கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முட்டாள்கள் தினத்தன்று, மக்களை முட்டாள்கள் ஆக்கிக்கொண்டிருக்கும் இந்தியாவின் மிகப்பெரும் கார்ப்பரேட் நிறுவனமான - திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து எனும் ஊரில் அமைந்திருக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் மக்கள் குடியிருப்பு பகுதியில் - 48 மெகாவாட் அனல்மின் நிலையத்தை அமைத்த மக்கள் விரோத, சமூக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து, மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட அனல்மின் நிலைய முற்றுகைப் போராட்டத்தை காவல்துறையினரின் உதவி மூலம் ஒடுக்க நினைத்து, அதில் தோற்றுப்போன நிர்வாகம் ஊடகங்களை விலைக்கு வாங்கி, இத்துப்போன இந்திய இறையாண்மையை உலுக்கும் அளவிற்கு நடைபெற்ற இந்த பெரும் போராட்ட சம்பவத்தை முற்றிலுமாக வெளியே கசியாமல் முடக்கிய சம்பவம் இனி இந்தியத் திருநாட்டில் எங்குமே மக்கள் உரிமைப் பாதுகாப்பிற்காகவும், உயிர் மற்றும் உடைமைப் பாதுகாப்பிற்காகவும் போராடிப் பயனில்லை எனும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.

nellai_agitation_620

அருகருகே ஒரு பேரூராட்சியையும், ஒரு சிறப்பு நிலை பேரூராட்சியையும் கொண்ட ஒரு மைய இடத்தில் உள்ளது சர்ச்சைக்குரிய இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம். ஏற்கனவே இந்த ஆலை வெளியிடும் நச்சுக்கழிவுகளால் ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகளாலும், பிற நுரையீரல் பாதிப்புகளாலும், மூலம் போன்ற உடல் உபாதைகளாலும் இன்னும் பல நோய்களாலும் இப்பகுதி மக்கள் காலம் காலமாக கஷ்டப்பட்டு வருகின்றனர்.

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலிமாறன் அவர்கள் இந்த ஆலையின் பெரும்பங்குதாரராக இருப்பதை சாதகமாக வைத்து பல அட்டூழியங்களை செய்து சுற்றுச்சூழலை மாசுபடுத்தி உலகின் ஆயுளை குறைக்கும் எமகாதக செயல்பாடுகளை அரங்கேற்றி வந்த இந்த நிறுவனம், இங்குள்ள மக்களையும், அவர்களின் நலனையும் முற்றிலுமாக புறக்கணித்து வந்தது.

திருடர்கள் முன்னேற்ற கழகம் என தமிழக மக்கள் பலராலும் செல்லமாக அழைக்கப்படும் ஒரு போலி திராவிட சாயம் பூசிய கொள்ளைக்குடும்ப கட்சியின் கொள்ளைக்கார உறுப்பினர்கள் யார் வந்தாலும் இந்த ஆலையின் விருந்தினர் மாளிகையில்தான் தங்குவார்கள். இந்தக் கட்சி தேசிய அரசியலில் மிகுந்த செல்வாக்கை எப்போதும் தக்க வைத்துக்கொண்டிருப்பதால் இவர்கள் சட்ட விரோதமான செயல்பாடுகளுக்கான அனைத்து அனுமதிகளையும் சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளிலும் மிகவும் எளிதாகப் பெற்று வருகின்றனர். இது தவிர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும், மக்கள் பாதுகாப்பை சுரண்டி சம்பாதித்த பணத்தை வாரி வழங்கியதும் இவர்களின் பலம்.

கடந்த அரை நூற்றாண்டு காலங்களாக நடந்த இந்த இயற்கை வள, மனிதவள சுரண்டல்களை தூக்கி சாப்பிடும் அளவிற்கு ஒரு மனிதாபிமானமே இல்லாத செயலை நிசப்தமாக அரங்கேற்றி உள்ளது. நினைத்தாலே நடுங்க வைக்கும் இந்த சம்பவம் மிகவும் லாவகமாக கையாளப்பட்டு மூடிமறைக்கப்பட்டு இருப்பது நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோமா? சர்வாதிகார நாட்டில் வாழ்கிறோமா? என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளது.

nellai_agitation_3

ஏற்கனவே உரிமைப்போராட்டங்கள் ஒடுக்கப்பட்டு உரிமைக்காக ஓங்கும் குரல்வளைகள் நெறிக்கப்பட்டு வரும் இந்த பணநாயக நாட்டில் இப்போது கண்முன் மிக அருகில் நடைபெற்றிருக்கும் இந்த சம்பவம் மிகுந்த மன உளைச்சலை இப்பகுதியில் வாழும் அனைவருக்கும் ஏற்படுத்தி உள்ளது. அப்படி இந்த நிறுவனம் செய்த செயல் என்ன?

