“பசியும் காதலுமே உலகை ஆண்டு கொண்டிருக்கின்றன” என்றான் ஒரு தெருப்பாடகன். அந்த அளவு செல்வாக்கு மிக்கன இவை இரண்டும். சொல்லப் போனால் மனித சமூகத்தின் அனைத்து நடவடிக்கைகளையும், இவ்விரண்டினுக்குள் அடக்கி விடலாம்.

வயிற்றுப் பசிக்காக உணவு தேடத் தொடங்கிய மனிதன், முதலில் தன் கைகளை, பின் கையில் கிடைத்த கற்களை, பிறகு தான் உற்பத்தி செய்த கருவிகளைப் பயன்படுத்தி, பின் அந்தக் கருவிகளையும், அது தொழிற்படும் மண்ணையும் தனக்கே சொந்தமாக்கிக் கொள்ள முயல, அதனாலும் அதன் தொடர்ச்சியாகவும் ஏற்பட்ட விளைவுகள் ஒரு பக்கமும்,

பாலுறவுப் பசியைத் தீர்த்துக்கொள்ள, விரும்பியவனுடன், விரும்பியவாறு உறவு கொள்ளலாம் என்றிருந்த நிலைமாறி, பாலுறவில் கட்டுத்திட்டங்களும், காப்பு நெறிகளும் ஒழுக்கவியல் கோட்பாடுகளும் வகுக்கப்பட, இந்நெறிகளுக்கு உட்பட்டோ, மீறியோ மனிதன் தான் விரும்பிய பெண்ணை அடைய முயல, அதனாலும் அதன் தொடர்ச்சியாகவும் ஏற்பட்ட விளைவுகள் ஒரு பக்கமும்,

ஆக, இவ்விரண்டும் சேர்ந்த நிகழ்வுகளின் தொகுப்பே வரலாறாக உள்ளது. இதுவரை நிகழ்ந்த உலக வரலாற்றை, முதல் உலகப்போர், இரண்டாம் உலகப்போர் நிகழ்வுகளை, அல்லது உள்நாட்டு வெளிநாட்டு நிகழ்வுகளை, வரலாற்றை அல்லது மனித சமூக நடவடிக்கைகளை, நீங்கள் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு சிந்தித்துப் பாருங்கள். எதுவும் இந்த இரண்டில் ஏதாவது ஒன்றினுக்குள் அல்லது இரண்டிற்குமே உட்பட்டதுதான் என்பது தெரியவரும். அதாவது நடந்த வரலாறெல்லாம் நாடு பிடிக்கும், அரசுகளைக் கைப்பற்றும் வரலாறாக இருக்கும் அல்லது பெண்களுக்காக நடந்த போராக இருக்கும்.

சரி, இருக்கட்டும். இதில் வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்வதற்கும், பாலுறவுப் பசியைத் தீர்த்துக் கொள்வதற்குமான வேறுபாடுகளைப் பற்றி, அது அதிலும் சமூகம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகளையும் அதன் நியாய அநியாயங்களையும் பற்றி யோசிப்போம்.

ஒருவன் அல்லது ஒருத்திக்குப் பசிக்கிறது என்றால், இதில் அவர்கள் விரும்பிய எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம். தடையில்லை. பசிக்கிறதே என்பதற்காக திருடித் தின்னக்கூடாது. அடுத்தவர் உணவைப் பறிக்கக்கூடாது. உழைத்துச் சம்பாதித்து ஈட்டிய பணத்தில் சொந்தமாய்ச் சமைத்துச் சாப்பிடலாம். அல்லது காசு கொடுத்து வாங்கிச் சாப்பிடலாம். உடலுக்குக் கேடு விளைவிக்காத எதையும் வாங்கிச் சாப்பிடலாம். அது காய்கறி உணவாக இருக்கலாம். இறைச்சி உணவாக இருக்கலாம். எதுவாயிருந்தாலும் பரவாயில்லை.

