பெண்களின் சுயமரியாதை என்பது எதில் அடங்கியிருக்கிறது என்பதில் இருந்துதான் தலைப்பை ஆராய வேண்டியிருக்கிறது. கல்வி, வேலை வாய்ப்பு அதன்மூலம் சமூகத்தில் பெண்கள் அடையும் வளர்ச்சியில்தான் அவர்களின் சுயமரியாதை அடங்கியிருக்கிறது. பெண்கள் வளர்ச்சி இல்லாமல் ஒட்டுமொத்த சமூகத்தின் வளர்ச்சி இல்லை. அதை திராவிடர் இயக்கம் நன்கு புரிந்து வைத்திருந்தது. பெண் என்றால் எப்படி இருக்க வேண்டுமென்று இந்துமதம் நிறைய கட்டுபாடுகள் வைத்திருக்கிறது. இந்து மதம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், ஜாதிய கட்டமைப்பு பலமாக இருக்க வேண்டும். ஜாதிய கட்டமைப்பு பலமாக இருக்க வேண்டும் என்றால் பெண்களை அடக்கி, ஒடுக்கி வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் ஜாதி கவுரவம் பெண்களிடத்தில்தான் இருக்கிறது. பெண்களுடைய கற்பில்தான் குடும்ப கவுரவம், ஜாதிப் புனிதம் இருக்கிறது.

ஒரு பெண் திருமணம் ஆகும்வரை தந்தையின் அரவணைப்பிலும், திருமணம் ஆனபின் கணவனின் அரவணைப்பிலும், முதுமைக்காலத்தில் மகனின் அரவணைப்பிலும்தான் இருக்க வேண்டும் என்று மனுசாஸ்திரம் சொல்கிறது. காலங்காலமாக அப்படி இருந்த பெண்களை மாற்றியது கல்வி. இன்று பெண்கள் படித்து வேலைக்கு செல்கிறார்கள், தொழில் தொடங்குகிறார்கள், அரசியல் என எல்லா துறைகளிலும் பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரு காலத்தில் பெண்களுக்கு ஓட்டுப்போடும் உரிமை கூட இல்லாமல் இருந்தது. அந்த உரிமையை பெற்றுக் கொடுத்ததும் திராவிட இயக்கம்.

1921-இல் நீதிக்கட்சி பெண்களுக்கும் வாக்குரிமை அளிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தது. அப்போது இருந்த ஆளுநர் உடனடியாக ஒப்புதல் தராததால், சற்று தமாதமாக 1926-இல் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது. அதேபோல, சட்டசபையில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் முதன்முதலாக வழங்கப்பட்டதும் 1926-இல் தான். முதன்முதலாக பெண் நியமன உறுப்பினராக சட்டசபைக்கு சென்றவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. அவர்தான் தேவதாசி முறையை ஒழித்தார். ஆனால் அப்போதும் 18 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் விரும்பினால் தேவதாசியாகப் போகலாம் என்ற குறை இருந்தது. 1947-இல் ஓமந்தூரார் ஆட்சியில் தேவதாசி முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது.

பெரியாருக்கு நீதிக்கட்சி மீது ஒரு பெரிய ஈர்ப்பு வர இரண்டு முக்கியமான காரணங்கள் இருந்தன. ஒன்று, அவர் காங்கிரஸில் வலியுறுத்திய வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை நீதிக்கட்சி செயல்படுத்தியது. மற்றொன்று, நீதிக்கட்சி ஆட்சியில் தேவதாசி முறையை ஒழிக்க முயற்சிகள் எடுத்தது. 1926-இல் இருந்தே பெரியார் பெண்ணிய கருத்துக்களை பேசத் தொடங்கியிருந்தார். காதல், கற்பு, கல்யாணம், மறுமணம், விபச்சாரம், சொத்துரிமை, ஆணாதிக்க ஒழிப்பு என பல்வேறு தலைப்புகளில் பெரியார் குடியரசு இதழில் கட்டுரைகள் எழுதினார். அந்த கட்டுரைகளைத் தொகுத்து ”பெண் ஏன் அடிமையானாள்” புத்தகத்தின் முதல் பதிப்பை 1933-இல் வெளியிட்டார். புத்தகம் வெளியிடப்பட்டு 90 ஆண்டுகள் ஆகியும் இப்போதும் லட்சக் கணக்கில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

1929-இல் சென்னையில் சனாதன தர்மிகள் மாநாடு ஒன்று நடந்தது. அந்த மாநாட்டில் பேசிய சியாம்சந்திர சக்கரவர்த்தி என்ற வங்காள பார்ப்பனர், “பெண்கள் வயதுக்கு வந்தவுடன் கருத்தரித்தலை தடுப்பது சிசுக்கொலைக்கு சமம்” என்றார். ஆனால் அந்த காலகட்டத்தில்தான் பெரியார், “பெண்கள் கைகளில் இருக்கும் கரண்டியைப் பிடுங்கிவிட்டு புத்தகத்தை கொடுங்கள்” எனப் பேசினார்.

