உலக தொழிலாளர்களுக்கான தினமாக, மே முதல் நாள் அடையாளப்படுத்தப்பட்ட பிறகு, தொழிலாளர்கள் நலன் தொடர்பான சட்டங்கள் கொண்டுவருவதற்கான விவாதங்கள் உலக நாடுகள் பலவற்றிலும் முன்னெடுக்கப்பட்டன. இந்தியாவில் அப்படியான சட்டங்கள் கொண்டுவருவதற்கும், ஏற்கனவே கொண்டுவரப்பட்ட சட்டங்களில் தொழிலாளர் நலன்கள் சார்ந்து புதிய பிரிவுகளைக் கொண்டு வருவதற்கும் மிகப்பெரும் பங்கு வகித்தவர் முனைவர். அம்பேத்கர்.

சுதந்திர தொழிலாளர் கட்சி:

ambedkar_2401936ம் ஆண்டில் ‘சுதந்திர தொழிலாளர் கட்சி’ (Independent Labour Party) என்ற அரசியல் கட்சியினை அம்பேத்கர் உருவாக்கினார். அக்கட்சியின் சார்பில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தேர்தலில் போட்டியிட்டு 15 உறுப்பினர்கள் பம்பாய் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இப்படியாக அவர் தொடங்கிய அரசியல் கட்சிகூட தொழிலாளர் நலனை முன்னிறுத்தும் விதத்தில்தான் அமைந்தது என்பது கவனிக்கத்தக்கது.  

தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்:

ஆங்கிலேய ஆட்சியாளர்களால், அப்போதிருந்த வைஸ்ராய் கவுன்சிலில் அம்பேத்கருக்கு ‘தொழிலாளர் நலத்துறை உறுப்பினராக’ 1942ம் ஆண்டு ஜுலை மாதம் 20ம் நாள் பதவி வழங்கப்பட்டது. இந்தப் பதவியானது நாடாளுமன்ற அமைச்சருக்குச் சமமான அதிகாரமுள்ள பதவியாகும்.

தொழிலாளர்களுக்கான சட்டங்களில் அம்பேத்கரின் பங்கு:

தொழிலாளர்களுக்கான சட்டங்கள் ஒரே சீராக அமைவதன் அவசியம், காகித கட்டுப்பாட்டு ஆணை, இந்திய தேயிலை கட்டுப்பாடு மசோதா, தேர்ச்சிபெற்ற மற்றும் பகுதி தேர்ச்சிபெற்ற பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு நிலையங்கள், தொழிலாளர்களுக்கு கிராக்கிப்படி வழங்கப்படுவது பற்றிய அறிவிப்பு, தொழிலாளர் சட்டங்கள், தொழிலாளர் நலன்கள் பற்றிய திட்டத்தில் சமூக பாதுகாப்பு, சம்பளம், வாழ்க்கை நலம், மோட்டார் வாகனங்கள் (ஓட்டுனர்) மசோதா, சுரங்க மகப்பேறு நல உதவி (திருத்த) மசோதா, இந்திய தொழிற்சங்கங்கள் (திருத்த) மசோதா, தொழிற்சாலைகள் (திருத்த) மசோதா, ஆலைத் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறைகள், ஊதிய வழங்கீடு (திருத்த) மசோதா சுரங்க தொழிலாளர் மகப்பேறு நல உதவி (திருத்த) மசோதா, தொழிற்சாலைப் பணியாளார் நலக் காப்பீடு இந்திய தொழிற்சாலைப் பணியாளார்களுக்கான வீட்டு வசதித் திட்டம், தொழிலாளர் இழப்பீடு (திருத்த) மசோதா, தொழிலாளர்கள் மறுவாழ்வுத் திட்டம் என்பது உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் தொடர்பான விவாதங்களை மத்திய சட்டமன்றத்தில் (தற்போதைய நாடாளுமன்றம்) கொண்டு வந்தார். மேலும் தொழிலாளர்களோடு நெருங்கிய தொடர்பை மேற்கொள்ள, அவர்களது குறைகளைக் கேட்டறிய எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு வேகமாக தீர்வுகளைப் பெற, தொழிற்சாலைகளில் தொழிலாளர் நல அதிகாரிகள் நியமிக்கப்படுவது விரும்பத்தக்கது என்று நடுவண் அமைச்சரவையை பொதுவாக ஒப்புக்கொள்ள வழிவகுத்தார்.