இதில் போய் யாராவது இந்த உணவைத்தான் உண்ணவேண்டும். இதை உண்ணக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்க முடியுமா? சில உணவுகள் உடலுக்குக் கேடு விளைவிப்பவை. ஆகவே அதைத் தவிர்க்க வேண்டும் எனப் பரிந்துரைக்கலாம். அவ்வளவே. ஆனால் அதை விட்டு இதைத்தான் உண்ணவேண்டும் இதையெல்லாம் உண்ணக் கூடாது என்று கட்டளையிட்டு, தடை செய்து மீறினால் தண்டனை வழங்குவது என்பது நியாயமாக இருக்க முடியுமா? நிச்சயம் முடியாது. இது தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவது.

எனில், இதில் சில சாதிகளில் இறைச்சி உணவைச் சாப்பிடக் கூடாது, இன்னும் சில சாதிகளில் இறைச்சி உணவைச் சாப்பிடுவதானாலும் குறிப்பிட்ட இறைச்சி உணவை மட்டும்தான் சாப்பிட வேண்டும். எல்லா இறைச்சி உணவையும் சாப்பிடக்கூடாது என்று கட்டுப்பாடுகள் இருக்கின்றன. உணவுப் பழக்கம் சார்ந்து ஏற்றத் தாழ்வுகள் கற்பிக்கப்படுகின்றன. இது நியாயமா என்றால் நிச்சயம் கிடையாது. ஒரு மனிதன் குறிப்பிட்ட சாதியில் பிறந்துவிட்டான் என்பதற்காக அவன் இதைத்தான் உண்ணவேண்டும் என்று கட்டாயப்படுத்த, இதையெல்லாம் உண்ணக் கூடாது என்று தடை விதிக்க முடியுமா? நிச்சயம் முடியாது. சட்டத்திலும் அதற்குத் தடையில்லை. சாதியில் வேண்டுமானால் இதற்குத் தடைகள் விதிக்கலாம். ஆனால் அது கண்டிக்கத்தக்கது. மனித உரிமைகளை மீறுவது.

ஆக, ஒரு மனிதன் தன் பசித் தேவையை நிறைவேற்றிக் கொள்ள, அடுத்தவர் உணவைத் திருடாமல், அடுத்தவர் உரிமையைப் பறிக்காமல், அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிடாமல் எதை வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்றால் இது சரிதானே. இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

சரி, பசித் தேவைக்கு இந்தக் கோட்பாடு பொருந்தும் என்றால், பாலுறவுத் தேவைக்கும் இதை அப்படியே பொருத்திப் பார்ப்போமே.

ஒருவன் அல்லது ஒருத்திக்குப் பாலுறவுப் பசி இருக்கிறது. எனவே அந்தத் தேவையை அவர்கள் எந்த வன்முறையிலும் ஈடுபடாமல், அடுத்தவர் உரிமையைப் பறிக்காமல், அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிடாமல் அடுத்தவர் வாழ்வைப் பறிக்காமல் நிறைவேற்றிக் கொள்ளலாம்தானே? இதில் யாருக்கு எந்தப் பக்கம் குடைகிறது? அரசுக்கு ஆட்சியாளர்களுக்கு இதில் என்ன இடையூறு வந்தது? ஏன் இதில் மட்டும் சமூகம் ஆயிரம் கெடுபிடிகள், கட்டுத் திட்டங்கள் வைத்திருக்கிருக்கின்றன? அரசும் அதன் நிறுவனங்களும் ஏன் இதை மிக அக்கறையோடு கண்காணிக்கின்றன?

