நான் ஒரு தேசாபிமானியல்லன். அது மாத்திரமல்ல; தேசாபிமானத்தைப் புரட்டு என்றும், அது தனிப்பட்டவர்களின் வயிற்றுச் சோற்று வியாபாரம் என்று சொல்லியும், எழுதியும் வரும் தேசத் துரோகியாவேன். ஒரு காலத்தில் தேசாபிமானத்துக்காகச் சிறை செல்லும்படியான அவ்வளவு தேசாபிமானியாய் இருந்து, பல முறை சிறை சென்று வந்துதான் அதன் அனுபவத்தைச் சொல்லுகிறேனே ஒழிய, வெளியில் இருந்து வேடிக்கை மாத்திரம் பார்த்துவிட்டு நான் இப்படிச் சொல்ல வரவில்லை.

இதனால் பாமர மக்கள் தூஷணைக்கும், பழிப்புக்கும்கூட ஆளாகியிருக்கிறேன் என்றாலும் எனது உறுதியான எண்ணத்தை நான் மாற்றிக் கொள்ள முடியவில்லை.

‘நாட்டுக்கு நல்ல துரை வந்தாலும், தோட்டிக்குப் புல் சுமக்கும் வேலை போகாது’ என்பதுதான் தேசாபிமானிகளின், மகாத்மாக்களின் சுயராஜ்ய தர்மமாகும். இந்த சுயராஜ்யம் வருவதைவிட இப்போது இருக்கும் பரராஜ்யமே மேலானது என்பது எனது கருத்து.

இன்றைய பரராஜ்யத்தில் தோட்டி சுமக்கும் வேலையை விட்டு மந்திரி வேலை செய்தாலும் செய்யக் கூடும்.

ஆனால், அவனவன் சாதித் தொழிலையும் பரம்பரைப் பெருமையையும் பழக்க வழக்கங்களையும் காப்பாற்றும் காங்கிரஸ் சுயராஜ்யத்தில் தோட்டி புல் சுமப்பதைவிட வேறு தொழில் ஏற்பட முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். இந்தக் காரணத்தினால் தான் நான் தேசத் துரோகியாக இருக்கிறேன். சுயராஜ்யத்துக்கும் விரோதியாக இருக்கிறேன். ஆனால், பார்ப்பனர் சாதியையும் பற சாதியையும் அழித்து, எல்லோரும் சரிசமமான மனிதர்கள் என்று ஆக்கும் தேசாபிமானத்திற்கும் சுயராஜ்யத்துக்கும் நான் விரோதியல்லன்; துரோகியுமல்லன் என்பதை ஞாபகத்தில் வையுங்கள்.

நான் இந்திய சுயராஜ்யம், இந்திய தேசாபிமானம் என்பதைப் பற்றி மாத்திரம் பேசுவதாக நினைத்து விடாதீர்கள். உலகத்தில் உள்ள எல்லா தேசங்களின் தேசாபிமானங்களையும் சுயராஜ்யங்களையும் கண்டும் தெரிந்தும்தான் பேசுகிறேனே ஒழிய, கிணற்றுத் தவளையாய் இருந்தோ வயிற்றுச் சோற்றுச் சுயநல தேசபக்தனாக இருந்தோ நான் பேச வரவில்லை.

எந்தத் தேசத்திலும் எப்படிப்பட்ட சுயராஜ்யத்திலும் குடிஅரசு நாட்டிலும் ஏழை - பணக்காரன், முதலாளி - தொழிலாளி வித்தியாசம் இருந்துதான் வருகின்றது. நம் நாட்டில் இவைகள் மாத்திரம் அல்லாமல் பார்ப்பான், பறையன், மேல்சாதி, கீழ்சாதி ஆகிய அர்த்தமற்ற அயோக்கியத்தனமான வித்தியாசங்களும் அதிகப்படியாக  இருந்து வருகின்றன. இவைகளை ஒழிக்கவோ அழிக்கவோ இன்றைய தேசாபிமானத்திலும் சுயராஜ்யத்திலும் கடுகளவாவது யோக்கியமான திட்டங்கள் இருக்கின்றனவா என்று உங்களைக் கேட்கிறேன்.

இப்படிப்பட்ட தேசாபிமானம், சுயராஜ்யாபிமானம் என்கின்ற சூழ்ச்சிகளையும், தந்திரங்களையும் விட்டுவிட்டு மனித ஜீவ அபிமானம் என்கின்ற தலைப்பின் கீழும் கொள்கையின் கீழும் எல்லோரும் ஒன்று சேருகின்ற வரை யில் நான் தேசத் துரோகியாக இருந்து தேசாபிமானப் புரட்டையும், சுயராஜ்யப் புரட்டையும் வெளியாக்காமல் இருக்க முடியாது.

- பெரியார், 21.10.1934, ‘பகுத்தறிவு’

Pin It