ஆக கல்வி பெண் விடுதலையின் மிக முக்கிய ஆயுதம் என்ற பார்வை பெரியாருக்கும், திராவிட இயக்கங்களுக்கும் இருந்தது.

நூற்றாண்டின் திசையை நிர்ணயித்த செங்கல்பட்டு மாநாடு

சாதி ஒழிப்பும், பெண்ணடிமைத்தன ஒழிப்பும் வேறு வேறு அல்ல, இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது என்ற பெரியாரின் பார்வைதான் திராவிட இயக்கத்தின் கொள்கைக் கோட்பாடானது. திராவிட இயக்கத்தின் வழிவந்த திமுகவின் ஆட்சியில் அதுதான் சட்டங்களாக மாறியது. அந்த சட்டங்களில் சில அடுத்து வந்த அதிமுக ஆட்சியிலும் எதிரொலித்தது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், 1929 செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாநாட்டில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1.            பெண்கள் திருமண வயதை 16ஆக ஆக்க வேண்டும் (அன்றைக்கு 10, 12 வயதில் திருமணங்கள் நடந்து கொண்டிருந்தன)

2.            விவாகரத்து உரிமை வேண்டும்

3.            மறுமண உரிமை வேண்டும்

4.            தனது துணையைத் தானே தேர்ந்தெடுக்கும் உரிமை அளிக்கப்பட வேண்டும்

5.            பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும்

6.            பெண்களுக்கு வேலைவாய்ப்பு வேண்டும்

என அம்மாநாட்டில் பெண்கள் நலன் சார்ந்து முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1967-இல் அண்ணா ஆட்சிக்கு வந்த பிறகு கொண்டு வந்த சுயமரியாதை திருமணச் சட்டம், தனது துணையைத் தானே தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் கொடுத்தது. பரம்பரைச் சொத்தில் பெண்களுக்கு சொத்துரிமை கொடுக்கும் சட்டத்தை கலைஞர் கொண்டுவந்தார். கல்வி, வேலைவாய்பில் மகளிருக்கு இடஒதுக்கீடும் அவர் ஆட்சியில் கிடைத்தது. விவாகரத்து உரிமை, மறுமண உரிமை என செங்கல்பட்டு மாநாட்டு தீர்மானங்கள் பல இன்றைக்கு நடைமுறைக்கு வந்துவிட்டன.

கலைஞரின் ‘திராவிட மாடல்’ பெண்களுக்குக் கொடுத்தவை

பெண் குழந்தைகள் எட்டாவது வரை படித்தால் திருமண நிதியாக, 5,000 ரூபாய் கொடுக்கப்படும் என கலைஞர் 1989-இல் சட்டம் போட்டார். மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம் என்று அதற்குப் பெயர் சூட்டினார். அந்த 5,000 ரூபாயே அன்றைக்கு ஏழைக் குடும்பங்களின் திருமணச் செலவுகளுக்கு போதுமானதாக இருந்திருக்கும். அதனால் அதைப் பெற வேண்டுமென்பதற்காகவது பெண் குழந்தைகளை படிக்க அனுப்பி வைக்கத் தொடங்கினார்கள். பின்னர் 2009-இல் அந்த நிதியை 25,000-ஆக உயர்த்தினார். அடுத்தடுத்து வந்த ஆட்சிகளில் ஆலமரமாய் வளர்ந்து அந்தத் திட்டம், தற்போது உயர்கல்வி வரை நீண்டிருக்கிறது.

அதேபோல, மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கம், ஈவெரா நாகம்மையார் நினைவு இலவச பட்டப்படிப்பு திட்டம் (இன்றைக்கு முதுகலை பட்டப்படிப்பு வரை), அரசு வேலையில் மகளிருக்கு 30% இடஒதுக்கீடு (இப்போது 40% ஆக அதிகரிக் கப்பட்டிருக்கிறது). சொத்துரிமை, உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு, டாக்டர் முத்து லட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம், திருநங்கைகள் நலவாரியம், திருமணம் ஆகாமல் 50 வயதைக் கடந்த பெண்களுக்கு மாதாந்திர நிதியுதவி என கலைஞரால் பெண்கள் நலன் சார்ந்து இயற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். அதன்பிறகு ஜெயலலிதா ஆட்சியிலும் இத்திட்டங்கள் நீண்டன. பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், சானிட்டரி நாப்கின் இலவசமாக வழங்கும் திட்டம் என சிலப் புதிய நல்ல திட்டங்களையும் ஜெயலலிதா உருவாக்கினார்.

கலைஞரின் நீட்சியாக ஸ்டாலின் ஆட்சி...