தொழிலாளர்களும் நாடாளுமன்ற ஜனநாயகமும்:

சமுக ஜனநாயகமும், பொருளாதார ஜனநாயகமும் அரசியல் ஜனநாயகத்தின் நரம்பும் நாளமும் ஆகும்; இந்த நரம்பும் நாளமும் உறுதியாக இருந்தால் தான் உடல் வலுமிக்கதாக, ஆரோக்கியமானதாக இருக்கும். ஜனநாயகம் என்பது சமத்துவத்திற்கான மற்றொரு பெயர் ஆகும். நாடாளுமன்ற ஜனநாயகம் சுதந்திர தாகத்தையும், விழைவையும் கிளர்த்திவிட்டது என்பதில் ஐயமில்லை. ஆனால் சமத்துவத்துக்கு ஆதரவாக ஒருபோதும் அது தலையசைத்தது கூடயில்லை. சமத்துவத்தின் முக்கியத்துவத்தை அது உணரத் தவறிவிட்டது. அது மட்டுமல்ல, சுதந்திரத்துக்கும், சமத்துவத்துக்கும் இடையே ஒரு சமநிலையைத் தோற்றுவிப்பதற்குக் கூட அது, எத்தகைய முயற்சியையும் எடுத்துக் கொள்ளவில்லை. அதன் விளைவாக சுதந்திரம் சமத்துவத்தை விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டது. அது மட்டுமன்று, இன்னும் எத்தனையோ ஏற்றத்தாழ்வுகள் தோன்றவும் அது வழி வகுத்துவிட்டது.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்:       

வாக்களிக்கும் உரிமையை மக்களுக்கு அங்கீகரிப்பதுடன் மட்டும் சுதந்திரம் பற்றிய தொழிலாளர் கண்ணோட்டம் முடிவடைந்து விடுவதில்லை. தொழிலாளர்களின் கண்ணோட்டத்தில் சுதந்திரம் என்பது ஆக்கப்புர்வமானது. மக்களால் ஆன அரசாங்கம் என்ற கருத்தையும் அது உள்ளடடக்கியுள்ளது. மக்களாலான அரசாங்கம் என்பது தொழிலாளர் கருத்துப்படி நாடாளுமன்ற ஜனநாயகம் என்று ஆகாது. அது ஒரு அரசு வடிவம். அதில் மக்களின் பங்களிப்பு என்பது தங்களின் எஜமானர்களுக்கு வாக்களித்து ஆட்சி செலுத்துவதை அவர்களிடம் விட்டு விடும் அமைப்பாகும். அத்தகைய அரசாங்க அமைப்பு தொழிலாளர் கருத்தில் மக்களாலான அரசு என்பதை கேலிக்கூத்தாக்குவதாகும். மக்களாலான அரசு பேருக்கானதாக மட்டுமின்றி எதார்த்தமானதாகவும் இருக்க வேண்டும்.

தொழிலாளர் சமத்துவம் என்று கூறுவது சட்டத்தில், அரசு பணிகளில், ராணுவத்தில், வரிவிதிப்பில், வாணிகம் தொழில்களில், எல்லாவிதமான தனி உரிமைகளும் ரத்து செய்யப்படவேண்டும். உண்மையில் சமத்துவமின்மைக்கு இட்டுச் செல்லும் எல்லா வழிமுறைகளும் நீக்கப்பட வேண்டும்.

