பழமை இருளுக்கு எதிரான போராட்டம்

சென்ற வருடம் ஜனவரி 2. மாலை 5 மணிக்குமேல் இருக்கும். நானும் தோழர் உஷாவும் கச்சைகட்டி கிராமத்திற்குச் சென்றிருந்தோம். மறுநாள் பினாயக் சென்னைத் தேசத் துரோகி என்று முத்திரை குத்தியதற்கு எதிரான கருத்தரங்கத்தை எமது கட்சியான சிபிஐ எம்-எல் மதுரையில் ஏற்பாடு செய்திருந்தது. அந்த கருத்தரங்கத்திற்கு கச்சைகட்டி கட்சிக் கிளைச் செயலாளர் முத்தம்மாவையும் இதர தோழர்களையும் அழைக்கச் சென்றிருந்தோம்.

முத்தம்மாவின் வீட்டில் அவர் இல்லை. ஏதோ பிள்ளை செத்துக் கிடப்பதாகவும் அந்த இடத்திற்கு அவர் போயிருப்பதாகவும் முத்தம்மாவின் மருமகள் சொன்னார். அப்புறம்தான் கவனித்தோம் அனைத்து வீடுகளும் வெறிச்சோடிக் கிடந்தன. தெருவும் கூட.

narabali_380பைக்கில் சென்று சம்பவ இடத்தில் இறங்கினோம். கூட்டத்தை விலக்கிக்கொண்டு குழந்தையின் சடலம் கிடைக்கும் இடத்தை நெருங்கினோம்.

அதற்குள் அந்தப் பகுதியின் திமுக புள்ளி இரங்கநாதன் அங்கே வந்திருந்தார். அவர் கச்சைகட்டி பஞ்சாயத்தின் எழுத்தர். அதுமட்டுமல்லாமல், ஒன்றிய பெருந்தலைவரின் கணவர். அவர் என்னையும் தோழர் உஷாவையும் தடுக்கப்பார்த்தார்.தோழர் உஷா முன் நடந்தார். நான் கண்டுகொள்ளாமல் பின் தொடர்ந்தேன்.  ‘வெளியூர்காரங்க ஏன் வாராங்க?, பொம்பளங்க ஏன் வாராங்க?’ என்ற ரெங்கநாதன் சொல்வது காதில் விழுந்தது.

ஒரு மாட்டுத் தொழுவத்தில் குழந்தையின் சடலம் கிடந்தது. தோழர் உஷா தலைசுற்றியவராய் என் கையைப் பிடித்துக்கொண்டார். ஒருக்களித்து தூங்கும் குழந்தை போல அவள் கிடந்தாள். அவளின் பெயர் ராஜலட்சுமி. வயது 5 இருக்கும். ஆணின் சட்டை, டவுசர் அணிந்திருந்தாள்.

அவசரமாக செல்லில் வாடிப்பட்டி காவல்நிலையத்தினரை அழைத்தேன். ‘சார்.. அங்கதான் வந்திட்டுருக்கோம்’, என்றார் உதவி ஆய்வாளர் சஞ்சீவி.

கூட்டம் சடலத்தை நெருங்கி தடயங்கள் அழியாமல் பார்த்துக்கொண்டோம். காவல்துறை வந்து சேர்ந்தது. வழக்கமான சோதனைகளைத் துவக்கினார்கள். ஒரு வேளை பாலியல் காரணமான கொலையாக இருக்குமோ என்று சந்தேகம் வந்தது. தோழர் முத்தம்மாவை அருகே அழைத்துக்கொண்டோம். அவர் அதிர்ச்சியில் செயலற்றவராக இருந்தார். அனைவரையும் விலகச் சொல்லிவிட்டு தோழர் உஷா, காவல்துறையினர் முன்னிலையில் சிறுமியின் பெண்ணுறுப்பைப் பார்வையிட்டார். இல்லை என்று தெரிந்தது.

குழந்தையின் கன்ன‌ம் பின்னப்படுத்தப்பட்டிருந்தது. குரல்வளையில் கூர்மையான கத்தியால் அறுத்த காயம். குழந்தை கிடந்த இடத்திலோ அல்லது சட்டையிலோ பெரிய அளவுக்கு இரத்தம் இல்லை. ஆனால், சந்தனம் அல்லது திருநீறு பூசுவது போல குழந்தையின் உடலில் இரத்தம் பூசப்பட்டிருந்தது. இரத்திற்காக நடந்த நரபலி என்று உறுதியாகத் தெரிந்தது. விசாரித்தபோது அன்றைய நாள் முழு அமாவசை தினம் என்று தெரிந்துகொண்டோம்.

தோழர் முத்தம்மா அப்படியே சரிந்து உட்கார்ந்திருந்தார். அதிர்ச்சியில் அவர் உறைந்துபோய்விட்டார் என்று தெரிந்தது. அத்தனை பேர் கூடியிருந்த இடத்தில் அசாதாரண மௌனம். ஊரே அதிர்ந்திருந்தது. காவல்துறையினரிடம் சொல்லிவிட்டு என் கைவசம் வைத்திருக்கும் காமிராவில் சிறுமியின் சடலத்தை பல கோணத்திலும் படம் எடுத்துக்கொண்டேன். காவல்துறையினரிடம் கேமிரா இல்லையாம்!

