எண்ணை தீர்ந்து போன விளக்கு போல் எப்பொழுது போகும் என்பதே இன்றைய மின்சாரத்தின் நிலை. அறிவிக்கப்பட்ட மின்தடையில் பழகிவிட்ட நமக்கு இன்று கண்ணை சிமிட்டும் மின்சாரம் எல்லாவேளைகளிலும் நம்மை நிர்க்கதியாக்கிவிட்டது. கோபம் பொங்குகிறது; துணையாக இழப்பும் சேருகிறது. எப்படி வந்தது இந்த சமுதாய சோகம் – கடந்த ஒரு வாரமாக?

இதுதான் காரணம் – 988 மெகாவாட்டுக்கான தமிழகத்தின் ஐந்து தனியார் உற்பத்தி நிலையங்களின் நான்கு நிலையங்கள் அதன் உற்பத்தியை முடக்கிவிட்டன; நிலுவைதான் காரணமாம்.

மாண்புமிகு முதல்வர் 5995 கோடி புதிய உற்பத்தி நிலையங்களுக்கு ஒதுக்கிய நாளிலிருந்து இந்த உற்பத்தி முடக்கம் தொடங்கப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் 730 மெகாவாட் உற்பத்தி முடங்கியுள்ளது. ஜி.எம்.ஆர். வாசவி – 196, பிள்ளைபெருமாநல்லூர் – 330.5, மதுரை பவர் – 106, சாமல்பட்டி பவர் – 105.66. பத்தாண்டுகளுக்கு மேலாக வாரியத்துடன் வணிகம் நடத்திய இவர்கள் சம்பாதித்தது மொத்த மூலதனத்தைப்போல் 250 சதம். அரசின் சலுகைகளோ (சுங்கவரி, வருமான வரி, விற்பனை வரி, ஸ்டாம்ப் கட்டணம் முதலியன) மூலதனத்திற்கு சமம். புதிய உற்பத்திக்கு அரசு ஒதுக்கிய பணத்தை தங்களுக்குப் பங்குவைக்கக் கோரி தமிழக மக்களைப் பிணையாக்கியிருக்கிறார்கள் இந்த நால்வரும். உற்பத்தி நிறுத்தியிருக்கும் இந்த நாட்களிலும் இவர்களுக்கு வாரியம் கட்டணம் செலுத்தவேண்டும். ஒரு நாளைக்கு ஜி.எம்.ஆர் – 51 லட்சம், பி.பி.என்.- 94 லட்சம், மதுரை பவர் -21 லட்சம், சாமல்பட்டி – 27 லட்சம். மொத்தத்தில் 2.01 கோடி. நெய்வேலியின் எஸ்.டி.சி.எம்.எஸ் மட்டும் உற்பத்தி செய்கிறது. முன்னதாக உள்ள 2000 மெகாவாட் குறைவு இப்பொழுது மேலும் 737 மெகாவாட் உயர்ந்துவிட்டது. கோடையும்கூட சேர்ந்து மின்பழுவைக் கூட்டுகிறது.

இதுதான் காரணம். நான்கு நிறுவனங்கள் தமிழக மக்களை வஞ்சிக்க விடுவது சரியா? உற்பத்தித் திறனிருந்தும் இருட்டில் தத்தளிப்பது முறையா? தமிழக அரசை நடவடிக்கைக்கு வலியுறுத்துவோம். செய்வோமா?

தொழில்கள், விவசாயம், சமூகப்பயன்பாடு, பொழுதுபோக்கு என்ற வரிசையில்தான் மின்சார உபயோகம் இருத்தல் அறிவுடமை.

தமிழகத்தில் உள்ள இரண்டு கோடித் தொலைக்காட்சிப்பெட்டிகள் 2000 மெகாவாட் (இரண்டுகோடி X 100 வாட் = 2000 மெகாவாட்)  கேட்கின்றன. சில மணிநேரத் தொலைக்காட்சி இழப்புநாட்டிற்கு நன்மை பயக்காதா? 

- மின்சாரப் பாதுகாப்பிற்கான கூட்டமைப்பு – கோவை கிளை

Pin It