இன்று தலித் இயக்கங்கள் மற்றும் தலித் அரசியல் கட்சிகள் டாக்டர் அம்பேத்கர் கூறிய “அரசியல் அதிகாரத்தை” மையமாகக் கொண்டு செயல்படுவதாக அறிவித்து செயல்படுகின்றன. அதே நேரத்தில் மற்றைய அரசியல் கட்சிகளும் கூட அம்பேத்கரின் அரசியல் அதிகாரத்தைப் பற்றி பேசுகின்றன. எனவே இந்தக் கருத்தைப் பற்றிய புரிதல் தலித் சமுதாயத்திற்கு மிக மிக அவசியமான ஒன்றாகும். புரிதல் ஒருதலைப் பட்சமாக இருக்கக்கூடாது.

 ambed-200டாக்டர் அம்பேத்கர் ஒரு சகாப்தத்தின் அடையாளம். இந்திய வரலாற்றில் கௌதம புத்தருக்குப் பிறகு, கோடிக்கணக்கான தீண்டப்படாத ஒடுக்கப்பட்ட மக்களின் உள்ளுணர்வில் தன்னம்பிக்கையையும், சுயமரியாதைக்கான போராட்ட உணர்வையும் ஊட்டியவர். மேலும் சமூக பொருளாதார அரசியல் விடுதலைக்கான கருத்தாக்கங்களையும், நடைமுறை செயல்பாடுகளையும் வகுத்து செயல்படுத்தியவர். தீண்டப்படாத மக்களின் விடுதலைக்கான கருத்தாக்கங்களையும் உருவாக்கிக் கொள்வதற்காக, இந்திய சமூக, கலாச்சார நம்பிக்கைகளின் வரலாறுகளை மிகவும் ஊன்றி கற்றறிந்தார். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தீண்டப்படாத மக்கள் இந்திய சமுதாயத்தில் அனுபவித்த துன்பங்களையும், துயரங்களையும், அவமானங்களையும் உள்வாங்கிக்கொண்டதுடன், தனது வாழ்விலும் அத்தகைய துயரங்களை அனுபவித்தவ‌ர். டாக்டர் அம்பேத்கர் அவர்கள் வகுத்தளித்த “அரசியல் அதிகாரம்” எனும் கருத்தாக்கம் இந்திய சமூக வரலாற்றின் சாரமாகும். எனவே அம்பேத்கர் அவர்கள் முன்வைத்த ”அரசியல் அதிகாரம்” எனும் கருத்து மக்களின் விடுதலைக்கு அடித்தளம் அமைக்கும் நீண்டகால செயல்பாட்டின் தொடக்கமாகும். ஆகையால் அவருடைய கருத்தாக்கத்தை முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு வசதியாக அவர் முன்வைத்து போராடிய கருத்துகளைப் பார்ப்போம்.

இந்திய சமூகமும் – அரசியல் அதிகாரமும்:

 டாக்டர் அம்பேத்கர் அவர்கள், தான் கூறும் ஒவ்வொரு கருத்தையும் யதார்த்தத்துடன் இணைத்துப் பார்த்தே கூறியிருப்பது மிகவும் சிறப்பான விஷயமாகும். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பாகவே, இந்தியாவின் எதிர்கால அரசியல் ஏற்பாடுகள் பற்றி சிந்தித்துக் கூறியிருப்பதை முதற்கண் பார்ப்போம்.

“இந்தியா, ஐரோப்பா அல்ல; இங்கிலாந்தும் அல்ல, சாதி அமைப்பு பற்றி இங்கிலாந்துக்குத் தெரியாது. நமக்கு அதைப்பற்றி தெரியும். எனவே இங்கிலாந்துக்குப் பொருத்தமான அரசியல் ஏற்பாடு, ஒருக்காலும் நமக்குப் பொருத்தமாக இராது. இந்த உண்மையை நாம் ஏற்போமாக, இதற்கு மேலும் ஒருபடி நான் செல்ல நினைக்கின்றேன். இந்திய அரசியலைப் பற்றி ஆய்ந்து வரும் அறிஞர்கள் வேறு என்னதான் கூறினாலும், வகுப்புவாதப் பிரதிநிதித்துவக் கோட்பாட்டை ஏற்றிருப்பது தான் வரப்போகும் இந்திய அரசியல் சாசனத்தில் பொதிந்துள்ள மிகச்சிறந்த அமசம் என்று உறுதியாகத் தெரிவிக்க விரும்புகிறேன்” – பக்கம் 181 தொகுதி 3.

 இந்திய சமூக அமைப்பு மற்ற நாடுகளின் சமூக அமைப்புகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருப்பதால், அரசியல் அதிகாரப் பகிர்வும் வேறுபட்ட முறையில்தான் இருக்க வேண்டும் என்று மிகத் தெளிவாக சிந்தித்தவர் டாக்டர் அம்பேத்கர். இதே சந்தர்ப்பத்தில் ஓர் அரசாங்கம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தைக் கோடிட்டுக் காட்டி கூறியுள்ளதை இங்கு பார்ப்போம்.

“எல்லா மனிதர்களும் சமமானவர்களாகப் படைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு பரம்பொருளால் சில மறுக்கமுடியாத உரிமைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. உயிர்வாழ்வதற்கும், சுதந்திரமாக இருப்பதற்கும், நல்வாழ்வைத் துய்ப்பதற்குமான உரிமைகள் இவற்றில் அடங்கும். இந்த உரிமைகளை ஈட்டுவதற்கே மனிதர்களிடையே அரசாங்கங்கள் அமைக்கப்படுகின்றன. ஆளப்படுவோரின் இசைவோடு, இணக்கத்தோடு அவை தமக்குரிய நியாயமான அதிகாரங்களைப் பெறுகின்றன. இந்தக் குறிக்கோள்களை அழிக்கக்கூடியதாக ஓர் அரசு மாறும்போது, அதனை மாற்றுவதற்கும், அல்லது நீக்குவதற்கும், புதிய அரசை உருவாக்குவதற்கும், இத்தகைய கோட்பாடுகளின் அடிப்படையில் இதற்கு அடித்தளங்கள் இடுவதற்கும், தங்களது பந்தோபஸ்துக்கும், நல்வாழ்வுக்கும் உத்தரவாதமளிக்கக் கூடிய அதிகாரங்களை அதற்கு வழங்குவதற்கும் மக்களுக்கு உரிமையுண்டு” – பக்கம் 55, தொகுதி-17.

 இவ்வாறு கோடிட்டுக் காட்டுவதன் மூலம் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் “அரசியல் அதிகாரம்” பற்றிய மிக முக்கியமான கருத்துகளை முன்வைக்கின்றார். அவைகள்:

1)     மக்கள் உயிர்வாழ்வதற்கும், சுதந்திரமாக இருப்பதற்கும், நல்வாழ்வைத் துய்ப்பதற்குமான உரிமைகள்.

