..முந்தைய பகுதி: பாரதியின் பார்வையில் திராவிடர் இயக்கம்
1904 ஆம் ஆண்டில் சுதேசமித்திரன் இதழில் பாரதி மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றியபோது சென்னை திருவல்லிக்கேணியில் இருந்த வைத்தியநாத அய்யர் என்பவர் ‘சக்ரவர்த்தினி’ என்னும் பெயரில் பெண்களுக்கான மாத இதழை நடத்தினார். இந்த இதழில் பாரதியார் 1904 முதல் 1906 வரை ஆசிரியராக இருந்து வந்துள்ளார். இந்தக் காலகட்டத்தில்தான் பாரதியார் பெண் விடுதலைக்காக மிகத் தீவிரமாக எழுதியுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் காணலாம்.“பரிபூரண ஸமத்துவம் இல்லாத இடத்தில், நாம் ஆண் மக்களுடன் வாழ மாட்டோம் என்று சொல்லுவதனால் நமக்கு நம்முடைய புருஷராலும், புருஷ சமூகத்தாராலும் நேரத்தக்க கொடுமைகள் எத்தகையோயாகினும், எத்தன்மை உடையனவாயினும் நாம் அஞ்சக்கூடாது. சகோதரிகளே! ஆறிலும் சாவு; நூறிலும் சாவு. தர்மத்திற்காக இறப்போரும் இறக்கத்தான் செய்கிறார்கள். பிறரும் இறக்கத்தான் செய்கிறார்கள். ஆதலால் சகோதரிகளே! பெண் விடுதலையின் பொருட்டாகத் தர்ம யுத்தம் தொடங்குங்கள்! நாம் வெற்றி பெறுவோம்” (1) எனப் பாரதி பெண் விடுதலைக்காகப் பாடுபட, பெண்களை அழைக்கிறார்.மேலும் தீவிரமாகப் பாரதி கூறுகிறார். “நான் எல்லா வகைகளிலும் உனக்குச் சமமாக வாழ்வதில் உனக்குச் சம்மதமுண்டானால் உன்னுடன் வாழ்வேன். இல்லாவிட்டால், இன்று ராத்திரி சமையல் செய்ய மாட்டேன்; எனக்கு வேண்டியதைப் பண்ணித் தின்று கொண்டிருப்பேன். உனக்குச் சோறு போட மாட்டேன்; நீ அடித்து வெளியே தள்ளினால் ரெஸ்தாவில் கிடந்து சாவேன். இந்த வீடு என்னுடையது. இதை விட்டு வெளியேறவும் மாட்டேன் என்று கண்டிப்பாக சொல்லிவிடவும் வேண்டும்.” (2)பெண்கள் பதிவிரதைகளாக இருக்க வேண்டுமானால் அதற்கு ஆண்கள் தான் ஒழுங்காக இருக்க வேண்டும் என்கிறார் பாரதி.
“அடப்பரம மூடர்களே! ஆண்பிள்ளைகள் தவறினால் ஸ்தீரிகள் பதிவிரதைகளாக எப்படி இருக்க முடியும்? பதிவிரதயத்தைக் காப்பாற்றும் பொருட்டாக ஸ்தீரிகளைப் புருஷர்கள் அடிப்பதும், திட்டுவதும், கொடுமை செய்வதும் எல்லையின்றி நடைபெற்று வருகிறது. சீச்சி! மானங்கெட்ட தோல்வி, ஆண்களுக்கு அநியாயமும், கொடுமையும் செய்து பயனில்லை.” (3)
தொடக்க காலத்தில் உடன்கட்டை ஏறும் சதியைப் பாரதி மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறார்.
“எண்ணிறந்த ஸ்த்ரிஹத்தி புரிந்து, இத்தேசத்துக்கெல்லாம் அழிக்க முடியாத பெரும் பழி கொடுத்த ஸதி தஹனமென்னும் அரக்கனை மிதித்துக் கொல்லும்படியாக முதலிலே துக்கப்பட்ட ராம்மோஹனரின் திருவடியை நாம் மறந்துவிட்டால் நமக்கு உய்வுண்டாமா?” (4) எனப் பெண்களிடம் கேட்கிறார் பாரதியார்.
