காதலர் தினக் கொண்டாட்டம் களை கட்டுகிற பிப்ரவரி மாதத்தில் களம் கண்டிருக்கிறது “கலர்ஸ் தமிழ்” என்ற தொலைக் காட்சி. ஏற்கனவே சீரியல்களால் சிந்தை இழந்து கொண்டிருக்கும் தமிழக மக்களின் பொழுதுபோக்குச் சேனல்களின் எண்ணிக்கையில் ஒன்று கூடியிருக்கிறது. அவ்வளவு தானே என்று அதை கடந்து போயிட்டேன்.

இந்தச் சமயத்தில் தான் இணையதளத்தில் ஒரு விளம்பரம் வைரலாகப் பரவியது. பிரபல நடிகர் ஆர்யா திருமணம் முடிக்க விரும்புவதாகவும், பெற்றோர் பார்த்த பெண்ணை மணம் முடிக்க விரும்பவில்லை என்றும் தன்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்பும் 18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் தொடர்பு கொள்ளலாம் என்று தொலைபேசி எண்ணுடன் வெளியிட்டிருந்த விளம்பரம் தான் அது.

முன்ன, பின்ன அறிமுகமில்லாத ஆண், பெண் இருவரும் டீ குடிக்கிற கேப்பில் பார்த்துட்டு ஓக்கேன்னு சொல்றதைவிட இந்த அணுகுமுறை எவ்வளவோ பரவாயில்லைன்னு அறிவிப்பை பார்த்து நினைத்தேன். ஆனால் ஆர்யாவோ விண்ணப்பிக்கும் பெண்களிலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்து, தான் திருமணம் செய்யப் போகும் நிகழ்வானது கலர் தொலைக்காட்சியில் (நவீன சுயம்வரம்?). “எங்க வீட்டு மாப்பிள்ளை” என்ற பெயரில் ஒளிபரப்பாகும் என்றும் அறிவித்த போது மைல்டா ஒரு டவுட்டு வந்துருச்சுங்க. என் சந்தேகத்தைக் கிளியர் பண்ற மாதிரியே இந்த மனுசன் காசுக்கு சோடை போயிட்டேன்னு நினைத்து விடாதீர்கள், வாழ்க்கைத்துணையைத் தேடுவதற்காக மட்டுமே இந்த ஏற்பாடு என்று சுயவாக்குமூலம் வேறு கொடுத்தார்.

இந்நிகழ்ச்சியில் பங்கு கொள்ளக் கிட்டத்தட்ட 17,000 பெண்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும், 8000 பேர் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் விண்ணப்பித்ததாகவும், இதிலிருந்து 16 பெண்களை (எந்த அடிப்படையில்) தேர்ந்தெடுக்கப்பட்ட தாகவும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய நடிகையும் ஆர்யாவின் தோழியுமான சங்கீதா தெரிவித்தார்.

என்னால் நம்பவே முடியவில்லை. நிழல் உலகில் வலம் வரும் 37 வயதான நடிகர் ஆர்யாவைத் திருமணம் செய்து கொள்ள நிஜமாகவே 17,000 பெண்கள் (19 வயது பெண் உட்பட) பலர் முன் வந்திருக்கிறார்களா? ஏன் கேட்கிறேன் என்றால் அரசு உத்தியோகத்தில் இருக்கும் எங்க குடும்ப நண்பருக்கு தமிழ்நாட்டில் ஒத்த புள்ளைகூட கிடைக்காம கேரளா கட்டி பொண்ணுப் பார்க்க போன காட்சி கண் முன்னாடி நினைவுக்கு வந்துச்சுங்க. அதான்.

பத்தாததுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் களில் பெரும்பாலானோர் மாடலிங் துறையைச் சேர்ந்தவர்களாக இருப்பது வேறு கூடுதல் சந்தேகத்தைத் தருகிறது. பாலிவுட்டில் நடிகை மல்லிகா ஷரோவத் பங்கு பெற்ற ‘The Bachelorette India’ நிகழ்ச்சியில் மல்லிகாவுக்குத் துணையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ‘விஜய்சிங்’ கை அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. (ஒரு வருடத்துக்குள் தேர்ந்தெடுக்கப் பட்டவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது அந்நிகழ்ச்சியின் ஒப்பந்தம்.) ஒருவேளை இதைப் போல் ‘நவீன சுயம்வரம்’ ‘கலர்ஸ் தமிழ்’ தொலைக் காட்சியை ப்ரோமோட் பண்ணுவதற்கான நிகழ்ச்சியா அல்லது ஆர்யா மெய்யாலுமே பெண் துளாவுகிறாரா?