2)     மேற்கண்ட உரிமைகளை மக்களுக்கு வழங்குவதற்காகவே அரசாங்கங்கள் அமைக்கப்படுகின்றன.

3)     மேற்கண்ட குறிக்கோள்களை அழிக்கக்கூடியதாக ஓர் அரசு மாறும் போது அதனை மாற்றுவதற்கும், அல்லது நீக்குவதற்கும் புதிய அரசை உருவாக்குவதற்கும், தங்களின் பாதுகாப்பிற்கும், நல்வாழ்வுக்கும் உத்தரவாதமளிக்கக்கூடிய அதிகாரங்களை அரசுக்கு வழங்குவதற்கும் மக்களுக்கு உரிமையுண்டு.

எனவே டாக்டர் அம்பேத்கர் விரும்பிய அரசியல் அதிகாரமென்பது மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் தன்மையுடையதாகும். மக்களின் நலன்களைப் பாதுகாக்கத் தவறும்போது, அதனை மீட்டெடுக்கும் உரிமை மக்களுக்கு இருக்கவேண்டும் என்பதாகும்.

 இத்தகைய புரிதலில்தான் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தமது அரசியல் போராட்டத்தை நடத்தினார் என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டும். இந்தச் சமயத்தில் இன்னுமொரு முக்கியமான கருத்தையும் நாம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளவேண்டும். அதுதான் சமூக அமைப்பு பற்றிய கருத்து. சமுதாயங்களுக்கிடையிலான உறவுகளும், நம்பிக்கைகளும் மிகவும் முக்கியமான அம்சமாகும். அரசியல் அதிகாரம் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் சரியான முறையில் சென்றடைய வேண்டுமெனில் சமுதாயத்தின் அமைப்புமுறை அதற்கேற்ற வகையில் இருக்கவேண்டும். ஆனால் இந்தியாவில் இருக்கும் சாதி அடிப்படையிலான சமூக அமைப்பு, அரசியல் அதிகாரம் பரவாலக்கப்படுவதை அங்கீகரிக்கும் நிலையில் இல்லை. இதைப் பற்றி டாக்டர் அம்பேத்கர் அவர்கள் கூறும் கருத்தினைப் பார்ப்போம்.

“சட்டப்படி தீண்டப்படாதவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஆளுமை, சமூகத்தால் மறுக்கப்பட்டுள்ளது. தீண்டப்படாதவர்களைப் பொருத்தவரையில் சட்டம் அவனை ஒரு நபராக அங்கீகரித்த பொழுதிலும் அவனுக்கு எந்தவித நன்மையையும் செய்யத் தவறி விட்டது. ஏனெனில் இந்து சமூகம் அவனை அங்கீகரிக்ககூடாது என்பதில் தீர்மானமாக இருந்தது” – பக்கம்-120, டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் – தொகுதி 25.

இந்து சமுதாயம் தீண்டப்படாதவர்களை ஏன் அங்கீகரிக்க மறுக்கின்றது என்பதையும் டாக்டர் அம்பேத்கர் அவர்களே கூறுகின்றார். அதையும் பார்ப்போம்.

“சமுதாயச் சிந்தனைகளை விட வகுப்பைப் பற்றிய எண்ணமே மேலோங்கி ஆட்சி செலுத்தும் ஓர் அமைப்பு இந்து சமுதாய அமைப்பு” – பக்கம் 75, டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் – தொகுதி 25.

இவ்வாறெல்லாம் இந்திய சமுதாய அமைப்பின் சிந்தனைப் போக்கினை அறிந்திருத்த காரணத்தால்தான் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தீண்டப்படாதவர்களின் அரசியல் அதிகாரத்திற்கான போராட்டத்தைச் சரியான திசைவழியில் நடத்திச் சென்றதுடன் மேலும் சனநாயகத்தின் பெயரால் வரப்போகும் ஆபத்துகளையும் முன்னறிந்து கூறினார்.

தீண்டப்படாத மக்களின் பாதுகாப்பு பற்றி அவர்கள் கூறிய கருத்தை இங்குக் குறிப்பிடுவது மிகவும் பொருத்தமாகும்.

“இதற்கிடையில் இந்துக்களின் சமூக அரசியல் ஆதிக்கத்தின் கீழ் தீண்டப்படாதவர்கள் வாழ வேண்டியிருக்கும். கடந்த காலத்தைப் போலவே இந்துக்களின் கொடுங்கோன்மைக்கும், அடக்குமுறைகளுக்கும் அவர்கள் தொடர்ந்து அடங்கி வாழ வேண்டியிருக்கும். நிச்சயமில்லாத ஏதோ ஓர் எதிர்காலத்தில் இந்து சமுதாயத்திலே அவர்கள் ஒன்றினைத்துக் கொள்ளப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் இந்துக்களின் விருப்பத்திற்கும், இஷ்டத்திற்கும் அவர்களை விட்டுவிடுவது சரியல்ல, என்றுதான் அறிவுள்ள எவரும் நினைக்க முடியும். இந்த மாற்றத்திற்கு ஒரு குறிப்பிட்ட காலம் தேவைப்படும். இந்தக் காலகட்டத்தில் இந்துக்களின் ஆதிக்கத்திற்கும், அடக்குமுறைக்கும் எதிராக சில ஏற்பாடுகள் அவசியமாகின்றன… ஒன்று அரசியல் சாசன அடிப்படையிலான பாதுகாப்புகள் இரண்டு தனியா குடியிருப்பு பகுதிகள்” – பக்கம் 89-90, டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் – தொகுதி 25.

சாதி இந்துக்களின் சமூக அரசியல் ஆதிக்கத்திலிருந்து தீண்டப்படாதவர்கள் பாதுகாக்கப்படுவதற்கான அரசியல் அதிகாரத்திற்காகவே டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார். தீண்டப்படாத மக்களின் பாதுகாப்பு எல்லா சூழ்நிலைகளிலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதில் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் மிகவும் உறுதியாக இருந்தார். எனவே தான் சுதந்திரத்திற்குப் பின் அமையப்போகும் சனநாயக ஆட்சிமுறையைப் பற்றியும் எச்சரிக்கையுடன் செயல்பட்டார். ஏனென்றால் சனநாயகத் தத்துவம் என்பது பெரும்பான்மையை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்தப் பெரும்பான்மை என்பது சாதி இந்துகளுக்குச் சாதகமான ஒன்றாகும். எனவே இந்திய சமூக அமைப்பில் பெரும்பான்மை எனும் கோட்பாடு பொருந்துமா எனும் கேள்வியை எழுப்பினார் டாக்டர் அம்பேத்கர். எனவே அவருடைய கருத்தை இங்குக் குறிப்பிடுவது மிகவும் பொருத்தமாகும்.

“சனநாயகத்தைப் பற்றி பேசும் போது தத்துவங்களை யதார்த்த நிலைகளோடு இணைத்துப் பேச வேண்டும். இப்பொழுது நான் விரிவாக எடுத்துக் கூறப்போகும் விஷயம் இதுவே. சனநாயகக் கோட்பாடு இந்திய மக்களுக்குப் பொருந்துமா?.........”