பாரதியார் இன்னும் ஒருபடி மேலே போய் ஸதியின் எரிக்கத் தயார் நிலையில் சுடுகாட்டில் இருந்த ஒரு இராசபுத்திரப் பெண்ணை(அக்பர் ஆட்சியில் சதிக்குத் தடையிருந்தது எனப் பாரதி குறிப்பிட்டுள்ளார்), ஒரு முகமதிய வாலிபன் அந்த இராசபுத்திரர்களைக் கொன்று அந்தப் பெண்ணை மீட்டுச் செல்கிறான்; அந்த முசுலீம் வாலிபனுக்கும், அந்த இராசபுத்திரப் பெண்ணுக்கும் காதல் மலர்ந்து, திருமணம் நடப்பதாகத் துளஸிபாயி என்னும் கதையில் பாரதி கூறியுள்ளார்.
தொடக்கக் கலத்தில் பாரதியார் குழந்தை மணத்தை எதிர்த்தார்; கலப்புத் திருமணங்களை ஆதரித்தார்; பெண்கள் விவாகரத்து செய்து கொள்வதையும் ஆதரித்துள்ளார். ஏன், பெண்கள் திருமணத்தை விரும்பவில்லை என்றால் திருமணமே செய்து கொள்ளாமல் கூட விட்டுவிடலாம் என்று கூறியவர், பிற்காலத்தில் தன் கருத்துக்களைச் சிறிது சிறிதாக மாற்றிக் கொள்கிறார்.
“கற்பு நிலையென்று சொல்ல வந்தால் இரு
கஷிக்கும் அஃதுபொதுவில் வைப்போம்
வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக்கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்” (கும்மி)
இப்படிப் பெண் விடுதலைக் கும்மிப் பாடலை இயற்றிய பாரதிதான் பின்வருமாறும் எழுதுகிறார்:
“ஸாவித்திரி, ஸீதை, சகுந்தலை முதலிய பெண்களின் சரிதைகளைக் கேட்கும் போது, இத்தகையோர்களுக்கு இம்மாதிரி மனப்ப்போக்கு எவ்விதம் ஏற்பட்டதென்று நினைத்து நினைத்து மிகுந்த ஆச்சரியமுண்டாகிறாது. இம்மாதிரியான கற்புடை இத்தேசத்துப் பெண்களுக்கு என்றும் ஒரு சிறந்த புவனமாக விளங்கி நின்றமை நமது நாட்டிற்கே ஒரு பெருமை ஆகும்.” (7)
மேலே, பாரதி மாதிரிக்குக் காட்டியிருக்கும் பெண்கள் தங்கள் கணவனுக்காகவே வாழ்ந்தவர்கள்; பல இன்னல்களை அனுபவித்தவர்கள். அவர்களைத்தான் பாரதி கற்புடைய பெண்களுக்கு உதாரணமாகக் காட்டுகிறார்.
1908 வரை பெண்விடுதலை பற்றிப் பாடிய பாரதி, புதுவைக்குச் சென்று வாழ்ந்த காலத்தில், மதவாதியாகவும் பெண்விடுதலையுணர்வு அற்றவராகவும் வாழ்ந்ததைச் சில சான்றுகள் முலம் அறிய முடிகிறது. கற்பு என்பதை எப்பாடுபட்டாவது பெண்கள் காக்க வேண்டும் என்று மிகவும் வலியுறுத்துகிறார். “தமிழ்நாட்டு மாதர்க்கு மட்டுமேயன்றி உலகத்து நாகரிக தேசங்களிலுள்ள ஸ்திரீகளுக்கெல்லாம் கற்பு மிகச் சிறந்த கடமையாகக் கருதப்படுகிறது. அதைக் காக்கும் பொருட்டாக ஒரு ஸ்திரி எவ்வளவு கஷ்டப்பட்ட போதிலும் தகும்.”(8)
பாரதி ஒரு மதவாதி. எனவே பதிவிரதத் தன்மையில் அதிக நம்பிக்கை கொள்கிறார்.