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்காக கடந்த முக்கால் ஆண்டுகளாக நடைபெற்று வரும் வலுவான மக்கள் போராட்டத்திற்கு இடையில், கிட்டத்தட்ட 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழும் நெருக்கமான குடியிருப்புப் பகுதியின் மத்தியில் 48 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையத்தை அமைத்திருப்பதுதான் இந்த நிறுவனம் செய்திருக்கும் மனித குலத்திற்கு எதிரான செயல். இந்த அனல்மின் நிலையம் தொடங்கப்பட்டதின் பின்புலம் ஆராயப்பட்டால் சில ஆண்டுகளுக்கு முன் திரைக்கு வந்த ஒரு திரைப்படத்தில் அதிகாரிகள் தங்கள் நலனுக்காக ஒரு கிராமத்தையே இந்திய வரைபடத்தில் இல்லாமல் ஆக்கியது போன்ற ஒரு உண்மைச்சம்பவம் புலப்படும்.

இந்த அனல்மின் நிலையத்தைத் தொடங்க இவர்கள் மேற்கொண்ட முறைகேடுகளை முதலில் இங்கே பதிவு செய்கிறேன்.

- 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழும் பகுதியை, அனுமதி பெறுவதற்காக மக்கள் குடியிருப்பே இல்லாத பகுதி என வரைபடம் காண்பிக்கப்பட்டு, ஒரு முழு பூசணிக்காய் குடோனையே சோற்றுக்குள் மறைத்துள்ளது இந்த நிறுவனம்

- கிட்டத்தட்ட நூறு மீட்டர் தொலைவிற்குள் இருக்கும் தென்னக இரயில்வேயின் கன்னியாகுமரி- சென்னையை இணைக்கும் அகல இரயில் இருப்புப் பாதையை மூடிமறைத்து அருகில் இருப்பு பாதை இல்லை என அனுமதி பெற்றது.

- சுற்றுச்சூழல் வாரியம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட நிர்வாகம், சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துக்கள், எதிர்த்து நின்ற பொதுமக்கள், இவை அனைத்திற்கும் மேலாக மக்கள் மிகவும் நம்பும் காவல்துறை ஆகியவற்றை கைக்குள் போட்டு, வெற்றிகரமாக அனல்மின் நிலையத்தை கட்டி முடித்தது.

- இவை அனைத்திற்கும் மேலாக இந்த சட்ட விரோத செயல்களை தங்கள் பங்குதாரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்திலேயே அரங்கேற்றியது.

மேற்கண்ட செயல்பாடுகளில் வெற்றி பெற்ற நிர்வாகத்தை எதிர்த்தும் மக்கள் உயிருக்கும், உடைமைக்கும், நலவாழ்வுக்கும் உலை வைக்கும் அனல்மின் நிலையத்தை குடியிருப்புப் பகுதியில் இருந்து அப்புறப்படுத்தக்கோரி கடந்த ஏப்ரல் 1 - ஆம் தேதி மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் முற்றுகைப்போராட்டத்திற்கு அனுமதி கோரி காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பிக்கப்பட்டது. மக்கள் வரிப்பணத்தில் பெறும் சம்பளத்தை விட நிறுவனத்திடம் இருந்து அதிக வருவாயைப் பெற்று வரும் அதிகாரிகள் இந்த போராட்டத்திற்கு அனுமதி மறுத்து விட்டனர். இருப்பினும் திட்டமிட்டபடி முற்றுகைப்போர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு கடந்த அரை மாதமாக‌ விளம்பரப்படுத்தப்பட்டது. இதற்கு ஆதரவாக இப்பகுதியில் உள்ள விலை போகாத சில நல்ல உள்ளங்களும், அரசியல் பொறுப்பாளிகளும் கைகோர்க்க முன்வந்தனர் குறிப்பாக ம.தி.மு.க, கம்யூனிஸ்ட், தே.மு.தி.க போன்ற கட்சியைச் சார்ந்தவர்களும் கை கோர்க்க முன்வந்தனர்.