சனநாயகம் என்றால் பெரும்பான்மையினரின் ஆட்சி என்று அவர் கருதுகிறார் என்று நான் எடுத்துக் கொள்கிறேன். காரணம் பெரும்பான்மை ஆட்சியை அடிப்படை நடைமுறைக் கோட்பாடு என்று நாம் எல்லோரும் ஏற்றுக்கொள்ளாவிடில் அரசியல் சனநாயகம் எதுவும் இருக்க முடியாது. இதுவே ஆணிவேர், இதுவே அடிப்படை என்பது தெளிவு.

ambedkar_216"இந்துக்கள் பெரும்பான்மையாக இருப்பதும், முசுலிம்களும், பட்டியல் வகுப்பினரும் சிறுபான்மையாக இருப்பதுமே தான் அந்த மாற்றமுடியாத விஷயம்….. இந்நாட்டில் தீண்டதார் என்று கருதப்படும் மக்களின் கண்ணோட்டத்திலிருந்து மட்டுமே இதை நான் வாதிடப் போகின்றேன்….. சரி இப்பொழுது சனநாயகத்திற்குக் கீழ்ப்படிந்து போகும்படி எனது மதிப்பிற்குரிய நண்பர் என்னைக் கேட்கிறார். இந்தப் பெரும்பான்மை என்னிடம் எவ்வாறு நடந்து கொள்ளும் என்பதைப் பொறுத்துதான் என் பதில் இருக்க முடியும்… இந்த பெரும்பான்மை சகிப்புத்தன்மை கொண்ட பெரும்பான்மையா? சமத்துவத்தையும், சுதந்திரத்தையும், சகோதரத்துவத்தையும் இந்தப் பெரும்பான்மை ஏற்றிருக்கிறதா? இந்தப் பெரும்பான்மை நான் வாழவும், சுவாசிக்கவும், வளர்ச்சியடையவும் என்னை அனுமதிக்குமா” – பக்கம் 394, 395, டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் – தொகுதி 3.

 ஒரு பக்கம் இந்து சமூக அமைப்பின் மனநிலையையும், மறுபக்கம் பெரும்பான்மை கோட்பாட்டின் அடிப்படையிலான சனநாயக ஆட்சி முறையையும் ஆராய்ந்து பார்த்ததன் விளைவாகத்தான் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை முன்வைத்தார். டாக்டர் அம்பேத்கர் அவர்கள் முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஆங்கிலேய அரசு வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை முன்வைத்தது. வகுப்புவாரி பிரதிநிதித்துவ தீர்ப்பின் முக்கிய அம்சங்களாக…

1)     தீண்டப்படாத வகுப்பினர்களை மட்டுமே கொண்ட தனித்தொகுதிகள் மூலம் இந்த ஒதுக்கப்பட்ட இடங்கள் நிரப்பப்படும்.

2)     தீண்டப்படாதவர்களுக்கான தனித்தொகுதிகளில் ஒரு வாக்குடன், இந்துக்களுக்கான பொதுத்தொகுதிகளிலும் இரண்டாவது அல்லது ஒரு அதிகப்படியான வாக்கு அவர்களுக்கு இருக்கும்.

இந்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உரிமையானது டாக்டர் அம்பேத்கர் அவர்கள் போராடி பெற்றுத்தந்த சமூக உரிமைக்கான ஆயுதமாகும். இதன்மூலம் தீண்டப்படாத மக்களின் பிரச்சனைகள் விவாதிக்கப்படும் வாய்ப்பு ஏற்படும் என்று டாக்டர் அம்பேத்கர் அவர்கள் பெரிதும் நம்பினார். அவருடைய வார்த்தைகளிலேயே அதைப் பார்ப்போம்.

"என் வகுப்பைச் சார்ந்த சணிசமான மக்கள் சட்டசபைக்கு சென்று அங்கே நடைபெறும் விவாதங்களில் பங்கேற்பது மட்டுமின்றி, பிரச்சனைகளைத் தீர்மானிப்பதிலும் பங்கேற்கக்கூடிய உரிமைகளையும் வழங்கும் ஓர் அமைப்பு முறையைத்தான் நான் விரும்புகிறேன். எனவே வகுப்புவாதப் பிரதிநிதித்துவம் என்பது நேர்மைக்கேடான விஷயமல்ல, அது நஞ்சும் அல்ல. இந்த நாட்டிலுள்ள பல்வேறு வகுப்பினரில் காவலுக்கும் இதுதான் மிகச்சிறந்த ஏற்பாடாக இருக்க முடியும்” – பக்கம் 182, டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் – தொகுதி 3.

அரசியல் துறையில் மட்டுமல்லாமல் நிர்வாகத் துறையிலும், நீதித்துறையிலும் கூட நீதியைப் பெறுவதற்கு இந்த இடஒதுக்கீடு துணை செய்யும் என்றும் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் கருதினார்கள், அதையும் அவருடைய எழுத்துகளின் மூலம் பார்ப்போம்.

“சட்டமன்றங்களில் பிரதிநிதித்துவம் பெறும் உரிமை தீண்டப்படாதவர்களுக்கு இருக்க வேண்டும் என்பது மட்டுமின்றி, அமைச்சரவையில் இடம்பெறும் உரிமையும் அவர்களுக்கு இருக்க வேண்டும் என்று வட்டமேசை மாநாட்டில் நான் ஆரம்பம் முதலே வலியுறுத்தி வந்திருக்கின்றேன். தீண்டப்படாதவர்கள் தீய, கொடிய சட்டங்களால் சொல்லொண்ணா அவதிகளுக்காட்படுவது மட்டுமல்ல, தீண்டப்படாதவர்களுக்கு எதிராக காலம், காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் பகைமை உணர்வுகள், தீங்குகள், கேடுகள் இந்துக்களின் ஆதிக்கத்திலுள்ள நிர்வாகத்தில் புகுத்தப்பட்டு அதன் காரணமாக தாழ்த்தப்பட்ட மக்கள் அனுபவித்துவரும் துன்ப துயரங்கள், இன்னல், இடுக்கண்கள் அளப்பரிவையாகும். இந்துக்களின் கையில் அதிகாரம் ஏகபோகமாகக் குவிந்திருக்கும் வரையில் தீண்டப்படாதவர்கள் காவல்துறையினரிடமிருந்து பாதுகாப்பையோ, நீதித்துறையிடமிருந்து நீதியையோ, நிர்வாகத்துறையிடமிருந்து சட்டத்தின் அனுகூலத்தையோ ஒருபோதும் எதிர்பார்க்கமுடியாது. தீண்டப்படாத இனத்தைச் சார்ந்த உறுப்பினர்கள் உயர் நிர்வாகத்தில் இடம்பெறச் செய்வது தான் பொது ஊதி(ழி)யத் துறையை தீங்கு குறைந்ததாகவும், தீண்டப்படாதவர்களின் தேவைகள் விசயத்தில் பொறுப்புமிக்கதாகவும் ஆக்குவதற்கான ஒரே வழியாகும்; ஒரே நம்பிக்கையாகும். இந்தக் காரணங்களுக்காகத்தான், சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெறுவதற்கு தீண்டப்படாதவர்களுக்குள்ள உரிமையை வட்ட மேசை மாநாட்டில் எவ்வாறு வலியுறுத்தினேனோ அதே போல அமைச்சரவையில் இடம் பெறுவதற்கு அவர்களுக்குள்ள உரிமையையும் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தினேன்” – பக்கம் 157, பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு – தொகுதி 16