காவல்துறையினர் தங்கள் வேலையைத் தொடர்ந்தனர். எஸ்ஐ சஞ்சீவியிடம் ‘சார், நரபலி சார்.. உட்டுடாதிங்க’, என்றேன். ‘நிச்சயம் மதி சார்’, என்று அவர் என் கையைப் பிடித்துக்கொண்டார்.

அப்புறம் நாங்கள் வெளியேறினோம்.

மறுநாள் பினாயக் சென் கூட்டம் முடிந்த பின்னர், அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த மாநிலச் செயலாளரிடம் பேசினேன். அவர் நரபலிப் பிரச்சனையைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று அறிவுரை செய்தார். நிலப்பிரபுத்துவ சமூகம் பற்றி எங்கள் விவாதம் இருந்தது. மூடப்பழக்க வழக்கங்கள் வேர் கொண்டு வாழ்வதற்கு நவீன சமூகமே பிரபுத்துவத்தைத் தக்கவைத்துக்கொள்வதுதான் காரணம் என்பதாக எங்கள் கருத்துப் பரிமாற்றம் இருந்தது. அரசும், காவல்துறையும் நரபலியை மூடி மறைக்க முயல்வார்கள் என்று மாநிலச் செயலாளர் பாலசுந்தரம் எச்சரித்தார்.

அன்றிலிருந்து ஒரு பெரும் போராட்டம் துவங்கியது.

கச்சைகட்டியைப் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும். மிக முக்கியமான தாய் கிராமம் அது. அதனால் என்னுடைய நேரடி கவனம் அந்த கிராமத்தின் மீது இருக்கும். கிராமத்தில் பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் வாழ்கின்றனர். முஸ்லீம்களும் சிறு எண்ணிக்கையில் இருக்கின்றனர். ஊரில் ஒரு மசூதி உண்டு.

தலித்துகளில் பள்ளர், பறையர், சக்கிலியர் என்ற மூன்று பிரிவினரும் இருக்கிறார்கள். தலித்துகளின் எண்ணிக்கை அதிகம். முன்னொரு காலத்தில் நடந்த மோதலில் தலித்துகளின் தாக்குதலைச் சமாளிக்க முடியாத பிற்படுத்தப்பட்டோரின் குடும்பங்கள் ஊரை விட்டு வெளியேறி அருகாமையில் புது குடியிருப்புகளை ஏற்படுத்திக்கொள்ளும்படி ஆனது. தலித்துகள், குறிப்பாக பள்ளர்கள், அந்த அளவு வலிமை மிக்கவர்கள். ஆனால், யாரிடமும் நிலம் இல்லை. தலித்துகளில் வெகு சிலருக்குத்தான் நிலம் இருக்கிறது.

பள்ளர்கள் மத்தியில் ஆயா பள்ளர், ஆத்தா பள்ளர் என்று பிரிவினை உண்டு. சமீபத்தில்தான் அவர்கள் மத்தியில் திருமண உறவு ஏற்பட்டுள்ளது. அதோடு ஒவ்வொரு பிரிவுக்குள்ளும் பங்காளிகள் என்று பிரிவினை உண்டு. ஒவ்வொரு பங்காளி பிரிவுக்கும் தனித்தனி கோவில் உண்டு.

பெரும்பாலும் பள்ளர்கள் அனைவரும் உடலுழைப்பாளிகள். கல்லுடைப்பதுதான் பிரதான வேலை. விவசாய வேலைகளுக்கும் போவதுண்டு. குவாரி, கிரஷர் முதலாளிகள் புதிய அரசியல் பணக்காரர்கள். அதனையொட்டியும் ஊரில் பிளவுகள் உண்டு.

வெளியே சென்று வேலை பார்ப்பவர்கள் குறைவு. படித்தவர்கள் குறைவு. எனக்குத் தெரிந்து அந்த சாதி உட்பிரிவில் ஒருவர் வக்கீலாக இருக்கிறார். அவ்வளவுதான்.

இந்த பற்பல பிளவுகொண்ட சாதியச் சூழல் ஏற்படுத்திய பின்தங்கிய நிலைமைதான் இதுபோன்ற கொடுங்குற்றங்கள் நடப்பதற்கான சூழலை ஏற்படுத்தித் தந்திருக்கிறது.

இந்த சமயத்தில் சிறுமியின் பெற்றோர் பற்றியும் சற்று சொல்ல வேண்டும். தந்தையின் பெயர் தொத்தன். ஆயா பள்ளர் வகுப்பைச் சார்ந்தவர். சற்று வயதானவர். எந்த வேலைக்கும் செல்ல இயலாதவர். அனேகமாக வீட்டிலேயேதான் இருப்பார். சம்பவம் நடந்த அன்று பிள்ளையை விளையாட வைத்துவிட்டு கண்மூடியிருக்கிறார்.