சகோதரத்துவத்தையே தொழிலாளர்கள் விரும்புகின்றனர். உலகில் சமாதானம், மனிதன்பால் நல்லெண்ணம் என்ற அடிப்படையில் எல்லா வர்க்கங்களையும் எல்லா நாடுகளையும் ஐக்கியப்படுத்துவது அதன் லட்சியம்.

தொழிலாளர்களும் தேசியமும்:

தொழிலாளர்களை மிக அதிகமாக எதிர்ப்பவர்கள் நிச்சயமாய் தேசியவாதிகளே. இந்திய தேசியத்திற்கு முரணான, அதற்க்கு தீங்கான கண்ணோட்டத்தை தொழிலாளர்கள் கொண்டுள்ளனர் என்று அவர்கள் தொழிலாளர்களை குற்றம் சுமத்துகிறார்கள். தேசியம் என்றால் புராதன காலத்தை போதிப்பது வடிவம் இல்லாத எல்லாவற்றையும் தள்ளி விடுவது எனில் தேசியத்தை தனது கோட்பாடாக தொழிலாளர்களால் ஒப்புக்கொள்ள முடியாது. கடந்த காலத்தின் சித்தாந்தத்தை தற்கால சித்தாந்தமாக தொழிலாளர்களால் ஏற்கப்படுவதில்லை. தொடர்ந்து விரிவடைந்து வரும் மனித உணர்வு கடந்த காலத்தின் கரத்தால் குரல்வளை பிடித்து நசுக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களின் வாழ்க்கையை புனர்நிர்மாணித்து வடிவமைப்பதற்கு தேசியம் குறுக்கே நின்றால் அப்பொழுது தேசியத்தை தொழிலாளர்கள் மறுதளிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு தேசியம் என்பது தங்களது லட்சியத்தை அடையும் ஒரு வழிதான். அவ்வாரில்லாமல் வாழ்க்கையின் அத்தியாவசிய கோட்பாடுகள் என்று தொழிலாளர்கள் எவற்றை கருதுகிறார்களோ அவற்றை தியாகம் செய்ய அவர்கள் ஒப்புக்கொள்ளக் கூடிய இறுதி லட்சியமாக அது ஆகிவிட முடியாது. 

சமூக பாதுகாப்பு, தொழிலாளர் பாதுகாப்பிலுள்ள இரு முரண்பாடுகள்:

முதலாளித்துவத் தொழில்துறை அமைப்பிலும், நாடாளுமன்ற ஜனநாயகம் எனப்படும் அரசியல் அமைப்பிலும் வாழ்ந்து வருபவர்கள் தமது அமைப்புகள் இரண்டு முரண்பாடுகளைக் கொண்டுள்ளன என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.

மலைமலையாகக் குவிந்துள்ள செல்வத்துக்கும், பிணந்தின்னிக் கழுகுகளைப் போல் கொத்தியெடுக்கும் கோர வறுமைக்கும் இடையே உள்ள படுபாதாளம், முதல் முரண்பாடாகும். அதிலும் இந்த முரண்பாடு சாதாரணமானதல்ல; மிகவும் உச்சகட்டத்தை அடைந்துள்ள முரண்பாடாகும். இதன் விபரீத விளைவாக இன்று நாம் என்ன பார்க்கிறோம்? ஒரு சொட்டு வியர்வை கூட சிந்தி உழைக்காமல் உல்லாசபுரியில் வாழ்பவர்கள் கோடீஸ்வர கோமான்களாக இருப்பதையும், அதேசமயம் நெற்றி வியர்வை நிலத்தை நனைக்க, மாடாக உழைத்து ஓடாகத் தேய்பவர்கள் கொடியதினும் கொடியதான வறுமையில் வாடுவதையும் காண்கிறோம்.