மேற்கண்ட சான்றுகளின் மூலம் சட்டமன்றங்களுக்குச் செல்லும் தீண்டப்படாத மக்களின் பிரதிநிதிகள், தீண்டப்படாத மக்களின் நலனுக்காகப் போராட வேண்டும் என்பதை தெள்ளத்தெளிவாகக் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் கூறுகின்றார். கூறியதுடன் மட்டுமல்லாமல் தமது வாழ்நாளில் செயல்படுத்தியும் காட்டினார். அவர் பங்கேற்றிருந்த எல்லா சபைகளிலும் மக்களின் உரிமைக்காகவும், நலனுக்காகவுமே போராடினார். சபைகளில் எல்லா தடைகளையும், குறுக்கீடுகளையும் முறியடிக்கும் விதமாக தன் கருத்துக்களையும் வாதங்களையும் முன்வைத்து மக்களின் நலனைக் காப்பாற்றினார். டாக்டர் அம்பேத்கர் அவர்கள் மக்களின் நலனுக்காக எவ்வாறு போராடினார் என்பதற்கு அவருடைய வாழ்வே சான்றாகும். என்றாலும் இன்றைய தீண்டப்படாத மக்களின் கவனத்திற்கும் சில நிகழ்வுகளைக் கொண்டு வருவது அவசியம் என்று கருதுகின்றோம், உதாரணத்திற்கு மஹார் மக்களின் நலனுக்கான மசோதாவை அவையில் தாக்கல் செய்து டாக்டர் அம்பேத்கர் அவர்கள் பேசிய பேச்சுகளைப் பார்ப்போம்.

“இந்த மசோதா சட்டமாக்கப்பட வேண்டும் என்பதில் மஹார் மக்கள் முழு உறுதி கொண்டிருக்கின்றார்கள். நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டியோ அல்லது வேறு ஏதேனும் காரணம் காட்டியோ இந்த மக்களை விடுவிக்க அரசு மறுக்குமானால் வருவாய்த்துறைக்கும் மஹார்களுக்குமிடையே பெரும் போராட்டம் தான் உருவாகும் என்பதை மதிப்பிற்குரிய எனது நண்பர்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்த மசோதா ஆமோதிக்கப்படவில்லையென்றால், நானே இந்த அவையின் உறுப்பினராக நீடிக்கப்போவதில்லை. பொது வேலை நிறுத்தம் செய்வதற்கு மஹார்களைத் திரட்ட எனது எஞ்சிய நேரத்தைப் பயன்படுத்துவேன். இந்த மசோதாவின் கோட்பாடு மஹார் மக்களின் நலனுக்கு முழுக்க, முழுக்க அவசியம் என்பதை மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சரை உணரச் செய்வேன்” – பக்கம் 136, டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் – தொகுதி 3.

மேற்கொண்ட மேற்கோள்கள் மூலம் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் கூறும் கருத்துகளை பின்வருமாறு தொகுக்கலாம்.

1)     அரசியல் அதிகாரமென்பது மக்களின் நலனைப் பாதுக்கப்பதற்கான சாதனமாகும்.

2)     சட்டமன்றங்கள், பாராளுமன்றங்களில் பங்கேற்று தீண்டப்படாத மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவதே அரசியல் அதிகாரத்தின் உள்ளார்ந்த பொருளாகும்.

3)     சட்டமன்றங்கள், பாராளுமன்றங்களில் உள்ள ஆதிக்க வகுப்பினர், தீண்டப்படாதோரின் உரிமைகள், கோரிக்கைகளை அங்கீகரிக்க மறுத்தால் மக்கள் திரள் போராட்டங்களின் மூலம் உரிமைகளையும், கோரிக்கைகளையும் அங்கீகரிக்கும்படி செய்வது.

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இத்தகைய புரிதலுடன்தான் தீண்டப்படாதாரின் அரசியல் அதிகாரத்திற்காகப் போராடினார். எதிர்கால சந்ததியினரிடமும் இத்தகைய சமூக நலனையே எதிர்பார்த்தார். எனவே தான் அரசியல் அதிகாரம் தீண்டப்படாத மக்களுக்குச் சென்று சேர வேண்டுமென்றால் அம்மக்களின் உண்மையான பிரதிநிதிகளுடன் ஆதிக்க வகுப்பினர் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

"சிறுபான்மை சமூகத்தின் மெய்யான பிரதிநிதிகளுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதே அது” – பக்கம் 71, டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் – தொகுதி 15.

இவ்வாறு மெய்யான பிரதிநிதிகளுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். டாக்டர் அம்பேத்கர் அவர்கள் கூறியுள்ளதன் பொருளை நாம் ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். மேலும் சிறுபான்மை சமூகத்தின் உறுப்பினர் என்பதற்கு விளக்கமும் அவரே கூறியுள்ளதைப் பார்ப்போம்

“சிறுபான்மை சமூகத்தின் மெய்யான பிரதிநிதிகள் என்ற சொற்களுக்கு ஒரே ஒரு அர்த்தம் தான் இருக்க முடியும். அதாவது அந்த சமூகத்தின் நம்பிக்கையைப் பெற்றவர் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும் என்று அவர்கள் வாதிடுகின்றனர். ஆனால் காங்கிரஸ் மேற்கொள்ளும் நிலையோ இந்த விதியின் அர்த்தத்திற்கு நேர்மாறாக இருக்கிறது. காங்கிரஸ் உறுதிமொழியில் கையெழுத்திட வேண்டும் என்ற கோரிக்கைக்கு இதைத்தவிர வேறு நோக்கம் ஏதும் இருக்க முடியாது” – பக்கம் 67, டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் – தொகுதி 15.

இவற்றையெல்லாம் பார்க்கும் போது சுதந்திரத்திற்கு முன்பிருந்தே அரசியல் கட்சிகள் தீண்டப்படாத சமூகத்திலிருந்து மெய்யான பிரதிநிதிகள் வருவதை விரும்பவில்லை என்பதை டாக்டர் அம்பேத்கர் அவர்கள் பிரிந்திருந்தார். அவரே கூறும் ஓர் உதாரண‌த்தைப் பார்ப்போம்.