சிறுமியின் தாய் பெயர் அன்னக்கிளி. 35 வயது மதிக்கத்தக்கத் தோற்றம். அவர்தான் குடும்பத்திற்கான வருமானத்தைக் கொண்டுவருபவர். ஒட்டி உலர்ந்துபோன உடலுக்குச் சொந்தக்காரர். தற்போது செல்வராஜ் டெக்ஸ்டைலில் வேலை பார்த்துவருகிறார். மூத்த பையன் தற்போது 10வது படித்துவருகிறான். இராஜலட்சுமிக்கும் அவள் அண்ணணுக்கும் இடையில் வயது வித்தியாசம் 10 இருக்கும். வெகுநாட்கள் தவமிருந்து பெற்ற பெண் என்று பெற்றோர்கள் சொல்கிறார்கள்.

குற்றம் நடந்த அன்று ஊரே ஒன்றுகூடிவிட்டது. சாலை மறியல் நடந்திருக்கிறது. எஸ்பி சம்பவ இடத்திற்கு வந்துவிட்டார். நரபலிதான் என்று பொதுமக்களிடம் கூறிய எஸ்பி இரண்டு நாட்களில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்திருக்கிறார்.

dinamalar_560

ஆனால், 10 நாட்கள் கடந்த பின்னரும் எதுவும் நடக்கவில்லை. ஆயா பள்ளர் பிரிவில் உள்ள 15க்கு உட்பட்ட நபர்களை காவல்துறை விசாரணைக்கு அழைத்து பின்னியெடுத்திருக்கிறது. அப்புறம் ஒவ்வொருவராக விட்டுவிட்டது. பொங்கலன்று காவல்நிலையத்தில் கச்சைகட்டி பிரச்சனை தொடர்பாக விசாரிக்கப்பட்டவர்கள் யாரும் அடைத்து வைக்கப்பட்டிருக்கவில்லை.

எஸ்பி சிஐடி பாண்டியிடம் பேசினேன். அவர் உழட்டுவதாகப் பட்டது. ‘அதெல்லாம் புடிச்சிடுவோம்.. அவனுகதான் செஞ்சிருக்கானுங்க ஆனா.. வாயத் தெறக்கமாட்டேங்கிறானுங்க..’ என்றார். குற்றத்தைச் செய்தவன் எப்படி ஒப்புக்கொள்வான். அப்புறம், குற்றத்தைச் செய்தது பள்ளர்கள்தான் என்பது தப்பு என்பது என் அபிப்ராயம். எவனோ ஒரு பெரிய மனிதன் செய்திருக்கிறான், அவன் சொல்படி பள்ளர்களில் சிலர் செயல்பட்டிருக்கலாம் என்பது என் மதிப்பீடு. ‘கரெக்டா செய்யப்பாருங்க.. இல்லாட்டா பிரச்சனையாகும்’, என்று அவரை எச்சரித்தேன்.

என் கணக்கு சரி என்பதை அதன் பின் எனக்குக் கிடைத்த தகவல் உறுதிப்படுத்தியது. நம்பகத்திற்குரிய ஒருவர் என்னிடம் சொன்னார். அயூப்கான் என்ற திமுக பிரமுகர் (அவரும் கச்சைகட்டிக்காரர்) தணிச்சியத்தில் கட்டிவரும் கல்லூரிக்காக‌த்தான் நரபலி நடந்திருக்கிறது. திமுகவின் தலையீட்டின் பேரில் வழக்கை ஊத்தி மூட அனைத்து வேலைகளும் நடந்துகொண்டிருக்கின்றன. சிபிஐ எம்எல் கட்சி தலையிட வேண்டும் என்று அந்த நம்பத்தகுந்த நபர் சொன்னார்.

நான் கொஞ்சம் விசாரித்த பின்னர் அது உண்மையாக இருக்கத்தான் வாய்ப்பிருக்கிறது என்று உறுதியாகத் தெரிந்தது. அதன்பின் பேராசிரியர் முரளியை அணுகி பியுசிஎல் உண்மையறியும் குழு விசாரணைக்கு ஏற்பாடு செய்தோம்.

உண்மையறியும் குழு கிராமத்தில் நுழைந்த 30 நிமிடத்தில் ஒரு பெரிய காவல்துறை பட்டாளமே சம்பவ இடத்திற்கு வந்துவிட்டது. ஆய்வாளர் லட்சுமணனும் வந்திருந்தார். குழு விசாரணை செய்த இடத்திற்கு சிஐடிகள் மட்டும் வந்தனர். யார் வந்திருக்கிறார்கள் என்று அச்சத்துடன் கேட்டனர். பியூசிஎல் என்றால் என்ன என்று புரியவைப்பதற்குள் எனக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது.

