் கலந்து பழகி வாழ்ந்து வந்தவர்கள், தங்களுக்குள் பாகுபாடுகளை வளர்த்துக் கொண்டு பிரிந்து தனித்தனி சாதிகளாயினர். என்பதே ஆய்வின் முடிவாகும்.

இந்தியாவில் சாதி முறை தோன்றி வளர்ந்ததற்குக் காரணம் மேல் நிலையில் இருந்த வகுப்பாரைப் பார்த்து கீழ் நிலையிலிருந்தோர், 'போலச் செய்ததன் விளைவு' என்று விளக்கமளிக்கிறார் டாக்டர் அம்பேத்கர்.

"சாதிய உருவாக்கம் இயந்திரகதியில் நடந்த முறை" என்கிறார். சாதி என்பது எண்ணிக்கையில் ஒன்றே ஒன்றாக இருத்தல் என்பது எப்போதும் இருந்திருக்க முடியாது. சாதிகள் எண்ணிக்கையில் பன்மையிலேயே நிலவி வருகின்றன. சாதிச் சட்டங்களை மீறியதால் சாதியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டவர்களை எவரும் ஏற்காத நிலை ஏற்படுவதால், தாங்களே ஒரு புதிய சாதியாக உருவாக்கிக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இவ்வாறு உருவாக்கப்பட்ட புதிய குழுக்கள் தானே இயங்குகின்ற ஒரு இயந்திர விதியால் புதிய சாதிகளாக மாற்றப்பட்டு பன்மடங்காகப் பெருகின" என்கிறார் டாக்டர் அம்பேத்கர்.

'சாதி ஒழிப்பு' என்கிற மிகச்சிறந்த படைப்பின் உருவாக்கம் சுவாரசியமான பின்னணியைக் கொண்டது. ஜாத்-பட்-தோடக் மண்டல் என்பது சாதி இந்துக்களால் லாகூரில் செயல்பட்டு வந்த ஒரு சமூக சீர்திருத்த சங்கம் ஆகும். அதன் வருடாந்திர மாநாட்டில் தலைமை உரையாற்ற அம்பேத்கரை அழைத்தனர். உரையைத் தயாரித்து அனுப்பி வைத்தார்.

அச்சங்கத்தினர், உரையில் சில மாற்றங்களைச் செய்யும்படியும் சிலவற்றை நீக்கும்படியும் வேண்டினர். ஆனால் டாக்டர் அம்பேத்கர் "என் உரையில் ஒரு கால் புள்ளியைக் கூட நான் மாற்ற மாட்டேன்; என் உரையைத் தணிக்கை செய்வதை அனுமதிக்க மாட்டேன்; என் உரையில் உள்ள கருத்துகளுக்கு நானே முழுப்பொறுப்பு ஏற்கிறேன்" என்று அதன் அமைப்பாளருக்குத் தெரிவித்தார். அதை ஏற்க மறுத்ததால் மாநாடு ரத்து செய்யப்பட்டது. பின்னாளில் இந்த உரையைச் 'சாதி ஒழிப்பு' என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டார் அம்பேத்கர்.

இந்தியச் சமூக அமைப்பைத் திருத்தி அமைக்க வேண்டுமானால் அரசியல் சீர்திருத்தத்திற்கு முன் சமூகச் சீர்திருத்தம் ஏற்பட்டாக வேண்டும். உலகம் முழுவதும் அரசியல் புரட்சிகளுக்கு முன்பே சமூக மதப் புரட்சிகள் ஏற்பட்டிருக்கின்றன என்பதை பல்வேறு உதாரணங்களின் மூலம் இந்த நூலில் விளக்கி இருக்கிறார். பொருளாதாரப் புரட்சிக்கும் சமுதாய மாற்றமே அடிப்படை என்கிறார்.

