இன்றைய தமிழ்நாடு வறட்சியில் சிக்கித் தத்தளிக்கிறது.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் கடலூர், திருச்சி, கரூர் மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகள் காவிரி நீர்ப்பாசனப் பகுதிகளாகும். இப்பகுதிகளில் 12 இலட்சம் ஏக்கரில் சம்பா நெல் பயிரிட்டிருந்த னர், வேளாண் மக்கள். இதில் 9 இலட்சம் ஏக்கர் சம்பாப் பயிர் தொண்டைக்கதிரில் கருகிவிட்டது. கிணற்றுப் பாசன வசதி, நிலத்தடி நீர் வசதி உள்ள 3 இலக்கம் ஏக்கர், விளைச்ச லுக்கு வந்த நிலையில், 2017 சனவரியில் பெய்த மழையால் வீணாகிவிட்டது.

இப்பகுதிகளில் மட்டும் கருகிப்போன வயல்களைக் கண்ணுற்ற வேளாண் குடும்பத் தலைவர்கள் மயங்கியும் மாரடைப்பு கண்டும் நஞ்சு உண்டும் தூக்கில் தொங்கியும் 140 பேர் செத்து மடிந்தார்கள். ஏன்?

காவிரிக்கு கருநாடகத்திலிருந்து 179 கோடி கன அடி நீர் விடப்பட வேண்டும். ஆனால், உச்சநீதிமன்ற ஆணைக்குப் பிறகும், 66 கோடி கன அடிநீர் மட்டுமே கருநாடக அரசு அளித்தது.

வானம் பார்த்த நிலங்கள் அதிகமாக உள்ள நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை போன்ற 13 மாவட்டங் களில் புன்செய்ப் பயிர்கள் முக்கால் பங்கு சாவியாகிவிட்டன. எதனால்?

வடகிழக்குப் பருவ மழை சராசரியாக 42 செ.மீ. பெய்யும். ஆனால், கடந்த 2016 சூன் முதல் திசம்பர் வரை உள்ள 7 மாதங்களில் 16 செ.மீ. மட்டுமே பெய்தது.

இதனால் ஏற்பட்ட பேரிழப்புக்கு ஆளான வேளாண் குடும்பத் தலைவர்கள் 80 பேருக்கு மேல் மடிந்துவிட்டனர்.

ஆக, செத்தவர்கள் எண்ணிக்கை மட்டும் 220 பேர்.

வேளாண்மை செய்வோரில் 100க்கு 90 பேர் வங்கியிலோ, நிதி நிறுவனத்திடமோ, தனியாரிடமோ கடன் பெற்றுத்தான் பயிரிடுகிறார்கள். அப்படிக் கடன் பெறுவோரில் 100க்கு 66 பேர் தனியாரிடம் 100க்கு மாதம் ரூ.2, ரூ.3 வீதம் வட்டிக்குக் கடன் வாங்குகிறார்கள். இந்தக் கடனைத் திருப்பித் தர வழியில்லையே என்று ஏங்கித்தான் வேளாண் மக்கள் சாகிறார்கள். சனவரி 2017 முதல் 2018 சனவரி வரை வீட்டு வாழ்க்கைக்கு ஏதும் மிஞ்சவில்லையே என்று இவர்கள் தத்தளிக்கப் போகிறார்கள்.

தமிழகச் சட்டமன்றத்தில் இன்று ஆளும் கட்சி - எதிர்க்கட்சியினர் உட்பட 234 பேர் உள்ளனர். இவர்களில் எத்தனை பேர் அவரவர் மாவட்டத்தில் நிலவும் வறட்சியின் கொடுமையை நேரில் பார்த்தார் கள்? எத்தனை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நேரில் போய்ப் பார்த்தார்கள்?

ஏன் போகவில்லை?

இப்போதைய அரியலூர் மாவட்ட ஆட்சியர், கடந்த 5 ஆண்டுகளாக, ஆளுங்கட்சியினர் ஆதரவில், அரியலூரிலேயே இருக்கிறார். அப்படி ஒரு ஆட்சியர் இருக்கிறார் என்பதற்கான அடையாளம் எதுவுமே அரியலூரில் இல்லை. எப்படி?

அரியலூர் நகரத்துக்கே குடிநீர் கொடுத்த “செட்டி ஏரி” வறண்டும் வாய்க்கால் வழிகள் தூர்ந்தும் கிடக்கிறது. அரியலூரில் உள்ள மற்றெல்லா ஏரிகளும் வறண்டு கிடக்கின்றன. அரியலூர் நகரச் சாலைகளில், தட்டுத்தடங்கலின்றி நடக்க முடியவில்லை.

இந்த மாவட்டத்தில் மட்டும் 12 சிமெண்டு ஆலைகள் உள்ளன. அவை 24 மணிநேரமும் புகையை வெளி விடுகின்றன. அப்புகை நச்சுப்புகை. அந்த நஞ்சை இயந்திரம் மூலம் வடிகட்டி வெளியிட வேண்டும் என்று கோரி, 10.1.2014இல் இதே மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விண்ணப்பம் கொடுத்தோம். இதுபற்றி எதுவுமே இன்றுவரை நடைபெறவில்லை.