பியுசிஎல் குழுவினர் ஆய்வாளர் லட்சுமணனை நேர்கண்டபோது, ‘சிபிசிஐடிக்கு வழக்கை மாற்றுவது நல்லது’ என்பதாக தன்னிடம் சொன்னதாக பேராசிரியர் முரளி சொன்னார். அப்புறம் சில நாட்களில் லட்சுமணன் இடமாற்றம் ஆனார். இவையெல்லாம் எங்களை யோசிக்க வைத்தன.

பியுசிஎல் குழு நரபலி என்றே மதிப்பிட்டது. போஸ்ட்மார்ட்டம் செய்த மருத்துவர்கள் அதிர்ந்து போயிருக்கிறார்கள். ஆய்வு செய்வதற்கென்று கூட குழந்தையின் உடம்பில் ஒரு சொட்டு இரத்தம் இல்லை என்று ஆய்வாளர் லட்சுமணன் பியுசில் குழுவிடம் சொல்லியிருக்கிறார்.

பியுசிஎல் அறிக்கையை வெளியிட்ட நிகழ்ச்சிக்கு நிறைய பத்திரிகைகள் வரவில்லை. ஹிந்துவும் எக்ஸ்பிரசும் விரிவாக எழுதினார்கள். சில தமிழ்ப் பத்திரிகைகளில் அறிக்கையின் சாரம் வந்தது. அதன்பின்பு, காவல்துறை விசாரணை சற்று வேகம்பிடித்தது. ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லை.

வேறு வழியின்றி கட்சியின் உயர்மட்டக் குழு விசாரணையில் இறங்கியது. எம்எல் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலசுந்தரம் தலைமையிலான குழு கச்சைகட்டி மக்களையும் பிள்ளையின் பெற்றோர்களையும் சந்தித்தது. இதற்குள் நரபலிக்குக் காரணம் என்ன என்பது பற்றியும், அயூப்கானுக்கும் கொலையாளிகளுக்கும் இடையில் செயல்பட்ட முருகேசன் என்ற - திமுகவின் அதிகாரக் கட்டமைப்பில் எங்கும் இல்லாத ஆனால், திமுக புள்ளியாக இருந்த/இருக்கின்ற - நபர் பற்றிய தகவல்கள் போன்ற பல தகவல்கள் எங்களுக்குக் கிடைத்தன.

அப்போதைய DIGயைக் குழு சந்தித்து, நரபலி என்ற சமூகக் கொடுங்குற்றத்தினை செய்த குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று எடுத்துரைக்க முயற்சி செய்தது. DIGயோ அது நரபலி இல்லை என்று வாதிட்டார். “அங்கே பூ இருந்திச்சா.. எலுமிச்சை இருந்துச்சியா..?’ என்று ஆரம்பித்து நரபலிக்கான இலக்கணம் ஏதும் அங்கு காணப்படவில்லை என்பதால் அது நரபலியில்லை என்றும் வாதாடினார். மூடத்தனத்திற்கு ஏது இலக்கணம் என்று நாங்கள் கேட்டோம்.

எங்களின் மாநிலச் செயலாளருக்கும் DIGக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் நடந்தது. அப்புறம் பேசும்போது இடையில், தலைமைச் செயலாளர் அழைத்துப் பேசியதாகவும் நரபலி இல்லை என்பதாகப் பார்த்துக்கொள்ளும்படியும் சொன்னதையும் குறிப்பிட்டு இது நரபலி இல்லை என்றே DIG வாதாடினார்.

பகுத்தறிவு திமுக ஆட்சியில் நரபலி நடந்திருக்கக் கூடாது என்பதைக் காட்டிலும் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்ற கவலைதான் தூக்கலாகத் தெரிந்தது என்று நான் அப்போது மதிப்பிட்டேன். உண்மை அதைக்காட்டிலும் கொடுமையானது என்று நான் பின்னர் புரிந்துகொண்டேன். அப்புறம் நாங்கள் வெளியேறினோம்.

அடுத்து மாவட்ட ஆட்சியரைச் சந்தித்தோம். அவர், ‘அப்படியா? மதுரையில் நரபலி நடந்ததா?’ என்று கேட்டு எங்களை அதிரவைத்தார். அவர்தான் மாவட்ட மாஜிஸ்ட்ரேட் என்ற பொறுப்பு வகிப்பவர் என்பதையும் இங்கே சொல்ல வேண்டும். அப்புறம், காவல்துறைக் கண்காணிப்பாளரை அழைத்துப் பேசினார். மறுநாள் காவல்துறைக் கண்காணிப்பாளரைச் சந்திக்கும்படியும், வேலைகள் விரைவாக நடக்கும் என்றும் உத்திரவாதமளித்தார்.