இந்து சமூகம் என்பது ஒரு கற்பனையே. இந்திய நாட்டு மக்களிடம் இருந்து தங்களைத் தனித்துக் காட்டுவதற்கு முகமதியர்கள் வைத்த பெயர்தான் 'இந்து'. முகமதியர்களுக்கு முன்பு இந்தப் பெயர் இருந்தது இல்லை. இந்து என்ற சொல் ஒரு அன்னியப் பெயர்தான். இந்து என்ற உணர்வே எவரிடமும் இல்லை. ஒவ்வொரு இந்துவிடமும் இருப்பது 'சாதி' என்ற உணர்வுதான். குழுஉணர்வு இந்துக்களிடம் அறவே இல்லாத ஒன்றாகும்.

முகமதியர்களும் கிறித்துவர்களும் தங்களின் மதத்தைப் பரப்புவதற்கு எடுத்துக்கொண்ட முயற்சியை இந்துக்கள் எடுக்கவில்லை. ஏனெனில், மதமாற்றத்திற்கு சாதி ஒத்துவராது. மதம் மாறி வந்தவர்களுக்கு எந்தச் சாதியில் இடமளிப்பது என்பது தான் பிரச்சினை. சாதி சட்டங்களைப் பொறுத்தவரையில் அதில் பிறந்தவர்களுக்கு மட்டுமே உறுப்பினராகும் தகுதி உள்ளது. ஆகவே சாதி இருக்கும் வரை இந்து மதத்தை விரிவாக்க முடியாது.

இந்தியாவில் மௌரியப் பேரரசின் காலத்தில் தான் சதுர்வர்ணம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு சூத்திரர்கள் நாட்டின் ஆட்சியாளர்களாக இருந்தார்கள். மற்ற காலங்களில் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் ஆகிய மூவரும் கூட்டு சேர்ந்து சூத்திரர்களை எவ்வித உரிமையும் அற்றவர்களாக ஒடுக்கினர். கல்வி, செல்வம், ஆயுதம் எதற்கும் சூத்திரர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆகவே இங்கு சமுதாயப் புரட்சி ஏற்படாமல் போனது.

கிளைச் சாதிகளை ஒழிப்பதன் மூலமாகவோ, சமபந்தி விருந்துகளின் மூலமாகவோ சாதி ஒழிப்பு நடைபெறாது. "சாதி ஒழிப்புக்கு உண்மையான வழி 'கலப்புத் திருமணம்'தான். இரத்தக் கலப்பின் மூலம் தான் உற்றார் உறவினர் என்கிற உணர்வு ஏற்படும். இந்துக்களிடையே கலப்புமணம் சமூக வாழ்வில் அதிக ஆற்றல்வாய்ந்த அம்சமாக இருக்கும்." என்று அறுதியிட்டுக் கூறுகிறார் டாக்டர் அம்பேத்கர்.

மேலும் சாதி என்பது ஒரு மனநிலை தான். அதை மாற்ற முடியும். "சாதிக் கோட்டையில் உடைப்பு ஏற்படுத்த வேண்டுமென்றால் வேதங்களையும், சாஸ்திரங்களையும் வெடிவைத்துத் தகர்க்க வேண்டும். ஸ்ருதிகளையும், ஸ்மிருதிகளையும் அடிப்படையாகக் கொண்ட மதத்தை அழிக்க வேண்டும். வேறு எதுவும் பயன்தராது." என்று தீர்க்கமாகக் கூறினார் டாக்டர் அம்பேத்கர்.

இந்து மதத்துக்கு ஒரே ஒரு பிரமாணமான புத்தகம் அனைத்து இந்துக்களும் ஏற்று ஒப்புக் கொள்ளப்பட்டதாக இருக்க வேண்டும். இந்துக்களிடையே புரோகிதத் தொழில் பரம்பரையாக வருவதை நிறுத்த வேண்டும்.

இந்து என்று கூறிக்கொள்ளும் ஒவ்வொருவரும் அரசு நிர்ணயிக்கும் தேர்வில் தேர்ச்சி பெற்று புரோகிதராகப் பணிபுரிவதற்கு இடம் அளிக்க வேண்டும். புரோகித பணியாளரும் அரசின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்றும் இந்த சாதி ஒழிப்பு நூலில் அம்பேத்கர் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் விரைவில் இந்தக் கனவு நனவாகும் என நம்புவோம்.