"இது ஒருபுறமிருக்க காங்கிரஸ் கடைப்பிடித்த வேறு சில கோட்பாடுகளும் அது ஓர் ஆழமான சதித்திட்டம் தீட்டியிருந்ததை அப்பட்டமாக அம்பலப்படுத்தின. வெவ்வேறு வகைப்பட்ட வேட்பாளர்களுக்கு வெவ்வேறு விதமான தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டன. பார்ப்பனர்கள் மற்றும் அவர்களை ஒத்த உயர்சாதி இந்து வேட்பாளர்களில் மிக உயர்ந்த தகுதி படைத்தவர்களே பொறுக்கியெடுக்கப்பட்டார்கள். ஆனால் அதே சமயம் பார்ப்பனர் அல்லாதவர்கள் விஷயத்தில் உயர் தகுதி படைத்தவர்களைவிடக் குறைந்த தகுதி படைத்தவர்களே முன்னுரிமை பெற்றனர். இதே போன்று தாழ்த்தப்பட்ட இனத்தவர்கள் விஷயத்திலும் தகுதி படைத்தவர்கள் ஒதுக்கப்பட்டு தகுதியே இல்லாதவர்களோ அல்லது மிகக்குறைந்த தகுதி படைத்தவர்களோ தான் தெரிவு செய்யப்பட்டனர்... இத்தகைய தேர்வு முறை மிகவும் புதிராக இருக்கின்றது. இதற்குப் பின்னால் ஒரு மாபெரும் சதித்திட்டம், சூழ்ச்சிவலை இருப்பதாகத் தோன்றுகிறது. இந்தத் தேர்வுமுறையை கவனமாக ஆராயும் எவரும் ஒரு விஷயத்தைத் தெள்ளத்தெளிவாகத் தெரிந்து கொள்வார்கள். அதாவது பார்ப்பனர்களையும், அவர்களைப் போன்றவர்களையுமே பிரதானமாக அமைச்சரவையில் அங்கம் வகிக்கச் செய்வதும், கல்வியறிவில் கீழ்நிலையிலுள்ள பார்ப்பன‌ரல்லாதோர் மற்றும் தீண்டப்படாதோர் போன்ற பணவீக்கமுள்ளவர்களின் ஆதரவை அவர்களுக்குக் கிடைக்கச் செய்வதுமே இந்தத் தேர்வு முறையின் உள் நோக்கம். இந்தத் தேர்வுமுறை காரணமாக பார்ப்பன‌ரல்லாதோரும், தாழ்த்தப்பட்ட இனத்தவரும் அமைச்சரவை இடங்களுக்குப் போட்டியிடுவது குறித்து கனவு காண முடியாது. சட்டமன்றங்களுக்குத் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதையே ஒரு வரப்பிரசாதமாக, சுவர்க்க போகமாக நினைத்து அவர்கள் திருப்தியடைவதைத் தவிர வேறு வழியில்லை” - பக்கம் 165-166, பாபாசாகேப். அம்பேத்கர் நூல் தொகுப்பு – தொகுதி 16.

டாக்டர் அம்பேத்கர் கூறும் மற்றொரு உதாரணத்தையும் பார்ப்போம்.

“காங்கிரஸ் இழைத்த இரண்டாவது குற்றச்செயல், பழிச்செயல் தீண்டப்படாத இனத்தைச் சார்ந்த காங்கிரசுகாரர்களை மிகக்கடுமையான, கொடுமையான கட்சிக் கட்டுபாட்டுக்கு உட்படுத்தியதேயாகும். அவர்கள் காங்கிரசு கட்சியின் நிர்வாகக் குழுவினது முழுக்கட்டுபாட்டின் கீழ் இருந்தனர். நிர்வாகக்குழு விரும்பாத எந்தக் கேள்வியையும் அவர்கள் கேட்க முடியாது. அது அனுமதிக்காத எந்தத் தீர்மானத்தையும் அவர்கள் முன்மொழிய முடியாது. அது ஆட்சேபிக்கும் எந்த ஒரு மசோதாவையும் அவர்கள் சட்டமன்றத்தில் கொண்டுவரமுடியாது. அவர்கள் தாங்கள் விரும்பியபடி வாக்களிக்க முடியாது. தங்கள் மனதுக்குப்பட்டதை, நியாயமென உணர்ந்ததை அவர்கள் சட்டமன்றத்தில் பேச முடியாது. வாய்பேச முடியாத ஆடு, மாடுகள் போலவே அவர்கள் இருந்தனர். ஆறறிவற்ற கால்நடைகளைப் போலவே அவர்கள் காட்சியளித்தனர். தீண்டப்படாதவர்களுக்குச் சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் கிடைக்கச்செய்ததன் நோக்கங்களில் ஒன்று அங்கு அவர்கள் தங்களது மனக்குறைகளை வாய்விட்டு சொல்வதற்கும், தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு, அநீதிகளுக்கு, அநியாயங்களுக்குத் தீர்வு காணுவதற்கும் பரிகாரம் தேடுவதற்கும் வகை செய்வதேயாகும். ஆனால் காங்கிரசோ இது நடைபெறாதபடி தடுப்பதில் வெற்றி பெற்று விட்டது” - பக்கம் 167, பாபாசாகேப். அம்பேத்கர் நூல் தொகுப்பு – தொகுதி 16.

மேற்கண்ட இரண்டு உதாரணங்களும் தீண்டப்படாத மக்களுக்குக் கிடைத்த அரசியல் அதிகாரத்தைத் தடுக்கின்ற மேல்சாதியினரின் அரசியல் வஞ்சகத்தனத்தை தெள்ளத்தெளிவாக அம்பலப்படுத்துகின்றது. அன்று காங்கிரசு மட்டும் அதைச் செய்தது. இன்றோ கிட்டத்தட்ட எல்லா அரசியல் கட்சிகளும் அதைச் செய்கின்றன என்று கூறினால் தப்பாகாது.

அதே நேரத்தில் தீண்டப்படாத மக்களுக்குப் பிரதிநிதித்துவம் கொடுப்பதையே பெரிதுபடுத்தி, அந்த மக்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைத்துவிட்டதாகப் பிரச்சாரம் செய்யப்படுகின்றது. இவ்வாறு மேல்சாதியினரின் கட்டுப்பாட்டிலிருக்கும் கட்சிகளின் தயவில் செயல்படும் தீண்டப்படாதோரின் பிரதிநிதிகள் அரசியல் அதிகாரத்தின் வெற்றிக்குப் போராடாமல் இருப்பது வேதனைக்குரியதாகும். இத்தகைய குற்றச்சாட்டை தீண்டப்படாத மக்களின் பிரதிநிதிகள் கூட மறுக்க மாட்டார்கள் என்றே நம்புகின்றோம். ஏனென்றால் இவர்கள் தீண்டப்படாத மக்களின் மீது நடைபெறும் வன்கொடுமைகள் பற்றியோ, அடக்குமுறை பற்றியோ, சமூகப்புறக்கணிப்பு பற்றியோ சட்டமன்றங்களில் இவர்கள் கவன ஈர்ப்பு தீர்மானங்கள் கொண்டு வந்து போராடிய உதாரணங்கள் இல்லை என்றே கூறலாம் அல்லது மிகமிகக் குறைவாக இருக்கலாம்.