அத்துடன் நாங்கள் பத்திரிகையாளர் சந்திப்பொன்றையும் நடதினோம். கல்லூரி கட்டுவதில் ஏற்பட்ட தடையினை நிவர்த்திக்க இரத்தபலி கொடுக்கப்பட்டது என்றும், குற்றவாளிகளைக் காக்க திமுக அரசியல்வாதிகள் முயற்சி செய்கின்றனர் என்றும் வெளிப்படையாகக் குற்றம் சாட்டினோம். அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரமும், மாநிலக் குழு உறுப்பினர் தோழர் உஷாவும் கலந்துகொண்டு எங்களுக்குக் கிடைத்த விவரங்களை வெளிப்படுத்தினர். மார்ச் 6 அன்று வெளிவந்த ஜூவி இதழில் செய்திகள் விரிவாக வெளிவந்தன. குறிப்பாக அந்தக் கல்லூரியின் படத்தையும் அந்தப் பத்திரிகை வெளியிட்டது. வழக்கம்போல ஹிந்து எக்ஸ்பிரஸ், தினமணி, தினமலர் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.

dinathanthi_460

அதன்பின் விவகாரம் வேகம் பிடித்தது. மாகாமுனி என்பவரையும், அவரின் மகன் கருப்பு என்பவரையும் காவல்துறை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தது. நாக்கைக் கடித்துக்கொண்டதால் கருப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கே அவர் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை அறிவித்தது. சிறையில் அடைக்கப்பட்ட மகாமுனி நோயின் காரணமாக இறந்துபோனதாக அறிவிப்பு வெளியானது.

இந்த இரண்டு பேருமே ஆயா பள்ளர் பிரிவைச் சேர்ந்தவர்கள். கருப்பு கல்லுடைப்பவர். எப்போதுமே ஆதிக்க சக்திகள் தலித்துகளின் கழுத்தை அறுப்பதற்கு தலித்துகளையே பயன்படுத்துகின்றன என்பதற்கு இது மற்றொரு ஆதாரம்.

மகாமுனி அதிகாலையில் வாடிப்பட்டி ஆர்.ஐ. முன்பு சரணடைந்தாகச் சொல்லப்படுகிறது. ஆர்.ஐ. தனது அதிகாரபூர்வ குடியிருப்பில் ஒரு நாளும் தங்குவதில்லை. ஏன், தாசில்தார் கூட அவரின் அதிகாரபூர்வ குடியிருப்பில் தங்குவதில்லை. அதனால், மனம் பதைத்த மகாமுனி ஆர்.ஐ.யிடம் அதிகாலையில் வந்து சரணடைய வாய்ப்பே இல்லை. அந்த அளவு விவரமான மனிதர் அல்ல அவர். அப்படியானல், இந்த சரண் நாடகத்தை அரங்கேற்றியது யார்?

கருப்பு மருத்துவமனை மாடியில் ஏறி குதித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை சொல்கிறது. அப்படியானால், அவருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கவில்லையா, ஏன்?

கருப்பின் கைகள் முறிந்ததாகவும், தலையில் காயம் என்றும் தெரியவருகிறது. குதித்தவரின் கால் கீழே வராமல் தலை கீழே வந்த காரணம் என்ன? இது குதித்ததால் ஏற்பட்ட மரணமா? தலைகுப்புற கீழே தள்ளியதால் ஏற்பட்ட மரணமா? காவல்துறை இதுவரை பதில் அளிக்கவில்லை.

ஆனால், இரண்டு மரணங்கள் தொடர்பான வழக்குகளும் முடிக்கப்பட்டுவிட்டன. இதையெல்லாம் செய்யும் அந்த வலுவான கை யாருடையது. நிச்சயம் அயூப்கானின் கை இல்லை என்பது எமக்குத் தெரியும்.

மற்றொரு செய்தியையும் இங்கே சொல்ல வேண்டும். விசாரணை நடந்தது வாடிப்பட்டி காவல் நிலையத்தில் என்று ஊடகங்கள் சொல்லிவர, தங்களை விசாரித்தது சமயநல்லூர் டிஎஸ்பி அலுவலகத்தில் என்று விசாரணைக்குச் சென்றவர்கள் சொல்கின்றனர். ஏன் டிஎஸ்பி அலுவலக விசாரணையை மறைக்கின்றனர்?

அதனைத் தொடர்ந்து மாநிலக்குழு உறுப்பினர் தோழர் உஷாவும் நானும் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி மேற்சொன்ன கேள்விகளையும் இன்னும் பிறவற்றையும் எழுப்பினோம்.

அப்புறம் நீண்ட மௌனம். ஆனால், எமது கட்சி இப்பிரச்சனையை முன்னிறுத்தி போராட்டங்களை நடத்தி வந்தது. நடத்தும் போராட்டங்கள் அனைத்திலும் இப்பிரச்சனையை எழுப்பிவந்தோம்.

இந்த நிலையில் தேர்தல் நெருங்கும் சூழலில் சிபி சிஐடி விசாரணைக்கு DIG உத்தரவிட்டார். தேர்தலில், எமது கட்சி நரபலி குற்றத்தில் திமுகவின் பங்கை அம்பலப்படுத்துவதை பிரச்சாரத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகக் கொண்டிருந்தது.

dinakaran_303இப்போது பத்திரிகைகளின் செயல்பாடு பற்றியும் சொல்லியாக வேண்டும். சில பத்திரிகைகள் குறிப்பாக, தினகரன், கருப்பு என்ற மலபார் ஒரு மந்திரவாதி என்றும் அவன் ஆட்டைக் கடித்து இரத்தத்தைக் குடிப்பவன் என்றும் எதோ ஒரு புதையலை எடுப்பதற்காகத்தான் இந்த குழந்தை பலியிடப்பட்டது என்றும் தொடர்ந்து எழுதி வந்தது.