திட்டமிட்டபடி முற்றுகைப்போர் நடந்த அன்று காலையிலேயே தேர்தல் சமயங்களில் நிறுத்தப்படும் அளவை விட அதிகமாக காவல்துறையினர் மற்றும் அவர்களின் அடிதடி வாகனங்களான வஜ்ரா போன்றவையும் குவிக்கப்பட்டன. இந்த படை ஊர் முழுவதும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தது. காலை 9 மணியளவில் சொற்ப அளவில் திரண்ட போராளிகள் வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டி ஒரு பெரும்படையுடன் ஊரின் சாலைப்பகுதிக்கு வந்தனர். காவல்துறையினரின் சுற்றிவளைக்கப்பட்ட அரவணைப்பில் சென்ற மக்கள் கூட்டம் கோஷம் எழுப்பியபடியே ஓர் இடத்தில் நிலை கொண்டது. பெரும்பகுதி காவல்துறையினர் தங்கள் பாதுகாப்பு வாகனங்களுடன் அவர்களைச் சூழ்ந்து கொண்டு ஒரு தடுப்பை பலமாக ஏற்படுத்தி இருந்தனர். பல டி.எஸ்.பி.க்களும், பல ஆய்வாளர்களும், பல பயிற்சி துணை ஆய்வாளர்களும் இதில் அடங்குவர். கோஷம் ஒலித்துக்கொண்டிருந்த வேளையில் எதிர்பாராத விதமாக அங்கே பல வாகனங்களில் அணிவகுத்து வந்த மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகத்தினர் பெரும் கோஷத்துடன் திரளாக இறங்கி ஆவேசமாக காவல்துறையினர் அமைத்த தடுப்புகளை தகர்த்தெறிந்து போராட்டத்தை மிகவும் சக்தி வாய்ந்த நிலைக்கு இழுத்துச் சென்றனர். காவல்துறையினர் இந்த திடீர் மாற்றத்தால் நிலை குலைந்தனர். அதோடு செய்வதறியாது திகைத்து அப்படியே ஒதுங்கி நின்று விட்டனர்.

nellai_agitation_621

காவல்துறையினர் சுதாரிப்பதற்குள் தங்கநாற்கர தேசிய நெடுஞ்சாலையின் கீழ்பகுதி அணுகுசாலை வழியாக இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தை நோக்கி போராளிகள் ஓடத்தொடங்கினர். இதைத் தொடர்ந்து காவல்துறையினரும் தங்கள் ஓட்டத்தை போராளிகளின் பின்னால் தொடர்ந்தனர். நிறுவனத்தின் அருகில் வந்த போராளிகளை இந்த போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும், மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநிலத் தலைவருமான ரபீக் நிற்குமாறு அறிவுறுத்தியதின் பேரில் நெடுஞ்சாலையில் முதலில் கூடிய போராளிகள் காவல்துறையின் சில நேர்மையான அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்கி மேற்புறம் உள்ள அணுகு சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வகத்திற்கு எதிராகவும், அதன் இயக்குனர் சீனிவாச ஐயங்காருக்கு எதிராகவும் குரல் எழுப்பினர். இதில் பெண்களும் அடங்குவர். பின் ஒருங்கிணைப்பாளர் ரபீக் போராளிகள் மத்தியில் உரையாடி நிர்வாகத்தையும், அதற்குத் துணை போகும் அதிகாரிகளையும் எச்சரித்தார். பின் தங்கள் தீர்மானங்களையும் இது ஆரம்பம் என்பதையும் நிறுவனத்திற்கு எச்சரிக்கையாக விடுத்த அவர், அனல்மின் நிலையம் மூடப்படாவிடில் இந்த போராட்டம் இதை விட கூடுதல் சக்தியுடன் தொடரும் எனவும் எச்சரித்தார். இறுதியில் காவல் துறை சுமார் 600 போராளிகளை கைது செய்து பின் மாலையில் விடுவித்தனர் (பெண்கள், குழந்தைகள் உட்பட)

இந்த மாபெரும் போராட்ட சம்பவமானது ஊடகங்களால் மூடிமறைக்கப்பட்டுள்ளது. இரு தினப்பத்திரிக்கைகள் மட்டுமே சிறிய அளவில் செய்தியை வெளியிட்டுள்ளன. இந்த மாபெரும் போராட்ட சம்பவம் மூடிமறைக்கப்பட்டிருப்பது ஜனநாயகத்தின் கையாலாகத் தன்மையையே நமக்கு எடுத்துரைக்கிறது.

கூடங்குளம் பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து பின்னடைவை சந்தித்த நாம், இந்த அனல்மின் நிலையப் பிரச்சினையில் ஒரு நிறுவனத்திடம் தோல்வியடைவது நம் பாதுகாப்பை கேள்விக்குறியாகவே ஆக்குகிறது. இது எதிர்காலத்தில் தொடராமல் இருக்க இப்போதே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியம். எனவே உணர்வுள்ள, சமூக அக்கறையுள்ள அன்பர்கள் இந்தச் செய்தியை நாடு முழுவதும் பரப்ப உதவுங்கள். எங்கள் போராட்டத்திற்கு வலுசேர்க்க உதவுங்கள்.

Pin It