இதற்குச் சான்றாக கருநாடகாவில் நடந்த சில நிகழ்வுகளை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும்.

1)     26-11-2011 அன்று ஹாவேரி மாவட்டம் ராணேபென்னூர் தாலுக்காவிலுள்ள திருமலா தேவரகொப்பா எனும் கிராமத்தில் மாதிகா சாதியைச் சேர்ந்த பசவராஜ் காடமகண எனும் 18 வயது இளைஞனை, இதே ஊரைச் சேர்ந்த பசவண்ண கவுட நிஸ்கண்ண கவுடா கவுடரு (ரெட்டி சாதியைச் சேர்ந்தவன்) என்பவன் தான் கட்டிய புதுவீட்டிற்கு வாஸ்து சரியில்லை என்பதற்காக நரபலி கொடுத்துவிட்டான். இந்த குரூரமான நரபலி விசயம் பற்றி எல்லா பத்திரிகைகலும் செய்தி வெளியிட்டன. எல்லா தொலைக்காட்சிகளும் இதைப் பிரச்சாரம் செய்தன. ராணேபென்னூர் தாலுக்கா மக்கள் வீதியில் இறங்கி போராடினார். என்றாலும் கருநாடகாவில் இருக்கும் SC/ST சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருவர் கூட இதைப்பற்றி பேசவில்லை. நரபலி நடந்த கிராமத்திற்குச் செல்லவும் இல்லை .

2)     06-11-2011 அன்று மாண்டியா மாவட்டத்தில் அயலவாடி கிராமத்தில் மாதிகா சாதி இளைஞனைக் காதலித்ததற்காக அந்தப் பெண்ணைப் பெற்றவர்களே கொன்ற கொடுமை நடந்தது.

3)     மைசூர் மாவட்டத்தில், லிங்காயத்து சாதிப்பெண் (கல்லூரி ஆசிரியை) தலித் இளைஞனைக் காதலித்து திருமணம் செய்து கொண்டதற்காக சொந்த அண்ணனே அவரைக் கொன்ற நிகழ்ச்சி நடந்துள்ளது.

4)     கோலார் தங்கவயலில் துப்புரவு தொழிலாளர்கள் மூன்று பேர் சாக்கடையில் இறங்கி வேலை செய்தபொழுது இறந்துபோனார்கள்.

இப்படி எத்தனை எத்தனையோ கொடுமைகள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்துள்ளன. அன்றாடம் ஏதோ ஒருவகையில், இத்தகைய கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மேற்கண்ட எந்த கொடுமைகள் பற்றியும் வாய்திறக்காமல் மௌனமாகவே இருக்கின்றார்கள். சட்டமன்றத்திற்குச் செல்வது மட்டுமே அரசியல் அதிகாரமல்ல, சட்டமன்றத்தில் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து நீதியையும், பாதுகாப்பையும் நிலைநாட்டுவதுவே உண்மையான அரசியல் அதிகாரம். தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் இவற்றிற்கு பதில் அளிக்க வேண்டிய கடமையை உணர்ந்து பதில் அளிக்க வேண்டும். அவர்கள் பதில் அளிக்கின்றார்களோ? இல்லையோ? கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பதில் தேவைப்படுகிறது. அந்தப் பதில் இந்த மக்களின் விடுதலைக்கு துணை செய்யும், எனவே அந்தப் பதிலை நாம் தேடியாக வேண்டும். டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சொல்வது போல, மக்களின் நலனைக் காப்பதுதான் அரசியல் அதிகாரம். எனவே அந்த அரசியல் அதிகாரத்தை, கட்சியின் நலனுக்காகவோ, சொந்த நலனுக்காகவோ விட்டுக்கொடுக்கக்கூடாது. இதையும் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வார்த்தைகளிலேயே பார்ப்போம்.

ambedkar_237“நாட்டின் பெயரால் பேசுதல் என்பதற்காக, ஒரு கொடுங்கோன்மையான பெரும்பான்மையை நான் ஆதரிக்கப்போவதில்லை. நாட்டின் பெயரில் பேசுதல் என்பதற்காக, ஒரு கட்சியை நான் ஆதரிக்கப்போவதில்லை, அதை நான் செய்ய மாட்டேன். இதுதான் என் நிலை என்பதை இங்குள்ளவர்களும், வெளியில் உள்ள ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். நாடா, நானா என்று வருகின்ற பொழுது நாடுதான் முதன்மை இடம்பெறும். அதே போன்று நாடா, ஒதுக்கப்பட்ட சாதி மக்களா என்று வருகின்ற பொழுது ஒடுக்கப்பட்ட சாதியினரே முதன்மை இடம்பெறுவர்” - பக்கம் 414, பாபாசாகேப். அம்பேத்கர் நூல் தொகுப்பு – தொகுதி 3.

 தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இதைவிட சிறந்த பொருத்தமான உதாரணம் இல்லை. தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதி ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக உழைப்பதுதான், அரசியல் அதிகாரத்தின் பொருள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மக்களின் நலனுக்காக உழைக்கும் மனநிலையுள்ள ஒரு பிரதிநிதி, தன்னுடைய மக்கள் துன்பப்படும் பொழுது, புறக்கணிக்கப்படும் போது தனது உணர்வுகளை அச்சமின்றி வெளிப்படுத்த வேண்டும் என்பதற்கு டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்வே உதாரணமாக இருக்கின்றது.

“அரசாங்கத்தினால் தாழ்த்தப்பட்ட இன மக்கள் புறக்கணிக்கப்படுவது குறித்து எனது கடுஞ்சினத்தை, உளக்கொதிப்பை என் மனதிற்குள்ளேயே அடக்கி வைக்க என்னால் முடியவில்லை. தாழ்த்தப்பட்ட இன‌ மக்களின் பொதுக்கூட்டம் ஒன்றில் எனது உணர்வுகளை வெளிப்படையாகக் கூறினேன்” - பக்கம் 819, பாபாசாகேப். அம்பேத்கர் நூல் தொகுப்பு – தொகுதி 32.

அரசாங்கம் தாழ்த்தப்பட்ட மக்களைப் புறக்கணிக்கும்போது பதவிக்காக வாய்மூடிக் கிடப்பது, நாம் பெற்ற அரசியல் அதிகாரத்திற்கு அடையாளமல்ல, சொந்த நலன்களுக்காக தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்களை விட்டுக்கொடுக்கக்கூடாதென்பது தான் டாக்டர் அம்பேத்கரின் கொள்கை.