கேட்டால் ஒரு நியாயம் சொல்லலாம். வயிற்றுப் பசி என்பது ஏதோ பசிக்கிறது. அந்த நேரத்துக்கு ஏதோ சாப்பிடுகிறோம். அத்தோடு கதை முடிந்து போகிறது. ஆனால் உடலுறவுப் பசி அப்படியா? இது இரண்டு உயிர்கள் சங்கமிக்கும் நிகழ்வு. மற்றும் இது உணர்வோடு ஒன்றிக் கலந்ததாக இருக்கிறது. இதனால் இதை அடுத்தடுத்து தொடரவும், நிலைக்கவும் வாய்ப்பிருக்கிறது.

ஒன்று, இது குடும்பமாக உருப் பெறலாம். அப்படியானால் குடும்பம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர். ஆகவே இதையெல்லாம் யோசித்துத்தான் செய்யவேண்டும். இது குடும்பமாக உருப் பெறாமல் வெறுமே கூடிக் கலைவதான நிகழ்வாக நடைபெறுவதானாலும் அது யார் யாரோடு என்பது முக்கியம். காரணம் இது பின் விளைவுகளை ஏற்படுத்தவல்லது. ஏற்படுத்தி வருகிறது. ஆகவேதான் இதில் கவனமாக எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் என்கிறோம். சமூகமும் அரசும் அப்படி இருக்கிறது எனலாம்.

நியாயம். எனவே, இதை ஒவ்வொன்றாக எடுத்து அலசி ஆராய்வோம். மணமாகாத ஒரு ஆணும் மணமாகாத ஒரு பெண்ணும் தங்கள் பாலுறவுப் பசியைக் கிடைத்த ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தீர்த்துக் கொள்கிறார்கள். இது அதோடும் போகலாம். வாய்ப்பைப் பொறுத்து தொடரவும் செய்யலாம். தொடர்வதாகவே வைத்துக் கொள்வோம். அப்படித் தொடர்ந்தால் இருவரும் மணம் செய்து கொள்ளலாம். அல்லது செய்து கொள்ளாமலும் போகலாம். மணம் செய்து கொள்ள இருவரும் முடிவு செய்து கொண்டாலும் கூட பல இடங்களில் சாதி இடிக்கிறது. சாதி சமூகமே இருவரையும் பிரிக்கிறது. சில இடங்களில் சமூகம் இருவரும் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று கட்டாயப்படுத்தினாலும் இருவரில் யாரோ ஒருவர், குறிப்பாக ஆண் அதை மறுக்கிறான். மண ஏற்பாட்டிலிருந்து தப்பித்துக் கொள்ள முயல்கிறான். இப்படி இதில் பல சிக்கல்கள் இருப்பதனாலேயே, இது பல சமூகச் சிக்கல்களை உருவாக்குவதனாலேயே, இந்த விஷயத்தில் மிகவும் கண்காணிப்பாய் இருக்க வேண்டியிருக்கிறது என்பது நியாயமானது.

சரி, இதில் நமக்குக் கேள்விகள்.

1) இப்படிப் பழகும் ஓர் ஆணும் பெண்ணும் கட்டாயம் திருமணம் செய்து கொள்ளத்தான் வேண்டும் என்று சமூகம் ஏன் எதிர்பார்க்கிறது?

2) பல சந்தர்ப்பங்களில் மேற்குறிப்பிட்ட இணைகள் தாங்களே திருமணம் செய்து கொள்ள விரும்பினாலும் சாதி சமூகம் அதைத் தடுத்து பிரித்து வைக்கிறதே. ஆக நீங்களாகப் பிரித்து வைத்தால் தவறில்லை. அவர்களாகப் பிரிந்து போனால் மட்டும் அது தவறா?

3) இப்படிச் சிலகாலம் இவர்கள் இருவரும் இவ்வாறு பழகி, பின் பிரிந்து போனால் இதனால் சமூகத்துக்கு என்ன இழப்பு? சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்குப் பல இழப்புகள் இருப்பதாகச் சொல்லலாம். அந்த நியாயத்தை யாரும் மறுக்கவில்லை. ஆனால் இதனால் மற்றவர்களுக்கு, சமூகத்துக்கு என்ன இழப்பு?