"அழுகிய புண் மீது அடர்த்தியான திராவகத்தை ஊற்றியது போல் சாதி இந்துத் தலைவர்களின் உள்ளங்களை சாதி ஒழிப்பு என்ற இந்தக் கட்டுரை பற்றி எரியச் செய்தது" என்று டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ள தனஞ்செய்கீர் கூறியுள்ளது இதன் வலிமையை மேலும் பறைசாற்றுகிறது.

சூத்திரர்கள் யார்? அவர்கள் இந்தோ-ஆரிய சமுதாயத்தின் நான்காவது வருணமாக எப்படி ஆனார்கள்? என்கிற ஆய்வின் வழியாக சூத்திரர்கள் சூரிய வம்சத்தைச் சேர்ந்த ஆரிய இனங்களில் ஒரு பகுதியினர். முதலில் 3 வருணம் மட்டுமே இருந்தது. அப்போது சூத்திரர்கள் சத்திரிய வருணத்தின் ஒரு பகுதியினராக ஆள்பவர்களாகவும் இருந்து வந்தனர்.

சத்திரியர்களுக்கும் பிராமணர்களுக்கும் இடையில் ஓயாத சண்டைச் சச்சரவு இருந்து வந்தது. இதனால் இவர்கள் மீது வெறுப்பும் பகையும் கொண்ட பிராமணர்கள் சத்திரியர்களுக்கு பூணூல் சடங்கு செய்து வைக்க மறுத்து விட்டனர். இதனால் சமூக ரீதியில் இழி நிலைக்குத் தள்ளப்பட்டனர். வைசியர்களின் படிநிலைக்கும் கீழே இறக்கப்பட்டு நான்காவது வருணத்தினராக சூத்திரர்களாயினர். இதற்கு முன் 4-ஆவது வர்ணம் இருந்ததில்லை. இதுவே டாக்டர் அம்பேத்கரின் ஆய்வு முடிவாகும்.

தீண்டப்படாதவர்கள் யார்? அவர்கள் எவ்வாறு தீண்டப்படாதார் ஆயினர்? என்கிற ஆய்வு நூலில், தீண்டாமைக்கு இன அடிப்படை வேறுபாடோ அல்லது தொழில் ரீதியான வேறுபாடோ காரணம் அல்ல என்கிறார். தீண்டப்படாதவர்கள் தூய்மையற்றவர்களிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டவர்கள்.

கி.பி.400-இல் தோன்றியவர்கள். இனக் குழுக்களிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீது பிராமணர்கள், பெளத்தர்களிடம் காட்டியது போன்ற வெறுப்பையும், பகையையும் காட்டியதும், மாட்டிறைச்சி உண்பதைக் கைவிடாததும் இவர்கள் தீண்டாதவர்களாக ஆக்கப்பட்டதற்கான முக்கிய காரணிளாக அம்பேத்கர் எண்ணினார்.

சமயம்:

'இந்து பெண்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்' என்ற தலைப்பில் இந்து சமயத்திலும் பௌத்த சமயத்திலும் பெண்களின் நிலைமை குறித்து விரிவாக ஆய்வு செய்த விவரம் தொகுக்கப்பட்டுள்ளது. புத்தரின் மடத்திலேயே தங்கி இருந்த விசாகம் அம்மையார், புத்தரால் பெரிதும் பாராட்டப்பட்ட அம்ராபாலி, 500 பெண்களை புத்த மடத்தில் சேர்ப்பித்த மகாபிரஜாபதி கௌதமி போன்ற பலரும் புகழ் பெற்று இருந்ததும், பௌத்த மதத்தில் பெண்கள் மிகுந்த சுதந்திரத்துடன் இருந்ததும், இதனால் இந்துப் பெண்களிடையே எழுச்சி ஏற்பட்டதும் இப்பகுதியில் விளக்கப்படுகிறது.