கருப்பு அவரின் பங்காளி கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார். நோன்பு சமயங்களில் பூசாரி போல வேலை பார்ப்பார். அவர் மந்திராவாதியென்றோ ஊரில் புதையல் இருக்கிறதென்றோ கச்சைகட்டியில் யாருக்கும் தெரியாது. அப்படியானால் தினகரனுக்கு இந்த செய்தியை- கற்பனை செய்தியை- வழங்கியது யார்? அதனை தினகரன் வெளியிட்டதற்கு என்ன காரணம்? தினகரன் ஊழியர்களைக் கொலை செய்தவர்களை தினகரன் மறந்திருக்கலாம். நாம் எப்படி மறக்க முடியும்?

கருப்புவையும் மகாமுனியையும் இயக்கியது முருகேசன் என்ற நபர். குற்றச்செயல்களில் ஈடுபடும் திமுக நபர். அவர் ஆயா பள்ளர் இனத்தைச் சேர்ந்தவர்தான். கார்களை வாங்கிவிற்கும் நபராக நடமாடுபவர். நாகரத்தினக் கல் வாங்கித் தருவதாக ஏமாற்றும் நபர் என்றும் பொதுமக்கள் சொல்கிறார்கள்.

அந்த முருகேசன்தான் ஜனவரி மாத விசாரணையின்போது கருப்புவையும் மகாமுனியையும் அவரின் மனைவியையும் விசாரணையிலிருந்து விடுவித்து அழைத்துச் சென்றவர். அதன்பின் திண்டுக்கல் மாவட்டம் கொடைரோட்டை அடுத்த மாவுத்தன்பட்டியிலும், வடமதுரையிலும், வத்தலக்குண்டு அருகே உள்ள முத்துலாபுரத்திலும் வைத்துப் பராமரித்தவர். முருகேசனைக் காவல்துறை நெருங்கவேயில்லை.

நரபலிக்குப் பின்பு கருப்புக் குடும்பத்தினர் சொத்துக்கள் வாங்கினார்கள் என்ற விவரத்தையும் ஊர் மக்கள் எம்மிடம் தெரிவித்தனர்.

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது கருப்பு, மகாமுனி-முருகேசன்-அயூப்கான் என்ற சங்கிலி தெளிவானது.

அயூப்கான், மதுரை திமுக பிரமுகர் மன்னனின் கூட்டாளி. மன்னனின் ரவுடிக் கூட்டம் காரியத்தை முடித்தவுடன் பதுங்குமிடம் அந்தக் கல்லூரிதான் என்று தணிச்சியத்தில் சொல்கிறார்கள். மன்னனின் அண்ணன் யார் என்று அனைவருக்கும் தெரியும்.

காவல்துறை அசைவதாக இல்லை என்பதை ஒரு சம்பவம் நிரூபித்தது. சிபி சிஐடி விசாரணை அறிவிக்கப்படுவதற்கு முன்னர், என்னையும் தோழர் உஷாவையும் சமயநல்லூர் டிஎஸ்பி விசாரணைக்கு அழைத்தார். வாடிப்பட்டி காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடந்தது. டிஎஸ்பி மிகவும் கோபமாகவும் பதட்டமாகவும் இருந்தார். விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்பதுபோல மிரட்டல் தொனியில் ஆரம்பித்தார். அவர் பதவிக்குரிய கௌரவத்தைக் கொடுத்து, அதேசமயம் காவல்துறை கைகட்டி நிற்கிறது என்ற விவரத்தைக் கடுமையாகச் சொன்னேன். குரல் எழுப்புவது எமது கட்சியின் வேலை. உண்மையைக் கண்டுபிடிப்பது காவல்துறையின் வேலை என்றேன். இவ்வளவு நடந்திருக்கிறதே, அந்தக் கல்லூரியின் முனி கோவிலில் இரத்தப் பூசை நடக்கவில்லை என்று உங்களால் நிரூபிக்க முடியுமா என்று கட்டுப்படுத்தப்பட்ட கோபத்துடன் கேட்டேன்.

அப்போதுதான் அந்த ஆச்சரியம் நடந்தது. அருகிலிருந்த காவல்துறை ஆய்வாளர் ராஜாவிடம், அந்தக் கல்லூரிக்குச் சென்று எங்கேயாவது இரத்தம் தெளிக்கப்பட்டுள்ளதா என்று பார் என்று உத்தரவிட்டவர் அப்படியே எழுந்து போய்விட்டார்.

