தும்பைப் பூவைப்போல்
நான் பிரகாசிக்கிறேன்
எனது விழிகளில் என்றுமில்லாத
ஒளியைக் காணுகிறேன்

பிறப்பினாலும்
குலப்பாரம்பரியங்களினாலும்
வழி வழியாக வந்ததும் கேட்டதுமான
புராண இதிகாச கதைகள்
பாடப்புத்தகங்கள், சமய போதனைகளுடாகவும்
எனக்குள் உள்நுழைந்திருந்த
ஒழுக்கத்தை மெல்ல மெல்ல களைகிறேன்
அதன் வரம்புகளிலிருந்து முடிந்தமட்டும்
விடுபட முற்படுகிறேன்

ஒழுக்கத்தின் வெறும் பொருள்கோடல்களை
புறந்தள்ள முனையுமென் உணர்வுகள்
என்னை மென்மையாக்குகிறது
நான் கட்டுக்களை தகர்த்தெறிந்தவள்,
வரம்புகளை கடந்து தெறிக்கும் காற்று
வானம்முழுதும் பவனியாகும் மேகம்

முற்றிலும் புத்தம் புதிய உணர்வுகளுடன்
சாலையில் இறங்கி நடக்கிறேன்
சேலை முந்தானையை சரிபடுத்துவதிலும்
இழுத்து இழுத்து இடுப்பை மறைப்பதிலுமே
என் கரங்கள் மிகக் கவனமாயிருப்பதுணர்ந்து
வியப்புதான் எனக்கு;
களைந்தெறிந்துவிட்டதாகவும்,
தகர்த்தெறிந்ததாகவும்
நான் இறுமாந்த ஒழுக்கத்தின்
வேர்கள் அதற்குள் தளைத்தது எங்ஙனமென்று!

Pin It