பன்னாட்டு நிறுவனங்களுக்கு தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கும் தமிழக அரசு, தேர்வுக்கு படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு மின்வெட்டு தந்து வரும் சமூக அநீதிக்கு எதிராக பெரியார் திராவிடர் கழகம், மின்வாரியங்கள் முன் மார்ச் 5 ஆம் தேதி ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது. சென்னை, சேலம், கோவை, கிருட்டிணகிரி, வேலூர், தூத்துக்குடி, திண்டுக்கல், பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

 சென்னை:  சென்னை அண்ணா சாலையில் தமிழ்நாடு மின்வாரியம் அலுவலகம் அருகே வடசென்னை மாவட்ட கழகத் தலைவர் கேசவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. காயிதே மில்லத் கல்லூரி வாயிலிலிருந்து கண்டன முழக்கங்களுடன் தோழர்கள் புறப்பட்டுச் சென்றபோது மின்வாரிய அலுவலக வாயில் அருகே பகல் 11 மணியளவில் 60 தோழர்கள் கைது செய்யப் பட்டனர். தென்சென்னை மாவட்டக் கழகத் தலைவர் தபசி. குமரன், செயலாளர் உமாபதி, தோழியர்கள் தமிழ்ச் செல்வி (கைக் குழந்தையுடன்), அயனாவரம் தோழியர்கள் அலமேலு, ஜெயந்தி (கைக் குழந்தையுடன்) உள்ளிட்ட 60 தோழர்கள் கைது செய்யப்பட்டு, சிந்தாதிரிப்பேட்டையிலுள்ள திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டு, பிற்பகல் விடுதலை செய்யப் பட்டனர்.

 கிருட்டிணகிரி: கிருட்டிணகிரியில் பழையபேட்டை சாலை ரவுண்டானா அருகில் மாலை 4 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை ஏற்றார். மாவட்ட தலைவர் தி. குமார், மாவட்ட செயலாளர் சோ. பிரேம்குமார், மாவட்ட அமைப்பாளர் பழனிச்சாமி முன்னிலை வகித்தனர். ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஈ.வி.கோ. இளங்கோ, நகர செயலாளர் கு. சந்திரன், ஒன்றிய செயலாளர் சீனிவாசன், தமிழர் தேசிய இயக்க மாவட்ட செயலாளர் முருகேசன் கண்டன உரையாற்றினர். மாவட்ட கழக மாணவரணி அமைப்பாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

 சேலம்: சேலம் நெத்திமேடு தமிழ்நாடு துணை மின் நிலையம் முன் கண்டன போராட்டம் நடைபெற்றது. கழக மாவட்ட துணை செயலாளர் ஏற்காடு பெருமாள் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கம் பூமொழி, மனித உரிமை பாதுகாப்பு மையம் வழக்கறிஞர் மாயன், ம.தி.மு.க. ஆனந்தராஜ், தமிழ்நாடு மாணவர் கழகம் தீபக் மற்றும் சட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். தமிழக அரசைக் கண்டித்து கண்டன முழக்கம் எழுப்பப்பட்டது. பின்னர் போராட் டத்துக்கு அனுமதி மறுப்பு எனக் கூறி கழகத் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் 50 பேரை கைது செய்து மண்டபத்தில் அடைத்தது காவல்துறை. இரவு 7.30 மணிக்கு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஜங்சன் தங்கராசு நன்றி கூறினார்.

 கோவை: கோவையில் மாவட்ட மின்வாரிய அலுவலகம் முன் மாநில செயற்குழு உறுப்பினர் ஆறுச்சாமி தலைமையில் 5 ஆம் தேதி மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 40 தோழர்கள் பங்கேற்றனர்.

 கொளத்தூர்: 5.3.2011 அன்று பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கொளத்தூர் மின்வாரியம் முன்பு கண்டன போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு நகர செயலாளர் இராமமூர்த்தி தலைமை தாங்கினார். போராட்டத்தின் நோக்கம் குறித்து டைகர் பாலன் உரையாற்றினார். 42 பேர் கலந்து கொண்டனர். தமிழக அரசைக் கண்டித்து கண்டன முழக்கம் எழுப்பப்பட்டது. ஒன்றியத் தலைவர் சூரிய குமார் நன்றி கூறினார்.

 தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட கழக சார்பில் மாணவர்களின் தேர்வு நேரங்களில் மின்வெட்டை ஏற்படுத்தும் மின்சார வாரியத்தையும், தமிழக அரசையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 5.3.11 அன்று மாலை 5 மணியளவில் தூத்துக்குடியிலுள்ள பழைய நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கோ. அ.குமார் தலைமை வகித்தார். ஆழ்வை ஒன்றியத் தலைவர் பா. முருகேசன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை ஆதித் தமிழர் பேரவையின் மாநில துணை பொதுச் செயலாளர் க. கண்ணன் தொடங்கி வைத்து உரையாற்றினார். தொடர்ந்து மாவட்ட அமைப்பாளர் ச.கா.பாலசுப்பிரமணியன், புரட்சிகர இளைஞர் முன்னணி சி. சுஜித், மாவட்ட துணைத் தலைவர் வே. பால்ராசு, ஆதித் தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் ரா.வே. மனோகர், மாவட்ட தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு ஆகியோர் உரையாற்றினர். கழக தலைமை செயற்குழு உறுப்பினர் பால். பிரபாகரன் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து விளக்கவுரையாற்றினார். இறுதியாக, தமிழ்நாடு மாணவர் கழகத்தின் வ. அகரன் நன்றி கூறினார்.

Pin It