4) திருமணத்துக்கு முன் இப்படிப்பட்ட பழக்கங்கள் கூடாது எனவும், பழகினால் அது திருமணத்தில்தான் முடிய வேண்டும் என்றும் குடும்பங்கள் எதிர்ப்பார்ப்பதற்குக் காரணமென்ன?

இதுபோன்ற கேள்விகள் இப்படியே இருக்கட்டும். பதில்களைப் பிறகு மொத்தமாகப் பார்ப்போம்.

அடுத்து, மேற்கூறியவாறு அல்லாமல் திருமணமாகாத ஒரு ஆணோ, திருமணமாகாத ஒரு பெண்ணோ தங்களுக்குள் உறவு கொள்வது என்பதாக அல்லாமல், திருமணமாகாத ஒரு ஆணோ பெண்ணோ, திருமணமான ஒரு ஆண், பெண்ணிடம் உறவு கொள்வதாகக் கொள்வோம். இதேபோலத் திருமணமான ஒரு பெண்ணோ ஆணோ, திருமணமாகாத ஆண் அல்லது பெண்ணிடம் உறவு கொள்வதாக அல்லது இருவருமே திருமண உறவில் இருந்து அதை மீறிவெளியில் உறவுகொள்வதாகக் கொள்வோம். இதையொட்டி எழும் கேள்விகளையும் யோசித்துப் பார்ப்போம்.

1) திருமணமான பெண்ணோ அல்லது ஆணோ இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபடுவது சம்மந்தப்பட்ட இணைக்குச் செய்யும் துரோகமில்லையா?

2) இது அந்தக் குடும்பத்தை, குடும்ப உறுப்பினர்களை, குழந்தைகளை, அதன் எதிர்காலத்தைப் பாதிக்காதா?

3) இது சமூகத்தில் ஒழுக்கக்கேட்டை ஏற்படுத்தாதா?

மேற்குறித்த வெளி உறவுகளுக்கு அப்பால் குடும்பத்திற்குள்ளேயே சமூகம் அங்கீகரிக்காத சில உறவுகளும் சில இடங்களில் நிகழ்கின்றன. மருமகன் - மாமியார், மருமகள் - மாமனார், மூத்தாள் மகன் - சிற்றன்னை, சகோதரன் மகன் - அத்தை, இப்படிப்பட்ட பல உறவுகள் வெளியுலகுக்குத் தெரியாமல், குடும்பத்திற்குள்ளேயே குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரிந்தும் தெரியாமலும் இலைமறை காய்மறையாகப் பல நடந்து கொண்டிருக்கின்றன.

இவை பற்றியும் பல கேள்விகள் எழுகின்றன. இவை எல்லாவற்றையும் தொகுத்துக் கொண்டு, இக்கேள்விகள் எழுவதற்கான காரணங்களை, இந்நிகழ்வுகள் ஏற்படுத்தும் தாக்கங்களை, பின் விளைவுகளைப் பற்றி யோசிப்போம்.

எந்தக் கோணத்தில் யோசித்தாலும், இதுபோன்ற உறவுகள் குறித்து சுற்றி சுற்றி நாம் முடிவுக்கு வரும் செய்திகள் கீழ்க் கண்டுள்ளவையாகவே இருக்கும்.

1) இது முறைகேடானது, ஒழுக்கவியல் கோட்பாட்டிற்கு எதிரானது, சமூக நியதிகளைத் தகர்ப்பது, சமூகத்திற்குக் குந்தகம் விளைவிப்பது.

2) இது குடும்பங்களைச் சீர்குலைப்பது, குடும்ப அமைதியைக் கெடுப்பது, குடும்ப அமைப்புக்குக் கேடு விளைவிப்பது, தகர்ப்பது, குடும்பங்களைச் சின்னாபின்னமாக்குவது.