இரண்டாவது முரண்பாடு அரசியல், பொருளாதார அமைப்புகளுக்கிடையே பொதிந்துள்ளது. அதாவது, அரசியலில் சமத்துவம்; பொருளாதாரத்திலோ அசமத்துவம். ஒருவருக்கு ஒரு வாக்கு, ஒரு வாக்குக்கு ஒரே மதிப்பு - இது நமது அரசியல் கோட்பாடு. ஆனால் பொருளாதாரத்தில் நமது கோட்பாடு நமது அரசியல் கோட்பாட்டையே மறுதளிப்பதாகும். உதாசீனம் செய்வதாகும். இந்த முரண்பாடுகளை களையும் விசயத்தில் கருத்து வேறுபாடு இருக்கக்கூடும். ஆனால் இந்த கொடிய முரண்பாடுகள் இருந்து வருகின்றன என்பதில் கருத்து வேறுபாட்டுக்கு எள்ளளவும் இடமில்லை.

இந்த முரண்பாடுகள் கண்ணை உறுத்தும் படியாக, முனைப்பானவையாக இருந்த போதிலும், கடந்த காலத்தில் பெரும்பாண்மையான மக்கள் இந்த கொடுமையை, அவலத்தை கவனிக்காமல் விட்டு விட்டனர். ஆனால் இன்று நிலைமை அடியோடு மாறிவிட்டது.  

சமூக தகுதி:

மனிதனுக்குள்ள உரிமைகளையும் அவனுக்குள்ள பல்வேறு சுதந்திரங்களையும் நிர்ணயித்துக் கூறுவதற்கு மிகப்பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இவையாவும் அவனுடைய பிறப்புரிமையாகக் கருதப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த உரிமைகள் எல்லாம் சாமானிய மனிதனுக்கு அமைதியான வாழ்க்கையாக, குடியிருக்கும் இல்லமாக, உடுத்தும் உடையாக, கல்வி வசதியாக, ஆரோக்கியமாக உருவெடுக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக உலகின் அகல்பெரும் நெடுஞ்சாலைகளில் தட்டுத் தடுமாறி விழுவோம் என்ற அச்சமின்றி, தலை உயர்த்தி, நெஞ்சு நிமிர்த்தி கம்பீரமாக நடைபோடும் உரிமை அவனுக்கு இருக்க வேண்டும். இவையெல்லாம் இல்லையென்றால் சமூக தகுதி என்பது முற்றிலும் அர்த்தமற்றதாக வெறும் ஏட்டுச் சுரைக்காயாகவே இருக்கும்.

தொழில் வளர்ச்சி:

இந்தியாவில் தொழில் வளர்ச்சியை நமது குறிக்கோளாக கொண்டிருப்பது மட்டும்போதாது. இத்தகைய எந்த தொழில் வளர்ச்சியும் சமூக ரீதியில் விரும்பத்தக்க அளவிலேயே பார்த்து கொள்ளவேண்டும். இந்தியாவில் மென்மேலும் அதிகமான செல்வத்தை உற்பத்தி செய்து குவிப்பதில் நமது ஆற்றல்களை, முயற்சிகளை ஒருமுகப் படுத்துவது மட்டும் போதாது. அனைத்து இந்தியர்களுக்கும் இந்த செல்வத்தில் பங்கு கொள்ள உரிமை உண்டு என்பதை நாம் ஏற்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தகைமைமிகு ஏற்றமிகு வாழ்க்கை வாழ்வது சாத்தியமாகும். மேலும் அவர்களுக்குப் பாதுகாப்பற்ற அவல நிலைமை ஏற்பட்டுவிடாதபடி தடுப்பதற்கான வழிவகைகளையும் நாம் காண வேண்டும். 

இப்படியாக தொழிலாளர்கள் நலனில் அக்கறைகொண்டு அவர்கள் வாழ்வு மேம்பட, குரலற்ற மக்களுக்கான குரலாக விளங்கிய முனைவர். அம்பேத்கரின் பங்கு அளவிட முடியாதது என்பதை இதன் வாயிலாக நாம் அறியலாம்.

(குறிப்பு: இந்தக் கட்டுரையானது நடுவணரசின், சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட, பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 18ல் இருந்து முழுமையாக எடுத்தாளப்பட்டுள்ளது)  

- இ.இ.இராபர்ட் சந்திரகுமார்

Pin It