“ஆணும் பெண்ணும் ஒன்றுக்கொன்று உண்மையாக இருந்தால் நன்மை உண்டாகும். பதிவிரதைக்கு அதிக வீரமும் சக்தியும் உண்டு. சாவித்திரி தனது கணவனை எமன் கையிலிருந்து மீட்ட கதையில் உண்மைப் பொருள் பொதிந்திருக்கிறது” (9) எனக் கூறுகிறார்.
1906இல் சதி என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தைத் துளஸிபாயி என்னும் கதையின் முலம் வன்மையாகக் கண்டித்த பாரதி புதுவை சென்ற பின், தீவிர மதவாதியாக மாறிய காரணத்தினால் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஆதரிக்கும் நிலைக்கு வந்துவிட்டார்.
1910 பிப்ரவரியில் ‘கர்மயோகி’ இதழில் பாரதி எழுதியதாவது:
“நமது பூர்வகாலத்து ஸ்திரீகளில் பிராண நாதர்களைப் பிரிந்திருக்க மனமில்லாமல், உடன்கட்டையேறிய ஸ்திரீகள் உத்தமிகளாவார்கள். இனி, எதிர்காலத்திலே தர்மத்தின் பொருட்டாகவே வாழ்ந்து அதற்காகவே மடிந்து இதன் மூலமாகவேத் தமது நாயகர்களுடைய ஆத்மாவுடன் லயப்பட்டு நிற்கும் ஸ்திரிகளே மஹா ஸ்திரிகளாவார்கள்.”(10) 1909 ஆகஸ்ட் ‘இந்தியா` இதழில், ஒழுக்கம் உள்ள பெண்களைப் பற்றிப் பாரதி கூறும்போது, “ஓ இந்தியனே! சீதை, சாவித்ரி, தமயந்தி இவர்களும், இன்னும் இவர்களைப் போன்ற ஸ்திரி ரத்தினங்களும் உன் பெண்மணிகளாவர். ஒழுக்கத்திற்கு இவர்களை நமக்கு முன்மதிரியாக வைத்துக் கொள்ளலாம்”(11) என்கிறார்.
இன்னும் பிற்காலத்தில் 1920 மே மாதத்தில் ‘தேசிய கல்வி’ என்ற தலைப்பில் பாரதி எழுதும்போது பெண்கள் விவாகரத்து செய்து கொள்ளக்கூடாது என்கிற முடிவுக்கு வந்துவிட்டார். அதுகுறித்து இவர் கூறுவதாவது: “காதல் விடுதலை வேண்டுமென்று கூறும் கஷியொன்று ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சிற்சில பண்டித பண்டிதைகளால் ஆதரிக்கப்படுகிறது. அக்னி சாஷி வைத்து ‘உனக்கு நான் உண்மை, எனக்கு நீ உண்மை’ என்று சத்யம் பண்ணிக் கொடுப்பதும், மோதிரங்கள் மாற்றுவதும், அம்மி மிதிப்பதும், அருந்ததி காட்டுவதும் முதலிய சடங்குகளெல்லாம் அனுபவத்தில் சஹிக்கத்தக்க அல்லது சஹிக்கத் தாகாத பந்தங்களாகவே முடிகின்றனவென்றும், ஆதலால் அவற்றை இஷ்டப்படி அப்போதைக்கப்போது மாற்றிக் கொள்வதென்பதும், ஆதலால் ‘விவாகம் சாச்வபந்தம்’ என்று வைத்தல் பிழையென்றும் மேற்படி கஷியார் சொல்கிறார்கள்...