இதைத் தாண்டி மேற்குறித்த உறவுகள் குறித்து வேறு ஏதாவது சொல்ல முடியுமா? பெரும்பாலும் முடியாது. எல்லாம் மேற்குறித்தவற்றுள்ளேயே அடங்கி விடும் என்றே தோன்றுகிறது. சரி, இருக்கட்டும்.

மேற்குறித்த நிகழ்வுகள் ஏதும் நாமாகக் கற்பனை செய்து கொண்டு வெளிப்படுத்தியதல்ல. அனைத்தும் சமூகத்தில் அன்றாடம் நிகழ்வது. இவற்றுள் ஏதாவது சிக்கல் ஏற்பட்டு விபரீதமாகும் போது மட்டுமே வெளியுலகு தெரியவந்து நாளேடுகளில் செய்திகளாக இடம் பெறுவது. இப்படிப்பட்ட செய்திகள் அன்றாடம் ஏதாவது ஒன்றிரண்டு செய்தித் தாள்களில் வந்து கொண்டுதான் இருக்கின்றன என்று நாம் தொடக்கத்திலேயே பார்த்தோம்.

இந்த நிலையில் நமக்கு முன்னுள்ள கேள்வி. மேற்குறித்த நிகழ்வுகளை சமூகத்தை விட்டே முற்றாக விரட்டி சமூக அமைதியை நிலைநாட்ட முடியுமா, அல்லது இவற்றையெல்லாம் எந்த வகையிலும் தடுக்க இயலாது, எப்படிக் கண்காணித்தாலும் எவ்வளவு கட்டுத்திட்டங்கள் வகுத்தாலும் அதையும் மீறி நிகழத்தான் செய்யும். ஆகவே இவற்றை அனுமதித்துக் கொண்டே சமூக அமைதியை நிலைநாட்ட வேறு ஏதாவது செய்ய முடியுமா என்பதுதான்.

இதில் முதல் வழி சாத்தியமே இல்லை என்பதால், இரண்டாவது வழியைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும் என்பதே நம் வேண்டுகோள்.

இப்படிச் சொல்வதற்குக் காரணம் பல. முதலாவதாக மனிதன் உயிர் வாழ மிக அடிப்படையான தேவை உணவு, வயிற்றுப் பசிதான் என்ற போதிலும், அந்த வயிற்றுப் பசியாறிய பின், ஏன் பல நேரங்களில் வயிற்றுப் பசியையும் மீறி அவனை ஆட்கொள்வது ‘பாலுறவுப் பசியே’.

இந்தப் பசியைத் தீர்த்துக் கொள்ள எந்த இழப்புக்கும், எந்த தியாகத்துக்கும் எந்தக் கொடூரத்துக்கும் மனிதன் தயாராகி விடுகிறான். பின் விளைவுகள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அப்பாலுறவு வேட்கையைத் தீர்த்துக் கொள்ள தீவிரம் கொள்கிறான். அந்த அளவுக்கு முனைப்பும், மூர்க்கத்தனமும், அர்ப்பணிப்பும் உள்ள ஒரு வேட்கை பாலுறவு வேட்கை. எனவே அதை முற்றாகத் தணிப்பது, கட்டுப்படுத்துவது, ஒடுக்குவது என்பது இயலாத காரியம். அப்படி ஒடுக்குவது என்பது ஒரு மனித ஆளுமையையே ஒடுக்குவது என்பதாகி விடும்.