"ஒரு பெண் குழந்தை பிறப்பதானது துயரம் அடைவதற்கான சந்தர்ப்பம் அல்ல. மகிழ்ச்சி அடைவதற்கான ஒரு சந்தர்ப்பம்" என்றும், "ஆண்களோடு பெண்களும் சட்டத்தகுதி, சுதந்திரம், உயர்வு, சமத்துவத்தையும் பெற முடியும்" என்றும் புத்தர் கூறியுள்ளதை ஆதாரங்களுடன் விவரிக்கிறார் அப்பேத்கர். பௌத்த மதத்தில் ஆண் பெண்ணிற்கு இடையே கல்வி, நீதி, தொழில் அனைத்திலும் சமத்துவம் பேணப்பட்டது.

கணவன் இறப்பிற்கு பின்பு அல்லது முன்பு பெண்ணின் விருப்பப்படி மறுமணம் செய்து கொள்ள உரிமை இருந்தது. "ஆண்களைப் போலவே சன்னியாசி வாழ்க்கையை அடைவதற்கு பெண்களுக்கும் வாய்ப்பு உள்ளது" என்று முதன்முதலில் பிரகடனம் செய்தவர் புத்தர் தான்.

ஆனால் மநு சாஸ்திரத்திலோ, "ஆண்களை மயக்குவதே பெண்களின் இயல்பு. தாய் மகள் சகோதரி எவருடனும் தனியிடத்தில் அமர்தல் கூடாது; புலன்கள் ஆற்றல் வாய்ந்தவை; அறிவாளிகளையும் வெற்றி கொள்ளும்... படுக்கை மோகம், பதவித்தாகம், ஆபரண ஆசை, கோபம், நேர்மையின்மை, வஞ்சகம், தீய நடத்தை ஆகியவையே பெண்களின் குணங்கள். பெண் எப்பொழுதும் சுதந்திரமாக இருப்பதற்குத் தகுதி அற்றவள்.

வேதங்களைப் படிப்பதற்கு பெண்களுக்கு உரிமை இல்லை. சொத்துரிமை இல்லை. கணவன் இறந்தால் விதவை மறுமணம் செய்து கொள்ளக்கூடாது. தீயில் விழுந்து உயிர் விட வேண்டும். கணவன் விரும்பினால் மனைவியை விற்கலாம்.

ஒரு பெண்ணைக் கொல்வது பெரியதவறு ஒன்றும் இல்லை. அது ஒரு அற்பமான குற்றமே ஆகும்." என்று குறிப்பிடப் பட்டுள்ளதையும் அதன்படியே இந்துப் பெண்களின் பெரும்பான்மையானோரின் வாழ்க்கை இருந்ததையும் சுட்டிக் காட்டி பௌத்த - இந்து மதங்கள் பெண்களை எவ்வாறு கையாண்டனர் என்பதையும், "இந்தியாவில் பெண்களின் வீழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் காரணம் மனு தர்மமே" என்பதையும் தெள்ளத் தெளிவாக விளக்குகிறார் டாக்டர் அம்பேத்கர்.

இந்து மதத்தின் அதிகாரப்பூர்வமான கோட்பாடு சதுர்வர்ணம் என்ற அசமத்துவமே ஆகும். ஆனால் மறுபுறத்தில் புத்தர் சமத்துவத்திற்காக நின்றார். சதுர்வர்ணத்தின் மிகப் பெரும் எதிரியாக இருந்தார். அதற்கு எதிராக போதனையும் செய்தார் போராடவும் செய்தார். புத்த மதம் அடிப்படையில் பகுத்தறிவையும் அனுபவத்தையும் போதனை செய்தது.

காலத்தால் பொருந்தாதவை என்று கண்டறியப்பட்டால் அவற்றை மாற்றிக் கொள்வதற்கு புத்த மதத்தில் இடம் உண்டு. ஒழுக்க முறைமையே புத்தமதம். அது இல்லையென்றால் புத்தசமயம் ஒன்றும் இல்லாததாகும். புத்த சமயத்தில் கடவுள் இல்லை என்பது உண்மையே. கடவுளுக்குப் பதிலாக அந்த இடத்தில் ஒழுக்க முறைமை இருக்கிறது.