எனக்குச் சிரிப்புத்தான் வந்தது. காவல்துறை ஆடி, அசைந்து வந்து சேர்ந்து, மாதிரி சேகரிக்கும் வரை தெளிக்கப்பட்ட இரத்தம் என்ற உயிரிப் பொருள் மாதக் கணக்கில் காத்திருக்குமா? அந்த விவரம் தெரியாத அதிகாரியா அவர்? அல்லது இந்த விவரம் தெரியாத முட்டாள் நான் என்று நினைத்தாரா? அல்லது, நான் தொடக்கூடாத இடத்தைத் தொட்டுவிட்டேனா?

சிபி சிஐடி விசாரணை அதிகாரிகள், சிபி சிஐடி விசாரணை அறிவிக்கப்பட்டு தேர்தல் முடிந்த பின்னர் கட்சி அலுவலகம் வந்தனர். என்னிடம் இருந்த அனைத்து விவரங்களையும் பகிர்ந்துகொண்டேன். அவர்கள் திருப்தியுடன் புறப்பட்டு சென்றனர்.

இப்போது சிபிசிஐடி அயூப்கானைக் கைது செய்து கல்லூரிக்காகத்தான் நரபலி என்ற மக்களின் கூற்றை- எமது கூற்றை உண்மையென்று ஆக்கியுள்ளது. ஆனால், இன்னமும் கேள்விகள் இருக்கின்றன. அந்தக் கேள்விகளை ஏப்ரல் 30 அன்று பத்திரிகையாளர் கூட்டத்தில் எழுப்பினோம்.

இந்த கொடூர சமூகக் குற்றத்தை மறைக்க வேலை பார்த்த அரசியல் சக்திகள் யார்?

அதற்குத் துணை போன காவல்துறை உயர் அதிகாரிகள் யார்?

இந்த விஷயங்களை இணைக்காவிட்டால் எப்படி விசாரணை நிறைவுபெற்றதாகும்?

பெரியாரின் வழிவந்த திமுக எப்படி அயூப்கானை கட்சியில் வைத்திருக்கிறது?

தனியாருக்குக் கல்வித்துறையை தானம் செய்துவிட்டது அரசு. அதன் பலன் என்னவென்று தெரிகிறதல்லவா? பணத்தைப் பிடுங்கி மாணவர்களின் பெற்றோரை பலிவாங்கும் முதலாளிகள் என்பதைத் தாண்டி, மூடத்தனத்தின் கூடாரமாக அவர்கள் விளங்குகிறார்கள் என்பதை இந்த நரபலி காட்டவில்லையா?

இனியும் எங்களின் முயற்சிகள்/கேள்விகள் தொடரும்.

நவீன சமூகமும், அரசும், அரசியல் கட்சிகளும் மூடத்தனங்களை வேரறுக்க முன்னிற்க வேண்டும். ஆனால், நமது அரசும், காவல்துறையும், அரசியல் கட்சிகள் பலவும் மூடத்தனத்தால் நிகழ்த்தப்பட்ட இந்த நரபலியை சாதாரண விஷமாக எடுத்துக்கொள்வது மனதைப் பதைபதைக்க வைக்கிறது.

நரபலியிடப்படுவதில் 90 சதம் தலித்துகள்தான். இந்த விவரம் என்ன சொல்கிறது.. பார்ப்பனீயச் சிந்தனை, சாதியம் நமது சமூகத்தில் இன்னும் ஆழமாக வேர் கொண்டுள்ளது என்பதைக் காட்டவில்லையா? இந்த வேரினை அறுத்தெறியாமல் நவீன சமூகம்/ஜனநாயக சமூகம் எப்படி கைகூடும்?

அரசும் அரசியல் கட்சியான திமுகவும் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தலித்துகளின் மீதான சமூகக் குற்றங்களைக் காக்கும் என்றால், இது ஜனநாயக அரசுதானா என்ற கேள்வி எழவில்லையா? திமுகவின் பகுத்தறிவுப் பாரம்பரிய முகமூடி கிழிந்து தொங்கவில்லையா?

தற்போதைய அதிமுக அரசு காட்டிவரும் மௌனம் திமுகவினை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்துவதற்குத்தான் அனைத்து வழக்குகளும் என்பதைக் காட்டவில்லையா? நரபலி பற்றி அவர்களுக்குக் கிஞ்சித்தும் கவலையில்லை என்பதைச் சொல்லவில்லையா?

தலித் கட்சிகள் இந்தப் பகுதியில் இருக்கின்றன. ஆனால், கீழே உள்ளவர்கள் முதல் மேலே உள்ளவர்கள் வரை யாரும் சுட்டு விரலைக் கூட அசைக்கவில்லை. ஏன்?

கடைசியாக, இந்தப் பதிவை இறுதி செய்வதற்கு முன்பு சில விஷயங்களைப் சொல்லியாக வேண்டும்.

