அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பூர்வ குடிகளான ஜாரவா பழங்குடியினப் பெண்களை ஒரு வேளை உணவுக்காக கட்டாயப்படுத்தி அரை நிர்வாண‌ நடனம் ஆடவைக்கப்பட்ட நிகழ்வு உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களிடையேயும், நாகரிக சமுகத்தின் மீது அக்கறை விருப்பம் கொண்டுள்ளோரிடையேயும் பலத்த அதிர்வுகளை ஏற்ப்படுத்தியுள்ளது.

jarawa_tribe_400இந்த அவலத்தை முதன்முதலாக உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டியது தி அப்சர்வர், தி கார்டியன் ஆகிய ஆங்கில ஊடகங்களகும்.

அக்காணொளியின் மூலம் பெண்களும் சிறுவர்களும் கட்டாயப்படுத்தப்பட்டு நடனமாட வைக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது. அவர்கள் மீது பணமும் உணவுப்பொட்டலங்களும் வீசி எரியப்படும் காட்சி நாகரிக சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் நம்முடைய நிலையை சுய விமர்சன‌ம் செய்து கொள்ள வேண்டுமென்பதை கட்டயமாக்குகிறது.

அந்தமானுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க பழங்குடியினர்களை மிருகக்காட்சி சாலை விலங்குகளைப் போன்று ஆட்டுவிக்கும் இது போன்ற நிர்வாண‌ நிகழ்வுகளை உள்ளூர் காவல் துறையினர் கையூட்டு பெற்றுக்கொண்டு கண்டும் காணாமல் இருந்து விடுகின்றனர் என்பது அதிர்ச்சிகரமான உண்மையாகும்.

பழங்குடியினரின் குடியிருப்புப் பகுதிகளை ஒட்டிச் செல்லும் அந்தமானின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளை இணைக்கும் 46 மைல் நீள பிரதான சாலையில் தினமும் இருநூற்றுக்கும் மேற்ப்பட்ட வாகனங்கள் காவல்துறையினரால் முறைகேடாக அனுமதிக்கப்படுவது சுற்றுலாவாசிகளின் இது போன்ற மிருகத்தனமான செய்கைகளுக்கு காரணமாகிறது.

அந்தமான் யூனியன் பிரதேசத்தின் பழங்குடியின நலத்துறை அமைச்சர் சந்திரா தேவ், இந்த அவலத்திற்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதகவும், ஜாரவா பழங்குடியினரின் வாழ்க்கை நலனை மேம்படுத்துவதற்கான சிறப்புத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது மற்றும் பிராதன சாலையை மூடிவிட அரசு ஆலோசித்து வருவதாக கூறியுள்ளது மற்றும் அவலத்தினை உலகின் பார்வைக்கு கொண்டு வந்த காணொளி காட்சியை படம் பிடித்த புகைப்பட கலைஞர் மற்றும் மகிழுந்து ஓட்டுனர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளது ஆகிய அனைத்தும் பிரச்சினைக்குரிய மையப்புள்ளியை கண்டறிவதில் அரசின் அக்கறையின்மையாகவும் கண்துடைப்பு நாடகமாகவும்தான் பார்க்கப்படுகின்றது.

அம்மக்கள் அப்பாவிகளாகவும் பலவீனமானவர்களகவும் உள்ளதால் உள்ளூர் காவல்துறையினரின் உதவியோடு சுரண்டலுக்கு உள்ளாகின்றனர்.

அணு ஆயுத வல்லரசாக மாறத்துடிக்கும் இந்தியாவில் ஆண்டுக்கு 40 லட்சம் டன் உணவு தானியங்கள் அரசின் சேமிப்புக் கிடங்குகளில் மக்கி வீணாகும் இந்தியாவில் நடந்திருக்கும் இந்நிகழ்வு உலகின் பொருளாதார மற்றும் ராணுவ வளர்ச்சியின் உச்சத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டிருப்பதாக பொருளாதார‌ப்புலி மன்மோகன் சிங் வகையறாக்கள் செய்யும் கோயபல்ஸ் பிரசாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

அழிவின் விளிம்பில் வெறும் 403 பேரையே எண்ணிக்கையாகக் கொண்ட அம்மண்ணின் பூர்வகுடிகளான ஜாரவா பழங்குடியினருக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இத்தாக்குதல் நாகரிக சமுகத்தின் மேல் அக்கறை கொண்ட எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அவசரத்தேவையாக இப்போது கருதப்படுவது யாதெனில் முறையான விசாரணை மற்றும் தொலைநோக்குப் பார்வையிலான திட்டங்களுமேயாகும்.

தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று சொன்னான் பாரதி. என்ன செய்ய போகிறது மன்மோகன் அரசு?

- பண்ரூட்டி காமராஜ்(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It