இந்த நிகழ்ச்சிக்காக, இராஜஸ்தானில் பிரமாண்டமாக ஒரு அரண்மனையைப் பிடித்துப் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. ஆர்யா தனக்கு வரப்போகும் மனைவியை ராணி போல் வைத்துக்கொள்வேன் என்பதற்கான குறியீடுதான் இந்த அரண்மனை என்றுதான் நிகழ்ச்சியைத் தொடங்கினார். ஆனால் ஆர்யாவுக்கு மனைவியா கிறவர் ஒரு சராசரிப் பொண்ணாகக்கூட வாழ முடியாது என்பதைத் தான் அரங்கேறிய அத்தனை நிகழ்வுகளும் நமக்கு உணர்த்துகிறது.

இந்த 16 பெண்களும் அனுதினம் நடைபெறும் நிகழ்ச்சிகளில் ஆர்யாவை இம்ப்ரஸ் பண்ண வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறார்கள். பாட்டு பாடுவது, நடனம் ஆடுவது, சமையல் செய்து பரிமாறுவது, காதல் கவிதைகள் எழுதுவது, ஆர்யாவுக்குப் பிடித்த பொருளைத் தேடி எடுப்பது, ரசனையாக உடை உடுத்தி ‘ராம்ப் வாக்’ போவது எனப் பட்டியல் நீள்கிறது.

இது மட்டுமல்ல தற்காப்புக் கலைகள் கற்றுக்கொள்வது முதல் தனித்திறமைகள் வெளிப் படுத்துவது வரை, வகைவகையான விஷயங்கள் வரிசையாக அணிவகுக்கின்றன. எனக்கு என்னமோ இதைப் பார்த்தா கல்யாணத்துக்குப் பொண்ணு பார்க்கிற மாதிரி தெரியலை...அடுத்த படத்துல நடிக்க ஹீரோயின் துளாவுகிற மாதிரியே இருக்கு.

பழைய ஸ்டீரியோ டைப் விஷயங்களான பெண்களை ஆடச்சொல்றது, பாடச் சொல்றது, Flames போட்டுப் பார்ப்பது என அசட்டுத்தனம் பண்ணிட்டு இருக்கிறாரே? கோட்டு சூட்டு போட்டு, நுனி நாக்கு ஆங்கிலம் பேசி, கோடிகள் சம்பாதித்து என்ன பிரயோஜனம் மனுசன் இப்பத்த டிரெண்டுக்கு வரவே இல்லையே, அந்த காலத்துலயே இருக்காறே! முதல்ல ஆர்யாவுக்குப் பொண்டாட்டியா ஆகப் போகிறேன்னு கிளம்பினாங்களே...அவங்களச் சொல்லணும். இப்பெண்களுக்கு சுயமரியாதை என்பது எள்ளின் முனையளவு கூட இல்லை. ‘கலர்ஸ்தமிழ்’ தொலைக்காட்சியின் சுலோகன் என்னவோ “இது நம்ம ஊரு கலரு” (The Colors Of Our Land) தான். ஆனால் எனக்கு மட்டும் ஏனோ அது காவிக்கலராகவே தெரிகிறது.

தினசரி நடைபெறும் நிகழ்ச்சிகளில் அன்று தன் மனம் கவர்ந்த ஒருவரையோ அல்லது இரண்டு, மூன்று பேரையோ “டோக்கன் ஆஃப் லவ்” என்று பரிசு கொடுத்து டேட்டிங் கூட்டிப் போகிறார். ஆர்யா தனிப்பட்ட முறையில் ஒரு பெண் அல்ல ஓராயிரம் பெண்களுடன் டேட்டிங் போவது பற்றி நமக்கு கவலை இல்லை. ஆனால், தன்னுடைய தனிப்பட்ட விஷயத்தை ஊடகத்தின் வாயிலாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிற போது அந்நிகழ்ச்சிக்கு அவர் தான் தார்மீகப் பொறுப்பு என்பதை அவர் உணரத் தவறிவிட்டார்.