கடந்த 10.2.2017 வெள்ளி பகல் 1 மணிக்கு அதே மாவட்ட ஆட்சியரிடம், மேலே கண்ட எல்லாக் குறை களைப் பற்றியும் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடை மைக் கட்சியினரும், தமிழக விவசாய சங்கத்தினரும் 6 பேர் நேரில் முறையிட்டோம்.

இவர் ஏன் இப்படி இருக்கிறார் என்று தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும். தமிழக அரசினர் விரைந்து இந்த அடாவடி ஆட்சியர் பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை மட்டுமா?

முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். என்கிற பன்னீர் செல்வம் வறட்சியால் இழப்புக்கு உள்ளான வேளாண் மக்களுக்கு மக்காச்சோளம் போன்ற புன்செய்ப் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.3 ஆயிரமும், பாசனப் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.5,645; கரும்பு முதலான வற்றுக்கு ஏக்கருக்கு ரூ.7,247 - என, ஏற்கெனவே அறிவித்தார். அவை போதுமான இழப்பீடுகள் அல்ல எனப் பல அரசியல் கட்சிகளும், வேளாண் அமைப்பு களும் தமிழக அரசுக்கு முறையீடு செய்தன.

அவருக்குப் பிறகு, புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்ற எடப்பாடி பழநிச்சாமி அவர்கள், பதவி ஏற்றவுடன், வேளாண் மக்களுக்காக நீலிக்கண்ணீர் வடித்து, பழைய பன்னீர்செல்வம் அறிவித்ததை எந்த மறு ஆய்வும் செய்யாமல் அப்படியே அறிவித்துள்ளார். இது, பொறுப்பற்ற ஏமாற்றுத்தனமான செயல் ஆகும்.

வறட்சி இழப்பீடுகளுக்காக மொத்தம் ரூ.2,300 கோடி நிதி ஒதுக்கீடு என்பது கொஞ்சமும் போதாது.

இந்திய அரசிடம், தமிழகம் பேரிடர் இழப்பு, வறட்சி இழப்பு இவற்றுக்காக, 39 ஆயிரம் கோடி ரூபா தமிழக அரசு கோரியுள்ளதைச் சுட்டிக்காட்டித் தமிழக வேளாண் மக்களை வஞ்சிப்பது ஒரு ஏமாற்று ஆகும்.

எனவே, உடனடியாக, இப்போது அறிவித்துள்ள இழப்பீடுகள் தொகை வீதத்தை - 5 மடங்காக மாற்றி, உயர்த்தித்தர முதல்வர் அவர்கள் ஆவன செய்வதே பொருத்தமாகும்; நல்ல தீர்வு ஆகும். நிற்க.

இரு திராவிடக் கட்சிகளின் ஆட்சியிலும் ஊழல் பெருக்கெடுத்த அளவுக்கு - கல்வி, வேளாண்மை, நீராண்மை, அடிப்படை மருத்துவம் இவை ஆக்கம் பெறவில்லை.

தமிழகத்தில் உள்ள 41,000 ஏரிகளில், குறைந்தது 10,000 ஏரிகளையாவது வரும் 4 ஆண்டுக்குள் 10,000 கோடி ரூபா செலவில் தூர் வார வேண்டும்; முழுக் கொள்ளளவுக்கு வீராணம் ஏரி, வெலிங்டன் ஏரி (எ) எமனேரி, பொன்னேரி, மதுராந்தகம் ராமர் காத்த ஏரி, பூண்டி ஏரி இவற்றைத் தூர் வார வேண்டும்; வரத்து வாய்க்கால், போக்கு வாய்க்கால் இவற்றை விளங்க வேண்டும். ஏரி உள்வாய், வாய்க்கால் தனியார் ஆக்கிரமிப்புகளைத் தடாலடி நடவடிக்கை மூலம் அகற்ற வேண்டும்.

இந்திய அரசிடம், தமிழக அரசு எந்தக் கோரிக் கையை முன்வைத்தாலும் - தமிழக முதல்வரும் எதிர்க் கட்சித் தலைவரும் இணைந்து, ஒரே நேரத்தில் தமிழ கத்தைச் சார்ந்த 57 நாடாளுமன்ற உறுப்பினர்களை யும் உடனழைத்துச் சென்று, நேரில் அழுத்தம் தரவேண்டும்.

அதன்பிறகும், இந்திய அரசு இணங்கிவரா விட்டால் தமிழக அரசினர், தமிழக நீர்நிலைகளைச் செப்பனிட மட்டும், இந்திய அரசு மூலம், உலக வங்கியிடம் குறைந்த வட்டிக்குக் கடன் பெற்று இப்பணியை முதலில் நிறைவேற்ற வேண்டும்.

Pin It