சிறுமி உடலை மீட்கும் சூழலில் நானும் தோழர் உஷாவும் அங்கிருக்கும்போதும் சரி, அதன் பின்னரும் கச்சைகட்டி மக்கள் ‘இத எடுத்துச் செய்யுங்க.. நீங்க இல்லாட்டா நீதி செத்துடும்’, என்று வேண்டுகோள் வைத்தனர். எமது கட்சி அவர்களின் வேண்டுகோளை கட்டளையாக எடுத்துக்கொண்டு பணி செய்தது.

அந்த மக்கள்தான் விவரங்களை எமக்களித்தனர். அவர்கள் இல்லையென்றால் நாங்கள் எதையும் செய்திருக்க முடியாது. அதேசமயம், காவல்துறையிடம் பேச பயந்தனர். ஏன் என்பதை காவல்துறையும் காவல்துறையின் அமைச்சர் ஜெ-வும் யோசிப்பார்களா? ஈரல் கேட்டிருக்கிறதா, உடலே நாறிக்கிடக்கிறதா என்பதைக் கண்டுபிடிப்பார்களா?

எங்களுக்கு பியுசிஎல் போன்ற அமைப்புகளும், பத்திரிகையாளர்களும் மிகப் பெரும் ஒத்துழைப்பு நல்கினர். அவர்களின் எண்ணிக்கை மிகச் சிறியது என்றாலும் இப்பிரச்சனையை இந்த அளவுக்குக் கொண்டுவர அவர்களின் பங்களிப்பு மிகப் பிரம்மாண்டமானது. அதே சமயம் பெரும்பாலான தமிழ் பத்திரிகைகள் மிகவும் கடுமையான மௌனம் சாதித்தது பற்பல கேள்விகளை எழுப்புகிறது.

இப்பிரச்சனை சாதி, வர்க்கம், அரசின் தன்மை, அரசியல் கட்சிகளின் உண்மை முகம் என்று பல்வேறு பிரச்சனைகளோடு சம்பந்தப்பட்டது என்பதால், பழமை இருளின் ஒரு துளியைக் கூட அனுமதிக்க முடியாது என்பதால் விடாப்பிடியாக பணி செய்ய வேண்டும் என்று எமது மாநிலச் செயலாளர் பாலசுந்தரம் எம்மை இயக்கிக்கொண்டிருந்தார். மிக முக்கியமான சமயங்களில் மிகத் தெளிவான வழிகாட்டுதல் அளித்தார்.

இந்த சமயத்தில் இரண்டு பெண் தோழர்களைக் குறிப்பிட வேண்டும். எமது கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக இருந்த தோழர் உஷா, சிறுமியின் சடலத்தைக் கண்டது துவங்கி மிகப்பெரும் பங்காற்றினார். அவரின் தொலைக்காட்சி பேட்டிகள், பத்திரிகை பேட்டிகளைக் கண்ட அவரின் நண்பர்கள் பின்வாங்கிவிடுவது நல்லது என்று எச்சரித்த போதும் மிக உறுதியாக முன்னின்றார். மக்களின் அன்பைப் பெற்றவர்களில் அவர் முதன்மையானவர்.

எமது கச்கைகட்டி கட்சிக் கிளையின் செயலாளர் முத்தம்மாவைக் கண்டு நான் பலமுறை பிரமித்து நின்றிருக்கிறேன். உள்ளூர் பெரிய மனுஷன் அயூப்கான்தான் குற்றவாளி என்று தெரிந்தபோதும், அஞ்சாமல் முன்னின்றார். ஒருசமயம், அந்த ஆளை நேருக்கு நேர் எதிர்கொண்டு கேள்வி கேட்டார். உச்சகட்ட நிகழ்வுகளின் போது இதர உறுப்பினர்கள் சிலர் யோசித்தாலும் எந்த தயக்கமும் இன்றி ஒன்றை ஆளாக துணிச்சலுடன் நடைபோட்டார். பல்வேறு ஏற்ற இறக்கம் இருந்தாலும் கச்சைகட்டி கட்சிக் கிளை உறுப்பினர்கள் பங்களிப்பு இன்றி இப்பிரச்சனையில், கட்சி இந்த அளவு சாதித்திருக்க முடியாது.

எமது மாவட்ட கட்சி கமிட்டி உறுப்பினர்கள்,அரசியல் உறுதியுடன் இந்தப் பணியில் எந்த தொய்வும் இன்றி பங்காற்றினர். இன்னமும் கூட வெளியுலகுக்கு முகம் தெரியாத அந்த மனிதர்கள் கம்யூனிஸ்டுகள் என்ற இலக்கணத்திற்கான உதாரணங்கள்.

மக்களை அமைப்பாக்கி அவர்களை அதிகாரம் கொண்டவர்கள் ஆக்குவது, பழமை இருளுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்வது என்ற இரண்டும் எங்கள் கட்சி இருப்பதற்கான நியாயத்தின் அடிப்படைகளில் பிரதானமானவை. பழமை இருள் ஒழிந்து சமத்துவமிக்க சமூகத்தில் மனிதர்கள் மனிதர்களாக கரம்கோர்க்கும் வரையில் எமது பயணம் நீளும். அதனை யாரும் தடுக்க இயலாது.

Pin It