தற்போது பரபரப்பாக பேசப்படும் நிறுவனமான இந்திய விண்வெளி நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸ் நிறுவனத்திற்க்கும் பெங்கலூருவைத் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் தேவாஸ் நிறுவனத்திற்க்கும் இடையேயான எஸ் பேண்டு அலைக்கற்றை ஒப்பந்தம் குறித்த ஓர் மீள் பார்வை.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் கிளை நிறுவனமான ஆண்ட்ரிக்ஸ் சுமார் 950 ஏக்கர் பரப்பளவில் பெங்கலூருவை மையமாகக் கொண்டு 1992ல் செயல்படத் தொடங்கியது. தனது சிறப்பான வர்த்தக செயல்பாட்டிற்காக 2008ஆம் ஆண்டு மத்திய அரசின் மினி ரத்னா விருதினை இந்நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிறுவனமானது அலைக்கற்றை சந்தைப்படுத்துதல் தொடர்பாக மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆகிய நாடுகளில் தனது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இதனுடன் இணைந்து முறைகேட்டில் ஈடுபட்டிருக்கும் தேவாஸ் நிறுவனமும் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு 2004ம் முதல் செயல்பட்டு வருகின்றது. குற்றச்சாட்டுக்குள்ளாகியிருக்கும் இரு செயற்கைக்கோள்களின் 70 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை ஆயிரம் கோடி ரூபாய்க்கு தேவாஸ் நிறுவனத்திற்க்கு அளிக்க வகை செய்யும் ஒப்பந்தம் 2008ஆம் ஆண்டு ஜனவரியில் போடப்பட்டதாகும். அப்போதைய இஸ்ரோவின் தலைவர் என்ற முறையில் மாதவன் நாயர் முறைகேட்டின் முக்கிய நபராகிறார்.

இதே ஆன்ட்ரிக்ஸ் நிறுவனம் 20 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை அரசு நிறுவனங்களான பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். ஆகிய நிறுவனங்களுக்கு 12487 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளது. அதன் அடிப்படையில் இவ்வொப்பந்தத்தால் அரசுக்கு இரண்டு லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்ப்பட்டதாக மத்திய கணக்குத் துறை குற்றம் சாட்டியது. இக்குற்றச்சாட்டினை விசாரிக்க நடுவண் அரசு, ஊழல் கண்காணிப்புத் துறை முன்னாள் ஆணையர் சின்ஹா தலைமையிலும், இஸ்ரோ ஆர்.கே.சதுர்வேதி தலைமையிலும் உயர் மட்ட குழுக்களை நியமித்தன. சின்ஹா மற்றும் சதுர்வேதி தலைமையிலான இரு குழுக்களுமே ஒப்பந்தம் முறைகேடானது என்று தமது அறிக்கையில் தெளிவுபடுத்தின. இதன் அடிப்படையில் ஆண்ட்ரிக்ஸ் தேவாஸ் இடையேயான ஒப்பந்தம் 2011 பிப்ரவரியில் அரசால் ரத்து செய்யப்பட்டது. குற்றவாளிகளான மாதவன் நாயர் உள்ளிட்ட அறிவியலாளர்கள் நான்கு பேரும், எந்த‌ ஒரு அரசு பதவிகளையும் வகிக்கத் தடை விதிக்கப்படுவதாக, அரசின் சார்பில் நடுவண் அமைச்சர் நாராயணசாமி அறிவித்தார். இதனால் தான் வகித்து வந்த பாட்னா உயர்கல்வி நிறுவனத்தின் தலைவர் பதவியை மாதவன் நாயர் ராஜினாமா செய்தார்.

பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்புகளில், தாங்கள் ஒன்றும் விமானத்தை கடத்திய கடத்தல்காரர்கள் இல்லை என்றும், விஞ்ஞானிகளான தங்களிடம் தங்களின் நேர்மை மற்றும் கௌரவம் சம்பந்தப்பட்ட இப்பிரச்சினையில் மத்திய அரசு தங்களிடம் நேரிடையாக பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டுமென்றும், உயர் மட்டக்குழுவின் விசாரணை அறிக்கை நேர்மையற்றது மற்றும் கோழைத்தனமானது என்றும், இஸ்ரோவின் தற்போதைய தலைவர் ராதாகிருஷ்ண‌னின் தூண்டுதலின் பேரிலேயே இவ்வறிக்கை அளிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தினார். இதற்கிடையே மாதவன் நாயருக்கு ஆதரவாக பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழுத் தலைவர் சி.என்.ராவ், மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, நாயர் மீதான விமர்சனம் தவறானது என்றும், குப்பையைத் தூக்கி வீசுவது போல் விஞ்ஞானிகளை அரசு நடத்துகிறதென்றும், ஊழல் அரசியல்வாதிகளுக்கு சலுகைகள் காட்டப்படுவதாகவும், அறிவியலாளர்களிடம் அது மறுக்கப்படுவதாகவும் தெரிவித்ததோடு நில்லாமல், இதே நிலை தொடருமானால், இஸ்ரோ போன்ற நிறுவனங்களில் பணியாற்ற யாரும் முன்வர மாட்டார்கள் என்றும் கூறியதோடு, இப்பிரச்சினையில் அரசின் நிலைப்பாடு குறித்துப் பேசி வரும் மத்திய அமைச்சர் நாராயணசாமி தனது அடிப்படைக் கல்வியை எங்கு கற்றார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் ஆன்ட்ரிக்ஸ் - தேவாஸ் இடையேயான ஒப்பந்தம் தவறானது என்ற சின்ஹா மற்றும் சதுர்வேதி ஆகியோரின் தலைமையிலான உயர்மட்டக்குழுவின் அறிக்கைகள் இஸ்ரோவின் இணைய தளத்தில் 05-2-2012 அன்று வெளியிடப்பட்டது.

இந்த ஒப்பந்தம் தொடர்பாகவும் அதுபற்றி எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்தும் சராசரி இந்திய குடிமகனின் மனதில் எழும் கேள்விகள்:

1. வழக்கம் போல் மௌனம் காக்காமல் பாரதப் பிரதமரின் மௌனம் இதிலாவது கலையுமா?

2. ஒப்பந்தத்தை ரத்து செய்வது மட்டுமே முறைகேட்டில் தொடர்புடைய தேவாஸ் நிறுவனத்தின் மீது எடுக்கப்படும் உச்சபட்ச தண்டனையா?

3. அரசு பதவிகள் வகிக்கத் தடை என்ற ஒன்றே விஞ்ஞானிகள் மீதான அரசின் நடவடிக்கையா?

4. மாதவன் நாயரின் கூற்றுப்படி அறிவியலாளர்கள் என்பதற்காக தேசத்தின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தை கேள்விக்குள்ளாக்கும் இரண்டு லட்சம் கோடி முறைகேட்டில் எதன் அடிப்படையில் விலக்கு கோருகிறார்?

5. அவருக்கு பரிந்து பேசும் பிரதமரின் அறிவியல் ஆலோசகர் சி.என்.ராவ் ஊழல் அரசியல்வாதிகளுக்கு அளிக்கப்படும் சலுகைகள் தங்களுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறாரா?

6. 2ஜி அலைக்கற்றை ஊழலை விட அளவில் பெரிய இம்முறை கேடு பற்றிய செய்தி மக்களிடம் போதிய சென்று சேரவில்லையே ஏன்?

7. 2ஜி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீதான விசாரணை மற்றும் நடவடிக்கை போன்று இவ்வழக்கில் மேற்கொள்ளப்படுமா?

Pin It