“எனது சொந்த நலன்களை மட்டும் நான் கருத்தில் கொண்டிருப்பேனேயானால் நான் விரும்பியதைப் பெற்றிருப்பேன். காங்கிரசில் நான் சேர்ந்திருப்பேனேயானால் அந்த அமைப்பின் மிக உயர்ந்த பதவியையும் பெற்றிருப்பேன். ஆனால் நான் கூறியது போல, தாழ்த்தப்பட்ட இன மக்களின் மேம்பாட்டிற்காக என்னை அர்ப்பணித்து கொண்டேன்” - பக்கம் 819, பாபாசாகேப். அம்பேத்கர் நூல் தொகுப்பு – தொகுதி 32.

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தேர்தலில் பங்கெடுத்தார் என்னும் ஒரே காரணத்தை வைத்துக்கொண்டு, சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களாகவும், மற்ற அமைப்புகளின் உறுப்பினர்களாகவும் சென்று மக்களின் நலனுக்கு விரோதமாக நடந்து கொள்வது “அரசியல் அதிகாரம்” பெற்றதற்கான அடையாளமல்ல.

 தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பற்றி எப்பொழுதும் மனதில் எண்ணிக் கொண்டிருப்பதே டாக்டர் அம்பேத்கர் அவர்களைப் புரிந்து கொள்ளும் முதல்படியாகும்.

“தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் நிலையைப் பாதுகாப்பதற்காக அரசியல் சாசனத்தில் செய்யப்பட்டிருந்த வழிவகை ஏற்பாடுகள் எனக்கு திருப்தியளிக்கவில்லை. ஆயினும் அரசாங்கம் அவற்றைப் பயனுறுதியுடையதாக்க ஓரளவு முயற்சி செய்யும் என்ற நம்பிக்கையில் அவற்றை நான் ஏற்றுக்கொண்டேன். தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் நிலை இன்றைக்கு எப்படி இருக்கிறது? எனக்குத் தெரிந்தவரை அது பழைய நிலையிலேயே இருக்கிறது. அதே பழைய கொடுங்கோன்மை, அதே பழைய கொடுமை, பாரபட்சம் காட்டும் அதே பழைய நிலை ஆகியவை முன்னர் இருந்தது போலவே இன்னமும் இருந்து வருகின்றன. சொல்லப்போனால் மிக மோசமான முறையில் நடைமுறையில் இருக்கின்றன. தில்லை மற்றும் பக்கத்திலுள்ள இடங்களைச் சுற்றியுள்ள தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மக்கள் என்னிடம் வந்து, சாதி இந்துக்கள் தங்களுக்கு இழைத்து வரும் கோரக்கொடுமைகள் பற்றியும், இது சம்மந்தமாக தங்களது புகார்களைப் பதிவு செய்ய மறுத்து வரும் காவல்துறையினரின் விபரீதப் போக்கு குறித்தும் உள்ளம் உருக்கும் சோகக்கதைகளைக் கூறினர். இந்தியாவில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களைப் போல நரக வேதனைப்படும் மக்கள் உலகில் வேறு எங்கேனும் உள்ளன‌ரா என்று நான் ஆச்சரியத்துடன் நோக்கினேன், வேறு எவற்றையும் நான் காணவில்லை” - - பக்கம் 818-819, பாபாசாகேப். அம்பேத்கர் நூல் தொகுப்பு – தொகுதி 32.

 உலகின் எந்தப் பகுதியிலும் காணமுடியாத துன்பங்களை அனுபவிக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள், அந்தத் துன்பங்களிலிருந்து முழுமையாக விடுதலை பெற வேண்டும் என்பதே டாக்டர் அம்பேதகர் அவர்களின் விருப்பமாகும். அதை அடைவதற்காகத்தான் அரசியல் அதிகாரத்தை விரும்பினார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சிறு சிறு சலுகைகளைப் பெற்று திருப்தி அடைவது அவருடைய நோக்கமல்ல. தாழ்த்தப்பட்டவர்களுக்கான அரசியல் அதிகாரம் என்பது, சாதிய ஒடுக்குமுறைகளிலிருந்து முழுமையான விடுதலையைப் பெற்றுத்தரும் சக்தி படைத்திருக்கவேண்டும் என்பதே டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நோக்கமாகும்.

"ஆளும் சமூகம் ஆளப்படும் சமூகத்திற்கு நன்மை செய்திருக்கிறது என்பது முற்றிலும் வேறு விசயம்; ஆளப்படும் மக்களாகத் தாங்கள் நடத்தப்படுவதை மறுக்கும், எதிர்க்கும் சிறுபான்மை சமூகத்தினரின் வாதத்துக்கு இது பதிலாக இருக்க முடியாது. இந்தியாவில் பிரிட்டீஷார் இந்தியர்களுக்கு எத்தனையோ நன்மைகள் செய்துள்ளார்கள். அவர்கள் சாலைகளை மேம்படுத்தியுள்ளனர், இந்தியர்களின் கடிதங்களை அஞ்சல் மூலம் விரைவாக அனுப்பியுள்ளனர், அவர்களது நாணயச் செலவாணி முறையை அபிவிருத்தி செய்துள்ளனர். நிலவியல், வானூல், மருத்துவம் சம்மந்தப்பட்ட தவறான கருத்துகளைத் திருத்தியுள்ளனர். இத்தகைய நல்லாட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டமைக்காக பிரிட்டிஷாரிடம் நன்றி விசுவாசத்துடன் நடந்து கொள்ளும்படியும், சுயாட்சிக்கான கிளர்ச்சியைக் கைவிடும்படியும் எவரேனும் இந்திய மக்களைக் கேட்டுக்கொண்டதுண்டா? அல்லது பிரிட்டஷாரால் தாங்கள் அடிமை இனமாக நடத்தப்படுவதற்கு எதிரான தங்கள் எதிர்ப்பை அவர்களது சமூக, நல உயர்வு, மேம்பாட்டுச் செயல்களைக் கருத்தில் கொண்டு இந்தியர்கள் கைவிட்டுவிட்டார்களா? இந்தியர்கள் இவ்விதம் என்றும் செய்யவில்லை. இந்த சில நற்செயல்களைக் கண்டு அவர்கள் திருப்தியடைந்துவிட வில்லை; சமாதானமடைந்துவிடவில்லை; மாறாக, தங்களைத் தாங்களே ஆண்டுகொள்ளும் உரிமைக்காகத் தொடர்ந்து போராடவே செய்தனர். இது முற்றிலும் இயல்பானதேயாகும்; நியாயமானதேயாகும். ஏனென்றால் அயர்லாந்தின் தேசபக்தர் குர்ரன் குறிப்பிட்டது போன்று எந்த மனிதனும் தனது தன்மானத்தை இழந்து நன்றி செலுத்த மாட்டான்” - பக்கம் 69-70, பாபாசாகேப். அம்பேத்கர் நூல் தொகுப்பு – தொகுதி 15.