...ஆனால் தேசியக் கல்வியைக் குறித்து ஆராய்ச்சி செய்கிற நாம், மேற்படி விடுதலைக் காதற்கொள்கையை அங்கீகாரம் செய்தல் சாத்தியமில்லை... விடுதலைக் காதலாகிய கொள்கைக்கும் மணவாழ்க்கைக்கும் பொருந்தாது. மண வாழ்க்கை ஒருவனும் ஒருத்தியும் நீடித்து ஒன்றாக வாழாவிட்டால் தகர்ந்து போய்விடும். இன்று ஒரு மனைவி, நாளை வேறு மனைவி என்றால் குழந்தைகலின் நிலைமை என்ன ஆகும்? குழந்தைகளை எப்படி நாம் சம்ரஷணை பண்ணமுடியும்? ஆதலால் குழந்தைகளுடைய சம்ரஷணையை நாடி ஏகபத்னிவிரதம் சரியான அனுஷ்டானம் என்னு முன்னோரால் ஸ்தாபிக்கப்பட்டது.”(12)
இந்துக் கலாச்சாரத்தைக் காக்க வேண்டிய கடமையைப் பாரதி நம் நாட்டுப் பெண்களிடம் ஒப்படைக்கிறார். பிறகு அவர்கள் எப்படி விடுதலையடைய முடியும்? “தமிழ்நாட்டு மாதராகிய என் அன்புக்குரிய சகோதரிகளே! இத்தனைப் பழமையும், மேன்மையுஞ் சான்ற இரண்டு பகுதிகளின் கலப்பாகுந் தன்மையால் பாரத தேசத்திலேயே மற்றப் பிரதேசங்களிலுள்ள நாகரிகத்தைக் காட்டிலும் கூட ஒருவாறு சிறப்புடையதாகக் கருதுவதற்குரிய ஆரிய, திராவிட நாகரிகம் உங்களுடைய பாதுகாப்பிலிருக்கிறது. இதனை மேன்மேலும் போஷித்து வளர்க்கும் கடமை உங்களைச் சார்ந்தது.”(13)
தமிழர் நாகரிகம் அல்லது திராவிடர் நாகரிகம் உயர்ந்த நாகரிகம் என்று கூற மனமில்லாமல் ஆரிய, திராவிட நாகரிகம் உங்கள் பாதுகாப்பில் உள்ளது என்கிறார். முன்பு ஆரியர்-திராவிடர் என்பதே பொய் என்று கூறியவர் இப்போது அதை எற்றுக் கொள்கிறார்.
பாரதியின் கதைகளில் கூடப் பெண்களுக்கு விடுதலை அளிப்பதாக இல்லை.
ஏழைப் பெற்றோர் வசதியின்மை காரணமாக ஒரு முதிய பிராமணனுக்குத் தம் மகளை மணம் முடித்து வைக்கின்றனர். முதிய வயதான கணவன் இருக்கும் போதே, கந்தாமணி என்ற அந்த பிராமணப் பெண் வேறு ஒரு கணவனைத் தேடிக் கொண்டு அவனுடன் வாழ்வதை பாரதியாரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே அவளைக் கிறித்துவ மதத்திற்ககு மாற்றி விடுகிறார் என்று பாரதியின் கதைமகளிரின் பாத்திரங்களை ஆய்வு செய்த வ.உமாராணி கூறுகிறார். (14)
பாரதி இறுதிக் காலத்தில் எழுதிய கதையாகிய ‘சந்திரிகையின் கதை’யில் வரும் விசாலாட்சி என்பவள் ஒரு இளம் விதவை. அவள் மறுமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறாள். அவ்வாறே மறுமணம் செய்து கொள்கிறாள். அவள் கணவன் பெயர் விசுவநாத சர்மா. திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளில் அவனுக்கு பைத்தியம் பிடித்து விடுகிறது. இருந்த போதிலும் அவள் கணவனுக்கு பணிவிடை செய்து வருகிறாள். இதைத் தெய்வீகக் காதல் என்கிறார் பாரதியார்.
இதில் என்ன தெய்வீகத் தன்மை இருக்கிறது?