இதில் இருதரப்பினரின் ரசனைகள் பற்றியும், முதல் காதல் பற்றியும், ப்ரேக் அப் பற்றியும், இதற்கு முன் எத்தனை ரிலேசன்சிப்பில் ஆர்யா இருந்தார் தொடங்கி, எத்தனை குழந்தை பெற்றுகொள்வது வரை அனைத்தையும் வெளிப்படையாகப் பேசு கிறார்கள். (இதில உனக்கென்னம்மா பிரச்சினை என்கிற உங்கள் மைண்ட் வாய்ஸ் எனக்குக் கேட்கிறது) ஆர்யா மீது அதீதக் காதலில் இருப்பதாக அநேகப் பெண்கள் குறிப்பிடுகிறார்கள். சிலர் தன் காதலுக்காகவும்,ஆர்யாவுக்காவும் என்ன வேண்டு மானால் செய்வேன் என்றும் தீவிரமாகக் கூறுகிறார்கள். ஒரு சில பெண்களே கம்முன்னு இருந்தாலும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சங்கீதா ஆர்யாவை இம்ப்ரஸ் பண்ணுங்கள் என்று அவர்களுக்கு அறிவுறுத்துகிறார்.

காதலுக்காகவோ, திருமணத்திற்காகவோ பெண் தன்னுடைய சுயத்தை இழந்து, ஆணுக் காகத் தன்னை மாற்றிக்கொள்வதென்பது தேவை யில்லாத ஒன்று. ஏனென்றால் காதலும் சரி, திருமணமும் சரி ஒருவர் மட்டுமே முடிவு எடுக்கும் விசயம் இல்லை. பெண் மட்டுமே ஆணை அனுசரிக்க வேண்டியதும், ஆண் தன் போக்கில் நடந்து கொள்வதும் தான் பல நூற்றாண்டுகளாக இங்கு நடந்து வருகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து, விட்டுக் கொடுத்து, அனுசரித்துப் போனால் தான் உறவு நீடிக்கும்.

அதை விடுத்து ஆர்யாவுக்காகத் தன்னை மாற்றிக் கொள்கிறேன் என்று கூறும் இப்பெண்கள் ஆணின் (ஆர்யா) நுகர்வுக்கான ஒரு பண்டமாகத் தான் மாறுகிறோம் என்பதைக் கூட உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஆர்யாவை மணம் முடிக்கக் கிளம்பியவர்களை விட்டுவிடுவோம். அவர்களையும் அந்த நிகழ்ச்சியையும் பார்த்து இந்தச் சமுதாயம் மீண்டும் மீண்டும் சீரழிவுப் பாதையிலேயே செல்லும் என்பது தான் எனது கவலை.

இந்த நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆகும் பெண்கள் உணர்ச்சி வசப்படாமல் இதை இலகுவாக எடுத்துக்கொள்வார்களா? அப்படி எளிதில் இவ் விசயத்தை எளிதில் கடந்து போகும் வல்லமை இல்லாத பெண்களுக்கு ஆர்யாவாகட்டும், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ஆகட்டும் என்ன வழிமுறை வைத்திருக்கிறார்கள்? அவர்களின் மனவலிகள் காட்சிப்படுத்தப்படுமா? எவருடைய மனவலி யையும் விற்றுப் பிழைக்கக்கூடாது என விட்டு விடுவார்களா? அல்லது இழப்பைத் தாங்க இயலாமல் வாடுவது போல காட்டப்பட்டு டி.ஆர்.பி. கள் உயர்த்தப்படுமா? இப்படிப் பல கேள்விகள் உள்ளன.

ஒரு ஆணுக்காக, ஒரு ஆணுடன் வாழப் போகும் வாழ்க்கைக்காக, ஒரு பெண் அவள் பிறந்த நாளில் இருந்து அடக்கப் படுகிறாள். வரப்போறவனுக்குப் பிடிச்ச மாதிரி வாழணும். அவனுக்கேத்த மாதிரித் தன்னை மாத்திக்கணும். இதைத்தான் பல ஆயிரம் வருடமாக இந்து மதமும், சம்பிரதாயங்களும் நமக்குச் சொல்லிச் சொல்லித் தந்திருக்கின்றன.

ஆளூக்காகவே நாம் பிறந்தோம். ஆண் இல்லாவிட்டால் வாழ முடியாது. வாழ்க்கை இனிமையாக இருக்க வேண்டுமானால் ஆணை நாம் இம்ப்ரஸ் பண்ணியே ஆகவேண்டும் என்ற இழிவான, அடிமை மனநிலையை இந்தக்காலத்துப் பெண்கள் மனதிலும் திணிப்பதைத் தான் இந் நிகழ்ச்சி செய்கிறது.