"ரோம சாம்ராஜ்யத்தில் பாகனிசத்தைத் தூக்கி எறிந்து கிருஸ்துவ மதத்தை தழுவியது போல, இந்தியாவிலும் ஏற்படுவது நிச்சயம். இந்து மக்கள் திறல், அறிவு ஞானம் பெறும் போது புத்த சமயத்தின் பால் நிச்சயம் திரும்புவார்கள்" என்கிறார் டாக்டர் அம்பேத்கர். மேலும் இரண்டாயிரம் ஆண்டு இடைவெளியில் பிறந்த புத்தரையும் மார்க்ஸையும் அவரவர்களுடைய கோட்பாட்டு ரீதியாக மிகச்சிறப்பாக ஒப்பிட்டுள்ளார்.

"துக்கம் என்பதற்கு பதிலாக சுரண்டல் என்று வாசித்தால் புத்தர் மார்க்ஸிடமிருந்து விலகி இருக்கவில்லை என்பதை அறியலாம்." என்கிறார் அம்பேத்கர். புத்தரை ஒரு ஜனநாயகவாதியாகவும் பொதுவுடைமைவாதியாகவும் மிகச் சிறப்பாக நிறுவுகிறார்.

சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் இந்த முழக்கத்தினால் பிரெஞ்சு புரட்சிக்கு வரவேற்பு கிடைத்தது. ஆனால் அது சமத்துவத்தை உருவாக்க தவறி விட்டது அதன்பின் ஏற்பட்ட ரஷ்யப் புரட்சி சமத்துவத்தை ஏற்படுத்தியது.

ஆனால் அது சகோதரத்துவத்தையும் சுதந்திரத்தையும் நிறைவு செய்யவில்லை. புத்தரின் வழியைப் பின்பற்றினால்தான் இந்த மூன்றும் சேர்ந்து இருக்க முடியும் என்று தோன்றுகிறது என்று கூறுகிறார்.

இன்றைய முதலாளித்துவ சமுதாயம் மாறி சோசலிசமும், அதைத்தொடர்ந்து பொதுவுடைமையும் விஞ்ஞான ரீதியாக கட்டாயமாக வரலாற்றில் நிகழும் என்று மார்க்ஸ் கூறியதைப் போன்றதே மக்களிடையே அறிவு வளர வளர மக்களால் புத்த மதமும் கட்டாயமாகப் பின்பற்றப்படும் என்று அம்பேத்கர் கூறியதும்.

மேலும் ஆய்வின் இறுதியில், "உலகில் பெளத்த தத்துவம் பயனளிக்கத் தவறுமானால், ஒட்டுமொத்த உலகமும் மார்க்ஸியத்திற்கே செல்ல வேண்டிவரும்." என்கிறார் டாக்டர் அம்பேத்கர்.

மார்க்ஸையும், அம்பேத்கரையும், பெரியாரையும் இப்படிச் சுருக்கமான வடிவில் எளிமையாக வெளியிடுவதும் அறிமுகப்படுத்துவதும் இன்றைய நவீன தலைமுறைக்கு மிகமிகத் தேவையான ஒன்று. குறிப்பாகக் குழந்தை வாசகர்களிடம் கொண்டு செல்வதற்கான முயற்சியாகக் கதைகளாகவும், காமிக்ஸ்களாகவும், சீரியல்களாகவும், சிறிய சிறிய காணொளிகளாகவும் எளிய வடிவில் புரட்சிப் படைப்புகளைப் படைப்பதும், அவற்றைப் பரவலாக்குவதும் காலத்தின் கட்டாயம்.

புத்தகத்தின் பெயர்: டாக்டர் அம்பேத்கரின் படைப்புகள் - ஓர் அறிமுகம்
ஆசிரியர்: மு.நீலகண்டன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
ஏழாம் பதிப்பு: ஆகஸ்டு, 2012
பக்கங்கள்: 294
விலை: ₹185

- மாணிக்க முனிராஜ்

Pin It