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் கூறியுள்ள இந்தக் கருத்தை ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். சுதந்திரத்திற்குப் பிறகு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பல்வேறு சலுகைகள் வந்திருப்பது உண்மைதான். அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு, சட்டமன்ற, பாராளுமன்றங்களுக்கு இடஒதுக்கீடு என்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வாய்ப்புகள் கிடைத்திருப்பது உண்மை தான். இந்த வாய்ப்புகளின் மூலம் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் சிறுபிரிவு பயனடைவதும் உண்மைதான். ஆனால் கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்கள் இன்றும், சாதீயக்கொடுமைகள் எனும் நரகத்தில் வாழ்ந்து கொண்டிருகின்றார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. டாக்டர் அம்பேத்கர் அவர்கள் கூறியதைப் போல சமூகத்தின் தன்மானத்தை இழந்து விடக்கூடாது. தாழ்த்தப்பட்ட மக்களின் முழுமையான சமூக விடுதலைக்காகப் பாடுபடுவதற்கு, நமக்குக் கிடைத்திருக்கும் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி முழுமையான சமூக சுதந்திரத்தைப் பெற வேண்டும் என்பது தான் டாக்டர் அம்பேத்கரின் விருப்பம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சுதந்திரம் என்பதைப் பற்றி டாக்டர் அம்பேத்கர் அவர்களது கருத்து.

"தேசம் என்பது ஒரே சொல்லானாலும், அது பல வகுப்பினர்களை அர்த்தப்படுத்துகின்றது. தத்துவார்த்த ரீதியாகப் பார்த்தால் ஒரு தேசத்தை ஒரே யூனிட்டாக கருதலாம். ஆனால் சமூக ரீதியில் பார்க்கும்போது பல வகுப்பினர்களைக் கொண்டதாக அதனைக் கருத முடியும். ஒரு தேசத்தின் சுதந்திரம் என்று கூறும்பொழுது அது உண்மையாக இருக்கும்பட்சத்தில், அதில் அடங்கியுள்ள பல்வேறு வகுப்பினர்களின் சுதந்திரத்தையும், அதிலும் குறிப்பாக அடிமைகள் போல் நடத்தப்படும் வகுப்பினர்களின் சுதந்திரத்தையும் அது உத்திரவாதம் செய்வதாக இருக்க வேண்டும்” - பக்கம் 71, பாபாசாகேப். அம்பேத்கர் நூல் தொகுப்பு – தொகுதி 17.

 சுதந்திரம் என்பது முக்கியமாக தீண்டப்படாத மக்களின் சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பது தான் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் விருப்பமாகும். அதை சாதிப்பதற்காக "அரசியல் அதிகாரம்" தேவை என்பதே அவர் நடத்திய அரசியல் போராட்டத்தின் சாரமாகும். எனவே மேற்கண்ட எல்லா கருத்துகளையும் தொகுத்துப் பார்ப்போமானால், அவர் விரும்பிய அரசியல் அதிகாரத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

•      தீண்டப்படாத மக்கள் சுயமரியாதையுடன் வாழ்வதற்கும், சுதந்திரமாக இருப்பதற்கும், நல்வாழ்வைத் துய்ப்பதற்குமான உரிமைகள் இருக்க வேண்டும்.

•      பெரும்பான்மையாக இருக்கின்ற இந்துக்களின் சமூக ஆதிக்கத்திலிருந்தும், கொடுமைகளிலிருந்தும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பாதுகாப்பு இருக்க வேண்டும்.

•      தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்கு எதிராக அரசாங்கம் செயல்படும்போது அதனை மாற்றுவதற்கும் அல்லது நீக்குவதற்கும், புதிய அரசை உருவாக்குவதற்கும், கோட்பாடுகளின் அடிப்படையில் தங்களது பாதுகாப்பிற்கும், உத்தராவதமளிக்கக்கூடிய அதிகாரங்களை அரசாங்கத்திற்கு வழங்குவதற்கும் மக்களுக்கு உரிமை இருக்கின்றது.

•      தாழ்த்தப்பட்ட மக்களின் துன்பங்களையும், துயரங்களையும் ஆதிக்க வகுப்பினர் உணரச் செய்வதற்காகவும், அதன்மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமையை நிலைநாட்டுவதற்காகவும் தான் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் மூலம் தனித்தொகுதிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

•      தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் சட்டமன்றங்களில் பங்கேற்று அங்கு நடைபெறும் விவாதங்களில் பங்கேற்பது மட்டுமின்றி பிரச்சனைகளைத் தீர்மானிப்பதிலும் பங்கேற்கக்கூடிய உரிமை இருக்க வேண்டும்.

•      நிர்வாகத்துறை, காவல்துறை, நீதித்துறைகளிலும் தீண்டப்படாத மக்களுக்கு நீதி கிடைக்கும் நிலை உருவாக வேண்டும்.

•      சட்டமன்றங்களில் சரியான முறையில் நீதி கிடைக்கவில்லையெனில், தீண்டப்படாத மக்களின் பிரதிநிதிகள், மக்களின் கோரிக்கைகளுக்காக மக்களை அணிதிரட்டி, சட்டமன்றத்திற்கு வெளியேயும் மக்கள் திரள் போராட்டங்களை நடத்திட முன்வரவேண்டும்.

•      தீண்டப்படாத மக்களின் உண்மையான பிரதிநிதிகளுடன் ஆதிக்க வகுப்பினர் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளும் சூழ்நிலை ஏற்படவேண்டும்.

•      அரசியல் கட்சிகளின் எல்லாவிதமான நிர்பந்தங்களையும் எதிர்த்துப் போராடக்கூடியவர்கள், தாழ்த்தப்பட்ட மக்களின் சார்பாக சட்டமன்றங்களுக்குச் செல்ல வேண்டும்

•      அரசாங்கம் தாழ்த்தப்பட்ட மக்களை புறக்கணிக்கும்போது, தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகள், தங்கள் கருத்துகளை அச்சமின்றி வெளிப்படுத்த வேண்டும்.

•      சமுதாயத்தின், சமூக, அரசியல், கலாச்சார கொடுமைகளில் இருந்து விடுப்பட்டு, தன்மானத்துடனும், சுயமரியாதையுடனும், வாழக்கூடிய வாய்ப்பை உருவாக்குவதற்காக அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும். 

இவை தான் டாக்டர் அம்பேத்கர் விரும்பிய அரசியல் அதிகாரத்தின் சாரம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

- க.சிவலிங்கம்

(இக்கட்டுரையை எழுதியர் பேராசிரியர் சிவலிங்கம். இவர் கர்நாடகாவில் தலித் சுவாபிமானி சக்தி (தலித் சுயமரியாதை ஆற்றல்) என்ற இயக்கத்தின் செயல்பாட்டாளர், இந்த இயக்கம் தலித் மக்கள் மீது நடக்கும் வன்முறைகளை பொது வெளிக்குக் கொண்டு வந்து அவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றது.)

Pin It