ஆகவே இந்த உணர்வை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபடாமல் இதை முறையாக மடைமாற்றம் செய்து, சமூகத்திற்குக் கேடு விளைவிக்காத சமூக இயக்கங்களுக்கு இடையூறு செய்யாத இருவர் சம்மதத்துடன் நிகழும் உறவுகளை அனுமதிப்பதும், இத்துடன் அப்படி அனுமதிக்கக்கூடிய, அதைப் பொறுத்து சகித்து ஏற்றுக் கொள்ளக் கூடிய, அல்லது அதெல்லாம் ஒன்றும் பெரிய விஷயமில்லை, அவற்றை நாம் கண்டு கொள்ள வேண்டிய அவசியமுமில்லை என்று கருதக்கூடிய அளவுக்குச் சமூக மதிப்பீடுகளை மாற்றிக் கொள்ளவும், அதற்கான விழிப்புணர்வையும் பக்குவத்தையும் ஏற்படுத்திக் கொள்ளவும் உருவாக்கவுமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதே பொருத்தமாயிருக்கும் என்று தோன்றுகிறது.

இதைத் தவிர இதற்கு வேறு மார்க்கமே இல்லை என்பதால், இந்த நோக்கில் நாம் சிந்தையைச் செலுத்த வேண்டுமேயல்லாது, சும்மா வெற்று வீராப்பு, வெட்டிப் பேச்சுப் பேசி நேரத்தை வீணாக்கிச் சமூகத்தையும் பாழ்படுத்திக் கொண்டிருக்க முடியாது. அதோடு, பெண்ணுரிமை, மனித உரிமை பற்றிய கூடுதல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள இந்நாளில் எதையும் அதுசார்ந்த சனநாயக, சமத்துவ நோக்கில் அணுகவேண்டுமேயல்லாது, சும்மா பத்தாம் பசலித் தனமாக, மரபு, பாரம்பரியம், பழக்கம், பண்பாட்டுச் சீரழிவு என்கிற நோக்கிலெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. கூடாது.

தவிர, சமூக நடவடிக்கை சார்ந்த மதிப்பீடுகள் அந்தந்தக் காலத்துக்கும் நிலவிய சூழலுக்கும் ஏற்ப தோன்றியவை, உருவாக்கப்பட்டவை என்பதால் அவை எதுவும் காலாகாலத்துக்கும் நிரந்தரமானதல்ல, அவையும் மாற்றத்துக்குரியவையே என்பதால் நமது சம காலத்திற்குரிய மதிப்பீடுகளை நாம் உருவாக்க வேண்டும். இது சார்ந்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். அதற்கேற்ப மக்கள் மனதைப் பக்குவப்படுத்த, சமூக அமைதியைப் பாதுகாக்க முயலவேண்டுமேயல்லாது, பழைய மதிப்பீடுகளையே உயர்த்திப் பிடித்து, மனித சமூகத்தைப் பின்னடைவை நோக்கி உசுப்பிவிட்டுக் கொண்டிருக்கக் கூடாது.

எனவே, இந்த நோக்கில், பாலுறவு சார்ந்து சமூகம் கடந்து வந்துள்ள மதிப்பீடுகளைக் கணக்கில் கொண்டு, அதாவது யாரும் யாரோடும் பாலுறவு கொள்ள அனுமதிக்கும் குழு மண முறை, அதையடுத்து ஒரு குழுவில் உள்ள ஆண்களும் மறு குழுவில் உள்ள பெண்களும் உறவு கொள்ள அனுமதிக்கும் இண மண முறை, இவற்றையெல்லாம் கடந்து தனியுடைமை முறையோடு தோற்றம் பெற்ற ஒரு தார - ஒரு கணவ முறை, ஆகிய இந்த பாலுறவு முறை உருவாக்கிய மதிப்பீடுகள், கோட்பாடுகளின் அனுபவத்தைக் கணக்கில் கொண்டு, நாம் வாழும் காலத்திற்கான மதிப்பீடுகளை நாம் உருவாக்கும் முயற்சியில், எவர் ஒருவருக்கும் பாதிப்பு நேராத வகையிலும், சமூக அமைதிக்குக் குந்தகம் விளைவிக்காத அளவிலும் எப்படிப்பட்ட மதிப்பீடுகளை, என்னென்ன மதிப்பீடுகளை உருவாக்கலாம் என்பதையும் நாம் யோசிக்கவேண்டும்.

Pin It