அந்தக் காலத்திலேயே பாரதி இவ்வளவு முற்போக்காகப் பெண் விடுதலையைப் போற்றி இருக்கிறாரே என்று காட்டுபவர்கள் அவருடைய தொடக்க காலக் கட்டுரைகளையே காட்டுகின்றனர். அவருடைய பிற்கால எழுத்துகள் என்பவவை முழுக்க முழுக்க மதம் சார்ந்தவை. எனவே அதில் பெண்கள் விடுதலை குற்த்துச் சிறப்பாகக் கூறுவதற்கு ஒன்றும் இல்லை என்றெ சொல்லலாம்.
பெண் விடுதலையைப் பற்றிப் பாட்டும், கட்டுரையும் எழுதிய பாரதி, தன்னுடைய குடும்பத்திலுள்ள பெண்களுக்கு விடுதலை கொடுத்தாரா? இதோ பாரதி ஆய்வாளர் ரா.அ.பத்மநாபன் கூறுகிறார்: “மாதர் சுதந்திரம் பாடிய கவிஞர் வீட்டில் அவர் இட்டதே சட்டம். செல்லம்மா தவிப்பு சொல்லி மாளாது” (16) என்கிறார்.
“ஒருநாள் பாரதி, 14 வயதான தமது மூத்த மகள் தங்கம்மாவைத் தம்முடன் கடையத்திலிருந்து ஐந்து மைலில் உள்ள ஒரு அய்யனார் கோயிலுக்கு வருமாறு உத்தரவிட்டார். அக்கோவில் மலைச்சாரலில் காட்டு நடுவே உள்ளது...தங்கம்மா தயங்கி வரமறுத்ததால் பாரதிக்கு கோபம் வந்து விட்டது. மகள் கன்னத்தில் விரல் பதிய அறைந்து விட்டார். தடுக்க வந்த மைத்துன்ர் மீதும் இளைய மாமனார் மீதும் காறி உமிழ்ந்தார்”.(17)
பாரதிதாசன் பெண் விடுதலைக்கு முதன் முதலாக ஓங்கிக் குரல் கொடுத்தவர் என்று கூறுவாருமுளர். ஆனால் அவருக்கும் முன்னால் தமிழகத்தில் 1882 இல் இந்து ‘சுயக்கியான சங்கம்’ (Hindu Free Thought union) என்ற ஒரு அமைப்பு பாடுபட்டு இருக்கிறது. இந்து மதத்தில் சீர்திருத்தம், பார்ப்பனர் புறக்கணிப்பு, விதவைத் திருமணம், கலப்புத் திருமணம், பெண்கல்வி பேணல் போன்றவை இச்சங்கத்தின் நோக்கங்களாக இருந்துள்ளன. அதற்காக இச்சங்கத்தாரால் ‘தத்துவவிசாரிணி’, தத்துவ விவேசினி’ என்ற தமிழ் ஏடுகளும்,ஆங்கிலத்தில் ‘The Thinker’ என்ற ஏடும் நடத்தப்பட்டுள்ளன.
விதவைத் திருமணம் குறித்து அவர்கள் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி வருமாறு : “பக்குவ காலத்தில் மணம் செய்யாமல் சிறு வயதிலேயே மணத்தை முடித்து யவ்வனப் பருவம் வருவதற்கு முன்னே பெண் காலம் சென்றால் பிள்ளைக்கு மறுவிவாகம் புரியலாமென்றும், பிள்ளை காலம் சென்றால் பெண் மறு விவாகம் புரியப்படாதென்றும் கருதி நமது தேசத்தில் சில வகுப்பினர் தவிர பிராமணர் முதலிய சில வகுப்பினர் மறுமணம் செய்யாது வருகின்றனர். இப்படிச் செய்யாதிருந்தாலுண்டாகிய தீங்குகள் எண்ணிறந்தன...