திமுக ஆட்சியின் தற்போதைய 2 ஆண்டுகளிலும் பல முக்கியத் திட்டங்களைச் செயல்படுத்தி யிருக்கிறார்கள். அதில் முக்கியமானது “புதுமைப் பெண் திட்டம்”. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ், 12ஆம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கான நிதியுதவியை, 2011-இல் ஜெயலலிதா 50,000 ரூபாயாக உயர்த்தினார். அதனுடன் 4 கிராம் தாலிக்குத் தங்கம் வழங்கப்படும் என்று அறிவித்தார். பெண் கல்வியை ஊக்குவிக்க நிதி கொடுப்பது என்ற கலைஞரின் திட்டத்தின் நீட்சிதான் இது என்றாலும், தாலிக்கு தங்கம் கொடுப்பது திராவிட மாடலாக இருக்காது, ஆரிய மாடலாகத்தான் இருக்கும். அதற்கு மாற்றாகத்தான் “புதுமைப் பெண்” திட்டத்தை தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். இத்திட்டத்தின் கீழ், கல்லூரி படிக்க வரும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தால் மாணவிகள் உயர்கல்வி சேர்க்கை 29% அதிகரித்திருக்கிறது. புதுமைப் பெண் திட்டத்தால் அடுத்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பெண்களின் கல்வி, பல ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக மேம்படும் என்பதை உறுதியாகச் சொல்லலாம்.

அதேபோல, நகர்ப்புற பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் திட்டமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பெண்கள் படி தாண்டக் கூடாது, படிக்கப் போகக்கூடாது, வேலைக்குப் போகக்கூடாது என்ற அவர்களின் சனாதன கோட்பாடுகளை வெடி வைத்து தகர்க்கும் திட்டங்களுள் ஒன்றாகவே இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தின் தாக்கம் குறித்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திட்டக்குழு உறுப்பினர் விஜயபாஸ்கர் கள ஆய்வு ஒன்றை நடத்தினார். சென்னை, நாகப்பட்டினம், திருப்பூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. குறைந்த ஊதியம் பெறுகிற, அதாவது மாதம் 12,000 ரூபாய்க்கு குறைவாக சம்பளம் வாங்கும் பெண்கள்தான் 80% இந்த ஆய்வில் பங்கெடுத்தார்கள். பெண்கள் தங்கள் வருமானத்தில் சராசரியாக 8 முதல் 12% மீதப்படுத்த இத்திட்டம் உதவுகிறது. சென்னையில் சராசரியாக ஒருவருக்கு ஒரு மாதத்திற்கு 858 ரூபாயும், மற்ற மாவட்டங்களில் 888 ரூபாயும் இந்தத் திட்டத்தில் மிச்சமாகிறது என்பது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது அவர்களின் பயணத்தொலைவைப் பொறுத்து மாறுபடும். சிலருக்கு மாதம் 3,000 ரூபாய்கூட மீதமாகிறது. மீதமாகும் பணத்தில் குழந்தைகளுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுக்கிறார்கள், மருந்து- மாத்திரைகள் வாங்க பயன்படுத்துகிறார்கள்.

இந்தத் திட்டத்திற்கு முன்னால் நகரப் பேருந்துகளில் பெண் பயணிகளின் எண்ணிக்கை 40% ஆக இருந்தது. ஆனால் இப்போது 60% ஆக உயர்ந்துள்ளது. கூலி வேலைக்குச் செல்பவர்கள், கடைகளுக்கு வேலைக்கு செல்பவர்கள், காய்கறி-பழங்கள் விற்க செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதிலும் சமூகத்தின் அடித்தட்டில் இருந்து வரும் பெண்களுக்கு இந்தத் திட்டம் மிகப்பெரிய உதவிகரமாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது. கட்டணமில்லா பேருந்து பயணத்தை பயன்படுத்தக்கூடிய பெண்கள் சுமார் 39% பட்டியல் சமூகத்தினராக இருப்பதாக திட்டக் குழு ஆய்வறிக்கை கூறுகிறது. பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் 21ரூ, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் 18% இதன் மூலம் பயனடைகின்றனர்.

*             அரசுப்பணியில் மகளிருக்கு இடஒதுக்கீட்டை 40% ஆக அதிகரித்தது

*             நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்படும் வீடுகள் குடும்பத் தலைவிகள் பேரில் வழங்கப்படும் என அறிவித்தது.

*             நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் பெண் களுக்கு 50% இடஒதுக்கீடு

*             சிப்காட் வேலைகளில் பெண்களுக்கு முன்னுரிமை

*            உள்ளாட்சி அமைப்புகளில் 50% இடஒதுக்கீடு

என கடந்த 21 மாதங்களில் பல முக்கிய திட்டங்களைத் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பெண்களுக்கு கொடுத்திருக்கிறது.

(தொடரும்)

12.03.2023 அன்று திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற “அன்னை மணியம்மையார் பிறந்தநாள் மற்றும் மகளிர் தின பெண்கள் சந்திப்பு” நிகழ்ச்சியில் நிகழ்த்திய உரை.

- ரம்யா

Pin It