யவ்வனப் பருவமடைந்த பிறகுதான் பெண்களுக்கு விவாகம் செய்யலாமென்றும், கணவரையிழந்த சிறுமியர்களுக்குப் புணர்விவாகம் செய்யலாமென்றும், இடந்தராது போன காரணம் யாதோ! அறிவிற் சிறந்த மகான்களே! யோசியுங்கள்!.” (18)
(‘தத்துவ விவேசினி’,17.2.1881)
இப்படிப் பாரதிக்கு முன்பே பு.முனிசாமி நாயகர், அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகர், ’தமிழன்’ ஏடு நடத்திய அயோத்திய தாசபண்டிதர் மற்றும் பலர் சேர்ந்து இந்து மதத்தில் சீர்திருத்தம் செய்து புதிய சமுகம் அமையவும் பெண் விடுதலையடையவும் படுபட்டனர். இந்து மதத்திலுள்ள ஆபாசங்களைப் படம் பிடித்துக் காட்டுகிற தன்மையில், ‘இந்துமத ஆசார ஆபாச தாசினி’ என்னும் கவிதை நூலை அத்திப்பாக்கம் அ.வெங்கடாசல நாயகர் 1890 களிலேயே எழுதி வெளிப்படுத்தினார். ஆனால் பாரதியோ 1904 முதல் 1908 வரையில் பெண்விடுதலையில் தீவிரமாக இருந்தது,1908க்கு பிறகு மிதவாதியாகிவிட்டார்.
1920 கால கட்டத்தில் தீவிர இந்து மதவாதியாகிவிட்ட காரணத்தால் அவரால் பெண்விடுதலை குறித்து எதையும் எழுத இயலாமல் போய்விட்டது பாரதி கடைசிக் காலத்தில் பெண்விடுதலை பற்றிய நோக்கம் இன்றி இருந்ததோடு பெண்ணடிமைக் கருத்துக்களைக் கொண்டிருந்தார் என அறிய முடிகிறது.
அடிக்குறிப்பு
1. பாரதியார் கட்டுரைகள், வானதி பதிப்பகம், ப.243
2. மேற்படி நூல், ப.258, 59
3. மேற்படி நூல், ப.245
4. மகாகவி பாரதியார் சக்ரவர்த்தினி கட்டுரைகள், (தொ.ஆ) சீனிவிசுவநாதன், வானவில் பிரசுரம், ப.95
5. மேற்படி நூல், ப.101
6. பாரதியார் கவிதைகள், நி.செ.பு.நி., ப.359
7. மகாகவி பாரதியார், சக்ரவர்த்தினி கட்டுரைகள், ப.87
8. பாரதியார் கட்டுரைகள், ப.271
9. பாரதியார் கட்டுரைகள், ப.244
10. பாரதி புதையல் பெருந்திரட்டு, ப.331,332
11. மேற்படி நூல், ப.379
12. பாரதியார் கட்டுரைகள், ப.350, 351
13. மேற்படி நூல், ப.265
14. பாரதியின் கதை மகளிர், ப.36-38
15. பாரதியார் கதைகள், வானதி பதிப்பகம், ப.246-251
16. சித்திரபாரதி, ரா.அ.பத்மநாபன், ப.121
17. மேற்படி நூல், ப.140
18. 110 ஆண்டுகளுக்கு முன் சுயமரியாதைச் சிந்தனைகள், வே.ஆனைமுத்து, பெரியார் 115 வது பிறந்தநாள் மலர், 1993, ப.12,13
(வாலாசா வல்லவன் எழுதிய ‘திராவிட இயக்கப் பார்வையில் பாரதியார்’ நூலின் ஐந்தாம் அத்தியாயம்)
வெளியீடு: தமிழ்க் குடியரசு பதிப்பகம்
14/12, மியான் முதல் தெரு,
சேப்பாக்கம், சென்னை - 600 005
பேசி: 9444321902
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
பாரதி விரும்பிய பெண் விடுதலை எத்தகையது?
- விவரங்கள்
- வாலாசா வல்லவன்
- பிரிவு: கட்டுரைகள்